என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- லட்சுமிபுரம், பெரியார் நகர், கோனிமேடு, கங்கை நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
திருமுல்லைவாயல்: லட்சுமிபுரம், பெரியார் நகர், கோனிமேடு, கங்கை நகர், சரத் கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன் பேட்டை, ஏராங்குப்பம்.
- நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.
- உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி,
பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய்,
வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் காலை உணவுத் திட்டம்,
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள்,
உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்,
ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் தினம் நல்வாழ்த்துகள்!
உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்! என்று கூறியுள்ளார்.
- தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
- நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டது.
இன்று நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி நாளை நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.
கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்
- பைசன் படம் சாதியை பற்றிய படமில்லை.
- ஹாலிவுட் படங்களில் கூட கறுப்பின மக்களின் துன்பங்களை பற்றி பேசுகிறார்கள்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக பிரமுகரான சரத்குமாரிடம், முந்தைய காலகட்டத்தில் எஜமான், தேவர் மகன், நாட்டாமை போன்ற சாதிய படங்கள் மக்களால் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது சாதிக்கு எதிரான பைசன் போன்ற படங்கள் வருகிறது. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சரத்குமார், "நாட்டாமை படம் சாதிய படம் கிடையாது. அது ஒரு பஞ்சாயத்துத் தலைவர் கதை. அதே போல் தேவர் மகன் படம் அந்த பகுதியில் படம் எடுத்ததால் தேவர் மகன் என்று பெயர் வைத்தார்கள்.
பைசன் படம் சாதியை பற்றிய படமில்லை. ஹாலிவுட் படங்களில் கூட கறுப்பின மக்களின் துன்பங்களை பற்றி பேசுகிறார்கள். அதனால் பழைய காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது, அது நடக்கக்கூடாது என்று படம் எடுப்பது தவறில்லை" என்று தெரிவித்தார்.
- காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
- விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஓர் அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 2018ஆம் ஆண்டில் சமர்ப்பித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகத் தேவைப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஆய்வு வரம்புகளுக்கு (Terms of Reference) ஒப்புதல் பெறுவதற்காக, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை கர்நாடக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு அணுகிய போது, மற்றொரு மனுவை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமிழ்நாடு அரசு அதைத் தடுத்து நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியபோது, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதற்கான எந்தவிதமான அனுமதியையும் அளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21-3-2022 அன்று ஒருமனதாக தீர்மானத்தையும் இந்த அரசு நிறைவேற்றியது.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை 31-3-2022 மற்றும் 26-5-2022 அன்று நேரில் சந்தித்த போது மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினார்.
இந்த காலக்கட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசின் கருத்துருவை பரிசீலிக்க அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த விரிவான அறிக்கை பற்றிய பொருண்மைகள் இந்த ஆணையத்தின் விவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும், இதனை பரிசீலிப்பதற்கான அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை என்பதை வலியுறுத்தி மேலும் ஒரு மனு 7-6-2022 அன்று தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், அன்றிலிருந்து இன்றுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை.
மேலும், தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.
இந்த சூழ்நிலையில், மேகதாது அணை குறித்துப் பேசிய மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்கள், இந்த பாசன ஆண்டு 2025-2026இல் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கான நீர் வழங்கப்படுவது இல்லை என்பதையும், மேகதாது அணை கட்டப்பட்டால் வறட்சி ஆண்டுகளில், நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதையும் அனைவரும் அறிவார்கள். எனவே, மேகதாதுவில் அணை கட்டப்படுவது என்பது, தமிழ்நாட்டு விவசாயிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குவதோடு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான நடுவர் மன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாகவும் அமையும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்றம், இன்று (13-11-2025) மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், வெற்றிகரமாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தியதைப் போன்றே, இனியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மாண்பமை உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது என்பதையும், இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தை மேலும் ஓர் அடி கர்நாடகத்திற்கு சாதகமாக இந்தத் தீர்ப்பு மாற்றியிருக்கிறது.
- இந்த வழக்கில் வலிமையான வாதங்களை முன்வைக்கத் தமிழக அரசு தவறியது தான் இதற்கு காரணம் ஆகும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதன் மூலம் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டிய திமுக அரசு, உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்து வைக்காததன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதில் படுதோல்வியடைந்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடக அரசு அதை கடந்த 2019&ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பிய மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டது. எனினும், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், விரிவான திட்ட அறிக்கை பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்படாமல் இருந்த நிலையில், அது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய மேலாண்மை ஆணையம், அந்த அறிக்கையையும் திருப்பி அனுப்பிவிட்டது.
இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து, மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று ஆணையிட்டனர். விரிவான திட்ட அறிக்கை குறித்து தமிழகத்தின் கருத்தைக் கேட்டுத் தான் முடிவெடுக்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், ஒருவேளை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டால் அப்போது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தை மேலும் ஓர் அடி கர்நாடகத்திற்கு சாதகமாக இந்தத் தீர்ப்பு மாற்றியிருக்கிறது. இந்த வழக்கில் வலிமையான வாதங்களை முன்வைக்கத் தமிழக அரசு தவறியது தான் இதற்கு காரணம் ஆகும். இதன் மூலம் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே முதல்மடை மாநிலமான கர்நாடகத்தில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்கக்கூடாது என்பது தான் 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு ஆகும். இந்தத் தீர்ப்பை 16.02.2018&ஆம் தேதியிட்ட தீர்ப்பில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் பொருள் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை குறித்த விண்ணப்பத்தைக் கூட மத்திய அரசு பெறக்கூடாது என்பது தான். 2015&ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் உறுதி செய்திருந்தார். மேலும், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை குறித்த விண்ணப்பத்தை கர்நாடகம் தாக்கல் செய்தால் அது திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் கூறியிருந்தாது. இது தான் மிகவும் சரியான நிலைப்பாடு ஆகும்.
ஆனால், அந்த நிலைப்பாட்டுக்கு மாறாக மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததும், அதனடிப்படையில் கர்நாடக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியதும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செய்யப்பட்ட துரோகங்கள் ஆகும். இதை எதிர்த்து தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அழுத்தம் காரணமாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி அளித்த வாக்குறுதி குறித்தும், அதை மீறி மேகதாது அணை குறித்த வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது சட்டவிரோதம் என்பதையும் உச்சநீதிமன்றத்தில் வலிமையாக வாதிட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிய தமிழக அரசு வழவழ வாதங்களை முன்வைத்ததும் தான் இன்றையத் தீர்ப்புக்கு காரணம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய நீர்வள ஆணையமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையமோ விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளித்து விட்டால், மேகதாது அணையின் கட்டுமானப் பணிகளை கர்நாடக தொடங்கி விடும். அதற்கு வசதியாக இப்போதே தொடக்கப் பணிகளை செய்து வைத்திருக்கிறது. அதன் பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு மீண்டும் சென்று மேகதாது அணை கட்ட தடை வாங்குவதெல்லாம் குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்கு ஒப்பான செயல் தான்.
1970ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி ஆகிய அணைகளை கர்நாடக அரசு கட்டியதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தது அப்போதிருந்த திமுக அரசு தான். அதேபோல் தான் இப்போதுள்ள திமுக அரசும் மேகதாது அணையை கட்டுவதில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் வழக்கத்தை திமுக அரசு கைவிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்து, மேகதாது அணை குறித்த வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையும், அதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையும் செல்லாது என அறிவிக்கக் கோர வேண்டும். இந்த முறையாவது வலிமையான வாதங்களை முன்வைத்து காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு காக்க வேண்டும்.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
- இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர் டேபிள் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கத்தினர் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு 2 சங்கத்தினர் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயர்வும் , அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறும் இவை முறையாக பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஜூன் 6-ந்தேதி முதல் உயர்த்தப்பட வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு சில நிறுவனங்கள் வழங்கினாலும் ஒரு சில நிறுவனங்கள் வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவதால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கடந்த 7ம் தேதி முதல் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் எடுப்பதையும் , செய்து முடித்த ஆர்டர்களை கொடுப்பதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 15 நாட்களுக்குள் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். பவர் டேபிள் சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை செய்வதால் தொழில் பாதிக்கக்கூடும் என சைமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பவர் டேபிள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுடனான முழு அளவிலான உற்பத்தி நிறுத்தம் இன்று முதல் தொடர உள்ளதாகவும் , கூலி உயர்வை அமல்படுத்தினால் அதற்குள்ளாக போராட்டத்தை கைவிடுவது , இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பது என தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தி பணிகள் முடங்கி உள்ளது.
- விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்.
- தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகதாதுவில் அனை கட்ட கர்நாடகா அரசு திட்ட அறிக்கை தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று ஏற்கனவே அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் டெல்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடகம் கோரியபோதே, திமுக அரசு வாய்மூடி மௌனியாக இருந்ததையும் நான் கண்டித்துள்ளேன்.
அனைத்தையும் மீறி, உச்சநீதிமன்றத்தில் இதுபோன்றதொரு தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
- நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வரும் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- மதுபானக் கடையின் இருபுறமும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
- பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி பள்ளிப்பாளையம் நகராட்சி பைபாஸ் சாலையில் எப்.எல்.2 மதுபானக் கடை நடைபெற்று வருகிறது. இந்த மதுபானக் கடையின் இருபுறமும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
அதே போல், மருத்துவமனைகள் மற்றும் வங்கிகளும் செயல்பட்டு வருவதன் காரணமாக, எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வரும் இந்த இடத்தில் மதுபானக் கடை இருப்பதால், பள்ளி மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிப்பாளையம் நகராட்சி, பை பாஸ் சாலையில், பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் இடையூறாக இருந்து வரும் எப்.எல்.2 மதுபானக்கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி இந்த மதுபானக்கடையை உடனடியாக அகற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில், பள்ளிப்பாளையம் பஸ் நிலையம் அருகில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்தபடி ஒரே மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர்.
- நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் உளவுத்துறை போலீசார் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை:
டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே சமீப காலமாகவே தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. நேற்று அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 3 தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் நேற்று நெல்லையில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை மர்ம நபர்கள் நள்ளிரவில் நோட்டமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டினை சுற்றி 3 புறங்களிலும் சாலைகள் செல்கின்றன. இந்நிலையில் இந்த சாலையில் நேற்று நள்ளிரவு 11.35 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் ஹெல்மெட் அணிந்தபடி மொபட்டில் வந்துள்ளனர். அவர்கள் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு திரும்பும் சாலையில் மூலையில் நின்றபடி அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதனை அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கவே, அவரது உதவியாளர்கள் மூலம் வீட்டை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்தபடி ஒரே மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த நபர்கள் மீண்டும் சிறிது நேரம் கழித்து அங்கு வந்து வீட்டை நோட்டமிட்டு சென்ற காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து பெருமாள்புரம் போலீசாருக்கு இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் உளவுத்துறை போலீசார் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் அறந்தாங்கியில் நடந்த பிரசார பயணத்தில் கலந்து கொண்டார். அங்கும் அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே நேற்று நெல்லையில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்கள் நோட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் யாரும் நேற்று வீட்டில் இல்லை. அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வெளியூருக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லை. இதனால் வந்த மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் நோட்டமிட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பயங்கர சதி திட்டத்துடன் நோட்டமிட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படியை 58% ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
- அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படியை 58% ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
ஜூலை 1 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.






