என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
    • மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக கன மழை பெய்ததால் 1,70,000 கன அடி தண்ணீர் சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்தையா நகரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலமாக பேசினார்.

    அப்போது வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உங்களுடன், எம்.எல்.ஏ மேயர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சரை காண்பித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் யாரும் அச்சப்பட வேண்டாம்.

    நீங்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு மூலமாக எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் அமைச்சர், எம்.எல்.ஏ., மேயர் உள்ளிட்ட அனைவரும் உங்களுக்கு தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளிலும் உடனடியாக செய்து தர உத்தரவிட்டுள்ளேன் என பேசினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று அமைச்சருக்கு வீடியோ கால் மூலமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ளத்தால் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வீடியோவில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து சிறியது முதல் கனரக வாகனங்கள் வரை கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியார் சிலைகளை உடைப்பதாக கூறியது, கனிமொழி குறித்து எதிராக விமர்சனம் உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டது.
    • இரு வழக்குகளில் குற்றவாளி என எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்து தெரிவித்தது, கனிமொழி எம்.பி.க்கு எதிராக விமர்சனம் செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரிய எச்.ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து, இந்த வழக்குகளில் விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது இருந்தது.

    இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை ஜி.ஜெயவேல் கூறினார். அதில், எச்.ராஜாவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டுள்ளன. இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்திலிருந்து பதிவு செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே இந்த வழக்கில் எச்.ராஜா குற்றவாளி என்றும் அவருக்கு தலா 6 மாத சிறைதண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    மேலும், எச்.ராஜாவுக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் வழங்ககி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் எச்.ராஜா உடனடியாக சிறைக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது.

    • 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது.
    • அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது.

    இன்று பிடாரி அம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.

    6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெறும். 7-ம் நாள் உற்சவத்தில் பஞ்ச ரத மகா தேரோட்டம் 10-ந் தேதி நடைபெறும்.

    அன்று ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும்.

    தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா 13-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.

    மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தைக் காணலாம்.

    முன்னதாக அருணாசலேவரர் கோவில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளத் தங்க கொடிமரம் முன்பு அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.

    இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இதையடுத்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்றதும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும்.

    கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.

    • கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கு தேவையான கல்வித்தகுதி உள்ளது.
    • தமிழக அரசே கவுரவ விரிவுரையாளர்களின் உழைப்பைச் சுரண்டக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், அதை செயல்படுத்த இயலாது என்று அரசு அறிவித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்குக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 28.01.2019ஆம் நாள் ஆணையிட்டது. அதை செயல்படுத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 18-ஆம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துவது குறித்து நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என ஆணையிட்டது.

    ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்த மறுத்து விட்ட தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி ஆணையரகம், இப்போதுள்ள ரூ.25,000 ஊதியம் தான் தொடர்ந்து வழங்கப்படும் என்று கடந்த 29-ஆம் தேதி பிறப்பித்த ஆணையில் கூறியிருக்கிறது. அதற்காக கல்லூரிக் கல்வி ஆணையர் கூறியுள்ள காரணங்கள் அபத்தமானவை; ஏற்றிக்கொள்ள முடியாதவை. பல்கலைக்கழக மானியக்குழுவால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு மானியக்குழு பரிந்துரைப்படி ரூ.50,000 ஊதியம் வழங்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

    கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கு தேவையான கல்வித்தகுதி உள்ளது. அந்தத் தகுதிகளுடன் பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்த விதிகளின்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் உதவிப்பேராசியர்களாக நியமிக்கப்பட்டிருப்பார்கள். அதற்கு கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படுவதை விட பல மடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், கவுரவ விரிவுரையாளர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கூறியிருக்கிறதோ, அதைத் தான் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் கோருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றமும் அதைத் தான் தீர்ப்பில் கூறியிருக்கிறது. இல்லாத காரணங்களைக் கூறி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த தமிழக அரசு மறுப்பது கவுரவ விரிவுரையாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    பல்கலைக்கழக மானியக் குழுவின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, இதுகுறித்த வழக்கில் கடந்த 21.03.2024&ஆம் நாள் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ''கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் அளவுக்கு கல்வித்தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்திக் கொண்டு மிகக்குறைந்த ஊதியத்தில் அரசு பணியமர்த்தியுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களும் வேறு வழியின்றி கிடைக்கும் ஊதியத்தை ஏற்றுக் கொண்டு பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அரசு வழங்குவது மதிப்பூதியம் அல்ல.... அவமதிப்பூதியம்'' என்று கூறியதுடன், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால், அதை அரசு ஏற்கவில்லை.

    இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரூ.25,000 என்ற நிலையை எட்டியது. அதையும் ஆண்டுக்கு ஒரு மாதம் வழங்க மறுப்பதும், மாதக் கணக்கில் நிலுவை வைப்பதும் நியாயமல்ல. தமிழக அரசே கவுரவ விரிவுரையாளர்களின் உழைப்பைச் சுரண்டக் கூடாது. சமூக நீதியில் தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வீதம் 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பு.
    • விழுப்புரம், மரக்காணம், திண்டிவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    விழுப்புரம்:

    பெஞ்ஜல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. விழுப்புரம் பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.

    மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


    அவர் விழுப்புரம், மரக்காணம், திண்டிவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்ட அவர் அருகில் உள்ள சேவியர் காலனி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பிடாகம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். முன்னதாக மரக்காணம் மேட்டுத்தெருவில் தற்காலிக குடில் அமைத்து வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்டி-சேலை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள மகாராஜாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வி.வி.ஏ. திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

    • மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்க உத்தரவு.
    • மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    மழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். 

    • இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
    • 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.

    அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சேறும் சகதியுமாக மாறியது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.


    தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணிக்கு அங்கு சென்றனர்.

    மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அப்போது உள்ளே ஆட்கள் இருப்பது போல மோப்பநாய் அடையாளம் காட்டியது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் இரவில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

    மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.

    அப்போது மழை பெய்ததால் மகா தீப மலையில் இருந்து மழை நீர் மீட்பு பணி நடந்த இடத்திற்கு வந்தது. இதனால் மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-

    மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பாறைகள் உருண்டு விழும் ஆபத்தான நிலை இருப்பதால் இரவில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது.

    இன்று காலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மண்ணில் புதைந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.

    மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு 7 பேர் கதி என்ன என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

    • மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன.
    • நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

    நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன.

    அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • இன்று, நாளையும் 2 நாட்கள் மலைரெயில் ரத்து.

    ஊட்டி:

    வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல், தமிழகத்தை நெருங்கி வந்து, புதுச்சேரியில் கரையை கடந்தது.

    புயல் தாக்கம் காரணமாக மலை மாவட்டமான நீலகிரியிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    நேற்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது.

    நேற்று மாலை ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் ஊட்டி நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய, கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழைக்கு, ஊட்டியில் ரெயில்வே போலீஸ் நிலைய வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது.

    இதேபோல் ஊட்டி பஸ் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள ரெயில்வே பாதையிலும் மழைநீர் அதிகமாக தேங்கியது. பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தார்கள்.

    ரெயில்வே பாதையில் தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழையால் காலையில் வேலைக்கு செல்வோர் குடைபிடித்தபடியும், ஜர்க்கின் அணிந்தபடியும் பயணித்தனர்.

    ஊட்டி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் என மாவட்டம் முழுவதுமே பலத்த மழை பெய்தது. காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    மழையுடன் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரும் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் பயணிப்போர் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களையும் கண்டு ரசித்தனர்.

    நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட 3 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜார் மற்றும் கொடநாடு பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கூடலூர் பஜார்-73, கொடநாடு-71, கிளைன்மார்கன்-59, அப்பர் கூடலூர்-52, ஊட்டி-40, தேவாலா-39, பார்வுட்-35, கீழ்கோத்தகிரி-33, கேத்தி-32, செருமுள்ளி, வுட் பெரியார் எஸ்டேட்-30, கோத்தகிரி-27.

    இதற்கிடையே நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம், ஊட்டி-குன்னூர், குன்னூர்-ஊட்டி இடையே இன்று, நாளையும் என 2 நாட்கள் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்தும் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தும் நேற்று மாற்றமின்றி விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,090-க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து  ஒரு சவரன் ரூ. 56,720-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

    30-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

    29-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280

    28-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720

    27-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    30-11-2024- ஒரு கிராம் ரூ. 100

    29-11-2024- ஒரு கிராம் ரூ. 100

    28-11-2024- ஒரு கிராம் ரூ. 98

    27-11-2024- ஒரு கிராம் ரூ. 98

    • வாழ்க்கைக்கு தேவையானவற்றை அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துங்கள்.
    • அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும்.

    கோவை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 3 மாத படிப்பு முடிந்து லண்டனில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். அதைத்தொடர்ந்து மாலையில் அவர் விமானம் மூலம் கோவை வந்தார். சென்னை மற்றும் கோவை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    லண்டனில் இருந்து திரும்பியதும் முதல் நிகழ்ச்சியாக கோவையில் நடந்த வாய்ஸ் ஆப் கோவை மாநாட்டில் பங்கேற்று பேசினார். மாநாட்டில் அவர் சர்வதேச மற்றும் இந்திய அரசியல் பார்வை என்னும் தலைப்பில் உரையாற்றினார். அண்ணாமலை பேசியதாவது:-

    நல்லதை நல்லது என்று சொல்லவும், கெட்டதை கெட்டது என்று சொல்லி சுட்டிக்காட்டவும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பு தொடங்கப்பட்டது. அரசியல் கட்சிகளும் கூட மக்களின் குரலாக இருக்க வேண்டும்.

    தன்னார்வ அமைப்பு கள் உங்கள் குரலாக ஒலிக்கும்போது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது. உலக அரசியல் மிக முக்கியம். ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வு, நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    அமெரிக்காவில் வெற்றி பெற்ற டிரம்ப் பதவியேற்றவுடன் சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள 1.20 கோடி பேரை வெளியேற்றப் போவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். இதுவும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    பா.ஜ.க. சார்பில் 2020 அக்டோபர் முதல் அசாம் மாநிலத்தில் 37 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.830 தரப்படுகிறது. தி.மு.க. மகளிர் உதவித்தொகை தரும் முன்பே அசாமில் கொடுக்க தொடங்கி விட்டோம்.

    இந்த ஆண்டு மார்ச் முதல் சத்தீஸ்கரில் 70 லட்சம் தாய்மார்களுக்கு ரூ.1000, மகாராஷ்டிராவில் ஜூலை முதல் 1.70 லட்சம் தாய்மார்களுக்கு ரூ.1500, ஒடிசாவில் செப்டம்பர் முதல் 80 லட்சம் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    பிரதமர் மோடி ஆட்சியில் 40 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வங்கிகடன், ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    மோடி அரசு, உள்கட்டமைப்புக்கு ரூ.48 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. எல்லா மக்களுக்கும் எல்லாவித சலுகைகளும் வர வேண்டும் என நினைக்கும் அரசாக பா.ஜ.க. உள்ளது.

    ஆனால் நாட்டில் வளர்ச்சி இல்லை என்றாலும் அனைத்தும் இலவசம் என்கிறார் ராகுல்காந்தி. அப்படியென்றால் நாடு எப்படி முன்னேறும். அறிவு பூர்வ மக்கள் இருக்கும் இதுபோன்ற இடங்களில் அரசியல் சாராதவர்கள் பேசும் கருத்துகள், அரசியல் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளாக மாறும் வாய்ப்புள்ளது.

    மக்களுக்கு பயன்படும் அரசியல் பேச வேண்டும். அதை பேசுவதில்லை. ஆக்கப்பூர்வ முறையில் மக்களிடம் கருத்து கேட்கும் அரசு தமிழகத்தில் இல்லை.

    கோவை வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை. வெட்கிரைண்டர் உற்பத்தியில் தலைநகராக கோவை இருந்தது. தற்போது அது அகமதாபாத் நகராக மாறி விட்டது. கோவையின் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி இல்லை. விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் தர இழுத்தடிக்கின்றனர். அறிவாளிகளை அடிமை வாதிகளாக மாற்றும் அரசியல் நிலவரம் இங்கு இருக்கிறது.

    லண்டன் அருங்காட்சியகத்தில் 67 லட்சம் பொருட்கள் உள்ளன. அதில் டைனோசர் எலும்பு முதல் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பொக்கிஷங்கள் வரை உள்ளன. நம் பாரம்பரிய, கலாசாரம் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறது. கலாசாரத்தை மீட்டெடுக்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    உலகம் முழுவதும் நமது கலாசாரம் சார்ந்த வேர்களை கொண்டுவர வேண்டும். அதை பிரதமர் மோடி மீட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இருந்து 640 புராதன பொருட்களை மோடி அரசு மீட்டுள்ளது.

    அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க இளைஞர்கள் சபதம் ஏற்க வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இருந்து இயற்கையோடு இணைந்து வாழும்போது தான் அறிவு சார்ந்த விஷயங்கள் நடக்கும். நடுத்தர மக்கள் அறிவுசார்ந்த விஷயங்களை பேச வேண்டும். தமிழக அரசியலை மாற்றும் வலிமை நடுத்தர மக்களின் குரலுக்கு உண்டு.

    கேள்வி கேட்டால் உங்களிடம் வர ஆரம்பிப்பார்கள். நீங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துங்கள். அவர்கள் தானாக உங்களிடம் வருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×