என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாளை நாம் தமிழர் கட்சியின் தண்ணீர் மாநாடு - பூதலூரில் முன்னேற்பாடு பணி தீவிரம்
- சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
- மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
பூதலூர்:
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.
கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.
அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.
மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நாளை மாலை (15-ந் தேதி) தண்ணீர் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள திறந்தவெளி திடல் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டிற்கான பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.
திடலின் முகப்பில் மாமன்னன் கரிகாலன், விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலின்முகப்பு பகுதியில் ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி, பல்லுயி ர்க்கும் பகிர்ந்தளி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் மாநாட்டு திடலில் இருபுறங்களிலும் ஒரு பகுதியில் மாமன்னன் கரிகாலனின் சிறப்புகளை விளக்கும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மற்றொரு பகுதியில் காவிரி ஆறு பாய தொடங்கும் குடகு முதல் பூம்புகார் வரையிலான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் இன்று திருச்சி வருவார் என்று கூறப்படுகிறது.
மாநாட்டு திடலின் முகப்பு தோற்றத்தை காணலாம்.
நாளை மாலை 4 மணிக்கு பூதலூரில் தொடங்கும் தண்ணீர் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இந்த மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாநாட்டு திடல் பகுதியில் திருவையாறு தொகுதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் முதுகலை பட்டதாரி செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் மாநாட்டு பணிகளை மேற்பார்வையிட்டனர்.
மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள மாமன்னன் கரிகாலன் மற்றும் காவிரி ஆற்றின் வரலாற்று காட்சிகளை பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளன. இவற்றை அங்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் காவிரி படுகையின் தலைப்பு பகுதியான பூதலூரில் நடைபெற உள்ள இந்த தண்ணீர் மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.






