என் மலர்tooltip icon

    இந்தியா

    • எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும்.
    • கவின் கொலையில் தனது தாய், தந்தையை தொடர்புபடுத்த வேண்டாம்.

    நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    * எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும்.

    * கவின் கொலைக்கும் எனது தாய் - தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    * எனக்கும் கவினுக்கும் இடையிலான உறவு குறித்து தெரியாமல் தவறான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.

    * கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்.

    * கவின் கொலையில் தனது தாய், தந்தையை தொடர்புபடுத்த வேண்டாம்.

    * எனது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • செங்கல்பட்டில் மிகப்பெரிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
    • குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

    சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க. நகர் மற்றும் பெரியார் நகர் புதிய பஸ் நிலையம், சேத்துப்பட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சலவை கூடத்தில் அவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அந்த வகையில் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பஸ் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குத்தம்பாக்கம் பஸ் நிலையம் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

    செங்கல்பட்டில் மிகப்பெரிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. மகாபலிபுரத்தில் பஸ் நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெரியார் நகர் பஸ் நிலையம், திரு.வி.க.நகர் பஸ் நிலையத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    முடிச்சூர் பஸ் நிலையம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதை விரைவுபடுத்த எங்களது சட்டப் பிரிவிடம் பேசி உள்ளோம். விரைவில் அதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துவோம்.

    ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுதான் ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இப்பொழுது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுக்கிறார்கள். குத்தம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி ஏற்படும்.

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையப்பணிகளை விரைவுபடுத்த தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் எங்கள் செயலாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ரெயில் நிலையத்திற்கான தொகை ரூ.20 கோடி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. அந்த பணி விரைவுபடுத்தப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளார்கள்.

    தி.மு.க., கூட்டணி கட்சிகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்கிறார். நாங்கள் யாரையாவது கூட்டணிக்கு வருமாறு அழைக்கிறோமா? இல்லை. அவர்களது கூட்டணியில் உள்ள யாரையாவது விமர்சனம் செய்கிறோமா? எடப்பாடி பழனிசாமி மைக்கை பிடித்தாலே கம்யூனிஸ்ட்களை விமர்சனம் செய்வது, வி.சி.க.வை அழைப்பது என்று தேடித்தேடி அழைத்துக் கொண்டிருக்கிறார்.

    புலிக்கு பயந்தவன்தான் தன் மேல் படுத்துக்கொள், தன் மேல் படுத்துக்கொள் என்று கூறுவான். எடப்பாடி பழனிசாமி தினமும் ஒன்று பேசிக் கொண்டிருக்கிறார்.

    எங்கள் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல்வரை கூட்டணி கட்சிகள் நம்புகின்றன. மக்கள் நல பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றியத்தில் முதன்மையாக இருக்கிறார். 2026-ம் ஆண்டு மீண்டும் கிரீடத்தை சூட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

    1967, 1977 போன்று 2026-ல் மாற்றம் வரும் என்று விஜய் கூறுகிறார். நிச்சயமாக மாற்றம் வரும். இன்றைக்கு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னவர் 2026-க்கு பிறகு, மீண்டும் நான் சினிமாவிற்கு செல்கிறேன் என்ற மாற்றத்தை ஏற்படுத்துவார். த.வெ.க. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு பிரசாரத்தை தொடங்கட்டும். அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்தால் கூட, எவ்வளவு வித்தை காட்டினாலும் மக்களிடம் காசு பெறுகிற போது இறங்கி வந்துதான் ஆக வேண்டும். ஓட்டு என்ற மகத்தான சக்தி மக்களிடம் உள்ளது. அந்த மகத்தான சக்தி எங்கள் முதலமைச்சரின் பக்கம் உள்ளது. நிச்சயம் வென்று காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி துணை ஆணையர் கவுசிக் கலந்து கொண்டனர்.

    • விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான்.
    • தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குஷ்பு கூறியதாவது:-

    இந்தப் பதவி நான் எதிர்பாராதது. எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதற்காக கட்சிக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ஜ.க.வை பொறுத்தவரை முன்பு சரியான பதவி தரப்படவில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. நான் பா.ஜ.க.வில் இணைந்த உடனேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள்.அதன்பிறகும் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பதவிகளை எல்லாம் வழங்கினார்கள்.

    என்னைப் பொருத்தவரை பா.ஜ.க.வில் கொடுக்கும் பொறுப்பில் இருந்து தனது வேலையை அமைதியாக செய்தாலே போதும் கட்சித் தலைமை மகுடம் சூட்டி மகிழும்.

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மாநில தலைவர் முறையான பயிற்சிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவார். அதன்படி மக்களிடம் கட்சியை வளர்க்கவும் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள நல்ல திட்டங்கள் பற்றியும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.

    முன்பெல்லாம் வறுமை, ஊழல் மலிந்த தேசமாகவே இந்தியாவை மற்ற நாடுகள் பார்த்தன. ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கின்றன.உலக அளவில் முதலாவது 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது.

    பிரதமர் மோடியை பார்த்து இப்படி ஒரு தலைவரை பார்த்தது இல்லை என்று உலக நாடுகள் எல்லாம் வியக்கின்றன. பிரதமர் மோடி பற்றி நான் தமிழகம் முழுவதும் சென்று பேசுவேன்.

    தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி நிறைய செய்து இருக்கிறார். இதுபற்றி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பேசுவேன்.

    நடிகர் விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான். அரசியல் ரீதியாக அவர் வேறு இடத்தில் இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

    அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவது பற்றி அ.தி.மு.க.-பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி கூட்டணி விவகாரங்கள் பற்றி நான் மேலிட அனுமதி இல்லாமல் பேச இயலாது.

    என்றாலும் தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். விஜய் கட்சியின் முக்கிய குறிக்கோளே தி.மு.க.வை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான்.

    இதே கொள்கையுடன்தான் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் இருக்கிறது. நீங்கள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்க்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி இருப்பதும் தெரியும். எனவே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஆனால் இப்போதும் முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுப்பதை கேட்டு எல்லாம் நன்றாக நடக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் என்ன? தினமும் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், போதை பழக்கங்கள் அதிகரிப்பு என்று தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது போதும் எங்கள் வெற்றிக்கு என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் சொன்னபடி செய்தார் களா? பலருக்கு அந்த பணம் கிடைக்கவில்லை.

    இப்போது கணக்கெடுக்கும் போது தான் கள நிலவரம் கலவரமாக இருக்கிறதே என்று கலங்கி போய் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கணக்கெடுப்பதை ஆட்சிக்கு வந்ததும் முறையாக கணக் கெடுத்து எல்லா பெண்களுக்கும் வழங்கி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதுதான் தி.மு.க.வின் தேர்தல் ஏமாற்று வேலை. ஆனால் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
    • அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டினர்.

    மகாராஷ்டிரா மாநிலம் பயனே நகரில் கார்கில் போர் வீரர் ஹக்கிமுதீன் ஷேக் (58) வீட்டுக்குள் 60 பேர் கொண்ட கும்பல் புகுந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கார்கில் போர் வீரர் வீட்டில் புகுந்த கும்பல், அவர்களை வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக ஹக்கிமுதீன் ஷேக் குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

    சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

    • தி.மு.க. அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும்.
    • புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றும், இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அவருக்கு பதில் அளிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக இருந்த போதும் முறையான விதிகள் இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தன.

    இந்த குறைகளை நீக்கும்பொருட்டு பல்வேறு வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும். வணிகர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ள திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத்தின் மீது பழிபோட பழனிசாமி பகல் கனவு காண வேண்டாம்.

    இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அதில் லைசென்ஸ் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்தக்குழு, கிராமப்புறங்களில் சிறு வணிகர்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் கிராமங்களில் தொழில் செய்ய லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆலோசனை குழு சமர்ப்பித்த பிறகு இதில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
    • அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் பயன் பெற்றனர். இந்நிலையில் கல்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளனர்.

    அதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் பங்கேற்று வேலை செய்யாதவர்கள் பெயரில் நிதி ஒதுக்கி ஏராளமான தொகையை ஊராட்சி செயலாளர் மோசடி செய்து உள்ளார். அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார். இந்த மோசடி குறித்து அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கல்வார்பட்டி ஊராட்சி நிதியை முறைகேடு செய்த விவகாரத்தில் ஊராட்சி தலைவர், செயலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கல்வார்பட்டி ஊராட்சியில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்புக்கு ஊராட்சி தலைவரும், செயலரும் ஆதரவு அளித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது போல பல்வேறு மோசடியில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    இது சம்பந்தமாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று அரசு வழக்கில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள், உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

    • தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-

    * இன்று காலை முதல் நடைபெற்ற ஆலோசனையில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

    * தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுகிறது.

    * தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    * தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றார்.

    எதிர்கால கூட்டணி குறித்து காலசூழலுக்கு ஏற்ப முடிவு என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் வகுப்பறையில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் வகுப்புக்கு வந்தாலே மாணவிகள் அச்சமடையும் நிலை ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிகாரிகள் வகுப்பறை மற்றும் குடியிருப்புகளில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் தெரிவிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர்.

    இதனையடுத்து மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்ததால் ஆங்கில ஆசிரியர் ரஞ்சித்குமார் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும்.
    • பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்ற டிரம்பின் கருத்து குறித்து பேசிய ராகுல் காந்தி, "டிரம்ப் சொல்வது சரிதான், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும். பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார். அதானிக்கு உதவ பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

    எங்களிடம் ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனா உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் உங்கள் குழுவை உலகிற்கு அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை.

    பிரதமர் மோடி தனது உரையில் டிரம்ப், சீனாவின் பெயரை கூட சொல்லவில்லை. இந்த பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் இராணுவத் தலைவர், ஜனாதிபதி டிரம்ப் அவருடன் மதிய உணவு அருந்துகிறார். நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்று கூறினார்

    இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் 30-32 முறை கூறியுள்ளார். 5 இந்திய ஜெட் விமானங்கள் வீழ்ந்ததாகவும் அவர் கூறினார். டிரம்ப் இப்போது இந்திய பொருட்களுக்கு 25% வரிகளை விதிப்பதாகக் கூறுகிறார். இதற்கு பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்க முடியவில்லை? உண்மையான காரணம் என்ன? யார் கையில் அதிகாரம் உள்ளது?

    பாஜக அரசாங்கம் நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டது" என்று தெரிவித்தார். 

    • வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தஞ்சாவூர், தெனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.

    எனவே டெங்கு பாதிப்பு அதிகமாகும் என்பதால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு ATS கொசுக்களை அழிக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • 2024-ம் ஆண்டு சாதிக்கட்சிகளை இணைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது.
    • இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நெல்லையில் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டது குறித்து கூறியதாவது:-

    * 2024-ம் ஆண்டு சாதிக்கட்சிகளை இணைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது.

    * 2024-ல் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாட்டாளி மக்கள் கட்சி

    * எல்லா சாதிக்கட்சிகளையும் இணைத்து ஒரு மதகட்சி தலைமை வகித்தது.

    * பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி என்பது தெரியும்.

    * சமபங்கு என்றால் மாளிகையில் இருப்பவர்களுக்கும், தாழ்தளத்தில் குடிசையில் இருக்கிறவங்களும் சம பங்கு என்று சொன்னால் ஏற்புடையதாக உள்ளதா?

    * நாட்டில் அடிப்படையை தகர்த்து மறுகட்டடம் கட்டணும்னு.

    * வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து முற்றிலுமாக புதிய ஒரு சமூகம் படைப்பது தான் புரட்சி என்கிறார்கள். அதற்காகதான் நாங்கள் போராடுகிறோம்.

    * அதனால் தான் நாங்கள் அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் என்கிறோம். இந்த அரசியலுக்குள், இந்த அமைப்புகள் ஒன்னும் செய்யமுடியாது.

    * இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான் என்றார். 

    • கள் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது.
    • நாம் அனைவரும் சாதியை மறந்து ஒன்றாக கை கொடுக்க வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சக்தி நகரில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கள் விடுதலை இயக்க மாநாடு நடைபெற்றது.

    பனையேறிகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    சீமான் பேசும்போது கூறியதாவது:

    கள் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பீர், விஸ்கி, பிராந்தி குடிப்பதால் உடல் நலமாகும் என சொல்ல முடியுமா? தி.மு.க.வின் பகுத்தறிவில் தீயை வைத்து கொளுத்த வேண்டும்.

    கள் இறக்குவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.

    கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. காரணம் ஆட்சியாளர்கள் அங்கு ஆலைகளை நடத்த வில்லை.

    தமிழ்நாட்டில் மதுபான ஆலை அதிபர்கள் நலனுக்க கவே அரசு கள் இறக்குவதற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும்.

    தமிழகத்தில் மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம் ஆனால் கல்வி கட்டணம் ரூ.10 லட்சம். ஆகையால் தான் பஸ்ஸில் இலவசம் வேண்டாம். கல்வியை இலவசமாக கொடுங்கள் என கேட்கிறோம்.

    3500 அரசு காலிப்பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அப்படி என்றால் 13 லட்சம் பேரும் வேலை இல்லாமல் இங்கு தெருவில் நிற்கிறார்கள்.

    மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ. 1000, மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை தருவதற்கு பதிலாக படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.

    இந்த திட்டங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு அரசு 24,000 கோடி செலவழிக்கிறது.

    தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். மாடுகளுடன் பேசுவதாக சொல்கிறார்கள் அதற்கு அறிவு இருப்பதால் பேசுகிறேன்.

    இன்றைக்கு என்னை எதிர்த்து போராடும் அளவிற்கு எல்லா கட்சிகளும் வந்துவிட்டது.

    பனைமரம் ஏறினால் இவன் இந்த சாதிக்காரன் என முத்திரை குத்துகிறார்கள் மரத்திற்கும் அரசு சாதியை புகுத்துகிறது. சாதியை வைத்து மக்களை பிளவுபடுத்தும் வேலை நடந்து வருகிறது.

    ஆகவே நாம் அனைவரும் சாதியை மறந்து ஒன்றாக கை கொடுக்க வேண்டும்.

    ரோடு சோ நடத்தி மக்களுக்கு டாட்டா காண்பிக்கும் அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஆறு மாதத்தில் மக்கள் டாடா காண்பிப்பார்கள்.

    இந்த ஆட்சி அதிகாரம் இன்னும் 500 ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் இருக்கப் போவதில்லை. இன்னும் சரியாக 6 மாதத்தில் மாறிவிடும். உலகில் மாறாது என்ற ஒரு சொல்லைத் தவிர அனைத்தும் மாறி விடும்.

    வரலாற்றின் சக்கரங்கள் அனைத்தும் சுழன்று கொண்டே இருக்கும். கீழே இருப்பது மேலே வரும். சிம்மாசனத்தில் இருப்பவன் வீதிக்கு வருவான் வீதியில் இருந்து போராடுபவன் அந்த அதிகாரத்துக்கு செல்வான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் மணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

    மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 10 இளைஞர்கள் அங்கிருந்த பனைமரத்தில் வரிசையாக ஏறி நாம் தமிழர் கட்சியின் கொடியினை கையில் பிடித்தபடி நின்றனர். மேடையில் சீமான் உள்ளிட்டவர்கள் கள் அருந்தினர்.

    ×