என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கட்டமைப்பு வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு இதில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கட்டிடப்பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்று பெற வேண்டியதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளும் இத்திட்டத்தில் உள்ளது.

    சென்னை:

    நடுத்தர மக்களின் வீடு கட்டும் திட்டத்தை எளிதாக்கும் வகையில், கட்டிட அனுமதியை ஆன்லைன் மூலம் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.

    2500 சதுரடி வரையுள்ள மனையில் 3500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என்றும் பரிசீலனை மற்றும் கட்டமைப்பு வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு இதில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    www.onlineppa.tn.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் இவற்றுக்கு உடனடி அனுமதி கிடைக்கும் என்றும் விண்ணப்பதாரர் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. கட்டிடப்பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்று பெற வேண்டியதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளும் இத்திட்டத்தில் உள்ளது.

    • மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு.
    • கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

    கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கல்வராயன் பகுதியில் உள்ள கச்சிராய பாளையம் காவல் நிலையத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார்.

    கடலூரில் நேற்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.

    கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு, குரும்பலூர், சிறுகல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    வடக்கு மண்டல ஐஜி அஸ்ட்ரா கார்க், கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

    விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையில் அதிரடிப்படை ஆய்வு நீடிக்கும் நிலையில் ஏடிஜிபி சோதனை செய்து வருகிறார்.

    • வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை.
    • ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    கல்லூரிகளின் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.20,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    அவர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு கடந்த 28.1.2019-ம் நாள் ஆணையிட்டது.

    உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி கவுரவ விரி வுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டிய தமிழக அரசு, அவர்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை.

    இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரூ.20 ஆயிரம் என்ற நிலையை எட்டியது.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் சமூகநீதியை வழங்கும் வகையில், அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.

    அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்தவும் தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

    • இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது.
    • கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை.

    திருப்பூா்:

    கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தடையை மீறி நடத்தியதால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது சிறுவர்கள் பலர் சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில்களின் வருமானம், கோவில் சொத்துகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தமிழக அரசால் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது.

    இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது. கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை. இந்து கோவில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. எனவே, கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி பக்தா்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் தடை.

    சென்னை:

    மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (22-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தண்டையார்பேட்டை நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், இ.எச்.ரோடு, அன்னை சத்தியா நகர், பட்டேல் நகர், பரமேஷ்வரன் நகர், அஜீஸ் நகர், நாவலர் குடியிருப்பு, துர்காதேவி நகர், பேசின் ரோடு, பர்மாகாலனி, ராஜீவ்காந்தி நகர், கருணாநிதி நகர், இந்திராகாந்தி நகர், சி.ஐ.எஸ்.எப்.குடியிருப்பு, நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் நகர், கார்னேசன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர், கே.எச்.ரோடு, மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், மீனாம்பாள் நகர், அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், சுண்ணாம்பு கால்வாய், வ.உ.சி. நகர், கருமாரியம்மன் நகர், மாதாகோயில் தெரு,

    தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதி நகர், பாரதிநகர் குடியிருப்பு, ரிக்சா காலனி, புது சாஸ்திரி நகர். ஐ.டி.காரிடர் ஆனந்தா நகர், 200 அடி ரேடியல் ரோடு மற்றும் சாய்நகர் ஒரு பகுதி.

    பல்லாவரம் மல்லிகா நகர், பி.வி. வைத்தியலிங்கம் ரோடு, கட்டமொம்மன் நகர், ஆர்.கே.வி. அவின்யு, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் காலேஜ் மெயின் ரோடு மற்றும் பங்காரு நகர் கிழக்கு ஒரு பகுதி. அடையார் காந்திநகர் 2-வது மெயின் ரோடு, காந்திநகர் 2-வது குறுக்குத் தெரு மற்றும் காந்திநகர் 3-வது மெயின் ரோடு ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°- 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°- 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°- 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    வருகிற 25-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது.
    • உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் ராயப்பேட்டையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டம், வழித்தடம் 4-ல் பவானி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    இதற்காக 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவரிடம் அதிகாரிகள் மெட்ரோ ரெயில் பணிகள் குறித்து விளக்கி கூறினார்கள். இதன் பிறகு ஆலப்பாக்கம் இரண்டு அடுக்கு மெட்ரோ ரெயில் பாதை, பூந்தமல்லி புறவழி மெட்ரோ ரெயில் நிலையம் பூந்தமல்லி மெட்ரோ பணிமனை ஆகியவற்றில் நடைபெற்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சேப்பாக்கம் மதன் மோகன் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து வருகிறது.
    • மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யு.பி.எஸ்.சி.யிலும் ஊழல்கள் வெளியாகி அதன் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகி உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் எழுதியவர்களின் புள்ளி விபரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த தேர்வில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதி இருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது. அதேபோல மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யு.பி.எஸ்.சி.யிலும் ஊழல்கள் வெளியாகி அதன் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப் பணி இடங்களை நிரப்புவதற்கான ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்திலும் பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ஆட்சியில் நீட் தேர்வினால் மருத்துவத் துறை சீரழிந்து வருகிறது. யு.பி.எஸ்.சி. தேர்வினால் குடிமைப்பணி தேர்வுகளும் ஊழலுக்கு இரையாகி உள்ளன.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தங்கபாலு உள்ளிட்ட பலர் தலைவராக இருந்தபோது காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது வழக்கம் தான்.
    • தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இதில் எந்த மாற்றமும் கிடையாது.

    மதுரை:

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 23-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றம் அருகே அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பின், பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல்வேறு பாத்திரங்களை ஏற்றி நடித்தவர். அந்த பாத்திரமாகவே மாறி மக்களுக்கு பல நல்ல கருத்துகளை கூறி உள்ளார். தற்போது சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அ.தி.மு.க.வில் சும்மாவே பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் நான் வாய் திறந்து கூறி மேலும் பல புதிய பிரச்சனைகளை உருவாக்க விரும்பவில்லை. நான் ஒரு கட்சியில் இருக்கும்போது மற்றொரு கட்சி குறித்து அதன் நிலைபாடுகளில் தலையிட விரும்பவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 2026 தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

    இதற்கு முன்பு தி.மு.க. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தபோது கூட காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்காமல் வெளியில் இருந்தே ஆதரவளித்தது. கட்சியை வளர்ப்பதற்கு இளைஞர்களை கவரும் வகையில் இவ்வாறு பேசுவது நான் தலைவராக இருந்த கால கட்டத்தில் இருந்தே மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஆகும்.

    தங்கபாலு உள்ளிட்ட பலர் தலைவராக இருந்தபோது காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது வழக்கம் தான். தேசிய அளவில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இதில் எந்த மாற்றமும் கிடையாது.

    இந்தியா கூட்டணி உருவானபோது ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் மு.க.ஸ்டாலின். எனவே இரு கட்சிக்கும் இடையேயான கூட்டணி சிறப்பாக உள்ளது. எனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்விக்கே இடமில்லை.

    ஒழுங்காக குடும்பம் நடத்தும்போது பக்கத்து வீட்டுக்காரனை காட்டி அவனுடன் குடும்பம் நடத்த தயாரா? என்று கேட்பது போல் உள்ளது. விவாகரத்து ஏதும் ஏற்பட்டால் இதுபோன்ற கேள்வி சரியாக இருக்கும்.

    மின்கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். எங்களை பொறுத்தளவில் வரி வசூலிக்காமல் ஆட்சி நடத்த முடியாது என்றாலும், வரி மக்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம்.

    கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை என்ற நிலைபாடு சரியான கருத்து அல்ல. அந்தந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் வேலை என்று கூற தொடங்கினால் இந்தியா என்ற ஒன்று இருக்காது. தனித்தனி நாடாக ஆகிவிடும்.

    மொழி வாரி மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கலாம். சலுகைகள் கொடுக்கலாம். 50 முதல் 90 சதவீதம் வரை கொடுக்கலாம். மீதமுள்ள இடத்தை இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், மலர்பாண்டியன், துரையரசன், பறக்கும் படை பாலு, சாவனாஸ் பேகம் உள்பட பலர் இருந்தனர்.

    • கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர்.
    • போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்திக் (வயது 29). திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திர பிரசாத் (21) மற்றும் சண்முகராஜ் (24). நண்பர்களான மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்றனர்.

    இவர்களுக்கிடையே கடந்த தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலாக மாறி கைகலப்பில் முடிந்தது. அப்போது முதல் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஒருவருக்கொருவர் ஒரே இடத்தில் வேலை பார்த்தபோதும் பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மீண்டும் தகராறு உருவானது. இதில் ராஜேந்திர பிரசாத், கார்த்திக்கை அருகில் இருந்த தராசு படிக்கல்லை எடுத்து தாக்கியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தனது வீட்டில் இருந்த சூரிக் கத்தியை எடுத்து வந்து ராஜேந்திர பிரசாதின் தோள்பட்டையில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திர பிரசாத் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திர பிரசாத் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவில் சமாதானம் பேச சென்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேபோல் வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சி மற்றும் பழையசீவரம் ஊராட்சியில் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பண்ணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மரகதப் பூஞ்சோலையை பார்வையிட்டனர். பின்னர் அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து பழையசீவரம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

    உத்திரமேரூர் ஒன்றியம், வளத்தோடு கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பயிரிட்டுள்ள தக்கைப் பூண்டு செடியினை பார்வையிட்டு, விவசாயிகளிடம் விவசாய பணிகள் குறித்தும், மானாம்பதி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வன அலுவலர் ரவி மீனா,வேளாண்மை இணை இயக்குநர் (பொ)ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின.
    • காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின. இதனால் மீன்கள்வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக குவிந்து விற்பனை செய்யப்பட்டது. இறால், கடமா, நண்டுகள் வரத்து சற்று குறைவாகவே இருந்தது.

    மேலும் கொடுவா மீன்கள் வரத்து இல்லை. தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமானோர் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள். இதனால் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மீன்வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடந்த வாரத்தை விட சங்கரா மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் ரூ.200-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்து விற்கப்பட்டதால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி சென்றனர்.

    காசிமேட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.900

    வவ்வால் மீன் - ரூ.500

    சைனீஸ் வவ்வால் - ரூ.1300

    சங்கரா - ரூ.200

    ஷீலா - ரூ.200

    இறால் - ரூ.400

    கடமா - ரூ.400

    நண்டு - ரூ.300

    சிறிய மீன்கள் - ரூ.50 முதல் 100 வரை.

    ×