என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
    • நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகும்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

    ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    என்டிஏ கூட்டணி ஏற்கனேவே 3 வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.

    இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி(ஜேஎம்எம்) கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

    அதன்படி பீகாரில் ஜேஎம்எம் ஆறு இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜே.எம்.எம் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. சக்காய், தம்தாஹா, கடோரியா , மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைந்தி ஆகிய ஆகிய ஆறு இடங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் சில இடங்களில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் ஜே.எம்.எம் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறி தனியாகப் போட்டியிட கட்சி முடிவு செய்தது.

    நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்றிருக்கும் சூழலில் இந்தியா கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.  

    • முதலில் விளையாடிய வங்கதேசம் 207 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • வங்கதேச பந்து வீச்சாளர் ஹொசைன் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. தவ்ஹித் ஹிரோடி அரைசதமும், மெஹிதுல் இஸ்லாம் அங்கோன் 46 ரன்களும், ஷான்டோ 32 ரன்களும் அடிக்க வங்கதேசம் 49.4 ஓவரில் 207 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் அலிக் அதானஸ் 27 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் 39 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 133 ரன்னில் சுருண்டு, 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரிஷாத் ஹொசைன் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    2ஆவது போட்டி வருகிற 21ஆம் தேதி நடக்கிறது.

    • அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
    • டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் நட்சத்திர ஜோடியாக வளம் வந்தனர்.

    ஹாலிவுட் நட்சத்திரங்கள் டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் தங்கள் காதல் உறவை முறித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 9 மாதங்களாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது.

    அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூட வதந்தி பரவியது. ஆனால் மாறாக இருவரும் பிரிந்துவிட்டதாக அமெரிக்க ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

     தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இருவருக்கும் இடையிலான ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த உறவு எதிர்காலத்தில் நீண்ட காலம் நீடிக்காது என்று உணர்ந்த இருவரும், இணக்கமாகப் பிரிவது நல்லது என்று முடிவு செய்துள்ளனர் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயது வித்தியாசம் காரணமாக அவர்கள் திருமணம் செய்துகொள்ள தயங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

     

    • இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை 20 உயிருள்ள இஸ்ரேலிய பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் தன் வசம் இருந்த பால்ஸ்தீன கைதிகளை விடுத்துவித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில்  68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

    நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, காசா நகரத்தின் ஸைதூன் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அபு ஷாபான் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணித்த வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரங்கி குண்டை வீசியுள்ளன.

    இந்த தாக்குதலில் அவருடன் சேர்த்து ஏழு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் தங்கள் வீட்டைப் பார்வையிடச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

    தாக்குவதற்கு முன் அவர்களை எச்சரித்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக காசா சிவில் பாதுகாப்புப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் தெரிவித்தார்.

    இந்தத் தாக்குதலை படுகொலை என்று கண்டித்துள்ள ஹமாஸ், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.  

    • எந்த ஒரு பொருள் விலை ஏறி, இறங்கினாலும் அதன் மீது வர்த்தகம் செய்ய விரும்புவார்கள்.
    • உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது படுவதாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

    தங்கம் விலை இந்த அளவுக்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படியாக செல்லும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது தொடர்பாக, பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஒரு பொருளின் விலை உயர்வுக்கு தேவை, வினியோகம் ஆகிய இந்த இரண்டும் முக்கிய காரணியாக இருக்கிறது. ஆபரணமாக தங்கம் இருந்த வரை ஒரு மதிப்பு இருந்தது. தங்கம் முதலீட்டு பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துக்கும் முக்கிய பொருளாக மாறிய பிறகு அதன் மதிப்பு அப்படியே பல மடங்கு உயர்ந்துவிட்டது.

    கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எல்லா நாட்டின் அரசாங்கங்களும் சேர்ந்து 1,000 டன் தங்கத்தை வாங்கியிருப்பதாக உலக தங்க கவுன்சில் சொல்கிறது. அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். ரிசர்வ் வங்கிகள் வாங்கும் தங்கம் நேரடியாக 'கஜானா'வுக்கு சென்றுவிடும். ஏற்கனவே தங்க வினியோகம் பாதிப்பு இருக்கும் இந்த நேரத்தில், இப்படி கஜானாவில் தங்கத்தை வாங்கிவைப்பதால் மேலும் வினியோகம் பாதிக்கிறது. குறுகியகாலத்தில் இப்படி தங்கத்தை மொத்தமாக இவர்கள் வாங்கிவைத்ததன் விளைவால் தங்கம் ஏறிவிட்டது.

    எந்த ஒரு பொருள் விலை ஏறி, இறங்கினாலும் அதன் மீது வர்த்தகம் செய்ய விரும்புவார்கள். பங்குகளை மட்டுமே வர்த்தகம் செய்தவர்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கி வைக்கும் (இ.டி.எப்.) வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது படுவதாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

    தங்கம் விலை குறையுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. விலை குறைந்தால் சாதாரண மக்களும் வாங்க தயாராக இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. குறைந்ததும் அதுசார்ந்த பொருட்களை வாங்க மக்கள் எப்படி சென்றார்களோ? அதேபோல் தங்கத்தையும் வாங்குவார்கள். அப்படியாக தங்கத்துக்கான ஆதரவு முழுவதுமாக இல்லாமல் போகும் என்ற நிலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார். 

    • மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 24 ரெயில்கள் இன்று இயக்கப்பட உள்ளது.
    • கடந்த வியாழக்கிழமை 13 ரெயில்களும், நேற்று 24 ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரையில் எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்ற தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தாம்பரம்-திருச்சி (வண்டி எண்.06191), திருச்சி-தாம்பரம் (06190), போத்தனூர்-சென்டிரல் (06050), தாம்பரம்-கன்னியாகுமரி (06133), மதுரை-தாம்பரம் (06162), எழும்பூர்-மதுரை (06045), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), சென்டிரல்-போத்தனூர் (06049), மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 24 ரெயில்கள் இன்று இயக்கப்பட உள்ளது.

    19, 20 ஆகிய தேதிகளில்

    * திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நெல்லை-மேட்டுப்பாளையம் (06030), நாகர்கோவில்-தாம்பரம் (06012), போத்தனூர்-சென்டிரல் (06044), நெல்லை-செங்கல்பட்டு (06154), செங்கல்பட்டு-நெல்லை (06153) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 19 ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    * தாம்பரம்-நாகர்கோவில் (06011), தூத்துக்குடி-எழும்பூர் (06018), சென்டிரல்-கன்னியாகுமரி (06151), மேட்டுப்பாளையம்-நெல்லை (06029), செங்கோட்டை-தாம்பரம் (06014), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 23 ரெயில்கள் வருகிற 20-ந்தேதி இயக்கப்பட உள்ளது.

    20, 21 ஆகிய தேதிகளில்

    * எழும்பூர்-தூத்துக்குடி (06017), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நாகர்கோவில்-சென்டிரல் (06054), கன்னியாகுமரி- சென்டிரல் (06152), தூத்துக்குடி-எழும்பூர் (06018), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), போத்தனூர்-சென்டிரல் (06100), மதுரை-தாம்பரம் (06046), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 25 ரெயில்கள் வரும் 21-ந்தேதி இயக்கப்பட உள்ளன.

    * திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), சென்டிரல்-நாகர்கோவில் (06053), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), சென்டிரல்-போத்தனூர் (06043) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 19 ரெயில்கள் வரும் 22-ந்தேதி இயக்கப்பட உள்ளன.

    தெற்கு ரெயில்வே முழுவதும் சிறப்பு ரெயில்களை பொறுத்த வரையில் கடந்த வியாழக்கிழமை 13 ரெயில்களும், நேற்று 24 ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளது. இதேபோல, இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரையில் மொத்தம் 110 ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 16-ந்தேதி முதல் வருகிற 22-ந்தேதி வரையில் மொத்தம் 147 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சொகுசு பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.
    • கார்கள் மூலம் நேற்று 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வாரவிடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் சிலர் மேலும் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும் செய்கின்றனர்.

    சென்னையை பொறுத்தவரையில், வெளிமாவட்டங்களிலிருந்து பணிக்காகவும், படிப்புக்காகவும் அதிகளவில் மக்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுபோன்ற பண்டிகைகாலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முதல் மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

    அதன்படி, நேற்று முன்தினம் ரெயில் மூலம் பலர் பயணித்த நிலையில், நேற்றும் ஏராளமானோர் ரெயில்களில் பயணித்ததை பார்க்க முடிந்தது. சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் வழக்கமான கூட்டத்தைவிட அதிக அளவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. அங்கும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.

    முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சொகுசு பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. முன்பதிவில்லாத பெட்டியில் மூச்சுவிடக்கூட இடம் இல்லாத சூழல் இருந்தது. நெரிசலில் நின்றுக்கொண்டே தொலைதூரப்பயணத்தை பலர் மேற்கொண்டனர். அதுவும் கடைசிநேர பயணத்தை திட்டமிட்டு வந்தவர்கள், ரெயில்பெட்டியில் தொங்கியபடியும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தன.

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மூட்டை முடிச்சுடுகளுடன் வடமாநிலத்தவர்கள் ரெயிலில் ஏறி பயணித்தனர். அதிலும் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் அதிகம் பயணித்துள்ளனர்.

    சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் இதுவரை சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, சென்னை எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று வரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரை பயணித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு முந்தையநாளை கணக்கிட்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி, நேற்றுமுன்தினம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதில் சென்னையில் இருந்து மட்டும் 14,268 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மட்டும் சென்னையிலிருந்து புறப்பட்ட 2,853 பஸ்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 275 பேர் பயணித்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று 4,257 பஸ்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் பஸ்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

    பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் அந்த குறிப்பிட்ட பஸ்களில் ஏறிச்சென்றனர். முன்பதிவில்லாத சிறப்பு பஸ்களில் ஓடிப்போய் இடம்பிடித்தும், முண்டியடித்து ஏறியும் மக்கள் பயணித்தனர்.

    இதுதவிர ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து மக்கள் பயணம் மேற்கொண்டனர். கடந்த 2 நாட்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 210 பேர் பயணித்ததாகவும், இன்றும், நாளையும் சேர்த்து சுமார் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்க உள்ளதாகவும் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அ.அன்பழகன் தெரிவித்தார்.

    சிலர் சொந்த கார்களிலும் பயணித்தனர். அதன்படி, அனைவரும் நேற்று காலையிலிருந்து தங்களுடைய காரில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் ஜி.எஸ்.டி. சாலை, போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போனது.

    இப்படியாக கார்கள் மூலம் நேற்று 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இன்றும், நாளையும் சேர்த்து எப்படியும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

    மொத்தத்தில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து நேற்றுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையெடுத்துள்ளனர். இன்றும், நாளையும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

    ஒரே நேரத்தில் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னை ஜி.எஸ்.டி. சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    அல்மாட்டி:

    கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஹங்கேரியின் பேபியன் மாரோசான் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ச் டக்வொர்த் உடன் மோதுகிறார்.

    • ரஷிய அதிபர் புதினை ஹங்கேரியில் சந்தித்துப் பேச உள்ளேன் என்றார் அதிபர் டிரம்ப்.
    • வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் வரவேற்றார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் - ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதற்கிடையே, அதிபர் டிரம்ப் சமூக ஊடக பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷிய அதிபர் புதினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளேன். சந்திப்புக்கான தேதி இன்னும் இறுதி செய்யப் படவில்லை. இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு நடக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்குச் சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் வாசலில் வந்து வரவேற்றார் அதிபர் டிரம்ப்.

    இந்தச் சந்திப்பின்போது அதிபர் புதினுடன் நடந்த உரையாடல் விபரங்கள் மற்றும் உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    • திடீரென IRCTC வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • குப்பைத் தொட்டியால் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

    டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் IRCTC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    IRCTC ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது, அவர்கள் குப்பைத் தொட்டிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அத்துடன் பெல்ட்-ஐ கழற்றி அடித்தனர்.

    இதை பார்த்த பயணிகள் இது IRCTC ஊழியர்களா அல்லது WWE வீரர்களாக என தலையில் அடித்துக் கொண்டு தப்பித்தும் என ஒதுங்கிச் சென்றனர்.

    • இடைக்கால அரசு அரசியல் புதிய சாசனத்தில் கையெழுத்திட்டது.
    • தங்களது கவலைகளை தீர்த்து வைக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கோபம்.

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தேசிய பாராளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர்

    அப்போது மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைத்தனர்.

    புதிய சாசனம் குறித்த தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை என்ற கோபத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த வருடம் ஷேக் ஹசீனாவை வெளியேற்ற காரணமாக இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தற்காலிக கூடாரங்களும் சேதப்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்கு நின்றிருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக திடீரென வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலமானார்.

    • ஜார்க்கண்ட் முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது.
    • தமிழ்நாடு 14 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு- ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 247 பந்தில் 173 ரன்கள் விளாசினார். தமிழ்நாடு அணியில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் பாலசுப்ரமணியன் சச்சின் (0), என். ஜெகதீசன் (3), பிரதோஷ் ரஞ்சன் பால் (9), அந்த்ரே சித்தார்த் (2), பாபா இந்திரஜித் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 14 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்து திணறிய நிலையில் இருந்தது.

    இன்று 3ஆவது நாள் ஆட்டமும் தொடங்கியது. இன்றைய ஆட்டத்திலும் தமிழ்நாடு அணி திணறியது. அம்ப்ரிஸ் 28 ரன்களும், ஜெகநாதன் ஹேம்சுதேசன் 14 ரன்களும், குர்ஜப்னீத் சிங் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 93 ரன்னில் சுருண்டது.

    ஜார்க்கண்ட் அணி சார்பில் ஜத்தின் பாண்டே 5 விக்கெட்டும், சஹில் ராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    326 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜார்க்கண்ட் பாலோ-ஆன் கொடுத்தது இதனால் தமிழ்நாடு அணி தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 52 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    ×