என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கே சொந்தம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார்.
- கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது.
தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்றது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார். கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது. சட்ட முன்வடிவில் திருத்தங்களை கூற கவர்னருக்கு அதிகாரம் கிடையாது, சட்டம் இயற்றுவது என்பது சபைக்கு மட்டுமே அதிகாரம் என்றார்.
இதனை தொடர்ந்து, அரசு அனுப்பிய மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு அனுப்பிய நிலையில் சித்த மருத்துவ பல்கலை குறித்த கவர்னரின் கருத்தை சட்டசபை நிராகரித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். கவர்னர் கருத்துக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்!
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது" என்று பதிவிட்டுள்ளார்.






