என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது.
    • துருவ் சொன்ன வார்த்தை எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர், பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது.

    இதனிடையே, 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும் போது, படத்திற்கு 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது. என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் 'காளமாடன்' என்றுதான் உள்ளது.

    இந்த படம் மிகவும் கடினமான படம். இப்படத்திற்கு பெரிய உழைப்பு தரணும். நாட்கள் நிறைய ஆகும். மன உளைச்சல் வரலாம் என்பதால் துருவ் விக்ரமுக்கு சில டெஸ்ட் வெச்சேன். அதுல துருவ் விக்ரம் என்னை நம்பினார். பல பயிற்சிகளை மேற்கொண்டதில் காயம் பட்டது. அதுலயும் துருவ் விக்ரம் நம்பிக்கையா இருந்தார். அவர் கஷ்டம் படும் போது எல்லாம் சொல்வேன். வேண்டும் என்றால் விட்டுருலாம். அடுத்த கதை பண்ணலாம் என்று சொன்னேன். அதற்கு துருவ் விக்ரம், உங்க மேல நம்பிக்கை இருக்கு சார். உங்களை அப்பா மாதிரி பார்க்கிறேன் என்று சொன்ன வார்த்தை எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. அதன்பிறகு இரண்டு பேர் போட்டி போட்டு கடின உழைப்பை கொடுத்து இருக்கோம். எனக்கு இந்த படத்தின் வெற்றி என்பதை விட துருவ் போட்ட உழைப்புக்கு இந்த படத்தின் மூலம் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தால் இந்த படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ரொம்ப சந்தோஷம் படுவேன்.

    என்னோட கரியர்ல அதிக உழைப்பும் யோசனையும் போட்டு எடுத்த படம் 'பைசன்' என்றார். 

    • ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.
    • தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    இது முற்றிலும் தவறான தகவல். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அரசு 2018-ம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
    • சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.

    கோவிலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

    ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான 22-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் வருகிற 21-ந் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார், பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.

    பின்னர் மறுநாள் (22-ந் தேதி) வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி வருகிற 21, 22-ந் தேதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    முன்னதாக 18-ந் தேதி காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மேல் சாந்திகள் நடப்பு மண்டல சீசன் தொடக்கம் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கி இருந்து பூஜை மற்றும் திருப்பணிகளை நிறைவேற்றுவார்கள்.

    • கப்பலில் ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்து, பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.

    படாம்:

    இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்தக் கப்பலில் நேற்று ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்தது. அத்துடன் பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 10 பணியாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி, மேத்யூ கிரிம்லி ஜோடியுடன் மோதியது.

    முதல் செட்டை 17-21 என சாத்விக் ஜோடி இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-11, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    • ஜெய்ஸ்வால் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.
    • குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதால் தரவரிசையில் முன்னேற்றம்.

    கிரிக்கெட் தரவரிசைக்கான அப்டேட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது. டெல்லி போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், பேட்டர்கள் தரவரிசையில் முதல் 5 இடத்திற்குள் முன்னேனியுள்ளார்.

    23 வயதான ஜெய்ஸ்வால், 7ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.

    பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 689 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.

    ஒருநாள் போட்க்கான பேட்டர்கள் தரவரிசையில் சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    • இருநாட்டு எல்லையில் பயங்கர மோதல்.
    • பாகிஸ்தான் ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர்.

    ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் தலிபான், பாகிஸ்தான் வீரர்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் விமானப்படை, திடீரென காபூல் நகர் மீது தாக்குதல் நடத்தியது. அத்துடன் இருநாட்டு எல்லையில் உள்ள நகரின் மார்க்கெட் மீது தாக்குதல் நடத்தியது.

    இது ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இருநாட்டு எல்லையில், எல்லைத்தாண்டி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தெரிவித்திருந்தது.

    அதேவேளையில், ஆப்கானிஸ்தானின் 200 தலிபான்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை எல்லையில் மீண்டும் மோதிக் கொண்டனர். இதில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் டிரோன்கள் மூலம் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்தனர். அதேபோல் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்பிலும் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

    தலிபான், பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையத்தை தகர்த்ததுடன், ராணுவ டேங்குகளை கைப்பற்றியுள்ளது. இந்த டேங்குகள் மூலம் தலிபான் நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்திருந்தது.

    பாகிஸ்தானின் சமான் மாவட்டமும், ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மாவட்டமான ஸ்பின் போல்டாக் மாவட்டத்தின் எல்லையில்தான் இந்த பயங்கர சண்டை நடந்தது.

    ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணம்- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் இடையே உள்ள எல்லை மாவட்டமான ஸ்பின் போல்டாக்கில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதில் 12 மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் தாக்குதலில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் ஆயுதங்கள் மற்றும் டேங்குகள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் புறக்காவல் நிலையம் போன்றவைகள் அழிக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளது.

    அதேவேலையில் எந்தவித தூண்டுதல் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது என பாகி்ஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேர சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் தலிபானன் அரசு இது தொடர்பாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    • நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.
    • முன்கூட்டியே அரிசி பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

    அரிசு குடும்ப அட்டைத்தாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    அரிசியை முன்கூட்டியே அக்டோபரில் பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் அரிசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

    • பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வாய்ப்பு.
    • தற்போது வரை 83 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.

    நேற்று 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் இடம் பிடித்துள்ளார். இவர் பாட்னாவில் நேற்று முறையாக பாஜக-வில், மாநில தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் முன்னிலையில் இணைந்தார். இந்த உடனேயே அலிநகர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தொகுதியில் மிஷ்ரிலால் யாதவ் எம்.எல்.ஏ.-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மைதிலி தாகூரை தவிர்த்து, முன்னாள் ஐபிஎல் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கு புக்சர் தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது. பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து வெளியேறி சமீபத்தில்தான் பாஜக-வில் இணைந்தார்.

    முசாபர்பூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்குப் பதிலாக ரஞ்சன் குமார் நிறுத்தப்பட்டுள்ளார். ஹயாகத்தில் ராம் சந்திர பிசாத் நிறுத்தப்பட்டுள்ளார். கோபால்கஞ்ச் தொகுதியில் சுபாஷ் கிங்கிற்கு வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

    தீபாவளி கொண்டாட்டம் என்றாலே ஒன்று பட்டாசும், மற்றொன்று புதிய திரைப்படங்களும் தான். 

    முன்பெல்லாம், தீபாவளி- பொங்கல் பண்டிகைகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரும்பாலும் வெளியாகும். ஆனால், சமீப காலமாக அந்த போக்கு மாறி வருகிறது.

    தற்போது சிறிய பட்ஜெட் படங்களும், புதிய ஹீரோக்களின் படங்களும் கூட தீபாவளி முன்னிட்டு வெளியாகி வசூல் சாதனை படைக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

    அதன்படி, வரும் 17ம் தேதி அன்று துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய மூன்று படங்கள் வௌியாக தயாராக உள்ளன.

    பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    டியூட்

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    டீசல்

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி, பிரசார வாகனம் முன்னோக்கி சென்றது.
    • நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் கூட்டத்திற்குள் வரவில்லை.

    கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே, விஜயை பின் தொடர்ந்து ஏராளமானோர் வந்தனர்.

    * அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் பேசுவோம் என த.வெ.க. ஏற்பாட்டாளர்கள் பிடிவாதம் பிடித்தனர்.

    * கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    * காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி, பிரசார வாகனம் முன்னோக்கி சென்றது.

    * நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் கூட்டத்திற்குள் வரவில்லை.

    * அக்சயா மருத்துவமனை அருகே வாகனத்தை நிறுத்தி பிரசாரம் செய்யுமாறு முன்பே அறிவுறுத்தினோம்.

    * கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்கத்தான் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தது.

    * கரூர் துயரத்தை கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை

    * மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது த.வெ.க. தொண்டர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கியதால் மீட்புப்பணிகள் பாதித்தது.

    * கரூர் சம்பவத்திற்கு முன்பு அதே இடத்தில் இ.பி.எஸ். தலைமையிலான 2 கூட்டங்கள் அசம்பாவிதம் இல்லாமல் சிறப்பாக நடந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
    • இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய தபால் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தபால் துறை இன்று முதல் அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, புதிய கட்டண விதியின் கீழ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் தபால் ஏற்றுமதிகளுக்கான அறிவிக்கப்பட்ட சரக்கு வரி மதிப்பில் 50 சதவீத சலுகையில் அனுப்ப முடியும்.

    கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை. இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது. இதனால் இந்த அஞ்சல் சேவையில் சிறுகுறு தொழில் செய்பவர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்கள் மிகவும் மலிவு விலையில் ஏற்றுமதி செய்து தொழில் வளர்ச்சியை பெருக்கிக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த ஆகஸ்டு 25-ந்தேதிக்கு பின்னர், அமெரிக்காவுக்கு இந்திய தபால் துறையின் தபால், ஆவணங்கள் தவிர்த்த இதர சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக இந்த சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×