search icon
என் மலர்tooltip icon
    • கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
    • பாலகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவராக உள்ளார்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

    இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது. அதில் 2 பேர் மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய தொடர் விசாரணை மேற்கொ ண்டனர்.

    போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது29), ஆறுமுகம் பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி உள்ள பாலகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவராக உள்ளார்.

    • அரசு தொகுப்பு வீடுகளை பணம் கொடுத்தால் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • புகாரின் பேரில் மகேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி நகரை சேர்ந்தவர் ஜெயசுமா (வயது 41). அதே பகுதியை சேர்ந்த மதுமிதா (25), கல்பனா (46) இவர்கள் 3 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் அனைவரும் உறவினர்கள். துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் வேலை பார்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்த மகேந்திரன் (40) என்பவர் அறிமுகமானார். அவர் சிறுமுகை ரோட்டில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை பணம் கொடுத்தால் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய நாங்கள் 3 பேரும் ரூ.2 லட்சம் பணத்தை மகேந்திரனிடம் கொடுத்தோம். பின்னர் அவர் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி மேட்டுப்பாளையம் தாசில்தார் கையொப்பம் மற்றும் சீலுடன் கூடிய ஆணையை எங்களிடம் வழங்கினார்.

    அதனை நாங்கள் கொண்டு சென்று பார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது. எனவே வீடு பெற்று தருவதாக கூறி எங்களிடம் ரூ.2 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தனர்.

    புகாரின் பேரில் மகேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நந்தகுமாரின் நடத்தை சரியில்லாததால் அவரது காதலை ஏற்பதற்கு இளம்பெண் மறுத்து விட்டார்.
    • இளம்பெண் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கல்லூரி முடித்து விட்டு எல்.ஐ.சி காலனியில் தையல் கடை யுன் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவரது கடைக்கு எதிரே உள்ள ஓட்டலில் கோவை காந்தி பார்க்கை சேர்ந்த நந்தகுமார் (வயது 24) என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இவர் எதிரே உள்ள தையல் கடைக்கு சென்று இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்தார். இதையடுத்து நந்தகுமார், இளம்பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் நந்தகுமாரின் நடத்தை சரியில்லாததால் அவரது காதலை ஏற்பதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். சம்பவத்தன்று, இளம்பெண் ஆர்.எஸ் புரத்தில் உள்ள வங்கி பயிற்சி வகுப்பிலிருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு வந்த நந்தகுமார் இளம் பெண்ணை வழிமறித்து மீண்டும் தனது காதலை கூறினார். இதில் கோபமடைந்த இளம்பெண் அவரது காதலை ஏற்பதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் இளம்பெண்ணை கழுத்தை பிடித்து நெரித்து, கன்னத்தில் அறைந்தார். மேலும் அவரிடம் தகராறு செய்து செல்போனையும் பறித்தார். அப்போது, அங்கு வந்த இளம்பெண்ணின் தாயார் தனது மகளை வாலிபரிடம் இருந்து காப்பாற்ற முயன்றார்.

    அப்போது இருவரையும் நந்தகுமார், தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து இளம்பெண் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன.
    • தேர்தல் அலுவலராக சப்-கலெக்டர் பிரியங்கா செயல்படுவார்.

    பொள்ளாச்சி,

    ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி. பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் (20-ந் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆழியாறு பாசன திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக சப்-கலெக்டர் பிரியங்கா செயல்படுவார்.

    திட்டக்குழு தலைவருக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை பெற்றுக் கொள்ளலாம்.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும்.

    காலை 10 மணி முதல் 10.30 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல் நடக்கிறது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் காலை 10.45 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    11.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் உடனடியாக பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இதில், திட்டக்குழு தலைவரை தேர்ந்து எடுப்பதற்காக 4 பகிர்மான குழு தலைவர்களும், அசல் தேர்தல் சான்றிதழுடன் வர வேண்டும்.

    அதனைத் தொடர்ந்து திட்டக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெறும். இதில் ஓட்டுப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 28-ந் தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    கிணத்துக்கடவு,

    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கலில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழாவையொட்டி கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கம்பம் நடும் நிகழ்ச்சி, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று காலை யாகசாலை ஆரம்பம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தன.

    இதில் பொள்ளாச்சி கோவை, கிணத்துக்கடவு வட்டார பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) முதல் 23-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி மாவிளக்கு எடுத்து வருதல் பொங்கல் விழாவும் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைக்கின்றனர். 26-ந் தேதி 2-ம் நாள் தேர் திருவிழாவும், 27-ந் தேதி 3-ம் நாள் தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    • நள்ளிரவு வீட்டுக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்தார்.
    • வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 50 வயது கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 20 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனி கட்டிலில் படுத்து தூங்கினர். நள்ளிரவு வீட்டுக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த தொழிலாளியன் மகளை கையை பிடித்து இழுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். இதனையடுத்து அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மலுமச்சம்பட்டியை சேர்ந்த ரவுடி பூவரசன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடிதடி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    போலீசார் கைது செய்யப்பட்ட ரவுடி பூவரசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.40 வரை விற்பனையானது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர்,புளியம்பட்டி, சிறுமுகை,காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதனை இந்த ஏல மையத்தில் ஏலம் விட்டு வியாபாரிகள் போட்டி போட்டு எடுத்துச்செல்வதும் வழக்கம்.

    இந்த மையத்தில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி,பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா,செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகளால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.40 வரையும், கதளி வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25 வரையும் விற்பனையானது.

    மேலும்,பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500 வரையும்,தேன் வாழை தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.475 வரையும், ரஸ்தாளி தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.450 வரைக்கும், ரோபஸ்டா அதிகபட்சமாக தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.450 வரையும், செவ்வாழை அதிகபட்சமாக ரூ.800 வரையும் ஏலம் போனது. குறிப்பாக நேந்திரன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ ஒன்றிற்கு ரூ.20 வரை விற்பனையான நிலையில் தற்போது விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் சின்னராஜ் மற்றும் வெள்ளியங்கிரி கூறுகையில் மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் கடந்த பல நாட்களுக்கு முன்னர் சூறாவளி காற்றின் காரணமாக வரத்து அதிகமாக இருந்தன. இதனால் கடும் விலை வீழ்ச்சி அடைந்து அதிகபட்சமாக ரூ.20 வரை மட்டுமே ஏலம் போனது.

    தற்போது நேந்திரன் வாழைத்தார்களின் வரத்து குறைவாக இருப்பதாலும்,கேரள வியாபாரிகளின் வரத்து அதிகரித்துள்ளதாலும் அதிகபட்சமாக நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு ரூ.40 வரை ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றனர்.

    • 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது
    • மலர் செடி கொடிகளை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்

    ஊட்டி

    கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் நாள்தோறும் அண்டைய மாநிலமான கேரளா கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர்.

    கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சில நாட்களாக மேகமூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று மதியத்துக்கு மேல் ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சூடு தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இரவில் கூட வெப்பம் தணிந்து முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது

    சுற்றுலா பயணிகள் இதனை அனுபவித்து வருகின்றனர் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடியே ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றி வருகின்றனர். பசுமையான புல்வெளிகளும் மருத்துவம் நிறைந்த மலர் செடி கொடிகளையும் குளிர்ச்சியான காற்றுடன் சேர்ந்து ஒரு குடைகளைப் பிடித்த படியே பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்

    • கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    • கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

    ஊட்டி

    கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய கோடை விழா வாசனை திரவிய கண்காட்சி புதன்கிழமை நிறைவடைந்தது.

    நிறைவு விழாவுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை வகித்தாா்.

    கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, துணைத் தலைவா் சிவராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெயலட்சுமி, கூடலூா் வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் கூடலூர் நகர செயலிளர் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    நிறைவு விழாவில், கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசும், தோட்டக்கலைத் துறைக்கு இரண்டாம் பரிசும், கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

    இதில் பொதுமக்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

    • குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
    • வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் உலவி வருவது வாடிக்கை.

    இந்நிலையில், வனத்தைவிட்டு வெளியேறிய காட்டெருமை குன்னூா் பேருந்து நிலையத்துக்குள் புதன்கிழமை காலை நுழைந்தது. வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பஸ்களில் ஏறி அமா்ந்து கொண்டனா்.

    சிறிது நேரம் உலவிய காட்டெருமை பிறகு தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

    குடியிருப்பு பகுதிகளில் உலவி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.
    • இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் ஸ்ரீ வேட்டக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் பொன்னர்-சங்கர், தங்காள் – செல்லாண்டியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.

    கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பொன்னர் சங்கர், தங்காள் வீர வரலாறு உடுக்கை கதை, பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து பூச்சியூர் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்தல், சாம்புகன் சாமியை மேடைக்கு அழைத்து வருதல், தங்காளுக்கு கிளி பிடிக்க செல்லுதல், கொம்பனை சாம்புகன் சாமி மேடைக்கு அழைத்து வருதல், செம்மறி ஆட்டுகிடாவுடன் மேளதாளம் முழங்க பறை சாற்றி வருதல் தங்காள் செல்லாண்டியம்மன் தீர்த்தம் எடுத்து வந்து தெளித்து அண்ணன்மார்களை எழுப்புதல் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றன.

    தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர், இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக கொம்பனை குறி வைத்தல் நிகழ்ச்சியில் பன்றியை வேல்கொம்பு கொண்டு பூசாரி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சாம்புகன் பூஜை செய்து தீர்த்தம் வழங்கி கிடாவெட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன.

    இறுதியாக சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் 2 நாட்களுக்கு முன்பே இங்கு வந்துள்ளனர்.

    இந்த விழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக வளர்த்த சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் கிடாவெட்டு விருந்து போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பொன்முருகன் வீட்டிலிருந்து ரூ.12.40 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க கட்டிகள் திருடு போனது.
    • சவுந்தரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது 46). தொழில் அதிபரான இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.12.40 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க கட்டிகள் திருடு போனது. இது குறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க கட்டிகளை திருடிய அவரது வீட்டில் வேலை பார்த்த ஒண்டிப்புதூர் முத்துசாமி செட்டி வீதியை சேர்ந்த சிவராமன் என்பவரது மனைவி ஜோதி(47) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 93 கிராம் எடையிலான தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட ஜோதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    முன்னதாக மீதமுள்ள தங்கத்தை மீட்பது குறித்து போலீசார் ஜோதியிடம் நடத்திய விசாரணையில், அது அவரது மகன் சவுந்தர்(27) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று போலீசார் தலைமறைவாக இருந்த சவுந்தரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட சவுந்தரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×