search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல்- முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு
    X

    கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல்- முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு

    • பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
    • மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்கள் கூடும் கடை வீதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்றுமுன்தினம் இரவில் ஒரு மிரட்டல் இ-மெயில் சென்றது. அதில் கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசுக்கு எதிராகவும், கண்டன வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. கோவை உள்பட மேலும் சில மாவட்டங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு மிரட்டல் அனுப்பப்பட்டு இருந்தது.

    இந்த தகவல் கோவை மாநகர போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். இரவு விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேக நபர்கள் யாரும் சிக்கவில்லை.

    இதற்கிடையே மிரட்டல் மெயில் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். அந்த இ-மெயில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர் தனக்கும், மிரட்டலுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார்.


    இசக்கியின் இ-மெயில் ஐ.டி.யை மர்ம நபர்கள் அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி மிரட்டல் விடுத்து இருந்தது தெரியவந்தது. அவ்வாறு மிரட்டல் விடுத்த நபர் யார், எதற்காக இவ்வாறு மிரட்டல் விடுத்தனர் என்பது பற்றி விசாரித்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவையில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என வந்த இ-மெயில் வெறும் வதந்தி. பண்டிகை காலங்களில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் யாராவது இப்படி மிரட்டல் இ-மெயிலை அனுப்பி இருக்கலாம். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடித்தது. கோவையில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்டு காரில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த முபின் என்ற வாலிபர் குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார்.

    இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருக்கும் நிலையில் அதேபோல தீபாவளிக்கு முந்தைய நாள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். கோவையில் பா.ஜ.க. அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×