என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • 2021- 2023 வரை SC/ST மக்களுக்கெதிரான வன்முறை 68% அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
    • ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள்.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில் 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது.

    இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு.

    இந்த நிலையில், ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக்குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதலமைச்சர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்?

    இது தவிர, மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?.

    பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால் இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    • 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது
    • காந்தாரா சாப்டர் 1 30 நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் 'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

     

    • 33 வயதாகும் ரச்சிதா ராம் சிங்கிளாகவே இருந்து வந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காதல் தூது விட்டு வந்தனர்.
    • எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கனவும் இல்லை.

    கன்னட சினிமாவில் பிரபலமான ரச்சிதா ராம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் திடீர் வில்லியாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார்.

    33 வயதாகும் ரச்சிதா ராம் சிங்கிளாகவே இருந்து வந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காதல் தூது விட்டு வந்தனர்.

    இந்நிலையில் ரச்சிதா ராம் திருமண பந்தத்தில் இணையவுள்ளாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன்.

    எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கனவும் இல்லை. வீட்டில் எனக்கு வரன் பார்க்கும் படலம் வேகமாக நடந்து வருகிறது'', என்றார்.

    இதனால் சந்தோஷம் பாதி, கவலை மீதி என்ற ரீதியில் ரசிகர்கள் வாழ்த்துகளை 'கமெண்ட்'டுகளாக அளித்து வருகிறார்கள்.

    • மருந்து மத்திய பிரதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்தது ஆகும்.
    • பெண்ணின் புகாரை தொடர்ந்து மருந்து ஆய்வாளர்கள் களத்தில் இறங்கினர்.

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

    இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்தது பகீர் கிளப்பி இருக்கிறது.

    அங்குள்ள குவாலியர் மாவட்டத்தின் மொரார் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.

    அங்கு அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்து குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. இந்த மருந்து பாட்டிலில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து அந்த பெண் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மருந்து ஆய்வாளர்களிடம் புகார் அளித்தார்.

    இந்த மருந்து மத்திய பிரதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்தது ஆகும்.

    அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து மருந்து ஆய்வாளர்கள் களத்தில் இறங்கினர். அந்த பெண்ணிடம் இருந்து மருந்து பாட்டிலை கைப்பற்றிய அவர்கள், அதன் மாதிரிகளை போபால் மற்றும் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து பரிசோதனைக்கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த ஆஸ்பத்திரியில் 306 பாட்டில்களில் இருந்த மேற்படி மருந்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சில பாட்டில்களில் இருந்தும் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவற்றில் பூச்சி, புழுக்கள் இருப்பதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    கோல்ட்ரிப் இருமல் மருந்து ஏற்படுத்திய உயிரிழப்புகளால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்த விவகாரம் வெளியாகி இருப்பது மத்திய பிரதேசத்தில் மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பா.ஜ.க. விரும்புகிறது. அதற்கான முயற்சிகளையும் பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது.

    இந்நிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை பனையூரில் உள்ள இல்லத்தில் பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. நேற்று சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்தித்துப் பேசியது அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த 3வது ஆட்டத்தில் அரியானா அணி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த 3வது போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அரியானா வீரர்கள்

    சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், அரியானா அணி 53-26 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது அரியானா அணி பெற்ற 8-வது வெற்றி ஆகும்.

    • பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • பதிவான வாக்குகளை எண்ணும் பணி 14ம் தேதி நடைபெறுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நவம்பர் 6, 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 101, லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் (எல்ஜேபி-ஆர்) 29 , ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 6 , இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொது அவர் கூறியதாவது:

    பீகார் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ்குமார்தான் முதல் மந்திரியா என்பதை நான் முடிவு செய்ய முடியாது.

    இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி நிதிஷ்குமார் தலைமையில் போட்டியிடுகிறது என்பதை மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியும்.

    தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி பேசி அதை முடிவு செய்வார்கள்.

    பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை கண்ட மக்கள் மீண்டும் அந்தக் கட்சியை ஆட்சியில் அமர வைக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

    • 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது.
    • மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

    பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்த நிலையில், முதலில் 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. பின்னர், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 101 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், பீகார் முதற்கட்டத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

    • ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை கண்டித்து வந்துள்ளார்.
    • ரசிகக் கூட்டத்தை அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர் அஜித்.

    ஸ்பெயினில் தன்னை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டதால் சைகை மூலம் அவர்களை நடிகரும் ரேசருமான அஜித் குமார் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    தன்னுடைய ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை தொடர்ச்சியாக கண்டித்து வந்துள்ளார். அஜித் குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அஜித்குமார் குறித்து பேசிய வீடியோவை பகிர்ந்த பார்திபன், "decision ma'KING' Ajith தான்! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர். ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர்> எனக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.

    நடிகர் விஜய் அரசியலுக்காக தனது ரசிகர்களை பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை மறைமுகமாக குறிப்பிட்டு அஜித்தை பார்த்திபன் பார்ட்டிய பதிவு இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து அவருக்கு அஜித் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

    அந்த குறுஞ்செய்தி குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல்,ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்!அப்படி நேற்று முன்தினம் Mr Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதை(யும்) ரசித்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது.

    எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு,சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன் அது இப்படி வெளியே வந்து விட்டது!" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவிலும் விஜய் ரசிகர்கள் ஒழுங்கில்லாமல் நடந்துகொள்கின்றனர் என்ற விமர்சனத்தை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் 'ஒழுக்கமிகு ரசிகர்கள்' என்று கூறி மீண்டும் விஜயையும் அவரது ரசிகர்களையும் பார்த்திபன் சீண்டியுள்ளார். 

    • கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார்.
    • கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது.

    தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்றது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார். கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது. சட்ட முன்வடிவில் திருத்தங்களை கூற கவர்னருக்கு அதிகாரம் கிடையாது, சட்டம் இயற்றுவது என்பது சபைக்கு மட்டுமே அதிகாரம் என்றார்.

    இதனை தொடர்ந்து, அரசு அனுப்பிய மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு அனுப்பிய நிலையில் சித்த மருத்துவ பல்கலை குறித்த கவர்னரின் கருத்தை சட்டசபை நிராகரித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். கவர்னர் கருத்துக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்!

    தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது" என்று பதிவிட்டுள்ளார்.

    • ரோகித் உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருப்பதால் அதற்காக உடற்தகுதியை பராமரித்து வருகிறார்.
    • அவர் சாதனைகளுக்காக விளையாடவில்லை.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் தொடங்கும் ஒருநாள் தொடர் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா சாதாரண வீரராகவே களமிறங்குகிறார்.

    இவர் ஒருநாள் உலக கோப்பை 2027-ல் இடம் பெறுவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் ஆஸ்திரேலியா தொடருடன் ரோகித் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் 2027-ம் ஆண்டு உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் ரோகித் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் அந்த உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார். அதற்காக உடற்தகுதியை பராமரித்து வருகிறார். 2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததிலிருந்து, உலக கோப்பையை வெல்லும் அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. அதை 2024 டி20 உலக கோப்பையில் அடைந்தார். ஆனால் அந்த நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அவர் 50 ஓவர்கள் உலக கோப்பையை வெல்ல விரும்புகிறார்.

    அவர் சாதனைகளுக்காக விளையாடவில்லை. உலகக் கோப்பை இறுதியில் கூட, அவர் தொடக்கத்தில் விளையாடிய விதம், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் கொண்டு வருவதை காட்டியது.

    என்று கார்த்திக் கூறினார்.

    • பாகிஸ்தான் இராணுவ தளங்களை அழித்ததாக ஆப்கானிஸ்தான் கூறியது.
    • பீரங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் எல்லையில் ஏற்பட்ட சண்டை நேற்று மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றிய பீரங்கிகளை ஆப்கானிஸ்தான் தெருக்களில் தாலிபான்கள் ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தானுடனான சண்டையின் போது ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளை கைப்பற்றியதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபுல்லா முஜாஹித் முன்னதாக தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் இராணுவ தளங்களை அழித்ததாக ஆப்கானிஸ்தான் கூறியது.

    இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் கூற்றை பாகிஸ்தானும் மறுத்துள்ளது. வீடியோக்களில் காணப்படும் பீரங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், தாலிபான்கள் எங்கிருந்தோ மலிவாக வாங்கிய டாங்கிகளைக் காட்சிப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார். 

    ×