என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பல்வேறு வழிகளில் நூதனமாக செயல்படும் கும்பலால் விழிபிதுங்கி நிற்போர் ஏராளம்.
- விரைவில் மற்றொரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் நடத்தி வைப்பதாகவும் பெருமாயியை சமாதானப்படுத்தி உள்ளார்.
'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்', என்ற பாடல் வரிகள் பலரது வாழ்வில் கேட்க மட்டுமே முடிகிறது, அமைவது கிடையாது. அதற்கு காரணம் திருமண பந்தம், பாசம் உள்ளிட்ட அனைத்தும் பணத்தை பிரதானமாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுவதாகி விட்டது. நில மோசடி, கடன் மோசடி, நகை மோசடி பட்டியலில் தற்போது பிரபலமாகி வருவது திருமண மோசடி.
குடும்ப சூழல், வாழ்க்கை பின்னணி, பொறுப்புகளை தாங்கி நிற்கும் ஆண்களின் நிலை அறிந்து அவர்களை மூளைச்சலவை செய்து நடைபெறும் மோசடிகள் எங்காவது நடந்ததாக வந்த தகவல்கள் தற்போது அடிக்கடி நிகழ்வாகி போனது. அதிலும் பல்வேறு வழிகளில் நூதனமாக செயல்படும் கும்பலால் விழிபிதுங்கி நிற்போர் ஏராளம்.
இதில் பணம், பொருட்களை இழந்து வாடும் பலர் தங்களது இயலாமையை வெளி உலகுக்கு சொல்ல முடியாமல் போவதுதான் மோசடி கும்பலை சேர்ந்தவர்களை ஊக்கப்படுத்துகிறது. அப்படியொரு மோசடிக்கு அடித்தளமிட்ட நிலையில் சுதாரித்துக்கொண்ட தாயால் மகனின் மண வாழ்க்கை அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து நடத்தப்பட்ட நூதன மோசடி பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி (வயது 58). மற்ற பிள்ளைகளுக்கு திருமணம் வைத்து முடித்த பெருமாயி கடைக்குட்டியான தனது மகன் முருகனுக்கும் மணம் முடிக்க ஏற்பாடுகளை செய்து வந்தார். வயதான காலத்தில் தேடிப்போய் பெண் பார்க்க இயலாத நிலையில், அதற்கான பொறுப்பை புரோக்கரிடம் கொடுத்து பெருமாயி வரன் தேடி வந்தார்.
இதனை அறிந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற பெண், அவருக்கு சமீபத்தில் அறிமுகமாகியுள்ளார். தன்னிடம் ஏராளமான வரன்கள் இருக்கிறது. எனவே உங்கள் மகனுக்கு அவரது விருப்பப்படி நல்ல மனைவி கிடைப்பார். அதனை அமைத்து கொடுக்கத்தானே நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை வார்த்தைகளை உறவினர்களை விஞ்சும் அளவுக்கு பெருமாயி மனதில் விதைத்துள்ளார்.
திருமணத்திற்காக தனக்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் விஜயா தெரிவித்துள்ளார். இதை நம்பிய பெருமாயி பணம் வழங்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து, திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முருகனுக்கு திருமணம் நடைபெற்றது. விஜயாவுக்கு ஒப்புக்கொண்டதைப்போல, ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை சந்தோஷத்துடன் பெருமாயி வழங்கினார்.
புதிய மண வாழ்க்கை அமைந்த சந்தோஷத்தில் இருந்த முருகனுக்கு மறுநாள் காலை பெரும் அதிர்ச்சியாகவே விடிந்தது. மனைவி என்று வந்த பெண்ணும், அவரது உறவினர்களும் இரவோடு இரவாக நகை, பணத்துடன் கம்பி நீட்டியதைக் கண்டு அவரும், அவரது தாய் பெருமாயியும் அதிர்ச்சியடைந்தனர். புலம்பி அழுத பெருமாயி மகனின் வாழ்க்கையை நாமே பாழடித்து விட்டோமே என்று கதறினார்.
எனினும், தங்களது குடும்ப மானத்தை காக்கும் பொருட்டு, அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து பெருமாயி, விஜயாவிடம் புகார் தெரிவித்துள்ளார். இதை வருத்தம் கலந்த முகத்தோடு கேட்டுக் கொண்ட விஜயா, தன்னால் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு தானே பொறுப்பேற்பதாகவும், விரைவில் மற்றொரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் நடத்தி வைப்பதாகவும் பெருமாயியை சமாதானப்படுத்தி உள்ளார்.
அதன்படி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருணாதேவி (39) என்ற பெண்ணை அழைத்து வந்த விஜயா அவரை முருகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்காக தனக்கு மீண்டும் தனக்கு ரூ.1 லட்சம் கமிஷன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். விஜயாவின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பெருமாயி, விஜயாவையும், அவருடன் வந்த அருணாதேவி மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. நகரைச்சேர்ந்த காளீஸ்வரி (52) ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கையும், களவுமாக பிடித்து, உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். ஒருமுறை ஏமாந்தது போதும், இனிமேலும் ஏமாறக்கூடாது என்ற வகையில் பெருமாயி எடுத்த முடிவு மகனின் மண வாழ்க்கை மீண்டும் பறிபோவதை தடுத்தது.
பெருமாயி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நூதன மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற ஜெயா, தூத்துக்குடியை சேர்ந்த காளீஸ்வரி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருணாதேவி மற்றும் பொள்ளாச்சி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சீனிவாசன், ஜெயபாரதி, சுஜித்ரா, முரளிதரன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விஜயா, காளீஸ்வரி, அருணாதேவி ஆகிய 3 பேரை கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் முடிந்த கையோடு பணம், நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு அரசு தடை விதித்தது.
- இரவு முழுவதும் மலையில் தவித்த பெண்ணை வனத்துறையினர் மீட்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் கடந்த 13-ந் தேதி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கடந்த 1-ந் தேதி ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக அண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவால் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு வீடு முழுவதுமாக மண்ணில் புதையுண்டது.
இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு அண்ணாமலையில் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப தரிசன நாளில் அண்ணாமலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு அரசு தடை விதித்தது.
கடந்த காலங்களில் தீப தரிசன நாளில் டோக்கன் முறையில் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு அண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீப தரிசன நாளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அனுமதி இன்றி பக்தர்கள் மலை மீது ஏறாதவாறு காவல்துறை, வனத்துறை சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாமலை உச்சிக்கு ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் ஏறினர்.
இதில் ஒரு ஆண் மலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். வழி தெரியாமல் இரவு முழுவதும் மலையில் தவித்த ஒரு பெண்ணை வனத்துறையினர் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மலையில் இருந்து மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்தால் மிகவும் சோர்வாக காணப்பட்டதால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொல்லப்பட்ட இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
- உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே வடமாநில இளைஞர்கள் இருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா மற்றும் துகிலேஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருவரின் உடல்களும் பாதரை என்ற பகுதியில் இருந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
வடமாநில இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்துள்ளனர். எதற்காக கொலை நடைபெற்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சீமானின் கொள்கை, கோட்பாடுகளை விரும்பி இணைந்தோம்.
- அரசியலில் விஜய் எங்களோட ஜூனியர் தான். நாங்கள் தான் சீனியர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் இளையராஜா தலைமையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா கூறியதாவது:-
* நாம் தமிழர் கட்சியில் ஏறக்குறைய 7 ஆண்டு காலமாக அரூர் தொகுதி தலைவராக பணியாற்றி உள்ளேன்.
* 7 ஆண்டு காலமாக பயணித்த இந்த காலகட்டங்களில் பல்வேறு விருப்பு, வெறுப்புகளுக்கு இணங்க கனத்த இதயத்துடன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன்.
* தருமபுரியில் கூண்டோடு நாம் தமிழர் கட்சி கலைப்பு என்கிற தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்கு கூண்டே கிடையாது. இப்பொழுது இருக்கிற உறவுகள் மட்டும் தான் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளனர்.
* கட்சியில் இருந்து விலக காரணம்... சீமானின் கொள்கை, கோட்பாடுகளை விரும்பி இணைந்தோம். அந்த கொள்கை கோட்பாடுகளில் இருந்து விலகி இருக்கின்ற, ஆளுகின்ற, ஆளப்போகிற, ஆண்ட தலைவர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதும், சாதிகளை தரம்தாழ்ந்து பேசுவதும், எங்களுடைய வரலாற்று மாற்றத்திற்கான அதற்கான சிக்கல்களை ஏற்படுத்தும் விதமாக பேசுவதும், அதே சமயம் நாங்கள் கஷ்டப்பட்டு கட்சியை கட்டமைக்கும் போது, தமிழ் தேசியம் என்ற அளவில் நீங்கள் பேசுவது கட்டமைப்பை சிதைக்கிறது என்பதால் நாங்கள் இதில் பயணிப்பது பயன்பாடு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுகிறோம்.
* கட்சியில் இருந்து விலகுகிறோம். மேற்கொண்டு பொறுப்பாளர்களிடம் பேசி என்ன முடிவு என்பதை தெரிவிக்கிறோம்.
* நாங்க நடிக்க வைக்கிற இயக்குனர் கிட்ட இருந்து வருகிறோம். அதனால நடிகரை பார்த்து கட்சியை பார்த்து விலக வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் விஜய் எங்களோட ஜூனியர் தான். நாங்கள் தான் சீனியர் என்றார்.
- கடந்த வாரம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
- அருவிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர் செய்த பிறகே குளிக்க அனுமதி.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று வரை 5 நாட்கள் இந்த தடையானது நீடித்தது.
இந்த நிலையில் தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய 2 அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

ஆனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது இன்று 6-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சேதாரம் அதிக அளவு காணப்பட்டு வரும் நிலையில், அருவிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர் செய்த பிறகே குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- துணை ஜெயிலர், உதவி ஜெயிலர், தலைமைக் காவலர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.
- சட்டம் ஒழுங்கு சீரழிந்து காவல் துறையினரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொது இடங்களில் புழக்கத்தில் இருந்து வந்த போதைப் பொருட்களின் நடமாட்டம் தற்போது சிறைச்சாலைகளுக்குள்ளேயும் புகுந்து விட்டதாகவும், சிறைச்சாலைகளுக்குள்ளேயே கைபேசி மூலம் பேச வேண்டியவர்களுடன் பேசி, எதிரிகளை தீர்த்துக்கட்ட திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
பூந்தமல்லி சிறையில் கைதிகள் அறைகளிலிருந்து ஸ்மார்ட் போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், துணை ஜெயிலர், உதவி ஜெயிலர், தலைமைக் காவலர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இந்த நிலைமை நீடித்தால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து காவல் துறையினரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எனவே முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பணியின் போது ஏற்பட்ட மோதலால் அலுவலகத்தில் வைத்து பூட்டி சென்றார்.
- தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தில் சங்கீதா என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு இடையே பணியின் போது ஏற்பட்ட மோதலால் நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அப்போது தமிழரசி , உதவியாளர் சங்கீதாவை பார்த்து கதவைத் திறந்து விடு. இல்லையென்றால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை செய்தும் உன்னால் முடிந்ததை பார் என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார் உதவியாளர் சங்கீதா.
இதனைத் தொடர்ந்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து பூட்டி இருந்த கதவை திறந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
- சோலாரில் ரூ.18 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள காய்கறி, பழங்கள், மளிகை என மொத்த சந்தை வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசி வருகிறார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற 19-ந்தேதி, 20-ந் தேதி என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 19-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக ஈரோட்டுக்கு அங்கு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு முதலச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு விருந்தினர் மாளிகைக்கு சிறிது ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மாலை 5 மணி அளவில் மேட்டுக்கடை பகுதியில் தங்கம் மகாலில் நடக்கும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மாலை 6 மணி அளவில் தி.மு.க. கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரக்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். இரவில் ஈரோடு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
அதைத்தொடர்ந்து 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட 6 தளங்கள் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், ஈரோடு பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட வெளிவட்ட சுற்றுச்சாலை (ரிங்ரோடு), ஈரோடு வைராபாளையத்தில் அமைக்கப்பட்ட கூடுதல் உரக்கிடங்கு, சென்னிமலையில் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சோலாரில் ரூ.18 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள காய்கறி, பழங்கள், மளிகை என மொத்த சந்தை வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அதிகாரிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- யாகசாலை அமைத்து கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.
- சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி தாலுகா அரசர்குளம் வடபாதியில் அமைந்து ஸ்ரீமகா முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி மக்களால் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3 நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று வந்தது.
பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அப்பகுதியை சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து வந்தனர். அவர்களுக்கு விழா குழு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு.
- மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் அதிமுக.
சென்னை :
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாஜக-வோடு கள்ளக்கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு 'கண்டனம்' என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் 'வலியுறுத்தல்' என்றும் சொல்லி 'கோழைசாமி' பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம்!
இப்படி பழனிசாமியின் பயப் பட்டியலும் "எல்லாம் பயம் மயம்" எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது.
புலிப்பாண்டியென அழுத்தம் கொடுக்கும் பழனிசாமி அவர்களே…
* குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்திருக்கும்.
* பாராளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு.
* அம்மையார் ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு.
* முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது.
* முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024-இல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது.
* நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக பாஜக நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது.
* 'நான் ஒரு விவசாயி' என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்த விஷவாயு நீங்கள்.
* மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் அதிமுக.
இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி. இந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமிதான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார்.
பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறாரா?
"அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்" என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாகப் பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு அறிக்கையில் கூறியுள்ளார்.
- தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக். தொழிலதிபரான இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு விற்பனைக்காக ஏராளமான புதிய ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பழுதுநீக்கும் சர்வீஸ் நிலையமும் அமைந்துள்ளதால் அங்கு பலர் தங்களது வாகனங்களை விட்டு சென்றிருந்தனர்.
நேற்று இரவு வழக்கமான நேரத்தில் ஷோரூம் பூட்டப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்களும் புறப்பட்டு சென்றனர். நள்ளிரவில் அந்த ஷோரூமில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்துள்ளது. அடுத்து ஒருசில நிமிடங்களில் அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஷோரூம் உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாக வந்த கார்த்திக் ஷோரூம் அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தீ விபத்து ஏற்பட்டு வெப்பம் வெளியேறியது. இதையடுத்து அவர் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 19 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 9 சர்வீஸ் பணிக்காக வந்த ஸ்கூட்டர்கள் மற்றும் ஏராளமான கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அருகில் உள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக் கடை உள்ளிட்ட ஒருசில கடைகளிலும் தீ பற்றியது. இதில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது.
- இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏறுமுகத்தில் உள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதம் 13.8 சதவீதமும், ஆகஸ்டு மாதம் 13.4 சதவீதமும், செப்டம்பர் மாதம் 18.4 சதவீதமும், அக்டோபர் மாதம் 36.4 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு முக்கிய பங்காற்றி வருகிறது. திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரித்து வருவது உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.8 ஆயிரத்து 506 கோடியே 20 லட்சத்துக்கு நடந்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 11.2 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதுபோல் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.82 ஆயிரத்து 509 கோடிக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.9 சதவீதம் அதிகரித்துள்ளதால் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுபோல் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 ஆயிரத்து 247 டாலர் மதிப்பில் வர்த்தகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 7 ஆயிரத்து 817 டாலர் நடந்துள்ளது. அதன்படி 11.6 சதவீதம் ஏற்றுமதி அதிரித்துள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி. தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல் கூறும்போது, 'ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைந்துள்ள நாடுகளிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவது நேர்மறையான எண்ணத்தை உற்பத்தியாளர்களிடம் விதைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடி என்ற வர்த்தக இலக்கை நிச்சயம் எட்டும்' என்றார்.






