என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் உருவப்படம்
நயினார் நாகேந்திரன் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள்- சதி திட்டத்துடன் வந்தார்களா? என விசாரணை
- வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்தபடி ஒரே மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர்.
- நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் உளவுத்துறை போலீசார் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை:
டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே சமீப காலமாகவே தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. நேற்று அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 3 தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் நேற்று நெல்லையில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை மர்ம நபர்கள் நள்ளிரவில் நோட்டமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டினை சுற்றி 3 புறங்களிலும் சாலைகள் செல்கின்றன. இந்நிலையில் இந்த சாலையில் நேற்று நள்ளிரவு 11.35 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் ஹெல்மெட் அணிந்தபடி மொபட்டில் வந்துள்ளனர். அவர்கள் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு திரும்பும் சாலையில் மூலையில் நின்றபடி அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதனை அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கவே, அவரது உதவியாளர்கள் மூலம் வீட்டை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்தபடி ஒரே மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த நபர்கள் மீண்டும் சிறிது நேரம் கழித்து அங்கு வந்து வீட்டை நோட்டமிட்டு சென்ற காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து பெருமாள்புரம் போலீசாருக்கு இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் உளவுத்துறை போலீசார் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் அறந்தாங்கியில் நடந்த பிரசார பயணத்தில் கலந்து கொண்டார். அங்கும் அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே நேற்று நெல்லையில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்கள் நோட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் யாரும் நேற்று வீட்டில் இல்லை. அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வெளியூருக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லை. இதனால் வந்த மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் நோட்டமிட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பயங்கர சதி திட்டத்துடன் நோட்டமிட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






