search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்க நடவடிக்கை- அமைச்சர் சக்கரபாணி
    X

    நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி

    தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்க நடவடிக்கை- அமைச்சர் சக்கரபாணி

    • தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மழைக்காலங்களில் நெல்மணிகள் நனையாமல் இருப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    2 லட்சத்து 86 ஆயிரம் 350 மெட்ரிக் டன் அளவுக்கு நெல்மணிகளை பாதுகாக்க முடியும். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் முடிவடையும்.

    இது தவிர நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, அரசு துறை கட்டிடங்களிலும் நபார்டு சேமிப்பு கிடங்கு கட்டும் பணி நடைபெறுகிறது. அவற்றின் மூலம் 7 லட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்க முடியும். தற்போதைய ராபி பருவத்தில் 8 லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    வருகின்ற பருவத்தில் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரல்ரேகை மூலம் பொருள் வாங்க முடியாதவர்கள் கண் கருவிழி கொண்டு பொருள் வாங்கலாம். திருவல்லிக்கேணி, பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும்.

    மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்வதில் சிரமம் இருந்தால் அங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒருவரை நியமித்து அவர்கள் மூலம் பொருள் வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.

    தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×