என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • 'சாவர்க்கரும், தாங்கேவும் தான் என்னை தோற்கடித்தார்கள்' என்று அம்பேத்கரே தன் புத்தகத்தில் எழுதினார்.
    • அறிவியலைப் படித்தபோதிலும் , மூட நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவராக நீங்கள் இருக்கக் கூடாது.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூர் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் நேற்று உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியபோது, "ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் குறித்து மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். பாபாசாகேப் அம்பேத்கரையும், அவர் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையும் வரலாற்று ரீதியாக எதிர்த்தவர்களுடன் நீங்கள் ஒருபோதும் சேரக் கூடாது.

    சரியானவர்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். சமூக மாற்றத்திற்காக நிற்பவர்களுடன் நில்லுங்கள். சமூக மாற்றத்தை எதிர்ப்பவர்களுடனோ அல்லது சனாதனிகள் உடனோ சேராதீர்கள்.

    ஒரு சனாதனி, இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய செயல், சனாதனிகளும் பழமைவாதிகளும் இன்னும் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

    தலித்துகள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் இந்தச் செயலைக் கண்டிக்க வேண்டும். அப்போதுதான் சமூகம் மாற்றத்தின் பாதையில் செல்கிறது என்று நம்மால் சொல்ல முடியும்.

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் அம்பேத்கரின் அரசியலமைப்பை எதிர்த்தனர்; இன்றும் எதிர்த்து வருகின்றனர். எனவே, நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    சமூகத்தைப் புரிந்து கொள்ள அம்பேத்கர் அறிவைப் பெற்றார், அதை சமூகத்தை மாற்றுவதற்காக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினார்.

    அம்பேத்கரைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது என்று அவர்கள் பொய்களைப் பரப்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், 'சாவர்க்கரும், தாங்கேவும் தான் என்னை தோற்கடித்தார்கள்' என்று அம்பேத்கரே தன் புத்தகத்தில் எழுதினார்.

    சங்க பரிவாரின் பொய்களை அம்பலப்படுத்த இதுபோன்ற உண்மைகளைச் சமூகத்தின் முன் வைக்க வேண்டும்.

    அதனால் பகுத்தறிவும், அறிவியல் சிந்தனையும் வளரும் என்று நம்புகிறேன். அறிவியலைப் படித்தபோதிலும் , மூட நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவராக நீங்கள் இருக்கக் கூடாது." என்று தெரிவித்தார்.  

    • நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் 100,000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடினர்.
    • வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், கலிபோர்னியாவின் சான் டியாகோ, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் பெரிய அளவிலான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

    "No kings" என்ற முழக்கத்துடன் அமெரிக்கா அதிபர் டொனல்டு டிரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.

    டிரம்ப் அரசின் குடியேற்றவாசிகளுக் எதிராக அடக்குமுறைகள், அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் அதிகப்படியான பணிநீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் உள்ளிட்டவை அந்நாட்டில் அதிருப்தி அலையை ஏற்படுத்தி வருகிறது.

    சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை வழிநடத்தி வரும் பல இடதுசாரி சார்பு அமைப்புகளின் கூட்டணியே நோ கிங்ஸ் ஆகும்.

    இதே கூட்டணி முன்பு ஜூன் மாதம் நோ கிங்ஸ் போராட்டத்தை நடத்தியது. இந்த இயக்கத்தில் 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று மீண்டும் மிகப்பெரிய அளவில் மீண்டும் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. 

    "மன்னர்கள் வேண்டாம்" என்ற முழக்கத்துடன் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களில் நேற்று நாடு முழுவதும் 2,700 நகரங்களில் 7 மில்லியனுக்கும் (70 லட்சத்திற்கும்) அதிகமான மக்கள் பங்கேற்றனர் என்று நோ கிங்ஸ் இயக்கம் தெரிவித்தது.

    நியூயார்க் நகரில், 100,000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் டைம்ஸ் சதுக்கத்தில் கூடி, "மன்னர்கள் இல்லை", "ஜனநாயகம், சாம்ராஜ்யம் அல்ல", "மக்களுக்கே அதிகாரம்" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

    இதேபோல், வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், கலிபோர்னியாவின் சான் டியாகோ, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் பெரிய அளவிலான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.  மேலும் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.

    • மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
    • பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வையை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். எரியும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை சுற்றி பட்டாசு பெட்டிகளை வைக்கக்கூடாது. மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற மாவட்ட சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகையின்போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

    மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிப்பது அவசியம். அத்துடன், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
    • ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த பேரணியை நடத்தியது.

    ஜவஹர்லால் நேரு பல்கலைகலைக்கழகத்தில் (ஜெஎன்யு) ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இடதுசாரி மாணவர் குழுக்கள் நேற்று வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.

    இந்தப் பேரணியைத் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆறு காவலர்கள் காயமடைந்ததாகவும், 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர்களில் ஜெஎன்யு மாணவர் சங்கத் தலைவர் நிதீஷ் குமார், துணைத் தலைவர் மனிஷா, பொதுச் செயலாளர் பாத்திமா ஆகியோரும் அடங்குவர்.

    முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை நடத்தியது. 

    • திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது
    • நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.

    டெல்லியில் வழக்கறிஞர் ஒருவருக்கும் குரூப்-ஏ இந்திய ரயில்வே அதிகாரியாக பணியாற்றும் பெண்ணுக்கும் கடந்த 2010 இல் நடந்த திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது.

    தனது மனைவி தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மனைவி அதை மறுத்தார்.

    இதை விசாரித்த குடும்ப நீதிமன்றம், கணவரின் வாதங்களுடன் உடன்பட்டு விவாகரத்து வழங்கியது. இருப்பினும், நிரந்தர ஜீவனாம்சம் கோரிய மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

    விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள மனைவி ரூ. 50 லட்சம் கோரியதும் தெரியவந்த நிலையில் இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், "உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமே பராமரிப்பு கோர வேண்டும். இந்த வழக்கில், மேல்முறையீட்டாளர் (மனைவி) நிதி ரீதியாக நிலையானவர்.

    அவர்கள் குறுகிய காலம் தான் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.  

    • பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர்.
    • பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக பி.சி.சி.ஐ. நிற்கும். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு டி20 போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகி உள்ளது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
    • ரூ.20 லட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய், "அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம்" என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-

    கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம்.

    நாம் அறிவித்தபடி குடும்பநல நிதியாக ரூ.20 லட்சத்தை ஆர்டிஜிஎஸ் வழியாக அனுப்பி வைத்துள்ளோம். ரூ.20 லட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வினால் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம்.

    இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
    • நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகும்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

    ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    என்டிஏ கூட்டணி ஏற்கனேவே 3 வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.

    இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி(ஜேஎம்எம்) கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

    அதன்படி பீகாரில் ஜேஎம்எம் ஆறு இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜே.எம்.எம் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. சக்காய், தம்தாஹா, கடோரியா , மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைந்தி ஆகிய ஆகிய ஆறு இடங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் சில இடங்களில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் ஜே.எம்.எம் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறி தனியாகப் போட்டியிட கட்சி முடிவு செய்தது.

    நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்றிருக்கும் சூழலில் இந்தியா கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.  

    • முதலில் விளையாடிய வங்கதேசம் 207 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • வங்கதேச பந்து வீச்சாளர் ஹொசைன் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. தவ்ஹித் ஹிரோடி அரைசதமும், மெஹிதுல் இஸ்லாம் அங்கோன் 46 ரன்களும், ஷான்டோ 32 ரன்களும் அடிக்க வங்கதேசம் 49.4 ஓவரில் 207 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் அலிக் அதானஸ் 27 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் 39 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 133 ரன்னில் சுருண்டு, 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரிஷாத் ஹொசைன் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    2ஆவது போட்டி வருகிற 21ஆம் தேதி நடக்கிறது.

    • அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
    • டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் நட்சத்திர ஜோடியாக வளம் வந்தனர்.

    ஹாலிவுட் நட்சத்திரங்கள் டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் தங்கள் காதல் உறவை முறித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 9 மாதங்களாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது.

    அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூட வதந்தி பரவியது. ஆனால் மாறாக இருவரும் பிரிந்துவிட்டதாக அமெரிக்க ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

     தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இருவருக்கும் இடையிலான ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த உறவு எதிர்காலத்தில் நீண்ட காலம் நீடிக்காது என்று உணர்ந்த இருவரும், இணக்கமாகப் பிரிவது நல்லது என்று முடிவு செய்துள்ளனர் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயது வித்தியாசம் காரணமாக அவர்கள் திருமணம் செய்துகொள்ள தயங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

     

    • இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை 20 உயிருள்ள இஸ்ரேலிய பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் தன் வசம் இருந்த பால்ஸ்தீன கைதிகளை விடுத்துவித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில்  68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

    நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, காசா நகரத்தின் ஸைதூன் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அபு ஷாபான் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணித்த வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரங்கி குண்டை வீசியுள்ளன.

    இந்த தாக்குதலில் அவருடன் சேர்த்து ஏழு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் தங்கள் வீட்டைப் பார்வையிடச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

    தாக்குவதற்கு முன் அவர்களை எச்சரித்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக காசா சிவில் பாதுகாப்புப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் தெரிவித்தார்.

    இந்தத் தாக்குதலை படுகொலை என்று கண்டித்துள்ள ஹமாஸ், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.  

    • எந்த ஒரு பொருள் விலை ஏறி, இறங்கினாலும் அதன் மீது வர்த்தகம் செய்ய விரும்புவார்கள்.
    • உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது படுவதாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

    தங்கம் விலை இந்த அளவுக்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படியாக செல்லும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது தொடர்பாக, பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஒரு பொருளின் விலை உயர்வுக்கு தேவை, வினியோகம் ஆகிய இந்த இரண்டும் முக்கிய காரணியாக இருக்கிறது. ஆபரணமாக தங்கம் இருந்த வரை ஒரு மதிப்பு இருந்தது. தங்கம் முதலீட்டு பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துக்கும் முக்கிய பொருளாக மாறிய பிறகு அதன் மதிப்பு அப்படியே பல மடங்கு உயர்ந்துவிட்டது.

    கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எல்லா நாட்டின் அரசாங்கங்களும் சேர்ந்து 1,000 டன் தங்கத்தை வாங்கியிருப்பதாக உலக தங்க கவுன்சில் சொல்கிறது. அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். ரிசர்வ் வங்கிகள் வாங்கும் தங்கம் நேரடியாக 'கஜானா'வுக்கு சென்றுவிடும். ஏற்கனவே தங்க வினியோகம் பாதிப்பு இருக்கும் இந்த நேரத்தில், இப்படி கஜானாவில் தங்கத்தை வாங்கிவைப்பதால் மேலும் வினியோகம் பாதிக்கிறது. குறுகியகாலத்தில் இப்படி தங்கத்தை மொத்தமாக இவர்கள் வாங்கிவைத்ததன் விளைவால் தங்கம் ஏறிவிட்டது.

    எந்த ஒரு பொருள் விலை ஏறி, இறங்கினாலும் அதன் மீது வர்த்தகம் செய்ய விரும்புவார்கள். பங்குகளை மட்டுமே வர்த்தகம் செய்தவர்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கி வைக்கும் (இ.டி.எப்.) வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது படுவதாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

    தங்கம் விலை குறையுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. விலை குறைந்தால் சாதாரண மக்களும் வாங்க தயாராக இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. குறைந்ததும் அதுசார்ந்த பொருட்களை வாங்க மக்கள் எப்படி சென்றார்களோ? அதேபோல் தங்கத்தையும் வாங்குவார்கள். அப்படியாக தங்கத்துக்கான ஆதரவு முழுவதுமாக இல்லாமல் போகும் என்ற நிலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார். 

    ×