என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரெயில், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் காரில் பயணிப்போரின் உடமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

    • குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை, சென்னை மாநகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரயில்வே போலீசார், ஆர்.பி.எப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார்.
    • இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை அடையாறு மேம்பாலத்தில் 50 வயது மதிக்க தக்க பெண் தூய்மைப் பணியாளிடம் இளைஞர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இதனை கண்டு கோவமடைந்த பெண் தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார். இதனையடுத்து அந்த இளைஞர் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடினார்.

    இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த விவகாரம் விசாரணை நடத்திய போலீசார், ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா (25) என்பவரை கைது செய்துள்ளனர்

    • செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் அதிமுக-வில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளனர்.
    • நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

    அதிமுக-வில் இருந்து சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் சீனியர் தலைவர் செங்கோட்டையனும் நீக்கப்பட்டுள்ளார். பல தலைவர்கள் பிரிந்து சென்றுள்ளனர்.

    துரோகம் செய்தவர்களுக்கு ஒருபோதும் கட்சியில் மீண்டும் இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க செங்கோட்டையன் முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில்தான், நீக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் 2026 சட்டமன்ற தேர்தலை நீக்கப்பட்ட, பிரிந்து சென்றவர்களை இணைத்து அதிமுக சந்திக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ.எஸ். மணியன் "மன்னிப்பு கேட்டு வரட்டும்: பொதுச் செயலாளரிடம் நாங்களும் பேசுகிறோம்" என்றார்.

    • தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கு உயர்ந்தது.
    • சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு தள்ளியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.

    அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருக்கிறது.

    அந்த வகையில் வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இந்நிலையில் மாலையும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ. 11,480-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91840 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400

    08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400

    07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160

    06-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,560

    05-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-11-2025- ஒரு கிராம் ரூ.165

    08-11-2025- ஒரு கிராம் ரூ.165

    07-11-2025- ஒரு கிராம் ரூ.165

    06-11-2025- ஒரு கிராம் ரூ.165

    05-11-2025- ஒரு கிராம் ரூ.163

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
    • இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    திருப்பூரில் 'பவர்டேபிள்' என்று அழைக்கப்படும் 'பனியன் தையல் உரிமையாளர்கள்' சங்கத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கட்டிங் செய்த ஆடைகளை தைத்து, செக்கிங் செய்து பேக்கிங் செய்யும் பணிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

    பனியன் தயாரிப்பாளர்களிடம் இந்த பவர்டேபிள் சங்கம் கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதி புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைத்தது. அதன்படி முதல் ஆண்டு 17 சதவீதம், அதைத்தொடர்ந்து மீதம் உள்ள 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என கூலி உயர்வு பெறுவது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதன்படி தற்போது 2025ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதியில் இருந்து 7 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக 'பவர்டேபிள்' உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    இதனால் 7ம் தேதி முதல் கூலி உயர்வு பிரச்சினை தீரும்வரை டெலிவரி எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை என அறிவித்துள்ளனர். எங்களது பாதிப்புகளை உணர்ந்து உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை தடையின்றி வழங்க முன்வர வேண்டும் என திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மட்டுமின்றி அவிநாசி, பெருமாநல்லூர், ஈரோடு, சேலம், செங்கப்பள்ளி என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான 'சைமா' மூலம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தாண்டிற்கான புதிய கூலி உயர்வை சில நிறுவனங்கள் தராமல் காலம் தாழ்த்தி வருவதால் எங்கள் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். பலமுறை நேரில் சென்றும், கடிதங்கள் அனுப்பியும் எங்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் மீண்டும் 'சைமா' சங்கத்தை அணுகியுள்ளோம்.

    புதிய கூலி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்யும் நிறுவனங்களை அழைத்து பேசி இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு ஏற்படுத்த 'சைமா' நிர்வாகிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதனால் பல்வேறு இடங்களில் பனியன் உற்பத்தி பணிகள் முடங்கி வருகின்றன. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும்" என்று கூறினார்.

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது மின் தடை செய்யப்பட்டது எப்போது?

    கரூர்:

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விஜய் பரப்புரையின்போது மின்சாரம் தடை பட்டதால் தான் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் பொதுப்பணித்துறை அலுவலக சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது மின் தடை செய்யப்பட்டது எப்போது? மின்வாரியத்தினர் யார்? யார்? பணியில் இருந்தனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

    அதற்கு மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த விளக்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.
    • பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.

    எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பா.ஜ.க. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க.வோடு இணைந்து காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்திருந்தாலும் சிறப்பு தீவிர திருத்த முயற்சிகளை கண்டித்து நாளை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

    சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்க இருக்கிறோம்.

    மத்திய பா.ஜ.க. அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்தி வருகிற வாக்குத் திருட்டையும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் நடத்த முனைகிற வாக்காளர் மோசடி குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த நாளை நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு.
    • கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

    சென்னை:

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன, இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன.

    இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 'தண்ணீர் மாநாட்டை' நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு. இவற்றை விளக்கும் வகையில் தண்ணீர் மாநாடு-2025-ஐ நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்றைய சூழலில் இது அவசியமான மாநாடாகும்.

    "ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி. பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி. நீரின்றி அமையாது உலகு. நினைவில் நிறுத்திப் பழகு" என்ற முழக்கத்தை முன்வைத்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூரில் உள்ள கரிகால் பெருவளத்தான் திடலில் வரும் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு தண்ணீர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இ.பி.எஸ். விமர்சனம் குறித்து கவலையில்லை. மீண்டும் தி.முக. தான் ஆட்சியை கைப்பற்றும்.
    • எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைப்போம்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இ.பி.எஸ். விமர்சனம் குறித்து கவலையில்லை. மீண்டும் தி.முக. தான் ஆட்சியை கைப்பற்றும்.

    * எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லாததால் தி.மு.க.வை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

    * வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    * எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைப்போம்.

    * எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. எங்க வேலையை நாங்கள் பார்க்கிறோம்.

    * எப்போதும் எங்களுக்கு மனசு நல்லா இருக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    • சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    ரூ.10 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டுள்ள மூத்தோர்களுக்கான அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    அதன்படி, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன.
    • மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது எந்திரப் படகினையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளதென குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 2024-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பி உள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்து உள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×