என் மலர்
இந்தியா

சனாதனவாதிகளுடன் சேராதீர்கள்.. ஆர்எஸ்எஸ் இடம் எச்சரிக்கையாக இருங்கள் - மக்களுக்கு சித்தராமையா அறிவுரை
- 'சாவர்க்கரும், தாங்கேவும் தான் என்னை தோற்கடித்தார்கள்' என்று அம்பேத்கரே தன் புத்தகத்தில் எழுதினார்.
- அறிவியலைப் படித்தபோதிலும் , மூட நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவராக நீங்கள் இருக்கக் கூடாது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூர் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியபோது, "ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் குறித்து மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். பாபாசாகேப் அம்பேத்கரையும், அவர் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையும் வரலாற்று ரீதியாக எதிர்த்தவர்களுடன் நீங்கள் ஒருபோதும் சேரக் கூடாது.
சரியானவர்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். சமூக மாற்றத்திற்காக நிற்பவர்களுடன் நில்லுங்கள். சமூக மாற்றத்தை எதிர்ப்பவர்களுடனோ அல்லது சனாதனிகள் உடனோ சேராதீர்கள்.
ஒரு சனாதனி, இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய செயல், சனாதனிகளும் பழமைவாதிகளும் இன்னும் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
தலித்துகள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் இந்தச் செயலைக் கண்டிக்க வேண்டும். அப்போதுதான் சமூகம் மாற்றத்தின் பாதையில் செல்கிறது என்று நம்மால் சொல்ல முடியும்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் அம்பேத்கரின் அரசியலமைப்பை எதிர்த்தனர்; இன்றும் எதிர்த்து வருகின்றனர். எனவே, நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சமூகத்தைப் புரிந்து கொள்ள அம்பேத்கர் அறிவைப் பெற்றார், அதை சமூகத்தை மாற்றுவதற்காக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினார்.
அம்பேத்கரைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது என்று அவர்கள் பொய்களைப் பரப்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், 'சாவர்க்கரும், தாங்கேவும் தான் என்னை தோற்கடித்தார்கள்' என்று அம்பேத்கரே தன் புத்தகத்தில் எழுதினார்.
சங்க பரிவாரின் பொய்களை அம்பலப்படுத்த இதுபோன்ற உண்மைகளைச் சமூகத்தின் முன் வைக்க வேண்டும்.
அதனால் பகுத்தறிவும், அறிவியல் சிந்தனையும் வளரும் என்று நம்புகிறேன். அறிவியலைப் படித்தபோதிலும் , மூட நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவராக நீங்கள் இருக்கக் கூடாது." என்று தெரிவித்தார்.






