என் மலர்tooltip icon

    இந்தியா

    • கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.
    • பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

    மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாயப் மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் தலைமையிலான போராட்டங்களை நடத்தின.

    அப்போது இஸ்லாமிய புனித எழுத்துக்கள் கொண்ட 'சதர்' துணி எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், மத்திய நாக்பூர் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 17) இரவு வன்முறை வெடித்தது.

    குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த வன்முறையைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் நாக்பூர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்றும் நேற்று முன்தினமும் சில பகுதிகளில் ஊரடங்கு நீக்கப்பட்டது.

    இந்நிலையில் கலவரத்தின்பின் 6 நாட்களுக்கு பிறகு இன்று மதியம் 3 மணியளவில் மீதமுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூரில் நிலைமை முற்றிலும் அமைதியாக உள்ளது. எங்கும் பதற்றம் இல்லை. அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்கிறார்கள். எனவே, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாகப்பூர் தொகுதி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுரபி ராஜை சுட்டுக்கொன்ற கும்பல் நோயாளிகளின் உறவினர்கள் போல உள்ளே வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அகம்குவான் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் இயக்குனராக சுரபி ராஜ் (வயது 33) இருந்தார். நேற்று அவர் மருத்துவமனையில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்.

    அப்போது நோயாளியின் உறவினர்கள் போல வந்த ஒரு கும்பல் திடீரென சுரபி ராஜ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுரபி ராஜ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். உடனே கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

    சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் சுரபி ராஜின் அறைக்கு சென்றபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது கைகள், முகம் மற்றும் மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. உடனே அவரை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து 6 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுரபி ராஜை சுட்டுக்கொன்ற கும்பல் நோயாளிகளின் உறவினர்கள் போல உள்ளே வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. அதே போல துப்பாக்கி சூடு நடந்த போதும் பெரிய அளவில் சத்தம் எதுவும் கேட்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமெரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரபி ராஜ் பற்றி நன்கு அறிந்தவர்களே இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐ.பி.எல். 2025 சீசனின் 3-வது போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்குகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், எம்.எஸ்.தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, நாதன் எல்லீஸ், கலீல் அகமது

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    ராகுல் திரிபாதி, கம்லேஷ் நாகர்கோடி, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன்,ஷேக் ரஷீத்

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்யநாராயண ராஜு

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    விக்னேஷ் புத்தூர், அஷ்வனி குமார், ராஜ் பாவா, கார்பின் பாஸ்ச், கர்ம் சர்மா

    • ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் முழு ஆதரவு.
    • திமுக அரசின் கபட நாடக வேலையால் விடுமுறை நாளான இன்றும் கூட அரசு ஊழியர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர்.

    ஜாக்டோ ஜியோவின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

    1-4-2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS Old Pension Scheme) வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு CPS (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பணி ஓய்விற்குப் பிறகு மாதாமாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உட்பட எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முக்கிய அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும்.

    ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனத்தில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.

    உரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால். அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு செய்ய முன்வரவில்லை. அதை விடுத்து, கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது.

    2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் தி.மு.க. அரசு ஏமாற்றி உள்ளது.

    பழைய ஓய்வூதியத் திட்டமானது ராஜஸ்தான், மேற்கு வங்கம். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் அதை மீண்டும் கொண்டுவரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?

    தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் தி.மு.க. அரசுக்கு. இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

    இதுபோன்ற பாராமுகச்செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரியாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை சிறுது காலத்திலேயே சிவப்பிரகாஷ் அறிந்து கொண்டார்.
    • ஒரு விபத்தில் சிவபிரகாஷ் படுகாயமடைந்த பின்னர் மனைவி பிரியா தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    மத்தியப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் நேரடி அமர்வின் போது ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரின் மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.

    போலீசார் கூற்றுப்படி, மத்தியப் பிரதேசம், ரேவா மாவட்டத்தில் வசித்து வந்த சிவபிரகாஷ் திரிபாதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள் இருக்கிறாள். ஆனால் பிரியாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை சிறுது காலத்திலேயே சிவப்பிரகாஷ் அறிந்து கொண்டார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இதற்கிடையே ஒரு விபத்தில் சிவபிரகாஷ் படுகாயமடைந்த பின்னர் மனைவி பிரியா தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சிவப்பிரகாஷ் கடந்த மார்ச் 16 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


    நேரலையில் தற்கொலைக்கு முன் பேசிய அவர், தனது மனைவியும் மாமியாரும்தான் தற்கொலைக்கு காரணம் என்றும் திருமண வாழ்க்கையால் தனது சந்தோஷத்தை இழந்துவிட்டதாகவும் கூறினார்.

    சிவபிரகாஷ் தற்கொலை செய்துகொள்ளும் 44 நிமிடங்கள் இன்ஸ்டா நேரலையை அவரது மனைவி பிரியாவும், மாமியாரும் பார்த்துக்கொண்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக வழகுபதவு செய்து விசாரித்து வந்த போலீசார் தற்போது பிரியாவையும் அவரது தாயையும் கைது செய்துள்ளனர். 

    • வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து பேசினார்.
    • இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

     தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற மற்றும் தோல்வியுற்ற நிறுவனம் என்று மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை  எம்பியுமான கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

    இன்று டெல்லியில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கபில் சிபல் பல்வேறு விசுஷயங்கள் குறித்து பேசினார்.

    அப்போது வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி  காட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு கபில் சிபல் பதில் கூறினார்.

    அவர் பேசியதாவது, தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற அமைப்பு. தேர்தல் ஆணையம் அதன் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆணையம் இன்று ஒரு தோல்வியடைந்த நிறுவனமாக உள்ளது. இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்தப் பிரச்சினையை நாம் எவ்வளவு விரைவில் கையாள்கிறோமோ, அவ்வளவுக்கு ஜனநாயகம் உயிர்வாழும் வாய்ப்பு அதிகரிக்கும்.

     

    இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் ஒருபுறம் இருக்க , தேர்தல் செயல்முறை ஊழல் நிறைந்தது என்பதைக் காட்டும் சில கடுமையான பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் ஒன்றாக இணைந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் 

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் நிலுவையில் உள்ள பூத் அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்க 4,000க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
    • ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை நடத்தியது.

    புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    சிபிஐ நடத்திய விசாரணையில் ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    அரசு தங்கும் விடுதியில் விடிய விடிய தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று தொடர்ந் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று மாலை சிறுமி மாடியில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றினார்.
    • சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

    உத்தரப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹாரில் புக்ராசி சௌகி பகுதியில் 80 வயது முதியவர் தனது பக்கத்தில் வீட்டில் வசித்த 4 வயது தலித் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    நேற்று மாலை சிறுமி தனது வீட்டு மாடியில் தனியாக விளையாடிகொண்டிருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றி அங்கு வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையறிந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    சிறுமியின் மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

    • அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
    • ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா?

    அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்த விவாதம் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

    பெங்களூரில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா விழாவில் இன்று கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் ஹோசபாலே பேசினார்.

    அப்போது, "பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.

    முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவால் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹோசபாலே, ஔரங்கசீப் போன்றோர் சின்னமாக மாற்றப்பட்டனர். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோ போன்றோர் மறக்கப்பட்டனர். இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் சின்னங்களாக மாற்றப்பட்டனர்.

    ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய வர படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

    • திமுக அரசு இந்தாண்டு அறிவித்துள்ள திட்டங்களை எதையும் செயல்படுத்த முடியாது.
    • சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திமுக அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுள்ளது. தமிழகத்தில் ஊழல் மலிந்து உள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது.

    தற்போதைய பட்ஜெட், தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக தான். திமுக அரசு இந்தாண்டு அறிவித்துள்ள திட்டங்களை எதையும் செயல்படுத்த முடியாது.

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்.

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். பாராளுமன்ற வளாகத்தில் நடந்த திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

    தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் தொடக்க உரையாற்றினார். தலைமை செயலக சங்க ஒருங்கிணைப்பாளரான வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினரான விஜய குமரன், மாநில ஒருங்கிணைப்பாளரான சீனிவாசன் உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருகிற 30-ந்தேதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.

    • பிரிவினை வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பவர் எச்.ராஜா.
    • எச்.ராஜா அநாகரிகமாக பேசி பேசி அரசியல் அரங்கில் இருந்து அழிந்து விட்டார்.

    தமிழ்நாட்டில் சாதி படுகொலை, ஆணவ படுகொலைகளை தூண்டி விடுபவர்கள் 2 பேர். ஒருவர் திருமாவளவன். இன்னொருவர் சுப.வீரபாண்டியன் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக சுப.வீரபாண்டியன் கூறியதாவது:

    * நாங்கள் பிறந்த பிறகு தான் மனுநீதி எழுதப்பட்டதா? அதற்கு முன்னால் மனுநீதி இல்லையா?

    * மனு நீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஆணவ படுகொலைகளுக்கு காரணம்.

    * பிரிவினை என்பதே இந்து சமயத்தின் நியதியாக இருக்கிறது.

    * பிரிவினை கூடாது, சமத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள்.

    * பிரிவினை வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பவர் எச்.ராஜா.

    * அவர் எங்களை பார்த்து குற்றம்சாட்டுவதைவிட கேலிக்கூத்து வேறு ஒன்றும் இருக்க முடியாது.

    * இப்படி பேசுவது கருத்து உரிமையில்லை. அவதூறு.

    * எச்.ராஜா அநாகரிகமாக பேசி பேசி அரசியல் அரங்கில் இருந்து அழிந்து விட்டார்.

    * எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என எண்ண தோன்றுகிறது. அவர் நாகரீகமாக பேசினால் தான் ஆச்சரியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×