என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சி முடிய கவுண்டவுன் ஆரம்பமாகிவிட்டது- நயினார் நகேந்திரன்
- தமிழக மக்கள் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தி.மு.க.வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளனர்.
பட்டுக்கோட்டை:
"தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் பா.ஜ.க. கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் தலைமை தபால் நிலையம் அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-
எனது சுற்றுப்பயணம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்பதை தேசிய தலைமையும், கூட்டணி தலைவரும் முடிவு செய்வார்கள்.
பா.ஜ.க.வை பொறுத்த வரை தீவிரமாக யாரையும் எதிர்ப்பதில்லை. கட்சியின் கொள்கை ரீதியாக மட்டுமே எதிர்க்கிறோம்.
தனிப்பட்ட முறையில் இதுவரை யாரையும் எதிர்ப்பது கிடையாது. இனிமேலும் அது இருக்காது. கரூர் சம்பவம் நடந்தபோது அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. எதிர்க்கட்சிகள் கூட்டம் போடும் எந்த இடத்திலும் போலீசார் நிற்பதில்லை. மதுரை இந்து முன்னணி மாநாட்டில் 5 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். ஆனால் அங்கு ஒரு போலீசார் கூட இல்லை.
எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு முறையாக அனுமதி தர போலீசார் மறுக்கிறார்கள். கோர்ட்டுக்கு சென்ற பின்னர் தான் அனுமதி வழங்கப்படுகிறது. இதைத்தான் நான் கூறி வருகிறேன். த.வெ.க.வுக்கு ஆதரவாக நான் பேசவில்லை.
தமிழக பா.ஜ.க. தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான். ஆகவே எனக்கு 6 மாதங்கள் முடிந்துவிட்டதால் மீதம் 2½ ஆண்டுகள் தான் பதவிக்காலம் உள்ளது.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலம் முடிய இன்னும் 2½ மாதங்கள் தான் உள்ளது. அதனால் தி.மு.க. ஆட்சி முடிய கவுண்டவுன் ஆரம்பமாகி விட்டது.
தி.மு.க. கூட்டணி பலமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி கூட்டணி பலம் தான் வெற்றிக்கு காரணம் என்றால் 2011-ல் தி.மு.க. தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
தற்போது தமிழக மக்கள் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
தி.மு.க.வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளனர். எனவே 2026-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றம் உறுதி.
த.வெ.க.வுக்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறுமா என்று தெரியாது. ஒரு கவுன்சிலர் கூட த.வெ.க.வுக்கு கிடையாது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என கூறுவது நகைப்பிற்குரியது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் அருகிலேயே கஞ்சா விற்கப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.






