என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்
- ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.
- தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இது முற்றிலும் தவறான தகவல். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அரசு 2018-ம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






