என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
    • கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

    சிபிஐ விசாரணைக்காக மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் நேரில் ஆஜராகியுள்ளனர்.

    கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

    கரூரில் நடைபெற்ற தாவெக கூட்டத்தில் விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என மின்வாரியம் தரப்பில் கூறியிருந்தது.

    இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    • டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
    • எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும்.

    கோவை:

    பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவையில் வருகிற 19-ந் தேதி தென்னிந்திய இயற்கை விவசாய சம்மேளம் சார்பில் இயற்கை விவசாய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகிற 19-ந்தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார்.

    இந்த மாநாட்டில் பிரதமர் மோடி 5 ஆயிரம் இளம் இயற்கை விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். தென்னிந்தியாவில் பணிபுரியும் 50 இயற்கை விஞ்ஞானிகளை சந்தித்து பேசுகிறார். நாட்டு மாடுகளை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் விவசாய நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்கிறார். வேறு எந்த கட்சி நிகழ்ச்சிகளும் கிடையாது.

    மருத்துவர்கள் பயங்கரவாதிகளாக செயல்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் இந்திய பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் குஜராத்தில் உள்ள டாக்டர்கள் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், அவர்கள் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் ரசாயனம் கலந்து பலரை கொல்வதற்கும் சதி திட்டம் தீட்டியுள்ளனர். டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.

    மும்பையில் நடந்தது போன்று டெல்லியில் நடத்த வேண்டும் என்பதற்காக இதை செய்தோம் என தெரிவித்துள்ளனர். எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும் என்றார். 

    • விமானிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
    • போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சேலத்தில் இருந்து இன்று மதியம் ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டு சென்றது. திருச்சி- புதுக்கோட்டை சாலையில் நார்த்தாமலை அருகே அந்த விமானம் சென்றது. திடீரென்று அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இதனால் விமானிகள் அதை சாலையில் தரை இறக்கினர். இதில் விமானிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. திடீரென்று சாலையில் விமானம் தரை இறங்கியதல பரபரப்பு உண்டானது.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

    • சிலரையும் சட்ட விரோதமாக அறங்காவலர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விதிமுறைகளின் படி எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அறங்காவலராக இந்த ஆண்டில் நியமிக்க உத்தரவிட வேண்டும்

    மதுரை:

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் செட்டிநாடு நகரத்தார் சமூகத்தை சேர்ந்த 20 குடும்பத்தினரால் பாரம்பரியமாக சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    1978-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரித்த திட்டப்படி, மேற்கண்ட 20 குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கற்பக விநாயகர் கோவிலின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அறங்காவலர்களாக பதவி வகித்து உள்ளனர்.

    இந்தநிலையில் 2025-2026 ஆம் ஆண்டில் எங்களது குடும்பத்தினர் அறங்காவலர்களாக பதவி வகிக்க வேண்டும். ஏற்கனவே பதவியில் இருந்த கண்டவராயன்பட்டி சொக்கலிங்கத்தை அறநிலையத்துறை இணை கமிஷனர் தகுதிநீக்கம் செய்தார். அவருக்கு வேண்டிய நபரை அறங்காவலராக நியமித்து கோவில் ஆலோசனை கூட்டத்தின்போது பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர்.

    மேலும் சிலரையும் சட்ட விரோதமாக அறங்காவலர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அறங்காவலர் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையில் ஐகோர்ட்டின் தீர்ப்பின்படி எந்த முடிவும் செய்யவில்லை. அதற்குள் அறங்காவலர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது.

    எனவே விதிமுறைகளின் படி எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அறங்காவலராக இந்த ஆண்டில் நியமிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வேறு நபர்களை அறங்காவலர் பதவிக்கு நியமிக்க அறநிலையத்துறைக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிள்ளையார் பட்டி கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், அறங்காவலர் நியமனத்தில் சட்டவிதிமுறைகள் மீறப்படவில்லை என்றார். அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழகத்திலேயே இந்த ஒரு கோவிலில் தான் நியாயமான நிர்வாகம் நடப்பதாக நினைத்து இருந்தேன். ஆனால் இங்கும் இத்தனை பிரச்சனைகளா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமன விவகாரத்தில் வருகிற 18-ந்தேதி வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.
    • அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை NDA-வில் இணைப்பது பற்றி காலம் தான் முடிவு செய்யும்.

    * அமைச்சர் சேகர்பாபு சொல்வது உண்மைதான். பா.ஜ.க.வில் 3 ஆண்டுகள் தான் பதவி.

    * 3 ஆண்டுகளுக்கு பின் ஒரு வேளை பதவி நீட்டிக்கப்படலாம்.

    * தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.

    * அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    * நடிகர் விஜயின் த.வெ.க.வை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

    * த.வெ.க. இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • இதுவரை மொத்தமாக 38 நாட்களில் 81 சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது நிர்வாகிகளிடம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்களை இடம்பெற செய்ய உதவ வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    இதுவரை மொத்தமாக 38 நாட்களில் 81 சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.

    • பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.
    • மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழக மக்கள் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தி.மு.க.வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளனர்.

    பட்டுக்கோட்டை:

    "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் பா.ஜ.க. கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் தலைமை தபால் நிலையம் அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-

    எனது சுற்றுப்பயணம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்பதை தேசிய தலைமையும், கூட்டணி தலைவரும் முடிவு செய்வார்கள்.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை தீவிரமாக யாரையும் எதிர்ப்பதில்லை. கட்சியின் கொள்கை ரீதியாக மட்டுமே எதிர்க்கிறோம்.

    தனிப்பட்ட முறையில் இதுவரை யாரையும் எதிர்ப்பது கிடையாது. இனிமேலும் அது இருக்காது. கரூர் சம்பவம் நடந்தபோது அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. எதிர்க்கட்சிகள் கூட்டம் போடும் எந்த இடத்திலும் போலீசார் நிற்பதில்லை. மதுரை இந்து முன்னணி மாநாட்டில் 5 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். ஆனால் அங்கு ஒரு போலீசார் கூட இல்லை.

    எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு முறையாக அனுமதி தர போலீசார் மறுக்கிறார்கள். கோர்ட்டுக்கு சென்ற பின்னர் தான் அனுமதி வழங்கப்படுகிறது. இதைத்தான் நான் கூறி வருகிறேன். த.வெ.க.வுக்கு ஆதரவாக நான் பேசவில்லை.

    தமிழக பா.ஜ.க. தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான். ஆகவே எனக்கு 6 மாதங்கள் முடிந்துவிட்டதால் மீதம் 2½ ஆண்டுகள் தான் பதவிக்காலம் உள்ளது.

    ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலம் முடிய இன்னும் 2½ மாதங்கள் தான் உள்ளது. அதனால் தி.மு.க. ஆட்சி முடிய கவுண்டவுன் ஆரம்பமாகி விட்டது.

    தி.மு.க. கூட்டணி பலமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி கூட்டணி பலம் தான் வெற்றிக்கு காரணம் என்றால் 2011-ல் தி.மு.க. தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    தற்போது தமிழக மக்கள் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதுபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    தி.மு.க.வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளனர். எனவே 2026-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றம் உறுதி.

    த.வெ.க.வுக்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறுமா என்று தெரியாது. ஒரு கவுன்சிலர் கூட த.வெ.க.வுக்கு கிடையாது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என கூறுவது நகைப்பிற்குரியது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் அருகிலேயே கஞ்சா விற்கப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்.
    • தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, SIR-ஐ கண்டித்து வரும் நவம்பர் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், ஆர்ப்பாட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • மகளிரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் விரிவுபடுத்தப்படும்.
    • இந்தத் திட்டத்தை இந்தியா மொத்தமும் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுத்திக் காட்டுவோம்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் 'மகளிர் நலமே சமூக நலம்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கான புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதய நோய்கள் பரிசோதனை செய்யத் தொடங்கி வைத்துள்ள, மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவைத் திட்டத்தைப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    காஞ்சியில் தொடங்கும் இந்தத் திட்டம், மகளிரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் விரிவுபடுத்தப்படும்.

    மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் முதலியவற்றைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து நம் பெண்களின் நலனைக் காக்கும் இந்தத் திட்டத்தை இந்தியா மொத்தமும் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுத்திக் காட்டுவோம்! என்று கூறியுள்ளார். 



    • தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தொடங்கியது.
    • மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜனவரியில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

    சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தொடங்கியது.

    மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜனவரியில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

    மேலும் வருகிற 2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.
    • தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.

    கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

    எனவே, விடியா திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    ×