search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration rice smuggling"

    • கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் வன்னியப்பெருமாளின் உத்தரவின்பேரில், கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மற்றும் ஈரோடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    அதன்படி ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய 83 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 23 டன் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் 10-ம், 3 சக்கர வாகனம் ஒன்றும், 4 சக்கர வாகனங்கள் 6-ம் என மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் அரசு மானியத்தால் வழங்கப்பட்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத 10 பேர் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட தமிழகம்-கர்நாடகா மாநில எல்லையான தாளவாடி, ஆசனூர், பர்கூர், கடம்பூர் மற்றும் தமிழக-கேரளா மாநில எல்லை பகுதியான உடுமலைப்பேட்டை அமராவதி நகர் ஆகிய சோதனை சாவடிகளிலும் இரவு, பகலாக போலீசார் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறார்கள்.

    மாதம் தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளார்.

    • தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் பறக்கும்படை தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 30-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த லாரியில் 3 டன் அளவில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பதிவான அழைப்புகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த ஒச்சு, லாரி டிரைவர், லோடு மேன் பீமன், நுகர்பொருள் வாணிப கழக இளநிலை தர நிர்ணய ஆய்வாளர் தமிழ்செல்வன், எழுத்தர் சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் இந்துமதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை கலெக்டருக்கு அளித்தனர்.

    அந்த அறிக்கையில் குடோன் இறநிலை தரஆய்வாளர் தமிழ்செல்வன், பட்டியல் எழுத்தர்கள் சுரேஷ், சதாசிவம் ஆகியோர் ஒச்சு, டிரைவரை பலமுறை செல்போனில் அழைத்து பேசியுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையின் பேரில் தமிழ்செல்வம், சுரேஷ், சதாசிவம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ரேஷன் அரிசி கடத்தும் முதியவர் மாமூல் தர மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பீமநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தப்பி ஓடிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    திருச்சி:

    திருச்சி பீமநகர் யானைக் கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவநேசன் (வயது 60). திருமணமாகாத இந்த முதியவர் ரேஷன் அரிசி வாங்கி விற்பனை செய்து வந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக பொது விநியோகத்திட்ட சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து சிவநேசன் யானைக்கட்டி மைதானத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டுச் சென்றார். பீமநககர் காவிரி தியேட்டர் மேம்பாலத்தில் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கும்பல் அவரை வழிமறித்தனர்.

    திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவநேசனின் பின்னந்தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அவருக்கு தலையில் மூன்று இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தப்பி ஓடிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    இதில் அரிவாளால் சிவநேசனை வெட்டியவர்கள் ஒரு ஜாதி அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்கள் ரேஷன் அரிசி கடத்தும் சிவநேசனிடம் மாமூல் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ரேஷன் அரிசி கடத்தும் முதியவர் மாமூல் தர மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பீமநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பயனாளிகள் மட்டுமே ரேசன் அரிசி பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
    • ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு முன்பே, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    அனைத்துப் பொது விநியோகத் திட்டக் கடைகளிலும் தரமான அரிசி கிடைக்கிறது என்று பொதுமக்களும் மாற்றுக் கட்சியினரும் பாராட்டுகின்ற நிலை உருவாகியுள்ளது. அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி கடத்தலுக்குத் துணை போன அரிசி ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. அரிசிக் கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புலனாய்வு செய்து, கடத்தலுக்கு முன்பே அதை நிறுத்தும் வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் வழக்கமாக கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கு வழி செய்து அவர்களைக் கடத்தலில் ஈடுபடுத்தாமல் நல்வழிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயனாளிகள் மட்டுமே அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், ரேசன் அரிசி வாங்கி தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பவர்கள் யார் என்பதைக் கடைகள் வாரியாகக் கண்டறிந்து அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பொது விநியோகத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தான் அரிசிக் கடத்தலை அறவே தடுக்க முடியும். அரசி கடத்தல் தொடர்பாக தகவல் அளிக்க விரும்புபவர்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 வழியாகவும் தெரியப்படுத்தலாம்.

    பொதுமக்களுக்குத் தரமான அரிசி வழங்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு, கடத்தலில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளோர் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரச்சலூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • மாருதி அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை அரச்சலூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மாருதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக காரில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பெருந்துறையை சேர்ந்த கார்த்திகேயன் (42) தொழிலாளி என்றும், பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேசன் அரிசியை காரில் கடத்தி சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 800 கிலோ ரேஷன் அரிசியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ரேஷன் அரிசியை குடோனில் பதுக்கி வைத்து அது கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்க இருந்தது தெரிய வந்தது.
    • சுமார் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் வளர்மதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள ஆட்டுக்காரனூர் கிராமம் முத்து குமரேசன் என்பவரின் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுமார் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சேலம் கிச்சிப்பாளையம் சிதம்பரபிள்ளை காடு பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரது மகன் கார்த்திகேயன் என்ற மைனா கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

    அப்போது ரேஷன் அரிசியை குடோனில் பதுக்கி வைத்து அது கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்க இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இனிமேல் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ரேசன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில் கடந்த 26-ந் தேதி சென்னையில் எனது தலைமையில் உணவு வழங்கல் துறை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதில் பல்வேறு இடங்களில் இருந்து ரேசன் அரிசி கடைக்கு செல்லாமல் கடத்தப்படுவதாகவும் தகவல் வந்திருக்கிறது. இந்த நிலையைப் போக்க தற்போது உள்ள 286 குடோன்களில் புதிதாக கோடு நம்பர் பதிவு செய்யப்பட்ட சாக்குகள் மூலம் அரிசி விநியோகம் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த இருக்கிறோம். அப்போது எந்த குடோனில் இருந்து இந்த அரிசி மூடை சென்று உள்ளது என்பதனை கண்டறியப்படும்.

    இனிமேல் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் புதிய யூனிட் சி.பி.சி.ஐ.டி. குழு அமைக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

    அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கைகள் பாயும். அரிசி வாங்க வரும் பொதுமக்கள் கைரேகை பதிவு செய்ய முடியவில்லை என்ற நிலையை போக்க கருவிழி பதிவு முறை நடைமுறைப்படுத்தபட உள்ளது.

    இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூடைகள் மழையால் பாதிக்கப்படும் நிலையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் (வயது 50), உடையாப்பட்டி குண்டுகல்லூரை சேர்ந்த தீபன்ராஜ் (23), உடையாப்பட்டி மேட்டுத்தெருவை சுதர்சன் (23) ஆகியோர் ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
    சேலம்:

    சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கருப்பூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் கருப்பூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வெள்ளக்கல்பட்டி பழைய காலனி அருகில் மினி சரக்கு ஆட்டோ நின்றது.

    அந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 42 மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 2 ஆயிரத்து 100 கிலோ ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் (வயது 50), உடையாப்பட்டி குண்டுகல்லூரை சேர்ந்த தீபன்ராஜ் (23), உடையாப்பட்டி மேட்டுத்தெருவை சுதர்சன் (23) ஆகியோர் ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
    ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருந்து நியாயவிலைக் கடை அரிசி மிகப்பெரிய அளவில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதாகவும், அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் இயலாமையை அண்டை மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டிருப்பது அரசுக்கு அவப்பெயர் ஆகும்.

    தமிழ்நாட்டில் நியாய விலைக் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

    அதற்கு பிறகும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றால், பொது வினியோகத் திட்டத்தில் ஏதோ ஓட்டை உள்ளது என்று தான் பொருள்.

    அந்த ஓட்டை அடைக்கப்பட வேண்டும். அதைக் கடந்து ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.

    ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். ரேஷன் அரிசிக் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அவப்பெயரை அரசு போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    செட்டிபாளையம், சூலூரில் இருந்து கேரளாவுக்கு 14 டன் ரே‌ஷன் அரிசி கடத்த முயற்சி செய்த சம்பவம் குறித்து வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செட்டிபாளையம்:

    கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்திச் செல்லப்படுகிறது. அதுபோல் நேற்று இரவும் லாரி ஒன்றில் அரிசி கடத்தப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில், எஸ்.ஐ.கவியரசு, எஸ்.எஸ்.ஐ., கதிரேசன், போலீஸ்காரர் குமரேசன் ஆகியோர் மதுக்கரை மரப்பாலம் அடுத்த பெட்ரோல் பங்க் அருகே, கோவை -பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரே‌ஷன் அரிசி கடத்தி செல்வது தெரிந்தது இதையடுத்து லாரியை மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அதில் 50 கிலோ வீதம், 200 மூட்டைகளில், 10 டன் அரிசி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை சுந்தராபுரம் பகுதியிலிருந்து, கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.இதையடுத்து லாரி டிரைவர் பாலக்காடு மாவட்டம் நல்லேபிள்ளை, நீலிப்பதனை சேர்ந்த ராமகிருஷ்ணன்(39) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் பொள்ளாச்சி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இதேபோன்று பீளமேட்டிலும் 2 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். சூலூர் போலீசாருக்கு நீலாம்பூர் அருகே மயிலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் ரே‌ஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து எஸ்.ஐ.க்கள் நவநீத கிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், தலைமை காவலர் சந்துரு ஆகியோர் தலைமையிலான போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு குடோனை திறந்து உள்ளே சென்று போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் போது குடோனில் மூட்டை, மூட்டையாக ரே‌ஷன் அரிசிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 40 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ அரிசி இருந்தது. இந்த குடோனை பாபு என்பவர் வாடகைக்கு எடுத்து, அருகே உள்ள வீடுகளில் இருந்து ரே‌ஷன் அரிசியை வாங்கி அதனை மூட்டையாக கட்டி கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவுக்கு படகுகளில் ரே‌ஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு ரே‌ஷன் அரிசி நள்ளிரவில் படகு மூலம் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டுகள் துரைமுருகன், முத்துமாணிக்கம், சுரேஷ் கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 2நாட்களாக பழவேற்காடு ஏரிப்பகுதி மற்றும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். இந்த நிலையில் கூனங்குப்பம் பகுதியில் உள்ள படகுத்துறையில் 50 கிலோ எடை கொண்ட 200 ரே‌ஷன் அரிசி மூட்டைகளை 2 படகுகளில் ஏற்றி கொண்டு இருந்ததை போலீசார் பார்த்தனர். போலீசாரை பார்த்ததும் சிலர் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து படகில் இருந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகளையும், 2 படகுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த ஆந்திரா மாநிலம் தடாவை சேர்ந்த குமார், ரங்கநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    குறைந்த விலைக்கு பழவேற்காடு பகுதியில் ரே‌ஷன் அரிசியை அடிக்கடி வாங்குவதும் இதனை படகு மூலம் ஆந்திராவுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து திருவள்ளூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    புளியரை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 163 ரேசன் அரிசி மூடையை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்கோட்டை:

    தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு கனிம பொருட்கள், ரேஷன்  அரிசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருவதை தடுக்கும் நடவடிக்கையில் புளியரை சோதனை சாவடியில் 24 நேரமும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடத்தல் பொருட்கள் தடுக்கப்படுவதுடன், கடத்தலில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் புளியரை சோதனை சாவடியில் போலீசார் ஒரு லாரியை இன்று சோதனை நடத்தினர். சோதனையில் பாவூர்சத்திரம் பகுதியிலிருந்து 163 மூடை ரேசன் அரிசியை திருவனந்தபுரம் பகுதிகளுக்கு எடுத்து செல்ல கொண்டு சென்றது தெரியவந்தது.  

    இதையடுத்து 163 மூடை ரேசன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் குற்ற புலனாய்வு துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் லாரியை ஓட்டி வந்த கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த சுகைபு (வயது 35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×