என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒரு மணி நேரம் சோதனை நடந்த நிலையில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 7 முறை இ-மெயில் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பி இருந்தான்.

    அப்போது வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் அந்த மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

    இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் வழக்கம்போல் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக முகவரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலக ஊழியர், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயல் இழப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் அயன் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அனைத்து அறைகளிலும் சல்லடை போட்டு தேடினர்.

    ஒரு மணி நேரம் சோதனை நடந்த நிலையில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் புரளிய என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இ-மெயில் வந்த முகவரியை வைத்து அவர் யார்? எங்கிருந்து வந்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அடிக்கடி மிரட்டல் வருவதால், போலீஸ் சோதனை நடத்துவதும் ஊழியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பணிகளும் பாதிக்கப்படுவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். 

    • தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது.
    • SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது.

    சென்னை கொளத்தூர் தொகுதியில் பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    * தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது.

    * பா.ஜ.க.வின் வாக்குத்திருட்டு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி உள்ளார்.

    * SIR பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

    * மக்களின் வாக்குரிமையை பெற்றுத்தரும் பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.

    * ஏற்கனவே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    * வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் பாக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    * SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது.

    * தமிழ்நாட்டில் உரிய கால அவகாசம் இல்லாமல் SIR பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    * SIR படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க. பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும்.

    * தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்க மாநிலம் SIR-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துகிறது.

    * மக்களை சந்திக்க தெம்பில்லாமல் SIR என்ற குறுக்கு வழியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது.

    * வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றது வெட்கக்கேடு.

    * தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சி தற்போது எதிர்க்கட்சியாக இல்லை.

    * அ.தி.மு.க.வை டெல்லியில் அடகு வைத்துவிட்டு SIR-ஐ ஆதரித்து பேசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.
    • தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.387 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி புகார் அளித்தது.

    இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.

    இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக் கையுடன் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.

    மின்மாற்றி ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் பேரம் என மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையாகும்.

    மின்மாற்றிக் கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு பதிலாக அவர்களுக்கு சன்மானம் வழங்கும் தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

    எனவே, மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல்கள், கூட்டுச் சதிகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்!!

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் - ஒவ்வொரு இல்லத்தையும் வண்ணமயமாக்குவது குழந்தைகள்!

    இனிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் #ChildrensDay நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து - ஆரோக்கியம் - கல்வி - விளையாட்டு என 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

    குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம்! குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்!! என்று கூறியுள்ளார். 

    • கொளத்தூர் தொகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.
    • கொளத்தூரில் கட்டப்படும் ரத்த சுத்திகரிப்பு, மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சென்னை பெரியமேட்டில் பதிவுத்துறை சார்பில் ரூ.3.86 கோடியில் கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதையடுத்து கொளத்தூர் தொகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.

    நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம், முழு நேர நூலகம், ஐ.ஏ.எஸ். பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே கட்டப்பட உள்ள பெரவள்ளூர் புறக்காவல் நிலையம் கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    கொளத்தூரில் கட்டப்படும் ரத்த சுத்திகரிப்பு, மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
    • மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பூதலூர்:

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.

    கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.

    மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நாளை மாலை (15-ந் தேதி) தண்ணீர் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள திறந்தவெளி திடல் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டிற்கான பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.

    திடலின் முகப்பில் மாமன்னன் கரிகாலன், விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டு திடலின்முகப்பு பகுதியில் ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி, பல்லுயி ர்க்கும் பகிர்ந்தளி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் மாநாட்டு திடலில் இருபுறங்களிலும் ஒரு பகுதியில் மாமன்னன் கரிகாலனின் சிறப்புகளை விளக்கும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    மற்றொரு பகுதியில் காவிரி ஆறு பாய தொடங்கும் குடகு முதல் பூம்புகார் வரையிலான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் இன்று திருச்சி வருவார் என்று கூறப்படுகிறது.

     

    மாநாட்டு திடலின் முகப்பு தோற்றத்தை காணலாம்.

    நாளை மாலை 4 மணிக்கு பூதலூரில் தொடங்கும் தண்ணீர் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.

    இந்த மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மாநாட்டு திடல் பகுதியில் திருவையாறு தொகுதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் முதுகலை பட்டதாரி செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் மாநாட்டு பணிகளை மேற்பார்வையிட்டனர்.

    மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள மாமன்னன் கரிகாலன் மற்றும் காவிரி ஆற்றின் வரலாற்று காட்சிகளை பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளன. இவற்றை அங்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    உச்ச நீதிமன்றம் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் காவிரி படுகையின் தலைப்பு பகுதியான பூதலூரில் நடைபெற உள்ள இந்த தண்ணீர் மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
    • ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளான இன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அன்பிற்குரிய தமிழகத்தின் செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் எனது இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

    அனைவருக்கும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவமும், ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.

    உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்; அந்தக் கனவுகளை நிறைவேற்ற முயற்சி, சக்தி, துணிவு மூன்றும் துணை நிற்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ம.க.வில் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
    • தைலாபுரம் தோட்டத்தில் நாளை ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த இரு அணியினரும் போட்டி கூட்டங்கள் நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். தங்களுக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இருவரும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருன்றனர்.

    இந்த நிலையில் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் நாளை (சனிக்கிழமை) காலை ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது.

    இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் வருகிற 18-ந்தேதி பா.ம.க. வனனியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

    மறுநாள் (19-ந் தேதி) இளைஞர் சங்க மாநில, மாவட்ட , நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை கூட்டத்தில் 200 பேரும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 400 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், போட்டி கூட்டங்கள் நடத்தி வரும் அன்புமணி அணியினரை எதிர்கொள்வதும் குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.

    2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை கவனிக்க சீனியர் தலைவர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்புகள் கொடுத்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • 12 செ. மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்தர் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த மாதம் இயல்புக்கு அதிகமாகவே 23 செ.மீ.அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

    அதே நேரத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பருவமழையில் தொய்வு நிலவியது. இந்த நிலையில் நாளை (15-ந் தேதி இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.

    இது படிப்படியாக தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் வழியாக லட்சத்தீவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வருகிற 16-ந்தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தொடங்கும் மழை 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.

    இதன் மூலம் வருகிற 20-ந்தேதி வரையில் அடுத்த சுற்று மழையை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 17, 18-ந்தேதிகளில் பரவலாக கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 செ. மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வங்கக் கடல் பகுதியில் உருவாக உள்ளது. இதில் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

    வருகிற 21-ந்தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். பின்னர் இந்த மாத இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் தென்படுகிறது.

    இருப்பினும் முதல் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் தமிழகத்துக்கு நல்ல மழையை கொடுக்கும். 25-ந்தேதிக்கு பிறகு உருவாகும் புயலும் மழையை கொடுக்கும். இந்த புயல் வட தமிழகத்தில் கரையை கடக்குமா? காவிரி டெல்டா பகுதியில் கரையை கடக்குமா? என்பது அதன் நகர்வை பொறுத்து தெரிய வரும். இந்த புயலால் காற்று பாதிப்பு ஏற்படாது. மழை பொழிவே அதிகம் இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தங்கம் விலையை பொறுத்தவரையில், கடந்த 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது.

    அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    அதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நிலையும் நீடித்து வந்ததை பார்க்க முடிந்தது. இப்படியாக விலை இருந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து ஏறுமுக கணக்கை மீண்டும் தங்கம் தொடங்கியுள்ளது.

    அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,440-க்கு உயர்ந்திருந்தது. அதற்கு மறுநாள் (11-ந்தேதி) ஒரு சவரன் ரூ.1,760-ம் அதிகரித்து, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது.

    இந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்து அனைவருக்கும் 'ஷாக்' கொடுத்துவிட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தங்கம் விலையை பொறுத்தவரையில், கடந்த 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்து இருந்தது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,840-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.94,720 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,200

    12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

    11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600

    10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840

    09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-11-2025- ஒரு கிராம் ரூ.183

    12-11-2025- ஒரு கிராம் ரூ.173

    11-11-2025- ஒரு கிராம் ரூ.170

    10-11-2025- ஒரு கிராம் ரூ.169

    09-11-2025- ஒரு கிராம் ரூ.165

    • குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
    • வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16327) வருகிற 22-ந் தேதி கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16328) 23-ந்தேதி குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரெயில் மதியம் 12.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.

    சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12695) வருகிற 21-ந் தேதி கோட்டயம்-திருவனந்தபுரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இதே வழித்தடத்தில் 25-ந்தேதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22207) பகுதிநேரமாக எர்ணாகுளம் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12696) வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த ரெயில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127) 25-ந் தேதி 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். அதே தேதியில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகனத்தின் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது.
    • விசாரணையில் இசக்கியப்பன், தினேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தின் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் தேரேக்கால்புதூர் பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், தினேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    ×