search icon
என் மலர்tooltip icon

    வேட்பாளர்கள் - 2021

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தொடரின் அலுவல்கள் குறித்து விவாதிப்பதுடன், தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினையை எழுப்ப கட்சியினர் அனுமதி கேட்பார்கள் என தெரிகிறது.

    பொதுவாக, பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும். ஆனால் இந்த முறை தொடர் தொடங்கிய பின்னரே கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 2 நாட்களுக்கு முன்னரே முடிக்கப்படும் என தெரிகிறது. அதாவது பிப்ரவரி 15-ம் தேதிக்கு பதிலாக 13-ம் தேதியே முடிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் இதை வலியுறுத்தியதால், அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இரு நாட்களுக்கு முன்னரே முடிக்கப்பட்டாலும் தொடரின் அலுவல் நாட்களில் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது.
    இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் தொழில்துறை முடங்கியது. அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். எனவே, பொருளாதாரத்துக்கு புத்துயிருட்டும் வகையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்தடுத்து ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்தார்.

    தற்சார்பு இந்தியாவை அடைய அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி திட்டங்களும் அவற்றில் அடங்கும்.

    இந்த சலுகைகளை ‘மினி பட்ஜெட்’ என்று வர்ணித்துள்ள பிரதமர் மோடி, இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், அதே போன்று சலுகை நிறைந்ததாக இருக்கும் என்று சூசகமாக தெரிவித்தார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, நேற்று காலையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிய புத்தாண்டின் முதலாவது கூட்டத்தொடர் தொடங்க போகிறது. முதல் தொடரே பட்ஜெட் கூட்டத்தொடராக அமைந்து விட்டது. சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க பொன்னான வாய்ப்பு, நாட்டுக்கு கிடைத்துள்ளது.

    இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இந்த புத்தாண்டு முக்கியமானது. இதை மனதில் கொண்டு, நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். வெவ்வேறு கருத்துகளை முன்வைக்கும்போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    நாட்டு மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்வதற்காக நாடாளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் கடமையில் இருந்து எம்.பி.க்கள் விலகிச்செல்லக்கூடாது.

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக, சலுகை தொகுப்பு என்ற பெயரில் கடந்த ஆண்டு நான்கு, ஐந்து மினி பட்ஜெட்களை நிதி மந்திரி தாக்கல் செய்ய வேண்டியதாகி விட்டது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், அந்த மினி பட்ஜெட் வரிசையில் ஒன்றாகவே பார்க்கப்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
    அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து, நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், 2020-21ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்த விவரங்கள் இந்த ஆய்வறிக்கையில் உள்ளன.

    பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.7% ஆக சரியக்கூடும் என்றும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மதிப்பீடுகளின்படி, 2021ம் நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.2-7% வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பொதுமுடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம், 2021-22ஆம் நிதியாண்டில் வலுவான மீட்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தொடங்கியிருப்பதால் இந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
    புதுடெல்லி:

    விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை போன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு, மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். 

    ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணித்தன.

    ஜனாதிபதி உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் பட்டியலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசிய மாநாடு, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ம.தி.மு.க., கேரள காங்கிரஸ் (எம்), அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
    விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை என பரபரப்பான சூழலில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது.
    புதுடெல்லி:

    இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.  அதன்படி பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றத் தொடங்கினார். 

    கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம், நெருக்கடியான காலகட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்த அம்சங்கள், ஜனாதிபதி உரையில் இடம்பெறுகின்றன. 

    ஜனாதிபதி உரை முடிந்ததும், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். பிப்ரவரி 1-ந் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா கால வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படுகிறது. தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் செயல்படாமல், காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் ஒவ்வொரு நாளும் தலா 5 மணி நேரம் மட்டுமே செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையில் மாநிலங்களவையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையில் மக்களவையும் செயல்படும். ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே கேள்வி நேரம் அனுமதிக்கப்படும்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் 2 அமர்வுகளாக நடத்தப்படும். முதல் அமர்வு பிப்ரவரி 15-ந் தேதி வரை தொடரும். இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 8-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந் தேதி முடியும்.
    மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதித்துறை மந்திரியை பாராட்டுகிறேன்.

    உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை வரவேற்கிறேன்.

    நாட்டில் நீர்ப்பற்றாக்குறை அதிகமாக நிலவக்கூடிய 100 மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்ப்பற்றாக்குறை நிலவும் அனைத்து மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டு, அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு தரிசாக விடப்பட்டுள்ள விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது.

    சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச்சம்பவங்களைக் குறைப்பதிலும் நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழகத்தில் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க வேண்டும்.

    ரெயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மூலமாக செயலாக்கப்பட இருக்கும் கிசான் ரெயில் மற்றும் கிரிஷி உடான் திட்டங்கள் மூலம் தடையில்லா தேசிய குளிர்பதன முறை நிறுவப்பட இருப்பதையும், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதையும் பாராட்டுகிறேன்.

    ஆதிச்சநல்லூர் உள்பட 5 தொல்லியல் சார்ந்த இடங்களில் அருங்காட்சியகம் கொண்ட மேம்பாட்டு பணிகள் செய்வதாக அறிவித்துள்ளதை தமிழக மக்களின் சார்பாகவும் மத்திய அரசுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், கீழடியையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    புதியதாக நூறு விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கவும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிய நிதி ஒதுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

    மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இந்த பட்ஜெட் திறம்பட தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு மட்டுமன்றி, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.
    2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 3.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியானது.

    இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 3.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. 

    பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகையில் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள், போர் கப்பல்கள் உள்ளிட்ட கொள்முதல்களுக்கு 1.13 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பளம், பராமரிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு 2.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வுதியத்திற்கு 1.33 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    இதனால் பாதுகாப்புத்துறைக்கு மொத்தம் 4.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார்.

    இந்த பட்ஜெட் தொடர்பாக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ’அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது’ என விமர்சித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இதையடுத்து 2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
    2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு 2826 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். 

    இந்த நிதிநிலை அறிக்கையில் விளையாட்டுத்துறைக்கு 2826.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட விளையாட்டுத்துறைக்கான பட்ஜெட் தொகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 50 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  
    நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சிக்கியுள்ளது என்ற உண்மையை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருப்பதாகவும், மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். இதுதவிர துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.

    இந்த பட்ஜெட் குறித்து ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுவருகின்றனர். 

    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதிமந்திரியுமான ப.சிதம்பரம் இன்று வெளியான பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    ''நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 6-வது காலாண்டாக சரிவை சந்தித்துவருகிறது. பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் சிக்கி மிகப்பெரிய சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை ஏற்க மத்திய அரசு முழுமையாக மறுத்துவருகிறது. 

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு 6 முதல் 6.5 சதவிகிதம் வரையில் இருக்கும் என மத்திய அரசு கூறியிருப்பது மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது மட்டுமல்லாமல் பொறுப்பற்ற பேச்சு’’ என அவர் தெரிவித்துள்ளார்.
    மத்திய நிதி மந்திரி இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் 987.96 புள்ளிகள் சரிவில் முடிந்தது.
    மும்பை:

    பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.

    அவரது அறிவிப்புகளில் முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கத்தக்க எவ்வித அம்சங்களும் இடம்பெறவில்லை என நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

    இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை உயர்வை சந்தித்து, மாலையில் வர்த்தகம் முடிவடைந்தபோது மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தது.

    ‘சென்செக்ஸ்’ 987.96 புள்ளிகள் சரிந்து 39,735.53 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதேபோல் ‘நிப்டி’ 300 புள்ளிகள் சரிந்து 11,662 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    குறிப்பாக, எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 6.3 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 6.6 சதவீதம் அளவுக்கும், எச்.எப்.டி.சி. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 3.4 சதவீதம் அளவுக்கும் வீழ்ச்சி அடைந்தன. 
    டெல்லியை மீண்டும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியிருப்பதாக, பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருப்பதாகவும், மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். இதுதவிர துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.

    இந்த பட்ஜெட் குறித்து ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுவருகின்றனர். அவ்வகையில், இந்த பட்ஜெட்டில், டெல்லியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

    ‘டெல்லிக்கு பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் டெல்லியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மீண்டும் நடத்தியிருக்கிறார்கள். பாஜகவின் முன்னுரிமைகளில் டெல்லியை குறிப்பிடாதபோது, மக்கள் ஏன் அந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?

    சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, பாஜக இப்படி டெல்லியை ஏமாற்றினால், தேர்தலுக்குப் பிறகு, அந்த கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா?" என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

    டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
    ×