என் மலர்tooltip icon

    இந்தியா

    • டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    அந்த வகையில் 131-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த மாநாட்டில் உலக தலைவர்களையும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக தலைவர்களுக்கு ஏ.ஐ. உச்சி மாநாட்டு கண்காட்சியில் எண்ணற்ற விஷயங்களை காட்டினேன்.

    செயற்கை தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் விலங்குகளின் சிகிச்சையில் ஏ.ஐ. எவ்வாறு நமக்கு உதவுகிறது. மேலும் 24 மணி நேரமும் ஏ.ஐ. உதவியுடன் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை எவ்வாறு கண்காணிக்கிறார்கள் என்பதையும் விளக்கியது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பண்டைய நூல்கள், அறிவை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை பார்த்து உலக தலைவர்கள் வியந்தனர்.

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் கைது பற்றி நான் உங்களுடன் விரிவாகப் பேசியுள்ளேன். இதற்கு பிறகு டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்து நமது சமூகத்தில் நிறைய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. ஆனாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன, நீங்கள் அனைவரும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்.

    எந்த பெற்றோருக்கும் தங்கள் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமியான ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம்.

    உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கமளித்து வருகிறது. உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்று பலர் உள்ளனர் என்று கூறினார்.

    • முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

    மதுரை:

    மார்ச் 1-ம் தேதி மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிலையில் பொது கூட்டத்தன்று அரசு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

    இதனால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே இடத்தில் அமைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:-

    அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும்.

    திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதை நிறைவேற்றும் விதமாக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதியரசர் சுவாமிநாதன் மீதும் தீர்ப்பு வழங்கியதற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தி.மு.க. ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி 23-ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    பிரதமருடைய வருகை தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பி விடும் என்றார். பொது கூட்டத்துக்கு முன்பாக மேலும் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக வலிமையான கூட்டணியாக உள்ளது.

    எங்களுடைய கூட்டணியின் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.
    • ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.

    சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.

    இந்நிலையில் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    * 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்படும்.

    * ஜனநாயகன் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் ஒரே குரல் த.வெ.க. தலைவர் விஜயின் குரல் தான்.

    * 234 தொகுதிகளிலும் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெறுவார்.

    * தமிழ்நாட்டை த.வெ.க. தலைவர் விஜய்தான் ஆள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தான் முன்மொழிந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என்று தெரிவித்தார்.
    • எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்தார்.

    சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    தான் முன்மொழிந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்த நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.
    • தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.

    தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பல தொகுதிகளில் நேரடியாக மோத உள்ளது. இது தவிர நடிகர் விஜயின் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.

    இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்பது பற்றி பேசுவதற்கு தி.மு.க.வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளது.

    இந்த நிலையில் இன்று தி.மு.க. தனது கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தி.மு.க. குழுவினருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் முகம்மது அபு பக்கர், பொருளாளர் ஷாஜ கான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

    * இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் இல்லை என்றாலும் 4 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம்.

    * தி.மு.க. நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடு தான் கூட்டணி கட்சிகள் பாடுபடுகிறார்கள்.

    * இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.
    • விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்.

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்க ளிடம் கூறுகையில், "நான் 25 வருடங்களாக தயாரிப்பாளராக இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்" என்றார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள், "தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. போனதால் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்களே" என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு அவர், "அரசியல் இங்கு பேச வேண்டாம், இது சினிமா நிகழ்ச்சி' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

    • தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு.
    • தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

    கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, பயங்கரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு.

    ஏற்கனவே 2022-ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, தமிழ்நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல், "சிலிண்டர் வெடிப்பு" என சமாளிக்கவே முயன்றது இந்த விடியா திமுக அரசு.

    தொடர்ந்து பயங்கரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் NIA போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதனைத் தடுக்க என்ன செய்தது?

    டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் ATS (Anti Terrorism Squad) என்ன செய்துகொண்டு இருந்தது?

    இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்திற்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் தான் மக்களிடையே இருக்கிறது.

    எனவே, தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.

    #மக்களைக்_காப்போம்

    #தமிழகத்தை_மீட்போம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்களிடம் இருந்து எடுத்தால் அது மத்திய பா.ஜ.க. அரசு.
    • திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்!

    மதுரையில் நடைபெற்ற தி.மு.க. வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டு உரையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க. அரசு. மக்களிடம் இருந்து எடுத்தால் அது மத்திய பா.ஜ.க. அரசு.

    திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்!

    #வெல்வோம்_ஒன்றாக

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் செல்வாக்கை இழப்பார்.
    • 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார்.

    தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது

    இதில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    த.வெ.க தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்க்கும்போது, பல கூட்டத்தை நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன் 39 ஆண்டு காலத்தில் நான் இதேபோல் மிகப்பெரிய கூட்டத்தை பார்த்தில்லை.

    அவருக்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு, வளர்ச்சி தமிழகத்தில் புதிய அத்தியாயம் படைக்கும்.

    அவர் 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார். தி.மு.க. திகைத்து நிற்கிறது.

    சட்டம்-ஒழுங்கு கெட்டு தமிழகம் சாம்பல் மேடாக மாறி உள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் ஆளுமையும், ஆண்மையும் எதிர்கட்சிகள் இழந்துள்ளன. இதனை எதிர்க்கும் ஒரே கட்சி த.வெ.க.

    ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் இதுவரை பெற்று வந்த செல்வாக்கை இழப்பார் என நினைக்கிறேன். வைகோ தி.மு.க.வுடன் இணைந்துள்ளார்.

    தி.மு.க.வுடன் உள்ளோம், இனியும் இருப்போம் என காங்கிரஸ் கூறவில்லை.

    மார்ச் 9-ந்தேதி தி.மு.க ஒரு மாநாட்டை திருச்சியில் நடத்துகிறது. அன்று எங்கள் பொலிடிகல் பாம் வெடிக்கும். ராகுல் காந்தியும், விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் தி.மு.க.வுக்கு மாரடைப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும்.
    • தமிழக மக்கள் ஜெயலலிதா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறியதாவது:

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மன் கி பாத் உரையில் ஜெயலலிதாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பெண்களின் நலனுக்காக அவர் பாடுபட்டார் என்று புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது உரையில் கூறி இருப்பதாவது:-

    பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

    சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் விழா. இன்றும் கூட தமிழகத்துக்கு செல்லும்போது மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். அம்மா ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    • 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சி தங்களுக்கே சொந்தம் என இருவரும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து உள்ளது. டாக்டர் ராமதாஸ் தி.மு.க. பக்கம் செல்வதா அல்லது அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்களுடன் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இன்று இறுதி கட்ட ஆலோசனையில் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை ராமதாஸ் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
    • பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வாகன பெருக்கம், நகரின் வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக பொள்ளாச்சியில் கூடுதலாக பஸ் நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி-கோவை ரோடு சி.டி.சி.மேட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.9 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பொள்ளாச்சியின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

    பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொள்ளாச்சி கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது.

    பொள்ளாச்சியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து காந்திசாலை-பல்லடம் ரோட்டை இணைக்கும் புதிய சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயரை சூட்டி, பெயர் பலகையையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    பொள்ளாச்சி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ×