search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு மிரட்டல்"

    • போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.

    மும்பை:

    மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பை நகரில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.

    இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. அவனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவன் எங்கிருந்து பேசினான் என்பது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    வெடி குண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம், ஆட்டம். பாட்டத்துடன் உற்சாகத்துடன் நடக்கும். இன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.

    • டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல்.
    • மோப்ப நாய்களுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு விரைந்த போலீசார்.

    சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.

    சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, போலீசார் மோப்ப நாய்களுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு விரைந்துள்ளனர்.

    • காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்.

    ரிசர்வ் வங்கி, எச்.எடி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி. வங்கிகளுக்கு நேற்று (டிசம்பர் 26) காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான மின்னஞ்சலில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தாஸ், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மிரட்டல் தொடர்பாக குஜராத் மாநிலத்தை அடுத்த வதோதராவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வங்கிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் ஏமாற்று வேலை என்று தெரியவந்தது.

    • ரிசர்வ் வங்கி உள்பட 11 இடங்களில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்:

    மும்பை:

    மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படும் என்றும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

    இதேபோல் மும்பையில் மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் போலீசார் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்:

    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூர்:

    பெங்களூர் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதைதொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் உடனடியாக ராஜ்பவனுக்கு விரைந்து சென்று அப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெங்களூரு விதான் சவுதா போலீஸ் நிலைய போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதில் அந்த தொலைபேசி எண் கோலார் மாவட்டம் கோலார் டவுன் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், விளையாட்டாக இதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தகாக போலீசார் கூறினர்.
    • மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். உடனடியாக போலீஸ் ஏ.எம்.எஸ். வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, ராஜ்பவனுக்கு விரைந்து வந்து அப்பகுதி முழுவதும் சோதனையிட்டது.

    சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தகாக போலீசார் கூறினர். நள்ளிரவில் தொடங்கிய இந்த சோதனை வெகுநேரம் நடைபெற்றது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மர்ம நபர் புரளியை கிளப்பி பீதி அடைய செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    இதனால் ராஜ் பவனில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் நிம்மதி அடைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பெங்களூரு விதான் சவுதா போலீஸ் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் அழைப்பு வந்த எண்ணை சைபர்கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். மிரட்டல் விடுத்த மர்மநபரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் கடந்த 1-ந்தேதி பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். கடைசியில் அதுபுரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும் என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.
    • மர்மநபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை:

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் விமான நிலையத்தின் டெர்மினல் 2-வை தகர்க்கப்போவதாகவும், வெடிப்பைத் தடுக்க 48 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் டாலர்களை பிட்காயினில் தரவேண்டும் என்றும் மர்மநபர் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.

    மேலும், "உங்கள் விமான நிலையத்திற்கு இது இறுதி எச்சரிக்கை. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிட்காயினுக்கு மாற்றப்படாவிட்டால், 48 மணி நேரத்தில் டெர்மினல் 2 ஐ வெடிக்கச் செய்வோம். மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும்" என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் சஹார் காவல் நிலையத்தை அணுகி, மர்மநபர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 385 (பணம் பறிப்பதற்காக ஒரு நபருக்கு காயம் ஏற்படும் என்ற பயத்தில்) மற்றும் 505 (1) (பி) (அச்சம் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட அறிக்கைகள்) கீழ் எப்.ஐ.ஆர். (பொது அல்லது பொது அமைதிக்கு எதிராக) அடையாளம் தெரியாத நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
    • குடும்பத்தினரிடம் விசாரித்ததில் கடந்த சில மாதங்களாகவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் வீடு மற்றும் டி.வி. அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

    இதையடுத்து மிரட்டல் விடுத்த எலக்ட்ரீஷியன் செல்வம் (41) என்பவரை நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவரது குடும்பத்தினரிடம் விசாரித்ததில் கடந்த சில மாதங்களாகவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

    போலீசார் அவரது மருத்துவ சான்றுகளையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அந்த வாலிபரை எச்சரித்து இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
    • மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்கள் கூடும் கடை வீதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்றுமுன்தினம் இரவில் ஒரு மிரட்டல் இ-மெயில் சென்றது. அதில் கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசுக்கு எதிராகவும், கண்டன வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. கோவை உள்பட மேலும் சில மாவட்டங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு மிரட்டல் அனுப்பப்பட்டு இருந்தது.

    இந்த தகவல் கோவை மாநகர போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். இரவு விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேக நபர்கள் யாரும் சிக்கவில்லை.

    இதற்கிடையே மிரட்டல் மெயில் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். அந்த இ-மெயில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர் தனக்கும், மிரட்டலுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார்.


    இசக்கியின் இ-மெயில் ஐ.டி.யை மர்ம நபர்கள் அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி மிரட்டல் விடுத்து இருந்தது தெரியவந்தது. அவ்வாறு மிரட்டல் விடுத்த நபர் யார், எதற்காக இவ்வாறு மிரட்டல் விடுத்தனர் என்பது பற்றி விசாரித்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவையில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என வந்த இ-மெயில் வெறும் வதந்தி. பண்டிகை காலங்களில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் யாராவது இப்படி மிரட்டல் இ-மெயிலை அனுப்பி இருக்கலாம். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடித்தது. கோவையில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்டு காரில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த முபின் என்ற வாலிபர் குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார்.

    இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருக்கும் நிலையில் அதேபோல தீபாவளிக்கு முந்தைய நாள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். கோவையில் பா.ஜ.க. அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது.
    • இன்று காலை வீட்டில் இருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 108 அவசர ஆம்புலன்ஸ் அவசர சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    நேற்றிரவு இந்த மையத்தில் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது ஒருபோன் அழைப்பு வந்தது.

    பணியில் இருந்த நபர் போனை எடுத்து பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், முதலமைச்சர் வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சியான ஊழியர், அவரிடம் நீங்கள் யார் என்று விசாரித்தார். ஆனால் அதற்குள் அந்த நபர் தனது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து, அங்கிருந்த ஊழியர் சம்பவம் குறித்து ஊட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மேலும் சென்னைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடங்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.

    சோதனையில் குண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு சென்று போன் வந்த நம்பரை வைத்து அது யாருடையது? எங்கிருந்து வந்தது என விசாரணையை தொடங்கினர்.

    விசாரணையில், வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போனில் கூறியது ஊட்டி அருகே உள்ள தாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பது தெரியவந்தது.

    இன்று காலை ஊட்டி தாம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்ததால் 108 அவசர சேவை மையத்திற்கு அழைத்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு மார்க்கமாக அதிகமான ரெயில்கள் வந்து செல்வதால் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது
    • ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்து விட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஈரோடு போலீசார் உஷார்படுத்தப்பட்டு சூரம்பட்டி போலீசார் ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இவர்களுடன் ஈரோடு ரெயில்வே போலீசாரும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதி, டிக்கெட் கொடுக்கும் இடம், அனைத்து நடைமேடைகள், பார்சல் வழங்கும் இடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பறைகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை ஈடுபட்டனர்.

    இரவு நேரத்தில் ஈரோடு மார்க்கமாக அதிகமான ரெயில்கள் வந்து செல்வதால் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது. திடீரென போலீசார் சோதனை செய்வதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பயணிகள் உடமை கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த சமயம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களையும் போலீசார் சோதனை செய்தனர். ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகள் உடமைகளையும் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனையில் ஈடுபட்ட பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது யார்? என்று போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது ஆந்திராவில் இருந்து வெடிகுண்டு புரளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போனில் பேசி நபரின் டவர் ஆந்திராவை காட்டியது. இதையடுத்து இன்று காலை ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.

    • நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
    • மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, மஸ்கட் ஓமன் துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும் அதே போன்று பெங்களூர் சென்னை புதுடெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண் அந்த மெசேஜை அனுப்பியிருந்தார். அதில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    ஆயினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை தொடர்ந்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×