என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிராமங்களில் தொழில் செய்பவர்கள் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு ரத்து
    X

    கிராமங்களில் தொழில் செய்பவர்கள் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு ரத்து

    • தி.மு.க. அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும்.
    • புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றும், இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    அவருக்கு பதில் அளிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக இருந்த போதும் முறையான விதிகள் இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தன.

    இந்த குறைகளை நீக்கும்பொருட்டு பல்வேறு வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு எப்போதும் ஏழை எளிய மக்களின் குறிப்பாக வணிகர்களுக்கு துணைநிற்கும் அரசாகும். வணிகர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ள திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத்தின் மீது பழிபோட பழனிசாமி பகல் கனவு காண வேண்டாம்.

    இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அதில் லைசென்ஸ் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்தக்குழு, கிராமப்புறங்களில் சிறு வணிகர்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் கிராமங்களில் தொழில் செய்ய லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆலோசனை குழு சமர்ப்பித்த பிறகு இதில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×