search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரசிம்மநாயக்கன்பாளையம் கோவில் விழாவில்  500 ஆடுகளை வெட்டி விருந்து
    X

    நரசிம்மநாயக்கன்பாளையம் கோவில் விழாவில் 500 ஆடுகளை வெட்டி விருந்து

    • 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.
    • இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் ஸ்ரீ வேட்டக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் பொன்னர்-சங்கர், தங்காள் – செல்லாண்டியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.

    கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பொன்னர் சங்கர், தங்காள் வீர வரலாறு உடுக்கை கதை, பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து பூச்சியூர் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்தல், சாம்புகன் சாமியை மேடைக்கு அழைத்து வருதல், தங்காளுக்கு கிளி பிடிக்க செல்லுதல், கொம்பனை சாம்புகன் சாமி மேடைக்கு அழைத்து வருதல், செம்மறி ஆட்டுகிடாவுடன் மேளதாளம் முழங்க பறை சாற்றி வருதல் தங்காள் செல்லாண்டியம்மன் தீர்த்தம் எடுத்து வந்து தெளித்து அண்ணன்மார்களை எழுப்புதல் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றன.

    தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர், இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக கொம்பனை குறி வைத்தல் நிகழ்ச்சியில் பன்றியை வேல்கொம்பு கொண்டு பூசாரி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சாம்புகன் பூஜை செய்து தீர்த்தம் வழங்கி கிடாவெட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன.

    இறுதியாக சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் 2 நாட்களுக்கு முன்பே இங்கு வந்துள்ளனர்.

    இந்த விழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக வளர்த்த சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் கிடாவெட்டு விருந்து போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×