search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்மலையனூர் அங்காளம்மன்"

    • கணவன்-மனைவி இடையே நல்லுறவு ஏற்படும்.
    • பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும்

    சில கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல், குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல்மலையனூர் தலத்தில் உள்ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு, மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்திக் கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    • சித்திரை மாத அமாவாசை அன்று இரவு பெரிய கரக ஊர்வலம் (பூங்கரகம்) நடைபெறும்.
    • ஆனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

    சித்திரை மாத அமாவாசை அன்று இரவு பெரிய கரக ஊர்வலம் (பூங்கரகம்) நடைபெறும். அன்றைய தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    வைகாசி மாதம் அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் இரவு ஊஞ்சல் உற்சவம் நடை பெறும்.

    ஆனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    ஆடிமாதம் முழுவதும் அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலிப்பர்.

    ஆவணி மாதம் அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

    புரட்டாசி மாதம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மறுநாளில் இருந்து நவராத்திரி கொலுவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

    சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். விஜயதசமி அன்று மாலையில் அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் கையில் வில், அம்புடன் குதிரை வாகனத்தில் மந்தைவெளியில் எழுந்தருள்வார். பின்பு வன்னிமரத்தின் மீது அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ஐப்பசி மாதம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தீபாவளி அன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

    கார்த்திகை மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    திருவண்ணாமலை தீபத் திருநாள் அன்று உற்சவ அம்மன் மாலை நேரத்தில் பல்லக்கில் வந்து தென்மேற்கு மூலையில் இருந்து திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மனுக்கு தீபாரதனை நடைபெறும்.

    மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

    தை மாதம் பொங்கல் அன்று வடக்கு வாசல் அருகில் பெரிய பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கும் அம்மனுக்கும் படைப்பார்கள். அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் நடைபெறும்.

    மாசி மாதம் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறும். இம்மாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    பங்குனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    • பனை மரமே முளைக்காமல் போகட்டும் என்று சாபமிட்டு விடுகிறார்.
    • ஏரியின் கரையில் பனை மரங்களை காண முடியாது.

    திருவண்ணாமலை குளத்தில் உள்ள தீர்த்தத்தில் மூழ்கியவுடன் பார்வதிதேவி, வயதான தோற்றம் மறைந்து பழைய உருவத்தை அடைகிறார். பின்பு அங்கிருந்து கிழக்கு பக்கமாக மேல்மலையனூருக்கு வருகிறார். அப்போது இரவு ஆகி விடுகிறது.

    எனவே மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் தென்மேற்கு பகுதியில் உள்ள தாயனூர் என்ற ஊரில் 400 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியின் கரையில் பார்வதி தங்கி விடுகிறார்.

    அப்போது அவருடன் வந்த பூதகணங்கள் பசி எடுப்பதாக பார்வதியிடம் கூறுகின்றன. அங்குள்ள ஏரியில் உள்ள பனை மரத்தில் அங்கிருந்த மக்கள் பதநீர் இறக்கி கொண்டிருந்தனர். அதனை கேட்கிறார் பார்வதி. அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த பார்வதி, இங்குள்ள பனை மரங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும். அதுமட்டுமல்லாமல் இனிமேல் இங்கு பனை மரமே முளைக்காமல் போகட்டும் என்று சாபமிட்டு விடுகிறார். அதன்படி இன்று வரை இந்த ஏரியின் கரையில் பனை மரங்களை காண முடியாது.

    அதேபோல் இந்த ஏரியில் அம்மன் குளித்து விட்டு வந்த போது அவரது மெட்டி காணாமல் போய் விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பார்வதி, இந்த ஏரியில் உயரமான புற்கள் (விழல்) வளராமல் போகட்டும் என்று சாபமிட்டதால் இன்றுவரை இந்த ஏரியில் உயரமாக புற்கள் வளருவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அய்யப்பன் கோவில்

    அங்காள பரமேஸ்வரியின் உற்சவர் சன்னதிக்கு எதிரில் தர்மசாஸ்தா என்கிற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலை பற்றி செல்வராஜ் பூசாரி ஏழுமலை பூசாரி ஆகியோர் கூறும்போது, இங்கு வீற்றிருக்கும் தர்மசாஸ்தா என்கிற அய்யப்பன் உலோகத்தால் செய்யப்பட்ட18 படிகளின் மீது பீடத்தில் காட்சி அளிக்கிறார்.

    சபரிமலையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின்போது இவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அதேபோல் கார்த்திகை மாதத்தில் இருந்து தை மாதம் மகர ஜோதி வரை இவருக்கு தினமும் அய்யப்ப பக்தர்களால் அபிஷேகமும், அலங்காரமும், சரணகோஷமும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். அம்மனை வணங்கும் பக்தர்கள் இவரையும் கும்பிட்டு விட்டுச் செல்கின்றனர் என்றனர்.

    • அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.
    • பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய கோவிலின் ஈசான்ய மூலையில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் பூசாரி கூறியதாவது:-

    இங்கு வரும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கு முதலில் கோவிலின் உட்புறத்தில் நந்தி மற்றும் பலிபீடம் அருகில் வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அதிகமாக எண்ணெய் ஊற்றுவதால் நடந்து செல்லும் பக்தர்கள் அதில் வழுக்கி விழக்கூடும் என்பதால் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு பலன் உண்டு என்பதால் பக்தர்கள் அவர்களின் வேண்டுதல்கள் பொருட்டு விளக்கேற்றுகின்றனர். இங்கு விளக்கேற்றுவதால் அவர்களின் இல்லங்களில் உள்ள பிரச்சனைகள் அகன்று ஒளி ஏற்படுவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்பது அவர்கள் எங்களிடம் கூறுவது மூலம் அறியமுடிகிறது.

    வழிபாட்டின் மகிமை

    மலையனூரில் பிரார்த்தனைக்கு வருபவர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு. ஆடி மாதம் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நேர்த்திகடன் செய்பவர்கள் முதலில் அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள். சிலர் அலகு குத்தியும் வருவதுண்டு.

    • மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
    • கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும்.

    கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும். அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகிய நாள். அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள்.

    சிவசுயம்பு புற்றுருவாகவும், புற்றுக்குள் குடி கொண்ட நாக வடிவமாகவும் ஆனாள் என்று அறிந்த வண்ணம் நாகத்தின் படம் சுருங்காமல் சீறிபாயும் நிலையில் இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளை கண்ணுற்ற, பூலோகத்தில் இருந்த பூதகணங்களான, ஆண்பூதம், பெண்பூதம், மிருக கணங்கள், பறவை கணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த வண்ணம் வகை வகையாக வந்து அப்புற்றை சுற்றி பணிந்து தொழுததாக ஐதீகம்.

    அதற்கும் அந்த நாகப்பாம்பு படம் சுருங்காமல் இருப்பதை கண்ட பூலோக கணங்களில் வேண்டுகோளுக்கு இணங்க தேவர் உலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகமான இப்புற்றை வந்து தொழுது நின்றதாகவும், அதற்கும் இந்த நாகப்பாம்பின் படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் திருவுருவமாக "திருத் தேர் ஆகி" நின்ற அப்புற்றை சுற்றி வரும் போது கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.

    இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.

    மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவு சிவன் ராத்திரி என்றும், அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும், மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூறையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும் அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.

    ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம், இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்றும், மூன்றாம் நாள் பெண்பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், காட்டில் இருக்கும் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஐந்தாம் நாள் வாகனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகனத்தில் அம்மன் பவனி என்றும், அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் நடக்கிறது.

    ஆறாம் நாள் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும், ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் என்பதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும் நடத்தப்படுகிறது.

    எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூறவே குதிரை வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூறவே 9 தலை நாக வாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும்.

    மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நினைவு கூறவே, ஒவ்வொரு நாளும் பக்தர்கள் மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது, மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

    வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான, பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை களை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து செல்வதே இந்த 10 நாள் திருவிழாவாகும்.

    இந்த அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா வேறு எங்கும் கொண்டாடுவதில்லை. இந்த மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    • பனைமரங்களே இல்லாமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிடுகிறார்.
    • அம்மனுக்கு பூங்காவனம் என்ற பெயரும் உண்டு.

    கிரேதாயுகம், திரேதாயுகம் துவபராயுகம், கலியுகம் என்ற 4 யுகங்களுக்கு முன்னர் மணியுகம் ஒன்று இருந்ததாகவும் அதில் தான் அன்னை ஆதிபராசக்தி தோன்றியதாகவும் அதில் தான் அனைத்து கடவுள்களையும் ஆதிபராசக்தி படைத்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. இந்த மணியுகத்தில் சிவபெருமானுக்கும், பிரம்மாவுக்கும் தலா ஐந்து தலைகள் இருந்ததாக தலவரலாறு கூறுகிறது.

    இதனால் பிரம்மனுக்கு கர்வம் அதிகரித்தது. தவமிருக்கும் முனிவர்களிடம் எல்லாம் சென்று சிவனைப் போல என்னாலும் வரம் தரமுடியும் ஆகையால் சிவனை விடுத்து என்னை நோக்கி தவமிருங்கள் என்று கூறி வருகிறார்.

    இதை ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைக்கிறார். ஆகையால் சிவபெருமானிடம் பிரம்மனின் 5 தலைகளில் ஒரு தலையை வலது கையால் கிள்ளி எடுத்து விடுங்கள் என்று கூறுகிறார்.

    அதற்கு சிவபெருமானும் ஒப்புக்கொண்டு அந்த நேரத்திற்காக காத்திருக்கிறார்.

    ஒருநாள் பார்வதி, பிரம்மன் இடத்திற்கு சென்று வேண்டுமென்றே வணங்குகிறேன் நாதா என்கிறார். இதை கேட்ட பிரம்மன் அனைவருக்கும் படியளக்கும் ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதிக்கு தன் கணவர் யார் என்று அறியாமல் என்னைப் பார்த்து "நாதா" என்கிறார் என்று கூறியபடி பலமாக சிரிக்கிறார். இது தான் பிரம்மனின் கர்வத்தை அடக்க சரியான தருணம் என்று பார்வதி, சிவபெருமானிடம் நடந்தவற்றைக் கூறுகிறார்.

    இதற்காக காத்திருந்த சிவபெருமான் கோபம் கொண்டு பிரம்மனின் 5 தலைகளில் ஒருதலையை தன் வலது கரத்தால் கிள்ளி எடுத்து விடுகிறார்.

    வலியால் துடித்த பிரம்மன், சிவனைப் பார்த்து என்னிடம் இருந்து கிள்ளிய தலை உன் கரத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளட்டும், நீ திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து உண்பாய் அது மட்டுமல்லாமல் திருவோட்டில் போடப்படும் உணவுகளை உன் கையில் ஒட்டிக் கொண்டுள்ள என் தலையே சாப்பிட்டு விடும். உன் பசியாற சுடுகாட்டு சாம்பலை உட்கொண்டு காடு மேடெல்லாம் அலைந்து திரிவாய் என்று சாபமிட்டு விடுகிறார்.

    சரஸ்வதியும், தன் கணவரின் இந்த நிலைக்கு காரணமான பார்வதியைப் பார்த்து "உன் அழகு உருவம் மறைந்து வயதான கிழவியாக மாறக்கடவது"அது மட்டுமல்லாமல் கொக்கு இறகை தலையில் சூடிக்கொண்டு உடலெங்கும் கந்தல் ஆடை அணிந்து அலைந்து திரிவாய்" என சாபம் கொடுக்கிறார்.

    பதிலுக்கு சிவபெருமானும், பார்வதியும், பிரம்மா மற்றும் சரஸ்வதியை பார்த்து, "உங்கள் இருவருக்கும் தனி கோவில்கள் இன்றி, விழாக்கள் இன்றி இருக்கக் கடவது" என சாபம் இட்டு விடுகின்றனர். அவரவர் சாபத்திற்கேற்ப அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

    பார்வதி தேவி பல இடங்களில் அலைந்து திரிந்து திருவண்ணாமலை சென்றடைகிறார். அங்கு துர்வாச முனிவரிடம் தன்நிலையை பற்றி எடுத்துக் கூறுகிறார்.

    அனைத்தையும் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த முனிவர் அம்மனை பார்த்து, "இங்கிருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் 3 முறை மூழ்கி எழுந்தால் சாப விமோசனம் கிடைத்து பழைய உருவம் அடைவீர்கள் பின்பு கிழக்கு நோக்கி சென்று மலையரசன் ஆட்சி செய்யும் மலையரசன் பட்டிணத்திற்குச் (தற்போதுள்ள மேல்மலையனூர்) சென்று அங்கு கோவில் கொள்ளுங்கள். அப்போது சிவபெருமான் அங்கு வருவார். அவருக்கு தங்கள் மூலம் சாப விமோசனம் கிடைக்கும்" என்று வழிவகை கூறுகிறார்.

    அதன்படி பார்வதி தேவி பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவுடன் பழைய உருவம் கிடைக்கிறது. பின்பு கிழக்கு நோக்கி தனது பரிவாரங்களுடன் மலையரசன் பட்டிணம் என்கிற மேல்மலையனூருக்கு வருகிறார். வரும் வழியில் இரவாகி விடுகிறது. அதனால் தாயனூர் என்கிற இடத்தில் தங்கி விடுகிறார்.

    அப்போது தன்னுடன் வந்துள்ள பூதகணங்கள் பசிக்கிறது என்கின்றன. உடனே அங்கு பனை மரங்கள் வைத்திருப்போரிடம் பதநீர் கேட்கிறார். அவர்கள் தரமறுக்கிறார்கள். உடனே இங்கு பனைமரங்களே இல்லாமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிடுகிறார். அதன்படி அங்கு பனைமரங்கள் மறைந்து விட்டன (இன்றும் இங்குள்ள ஏரியில் பனை மரங்கள் இல்லாமல் இருப்பதை காணலாம்.)

    விடிந்ததும் அங்குள்ள பெரிய ஏரியில் குளிப்பதற்காக தான் கழுத்தில் அணிந்திருந்த ஆரத்தை கழற்றி ஓரிடத்தில் வைக்கிறார். பின்பு ஏரியில் இறங்கி நீராடிவிட்டு கரை ஏறும்போது கையில் இருந்த மோதிரம், காலில் இருந்த மெட்டி ஆகியவை காணாமல் போயிருந்ததை அறிகிறார். அதனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    நமக்கு ஏற்பட்ட இந்த நிலை எந்த மக்களுக்கும் நேரக்கூடாது என நினைத்து இந்த ஏரியில் விழல்கள் (புற்கள்) முளைக்காமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிட்டு விடுகிறார். அன்றில் இருந்து இன்று வரை இங்குள்ள ஏரியில் விழல்கள் (உயரமாக வளரும் ஒரு வகை புல்) வளருவதில்லை.

    தன்னுடைய கூந்தலை துடைக்கும்போது அதில் இருந்து ஒரு சடைமுடி கீழே விழுந்து ஒரு ஆண் உருவம் எடுத்து நிற்கிறது. அம்மன் அவரை ஆசிர்வதித்து "நீ இக்கரையில் ஜடாமுனீஸ்வரனாக கோவில் கொண்டு விளங்குவாய். நான் தங்க போகும் மலையரசன் பட்டிணம் (மேல்மலையனூர்) என்கிற இடத்தில் எனக்கு பூஜை செய்பவர்களுக்கு குலதெய்வமாக இருந்து அருளாசி வழங்குவாய் என்று கூறிவிட்டு தான் தங்கிய இடத்திற்கு சென்றார்.

    தான் கழற்றி வைத்த ஆரம் ஒரு பெண்ணாக உருமாறி அம்மனை வணங்கி நின்றது. அம்மா, இன்றில் இருந்து நீ! முத்தாரம்மன் என்ற பெயரில் அருளாசி வழங்குவாய். எனக்கு மேல்மலையனூரில் பூஜை செய்பவர்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் உனக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள் என்று ஆசி வழங்கி விட்டு மலையரசன் பட்டிணத்துக்கு (மேல்மலையனூர்) சென்று அங்குள்ள பூங்காவனத்தில் புற்றில் பாம்பாக உருமாறி நின்றார்.

    (அம்மனுக்கு பூங்காவனம் என்ற பெயரும் உண்டு) திடீரென புற்று உருவானதைக் கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த வீரன், சூரன், உக்கிரன் (இவர்கள் மீனவ இனத்தை சேர்ந்தவர்கள்) என்பவர்கள் அஞ்சி நடுங்கினர். அங்கு பார்வதிதேவி தோன்றி மகன்களே பயப்படாதீர்கள், எனக்கு நீங்கள் தினமும் பூஜை செய்து வாருங்கள். உங்கள் வம்சத்தை நான் காப்பேன் என்று கூறி மறைந்தார்.

    அன்றில் இருந்து அந்த புற்றின் மீது மழை, வெயில்படாமல் இருக்க 4 குச்சிகளை நட்டு அதன் மீது வேப்பிலை பரப்பி பந்தல் போட்டனர். புற்றுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வழிபட்டு வந்தனர். இதைப் பார்த்த அரண்மனைக் காவலர்கள் மலையரசனிடம் தெரிவிக்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த மன்னன் அந்த புற்றை அகற்றுமாறு கட்டளை இட்டான்.

    முதலில் 2 பேர் சென்று புற்றை இடிக்க கடப்பாரையை ஓங்கினர். அவர்களை 2 பூதங்கள் விழுங்கி விட்டன. அங்கிருந்த அரண் மனைக்காவலர்கள் ஓடிச்சென்று மன்னனிடம் நடந்ததைக் கூறினர்.

    அவன் மீண்டும் அரண்மனைக காவலர்கள் அனைவரையும் புற்றை இடிக்க அனுப்பினான். அவர்கள் அங்கு சென்று புற்றை இடிக்க முயற்சித்த போது மீண்டும் பூதங்கள் தோன்றி தகவல் சொல்ல ஒரு காவலனை தவிர அனைவரையும் விழுங்கி விட்டது. அந்த காவலன் ஓடிச்சென்று நடந்தவற்றை கூறினான்.

    மன்னனே நேரடியாக வந்து புற்றை இடிக்க முற்பட்ட போது சகோதரர்கள் வீரன், சூரன், உக்கிரன் மூவரும் மன்னரை வணங்கி நம்மை காப்பதற்காகவே ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி வந்துள்ளார். தாங்களும் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை வைத்து அம்மனுக்கு தொண்டு செய்யுங்கள் என்று கூறினர்.

    அதன்படியே மன்னரும் கடவுள் நம்பிக்கை கொண்டு நான்கு குச்சிகளை கொண்ட பந்தலை எடுத்து விட்டு கல்தூண்களைக் கொண்டு மண்டபம் எழுப்பினார். இன்றும் புற்றுக்கு மேல் உள்ள 4 கல்தூண் மண்டபம் மலையரசன் கட்டிய மண்டபம் என்றே முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போதுள்ள கோபுரம், முன்பு உள்ள கல்மண்டபம் ஆகியவை முற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்டதென்று அதன் கட்டிட அமைப்பு மற்றும் கல்தூண்களில் உள்ள சிற்பங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பல இடங்களில் அலைந்து திரிந்த சிவபெருமானிடம், மகாவிஷ்ணு, ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி மேல்மலையனூரில் குடிகொண்டுள்ளார் அங்கு சென்றால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறுகிறார். அதன்படி சிவபெருமான் மேல்மலையனூருக்கு வருகிறார்.

    மகாவிஷ்ணு அவரின் வருகையை தன் தங்கையான பார்வதிதேவியிடம் சிவபெருமான் இங்கு வந்து பிச்சை கேட்கும்போது "அவரை உள்ளே தங்க வைக்காமல் மயானத்தில் தங்குமாறு கூறிவிடு".

    பின்பு நவதானியங்களைக் கொண்டு சுண்டல்,கொழுக்கட்டை ஆகியவற்றை செய்து அதை பிசைந்து 3 கவளங்களாக (உருண்டைகள்) ஒரு தட்டில் வைத்துவிடு, மறுநாள் காலையில் சிவன் தங்கி இருக்கும் மயானத்திற்கு அந்த உணவை எடுத்துச் செல், முதல் உருண்டையை சிவன் கையில் உள்ள திருவோட்டில் போடு, அதை அந்த பிரம்மனின் தலை சாப்பிட்டு விடும் 2-வது உருண்டையையும் அதில் போடு அதையும் அந்த தலை சாப்பிட்டு விடும் 3-வது உருண்டையை திருவோட்டில் போடுவதுபோல் பாவனை செய்து கீழே இறைத்துவிடு, உணவின் சுவையில் மயங்கிக் கிடக்கும் பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து கீழே இறங்கி அந்த உணவை சாப்பிடத் தொடங்கும் அப்போது நீ! ஆங்கார உருவம் கொண்டு அந்த தலையை உன் வலது காலால் மிதித்து விடு என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி அம்மனும் செய்வதாக தெரிவிக்கிறார்.

    சிவபெருமான் அம்மன் குடிகொண்டுள்ள இடத்திற்கு வந்து "தாயே பிட்சாந்தேகி" என்று கேட்கிறார். உடனே வெளியில் வந்து விநாயகரிடம், உன் தந்தை இங்கு வந்துள்ளார். அவருக்கு சாபவிமோசனம் கிடைக்க இருப்பதால்

    நீ உட்காரமல் நின்று கொண்டு காவல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    அதன்படியே விநாயகரும் ஒப்புக்கொண்டு நின்றிருந்தார். பின்பு அம்மன், சிவபெருமானிடம் உணவு சமைத்து எடுத்து வரும்வரை அருகில் உள்ள மயானத்தில் தங்கி இருக்குமாறு கேட்கிறார். சிவபெருமானும் ஒப்புக்கொண்டு மயானம் செல்கிறார்.

    அங்கு இருந்த சாம்பலை எடுத்து உடலெங்கும் பூசிக் கொள்கிறார். பின்பு பசிக்காக ஒரு பிடி சாம்பலை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறார். ஆனால் பிரம்மனின் தலை அந்த சாம்பலை உட்கொள்ளவில்லை. தன் அண்ணனான மகாவிஷ்ணு கூறியபடியே பார்வதி தேவி 3 உருண்டைகளை தட்டில் வைத்து மயானம் நோக்கி புறப்பட்டுச்செல்கிறார். அங்கு சென்ற அவர் தட்டில் இருந்த முதல் உருண்டையை எடுத்து திருவோட்டில் போடுகிறார்.

    அதை பிரம்மனின் தலை சாப்பிட்டு விடுகிறது. 2-வது உருண்டையையும் திருவோட்டில் போடுகிறார், அதையும் அந்த தலை சாப்பிட்டு விடுகிறது. 3-வது உருண்டையை எடுத்து திருவோட்டில் போடுவது போல் பாவனை செய்து கீழே இறைத்து விடுகிறார்.

    உணவின் சுவையில் மயங்கி கிடந்த பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து சிவபெருமான் கையைவிட்டு கீழே இறங்கி உணவை தேடித்தேடி சாப்பிடத் தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த பார்வதி தேவி ஆங்கார உருவம் கொண்டு அந்த தலையை தன் வலது காலால் மிதித்தார். பிரம்மனின் தலை, வலியால் துடித்தும் விடாமல் அம்மன் தன் காலில் அழுத்தினார்.

    சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதால் ஆனந்த தாண்டவம் ஆடியபடி சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக மாறினார். ஆங்கார உருவம் எடுத்ததால் பார்வதி தேவியை அங்காளபரமேஸ்வரி என்றும், ஆனந்தாயி என்றும் பூங்காவனத்தில் தங்கியதால் பூங்காவனம் என்று அழைக்கப்படுகிறார்.

    சிவபெருமான் ஆனந்ததாண்டவம் ஆடியதால் தாண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவன் வந்து இங்கு வந்து தங்கிய இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரிய உருவமாகவும் அம்மனின் வலது பக்கத்தில் சிவபெருமான் (தாண்டேஸ்வரராக) ரிஷப வாகனத்தில் அமர்ந்து சிறிய உருவமாக காட்சி தருகிறார்கள். கருவறையில் அம்மனும், சிவபெருமான் உருவ வடிவத்தில் (மற்ற இடங்களில் லிங்க வடிவில்) அருள்பாலிப்பது வேறு எங்கும் காணமுடியாத காட்சி ஆகும்.

    ஆவேசமடைந்த அங்காள பரமேஸ்வரி அம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை.கடைசியில் மகாவிஷ்ணுவை அணுகுகின்றனர். அவரும் அழகான தேரை உருவாக்கி அதில் அமர வைத்து பூங்காவனத்தை வலம் வந்தால் அம்மனின் சினம் குறையும் என ஆலோசனை கூறுகிறார். அவர்களும் ஒப்புக்கொண்டு செல்கின்றனர்.

    அதன்படி தேவலோக சிற்பியான விஷ்வகர்மாவை அழைத்து தேர் உருவாக்க சொன்னார்கள். அதன்படி 4 வேதங்கள் தேர் சக்கரங்களாகவும், தேவர்கள் ஒரு பகுதியினர் தேரின் அடிபீடமாகவும் தேர்க்கால்களாகவும், சங்கிலியாகவும் மாறுகின்றனர். மேகங்கள் தேர் சீலைகளாகவும், மகாவிஷ்ணு தேர் கலசமாகவும், குடையாகவும் மாறி அழகான தேராக காட்சி தருகின்றனர்.

    இதை பார்த்த அங்காளபரமேஸ்வரி அம்மன் அதன் மீது ஏறி அமர்கிறார். மற்ற தேவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து அம்மன் குடிகொண்டுள்ள பூங்காவனத்தை வலம் வந்து நிலை நிறுத்துகின்றனர். அம்மனின் சினம் முற்றிலும் தனிந்து விடுகிறது. தேவர்கள் பூமாரி பொழிகின்றனர். அம்மனும் அவர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

    இதை நினைவுபடுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வாகை, பனை புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு புதியதாக தேர் உருவாக்கப்பட்டு மாசி பெரு விழாவின் 7-ம் நாள் வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது

    • வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூரில் ஆதிகாலத்தில் தொடங்கப்பட்ட பழக்கமல்ல.
    • இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    தலைமுடி காணிக்கை

    மேல்மலையனூர் அங்காளம்மனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் மலையனூர் மாகாளி முன்பு செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இத்தலத்தில் வைத்தே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையை மேல்மலையனூருக்கு அழைத்து வந்து முதல் மொட்டை போட்டு தலை முடியை காணிக்கையாக கொடுக்கவும் பக்தர்கள் தவறுவது இல்லை.

    அதிலும் குறிப்பாக இந்த ஆடி மாதம் முழுவதும் இத்தலத்துக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்வோர்கள் ஏராளம். அங்காளம்மனை தீவிரமாக நேசிப்பவர்கள் குடும்பத்தோடு மொட்டை போட்டுக் கொள்வதுண்டு.

    அது போல சிறுமியருக்கு காது குத்துவதையும் பெரும்பாலான பக்தர்கள் இந்த தலத்திலேயே வைத்து நடத்துகிறார்கள்.

    பொங்கல் வழிபாடு

    ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் அம்மன் கேட்ட வரங்கள் மட்டுமின்றி கேட்காத வரங்களையும் அள்ளி தருவாள் என்று பெண்கள் நம்புகிறார்கள். இதனால்தான் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் அம்மன் ஆலயங்களில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடுகள் செய்வதுண்டு.

    மேல்மலையனூர் தலத்திலும் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு வைப்பது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சமீப ஆண்டுகளாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் மலையனூர் மாகாளிக்கு பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    இதையடுத்து மேல்மலையனூர் தலத்தில் பொங்கல் வைப்பதற்காகவே தனிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர் செல்பவர்கள் அங்கு பொங்கல் வைத்து அங்காளம்மனை மனதார வழிபட்டு வரலாம். அதிகாலை முதல் மாலை வரை பொங்கல் வைத்து வழிபடலாம்

    என்றாலும், ராகு காலத்தில் மட்டும் பொங்கல் வைத்து வழிபட வேண்டாம் என்று சொல்கிறார்கள். பொங்கல் பிரசாதம் படைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை வீடுகளுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்.

    ஆனால் பொங்கல் நைவேத்தியத்தை அங்காளம்மனுக்கு படைத்து வழிபட்ட பிறகு அதை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது நல்லது. பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை வினியோகிப்பது மூலம் பொங்கல் வழிபாடு செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    ஆடு&கோழி பலி

    மேல்மலையனூர் தலத்தில் ஆடி மாதம் ஆடு, கோழி பலியிடுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் கோவிலுக்குள் எத்தகைய பலி வழிபாடுகளும் நடப்பதில்லை. கோவிலுக்கு வெளியே தூரத்தில்தான் அவற்றை செய்கிறார்கள்.

    மேல்மலையனூர் தலத்தில் காவல் தெய்வமாக இருக்கும் பாவாடைராயனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சமர்ப்பிப்பார்கள். அங்காளம்மன் ஒருதடவை, "எனக்கு படைக்கப்படும் உணவுகள் உன்னைச் சாரும்" என்று, பாவாடைராயனிடம் கூறி இருந்தாளாம். எனவே இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    ஆடி மாதம் அங்காளம்மனை வழிபடுபவர்கள் மறக்காமல் பாவாடைராயனையும் வழிபட்டு வர வேண்டும். அவர் நம் வழிப்பயணத்துக்கு துணை இருப்பார் என்பது ஐதீகம்.

    ஆடு& கோழி சுற்றி விடுதல்

    சமீப காலமாக பக்தர்கள் ஆடு, கோழி பலியிடுவதை குறைத்து வருகிறார்கள். அதற்குபதிலாக கோவில் அருகில் சென்று ஆடு, கோழிகளை சுற்றி விட்டுவிட்டு வந்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் தங்கள் பிரார்த்தனை நிறைவுபெறுவதாக நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சுற்றிவிடும் வழிபாடு மிக எளிய பரிகாரமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக மேல்மலையனூர் தலத்தில் ஆடு, கோழி மட்டுமின்றி மாடுகளையும் கூட சுற்றி விட்டு நேர்த்தி கடன் செய்கிறார்கள்.

    வேப்பஞ்சேலை வழிபாடு

    அங்காளம்மனை வழிபடும் பெண்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றகோரி ஆலயத்தில் வேப்பஞ்சேலை அணிந்து வழிபாடு செய்வதுண்டு. பொதுவாக வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூர் கோவிலில் ஆதிகாலத்தில் இருந்து தொடங்கப்பட்ட பழக்கமல்ல. சென்னை அருகே உள்ள பெரியபாளையம் கோவிலில்தான் இந்த வழிபாடு அதிகஅளவில் நடக்கிறது.

    சமீப காலமாக மேல்மலையனூர் கோவிலுக்கு வரும் பெண்களும் இந்த வழிபாட்டை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இந்த வழிபாடு செய்தால் அம்மன் மனம் இறங்கி வேண்டும் வரம் தருவாள் என்பது நம்பிக்கை.

    தீச்சட்டி ஏந்துதல்

    மலையனூரில் பிரார்த்தனைக்கு வருபவர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு. ஆடி மாதம் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நேர்த்திகடன் செய்பவர்கள் முதலில் அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள். சிலர் அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தி வருவதுண்டு.

    பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் அம்மன்

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆடி அமாவாசை தினமாகும். இந்த நாள் மறைந்த முன்னோர்களான பித்ருகளை நினைத்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள்.

    நாளை காலை புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், கடலோர பகுதிகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு வீடுகளிலும் முன்னோர்களுக்கு சிலர் படையல் செய்து வழிபடுவது உண்டு.

    ஆனால் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வராமல் நேரடியாக மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு சென்று அம்மனை வழிபட்டால் பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் பலன் கிடைக்கும்.

    அதாவது நாம் பித்ருக்களுக்கு செய்த தர்ப்பணங்கள் முழுமையாக அவர்களை சென்று சேர அங்காளம்மன் உதவுவாள் என்பது ஐதீகம். ஆதிகாலத்தில் அங்காளம்மன் இத்தலத்தில் அவதாரம் எடுத்து பல்வேறு ஆத்மாக்களுக்கு ஞானம் வழங்கி உயர்வு கொடுத்தாள்.

    எனவேதான் பித்ரு தர்ப்பணத்திற்கு பிறகு அங்காளம்மனை வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

    மஞ்சள் ஆடை

    ஆடி மாதம் மலையனூர் தலத்துக்கு செல்பவர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு மிகவும் உகந்தது மஞ்சள் நிற உடையாகும். அது கிடைக்காத பட்சத்தில் சிவப்பு கலரில் புடவைகள் வாங்கி சாத்தலாம்.

    புற்றை சுற்றினால் பித்து நீங்கும்

    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

    மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பலமொழியாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலன் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள் ஆவர்.

    • உற்சவ அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால் தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்டவைகளாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் நடந்தது.

    மேலும் ஒரு லட்சத்து ஒன்று வளையல்களாலும், உற்சவ அம்மனுக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் வளையல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அம்பிகைக்கு உரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.
    • திருமணம் என பல தடைகள் அம்மனை வழிபடுவதால் விலகும்.

    அங்காளம்மனை வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற, வேப்பஞ்சேலை அணிந்து, கோவிலை வலம் வருகிறார்கள். பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இந்த வழிபாடு உண்டு. அதை இப்போது பக்தர்கள் இங்கும் பின்பற்றுகிறார்கள். ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை இங்கு வந்து பொங்கல் வைக்கிறார்கள்.

    பொங்கல் பானையின் மேல் மூடியில் பச்சரிசி மாவிளக்குப் போட்டு நெய் தீபம் ஏற்றி சன்னதிக்குள் எடுத்துச் செல்வார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த வைபவம் உண்டு. பால் அபிஷேகம், வஸ்திரம் சாற்றுதல், மாவிளக்கு போடுதல், நெய் தீபம் ஏற்றுதல் என்று அம்பிகைக்கு உரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

    சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பிரிந்த கணவன், மனைவி இணைய, குழந்தைப்பேறு, திருமணம் என பல தடைகள் அம்மனை வழிபடுவதால் விலகும் என்கிறார்கள். மயானக் கொள்ளை முடிந்த பிறகு சாம்பலே பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. அதை வீட்டில் கொண்டு வந்து வைத்தால் தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்கள் பக்தர்கள். தன்னை நம்புபவர்கள் மட்டுமல்லாமல் அல்லலில் உள்ள அன்பர்களையும் தன்னிடம் ஈர்க்கும் வல்லமை பெற்றவள் மேல்மலையனூர் அம்மன்.

    மயானக் கொள்ளையில் கலந்து கொண்டால் ராகு-கேது தோஷங்கள் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது பக்தர்களிடம்.

    நேர்த்தி: எலுமிச்சம்பழ மாலை, வஸ்திரம் சாற்றுதல், நெய் விளக்கு ஏற்றுதல்

    இருப்பிடம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்.

    • மேல்மலையனூரில் அம்மன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி இருக்கிறார்.
    • தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமாகியது.

    தீமையை அழிக்க ஆக்ரோஷமாக உருவம் எடுத்தாலும், அன்னை கருணையே வடிவானவள். இமவான் மகளாக இருந்தவள் தன் கணவனைக் காப்பாற்ற அங்காளம்மனாக உருவெடுத்தார். மேல்மலையனூரில் அம்மன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி இருக்கிறார். தன் கணவனைப் பிரிந்து அவரைக் காப்பாற்ற அன்னை வந்து இங்கு குடி கொண்டதால் இங்கு கணவனைப் பிரிந்தவர்கள் வந்து அம்மனிடம் பிரார்த்தனை செய்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

    தட்சன் தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்ததால் கோபம் அடைந்த தாட்சாயணி, அந்த யாக குண்டத்தில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டார். அந்த உருவமற்ற அம்சமே அங்காளி ஆகும். அங்காளியைத் தன் தோளில் சுமந்து ஆவேசமாக நடனமாடினார் ஈசன். அப்போது அம்பிகையின் கை துண்டாகி கீழே விழுந்தது.

    அது தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமாகியது. அதில் ஒரு பகுதியே மேல்மலையனூர். அம்பிகை யாகத்தில் சாம்பலான இடம் என்பதால் இங்கு சாம்பலே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அம்பிகையின் அருட் திருவருள் கடலெனப் பரந்தது என்றாலும், தன்னை நம்பி வரும் அடியவரின் துயர் நீக்கும் தன்மையே பெரிதாகப் போற்றப்படுகிறது.

    அம்பிகையின் சக்தியாலேயே இவ்வுலகம் இயங்கினாலும் அனைத்துப் பெருமைகளையும் இறைவனுக்கு அளித்து விட்டு அமைதியாகப் புன்னகை பூக்கிறாள் அம்பாள்.

    • உற்சவ அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
    • பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஆனி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இள நீர், பன்னீர் ஆகிய வற்றால் அபி ஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்யப் பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணி யளவில் உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக எடுத்துச் செல்லப் பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த படி முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணியள வில் அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்பு அம்மன் கோவிலுக்குள் சென்று உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாது காப்பு பணியில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந் துள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந் தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வைகாசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களாலும், எலுமிச்சை மாலைகளாலும் ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டி ருந்தது.

    இரவு 11 மணியளவில் அங்கிருந்த உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டாரவி தேஜா மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 600-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ×