search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister chakrapani"

    • சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா, மேல்நிலைத் தொட்டி திறப்புவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • பள்ளியில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததைப்பார்த்து பள்ளி ஆசிரியர்களை அழைத்து அமைச்சர் கண்டித்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா, மேல்நிலைத் தொட்டி திறப்புவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற அமைச்சர் அர.சக்கரபாணி பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக் கட்டிடங்கள், மைதானம் உள்ளிட்டவை முறையாக பராமரிக்காமலும், சேதடைந்தும் காணப்பட்டது.

    மேலும் பள்ளியில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததைப்பார்த்து பள்ளி ஆசிரியர்களை அழைத்து அமைச்சர் கண்டித்தார். ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். அப்போதுதான் அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் வந்து சேருவார்கள். மேலும் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியடைய வேண்டும்.

    மைதானம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சிந்தலவாடம்பட்டியை சேர்ந்த விவசாயி தண்டபாணி (வயது 55) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யானை தாக்கி உயிரிழந்தார். அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அமைச்சர் அர.சக்கரபாணி உயிரிழந்த தண்டபாணியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான உதவியை வழங்கினார்.

    • தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மழைக்காலங்களில் நெல்மணிகள் நனையாமல் இருப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    2 லட்சத்து 86 ஆயிரம் 350 மெட்ரிக் டன் அளவுக்கு நெல்மணிகளை பாதுகாக்க முடியும். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் முடிவடையும்.

    இது தவிர நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, அரசு துறை கட்டிடங்களிலும் நபார்டு சேமிப்பு கிடங்கு கட்டும் பணி நடைபெறுகிறது. அவற்றின் மூலம் 7 லட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்க முடியும். தற்போதைய ராபி பருவத்தில் 8 லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    வருகின்ற பருவத்தில் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரல்ரேகை மூலம் பொருள் வாங்க முடியாதவர்கள் கண் கருவிழி கொண்டு பொருள் வாங்கலாம். திருவல்லிக்கேணி, பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும்.

    மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்வதில் சிரமம் இருந்தால் அங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒருவரை நியமித்து அவர்கள் மூலம் பொருள் வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.

    தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

    • தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
    • விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவிலேயே 2-வது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய இருக்கிறது.

    தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

    அதன்படி மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

    தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.

    ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.

    இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.

    இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மேலும் ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

    • பயனாளிகள் மட்டுமே ரேசன் அரிசி பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
    • ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு முன்பே, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    அனைத்துப் பொது விநியோகத் திட்டக் கடைகளிலும் தரமான அரிசி கிடைக்கிறது என்று பொதுமக்களும் மாற்றுக் கட்சியினரும் பாராட்டுகின்ற நிலை உருவாகியுள்ளது. அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி கடத்தலுக்குத் துணை போன அரிசி ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. அரிசிக் கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புலனாய்வு செய்து, கடத்தலுக்கு முன்பே அதை நிறுத்தும் வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் வழக்கமாக கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கு வழி செய்து அவர்களைக் கடத்தலில் ஈடுபடுத்தாமல் நல்வழிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயனாளிகள் மட்டுமே அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், ரேசன் அரிசி வாங்கி தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பவர்கள் யார் என்பதைக் கடைகள் வாரியாகக் கண்டறிந்து அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பொது விநியோகத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தான் அரிசிக் கடத்தலை அறவே தடுக்க முடியும். அரசி கடத்தல் தொடர்பாக தகவல் அளிக்க விரும்புபவர்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 வழியாகவும் தெரியப்படுத்தலாம்.

    பொதுமக்களுக்குத் தரமான அரிசி வழங்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு, கடத்தலில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளோர் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சேதமடைந்த அரிசி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படவில்லை.
    • அரிசியை அனுப்பிய ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில் சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப்போய் வீணாகி விட்டதாக மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்றும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 

    இதற்கு பதில் அளித்து தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதைப் பார்த்த இந்திய உணவுக்கழக அதிகாரிகள் இது போன்ற அரிசியை வழங்கிய அரிசி ஆலை முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த அரிசியை மனிதப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    உண்மைக்குப் புறம்பான இந்த செய்தியை ஆராயாமல் அதையே அறிக்கையாக அவர் வெளியிட்டுள்ளார். இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வந்த கடித நகலை உங்களுக்குத் தருகிறேன். அதில் என்ன கூறியிருக்கிறது என்பதை நீங்களே படித்துப் பாருங்கள். கும்பகோணத்தில் 92.50 மெட்ரிக் டன், நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் 92.50 மெட்ரிக் டன், அதாவது 92 ஆயிரத்து 500 கிலோ அரிசி. இதன் மதிப்பு சுமார் 33 இலட்சம் ரூபாய் ஆகும்.

    இந்த அரிசியில் 5.2 % சேதமடைந்த அரிசி என்றும், 7 % பழுப்பு நிற அரிசி என்றும் சேதமடைந்த அரிசி 5 % விழுக்காடுக்கு மேல் இருக்கக் கூடாது; ஆனால் பழுப்பு நிற அரிசி 7 % இருக்கலாம் என்றும் 0.2 % கூடுதலாக சேதமடைந்து உள்ளது என்பதால் பொதுமக்களுக்கு அனுப்பக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

    ஏற்கனவே உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடைகளுக்கு இந்த அரிசி அனுப்பப்படவில்லை. இதோடு இந்த அரிசியை அனுப்பிய ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பேனைப் பெரிதாக்கி பெருமாள் ஆக்கியது போல் 92,500 கிலோ என்பதை 9 இலட்சம் டன் அரிசி என்று ஒரு முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அறிக்கை விடுகிறார் என்றால் என்னவென்று சொல்வது?

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி ஆலை முகவர்கள் மற்றும் கழக ஆலைகள் மூலம் அரைத்த அரிசியின் தற்போதைய இருப்பே 3 இலட்சத்து 23 ஆயிரத்து 554 டன்தான். தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜிடம் உண்மை நிலை என்னவென்று கேட்டிருக்கலாம் அல்லது வைத்தியலிங்கமிடம் கேட்டிருக்கலாம்.

    வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி வகித்த பதவிக்கும் தற்போது வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இனிமேல் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ரேசன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில் கடந்த 26-ந் தேதி சென்னையில் எனது தலைமையில் உணவு வழங்கல் துறை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதில் பல்வேறு இடங்களில் இருந்து ரேசன் அரிசி கடைக்கு செல்லாமல் கடத்தப்படுவதாகவும் தகவல் வந்திருக்கிறது. இந்த நிலையைப் போக்க தற்போது உள்ள 286 குடோன்களில் புதிதாக கோடு நம்பர் பதிவு செய்யப்பட்ட சாக்குகள் மூலம் அரிசி விநியோகம் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த இருக்கிறோம். அப்போது எந்த குடோனில் இருந்து இந்த அரிசி மூடை சென்று உள்ளது என்பதனை கண்டறியப்படும்.

    இனிமேல் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் புதிய யூனிட் சி.பி.சி.ஐ.டி. குழு அமைக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

    அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கைகள் பாயும். அரிசி வாங்க வரும் பொதுமக்கள் கைரேகை பதிவு செய்ய முடியவில்லை என்ற நிலையை போக்க கருவிழி பதிவு முறை நடைமுறைப்படுத்தபட உள்ளது.

    இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூடைகள் மழையால் பாதிக்கப்படும் நிலையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×