என் மலர்
இந்தியா

இந்தியா கூட்டணியில் விரிசல்.. பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஹேமந்த் சோரன் கட்சி அறிவிப்பு
- இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
- நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகும்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
என்டிஏ கூட்டணி ஏற்கனேவே 3 வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி(ஜேஎம்எம்) கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி பீகாரில் ஜேஎம்எம் ஆறு இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.எம்.எம் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. சக்காய், தம்தாஹா, கடோரியா , மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைந்தி ஆகிய ஆகிய ஆறு இடங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்" என்று தெரிவித்தார்.
பீகாரில் சில இடங்களில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் ஜே.எம்.எம் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறி தனியாகப் போட்டியிட கட்சி முடிவு செய்தது.
நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்றிருக்கும் சூழலில் இந்தியா கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.






