search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெரினா கடற்கரை"

    • அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நடந்து வரும் நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்து வருகிறது.
    • விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள அணுகு சாலையில் இந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வசிப்பவர்களுக்கு ஒரே பெரிய பொழுது போக்கு மெரினா கடற்கரைதான். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து கடல் அலைகளில் விளையாடி பொழுதை கழித்து செல்கின்றனர். கடலில் இறங்கி ஆபத்தான வகையில் விளையாடும் இளைஞர்களை போலீசார் குதிரைகளில் வந்து கண்காணிக்கின்றனர். அதனையும் மீறி இளைஞர்கள் சிலர் கடல் அலையில் சிக்கி இறக்கும் சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது.

    அனைத்து தரப்பினரும் கடல் அலையில் கால்களை நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதையும் அமைத்து தரப்பட்டு உள்ளது. இதேபோல் முதியவர்கள் மற்றும் கை குழந்தைகளுடன் பகல் பொழுதில் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டு உள்ளது.

    அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நடந்து வரும் நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்து வருகிறது. இருந்தாலும் மெரினா கடற்கரையில் பகல் பொழுதில் மணல் சற்று சூடாகத்தான் இருக்கிறது. இதில் நடந்து செல்வது கடினம். இதனால் பகல் பொழுதில் வருபவர்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மணல் பகுதியை கடந்து செல்வதற்காக மூன்று சக்கர பிளாஸ்டிக் வண்டி நிறுத்தப்பட்டு உள்ளது.

    விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள அணுகு சாலையில் இந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. தேவைப்படுபவர்கள் அப்பகுதிக்கு சென்றால் வண்டிகளை பாதுகாத்து வருபவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள். இதனை பெற்றுக்கொண்டு கடல் அலை இருக்கும் பகுதி வரை சென்று வரலாம். இதற்கு பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பு உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் சற்று அதிகமாக வருவதால் கூட்டத்துக்கு ஏற்ப வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து தர வேண்டும். அத்துடன் தற்போது இருக்கும் வண்டிகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    தொடர் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க குவிந்து வருகின்றனர். நேற்று அனைத்து இடங்களிலுமே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து பொழுதை கழித்தனர். மணற்பரப்பே தெரியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்கள், ஷீசெல் மியூசியம், கலங்கரை விளக்கம், கப்பல்துறை மியூசியம் போன்ற பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் கார் மற்றும் வாகனங்களில் குவிந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மே தின விடுமுறை நாளான இன்றும் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து உள்ளனர். அவர்கள் புராதன சின்னங்கள் முன்பு நின்றபடி செல்போன்களில் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர்.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மதிய வேளையில் ஷவர் குளியல் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். பறவைகள் இருப்பிடங்களில் ஆங்காங்கே தண்ணீர் குவலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதன் கூண்டுகள் சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகளின் கூண்டுகள் உட்புறம் ஈரப்பதமான நிலையில் உள்ளன. நேற்று வண்டலூர் பூங்காவுக்கு வந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகளும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக வைத்து உள்ளனர். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? என்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.
    • மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா நினைவு சின்னம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் நுழைவாயில் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.

    இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும்.

    பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரை அமைப்பாக பாலம் அமைக்கப்படும்.

    சென்னையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டு விட்டது.

    இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்கு முறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்கி விட்டனர்.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

    தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை தலைமை அதிகாரிகளும் பங்கேற்று கருத்து கேட்டனர்.

    அப்போது அந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 12 பேர் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவாக 22 பேர் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

    இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பொதுப்பணித்துறை தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் விரிவாக கடிதம் அனுப்பி உள்ளது.

    அதில் பேனா நினைவு சின்னம் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் கூடி ஆலோசித்தனர்.

    பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? என்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.

    அப்போது மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

    இதுதொடர்பாக அந்த குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு 15 நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் விவரம் வருமாறு:-

    * மெரினா கடலோரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் இருப்பதால் அவர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

    * பேனா நினைவு சின்னம் கட்டப்படும்போது கடலோர நிபுணர் குழுவினர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    * பேனா நினைவு சின்னம் கட்டுவதற்கு எந்த காரணத்தை கொண்டும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது.

    * எதிர்காலத்தில் பேனா நினைவு சின்னம் தொடர்பாக கோர்ட்டு ஏதேனும் உத்தரவு விதித்தால் அவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    * பேனா நினைவு சின்னத்தை பார்ப்பதற்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

    * சென்னை கடலோர பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலக்கட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

    * பேனா நினைவு சின்னத்திற்கு சரியான சாலை வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    * போக்குவரத்து திட்டம் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவை சரியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

    * விதிமுறைகள் மீறப்பட்டால் திட்ட அனுமதி திரும்ப பெறப்படும்.

    உள்ளிட்ட 15 நிபந்தனைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரைபடத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி பேனா நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.
    • அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

    இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.

    இதைத்தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது.

    இதில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.

    கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.

    • எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள்.
    • பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டம்

    சென்னை:

    சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். அப்போது 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு திரண்டுவேந்து, மீன் கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள். அங்கிருந்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினார்கள். பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இரண்டாவது நாளாக இன்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் படகுகளை வைத்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.
    • லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் அகற்றினார்கள்.

    சென்னை:

    சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள், உணவகங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், இங்கு வருபவர்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எஸ்.என்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் மெரினா கடற்கரை லூப் சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதம் சாலை, நடைபாதைகளால் ஆக்கிரமித்து மீன் கடைகள், சிறு ஓட்டல்கள் செயல்படுகின்றன.

    இப்படி பொது சாலைகளை ஆக்கிரமிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது. இந்த சாலை மீன் கழிவு கொட்டுவதற்காக உள்ளதா?

    லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் அகற்றினார்கள்.

    இந்த நிலையில் கடைகள் அகற்றப்படுவதை அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் மீன் கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்கிறோம். கடைகளை அகற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள்.

    அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்கள். ஆனாலும் மீனவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாலையில் அமர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

    ஆனாலும் மீனவர்களின் எதிர்ப்பை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள். அங்கிருந்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினார்கள்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அதிரடியாக நடந்ததால் பெரும்பாலான மீனவர்கள் கடைகளில் இருந்த பொருட்கள் மற்றும் மீன்களை எடுத்து சென்றனர். அகற்றப்படாமல் இருந்த பொருட்கள் மற்றும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

    ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட போது அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் பிரதமர் அங்கு வரும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கருப்புக்கொடியுடன் வரும் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகையின்போது அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு சாலைமார்க்கமாக காரில் வருகிறார்.

    இந்த நேரத்தில் அவர் வரும் வழியில் காங்கிரஸ் கட்சியினர் யாராவது கருப்புக்கொடி காட்டிவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் பிரதமர் அங்கு வரும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த நேரத்தில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் இரவு 7 மணிக்கு மேல் மெரினா கடற்கரைக்கு வந்தால் சவுகரியமாக இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தரப்பில் இன்று காலை 10 மணிக்கு மேல் வள்ளுவர்கோட்டம் அருகே மோடி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி இல்லை. எனவே கருப்புக்கொடியுடன் வரும் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி நாளை சென்னை வரும் போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்த ரகசியமாக ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.
    • நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்

    சென்னை:

    மோடி இனத்தை அவ மரியாதை செய்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு தண்டனை விதித்ததால் அவரது எம்.பி. பதவி பறிபோனது.

    இந்த பதவி பறிப்புக்கு பா.ஜ.க. தலைவர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி நாடுமுழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக பிரதமர் மோடி நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அந்த மாநில காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நாளை சென்னை வரும்போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள் ளனர். போலீஸ் தடையை மீறி ரகசியமாக இதற்கு ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.

    சென்னையில் மீனம்பாக்கம், சென்ட்ரல், மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்ல அரங்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த 4 இடங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்த முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக காங்கிரசார் திடீரென கருப்புகொடியுடன் ஊடுருவி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

    இதையடுத்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 22 ஆயிரம் போலீசாருக்கு பதில் 26 ஆயிரம் போலீ சாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளனர்.

    பிரதமர் மோடி சென்னையில் விமான நிலையம் தொடங்கி நீண்ட தொலைவுக்கு சாலை மார்க்கமாக நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். பல இடங்களில் மிகப்பெரிய அகலமான சாலைகள் வழியாக செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது போலீசாருக்கு கடும் சவாலாக இருக்கும்.

    அகலமான சாலை பகுதிகளில் பாதுகாப்பு அரணை உடைத்துக்கொண்டு காங் கிரசார் கருப்பு கொடியுடன் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அத்தகைய சாலை பகுதிகளில் அதிக அளவில் போலீசாரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி நாளை 3-வது நிகழ்ச்சியாக விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்ட்ரலில் இருந்து காரில் மெரினா கடற்கரை வழியாக செல்ல உள்ளார். அந்த சமயத்தில் மெரினா கடற்கரையில் ஆங்காங்கே பதுங்கி இருந்துகொண்டு காங்கிரசார் கருப்பு கொடியுடன் ஓடிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதை கருத்தில் கொண்டு மெரினா கடற்கரையில் நாளை கூடுதல் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். மேலும் மெரினா கடற்கரையை நாளை காலை முதலே சீல் வைத்து தேவையில்லாதவர்கள் நடமாட் டத்தை தடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    மெரினா கடற்கரை திறந்தவெளி பகுதி என்பதால் நாளை மதியத்துக்கு பிறகு மக்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்த தீர்மானித்துள்ளனர்.

    நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • குதிரை சவாரி செய்வதற்காக குதிரை ஓட்டி ஒருவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தனர்.
    • திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னை:

    மெரினா கடற்கரையில் மணல்பரப்பில் குதிரை சவாரி செய்வதற்கு பலரும் விரும்புகிறார்கள்.

    அந்த வகையில் பெங்களூரில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர் சென்னைக்கு சுற்றுலா வந்த இடத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தனர். அப்போது அவர்கள் குதிரை சவாரி செய்வதற்காக குதிரை ஓட்டி ஒருவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் குதிரை எதிர்பாராதவிதமாக எட்டி உதைத்தது. இதில் எபிநேசர் என்ற சிறுவனின் முகத்தில் உதை விழுந்தது. அவனது மூக்கு மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    குதிரை ஓட்டியான அசோக்கை அழைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.

    • நிலவை பார்க்க வருபவர்களுக்கு வழக்கப்படி நிலாசோறாக எலுமிச்சை சாதம், புளியோதரை ஏதாவது வழங்கப்படும்.
    • நிலாச் சோறு நிகழ்ச்சி இன்று மாலையில் மெரீனா கடற் மணற்பரப்பில் பாரதியார் சிலை அருகே நடக்கிறது.

    சென்னை:

    நிலா நிலா ஓடிவா... நில்லாமல் ஓடிவா... என்று அம்மா பாடிக்கொண்டே இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு சோறு ஊட்டுவது காலம் காலமாக நம் மரபில் இருந்தது.

    அதே நிலாச்சோறு சாப்பிடுவது இன்று அறிவியல் பூர்வமாக புது பரிணாமத்துடன் வளர்ச்சி அடைந்துள்ளது. வருகிற 28-ந்தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி வித்தியாசமான முறையில் நிலாச் சோறு என்ற பெயரில் வானவியல் அறிவியலை மக்கள் மத்தியில் ஊட்டுவதற்கு சென்னை ஆஸ்ட்ரோ கிளப் உள்பட சில அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் இந்த நிலாச் சோறு நிகழ்ச்சி இன்று மாலையில் மெரீனா கடற் மணற்பரப்பில் பாரதியார் சிலை அருகே நடக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி அஸ்ட்ரோ கிளப் பொதுச் செயலாளர் உதயன் கூறியதாவது:-

    வானியல் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கான ஏற்பாடுதான் இது. முதல்கட்டமாக சென்னையில் 16 இடங்களில் நடத்தப்படுகிறது. இன்று மெரினாவிலும், கிண்டியிலும் நடக்கிறது. நாளை சில பள்ளிகளில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடக்கிறது.

    பள்ளிக்குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லா தரப்பினரும் குடும்பம் குடும்பமாக வரலாம். கடற்கரையில் 4 தொலைநோக்கிகள் வைக்கப்பட்டிருக்கும். வெறும் கண்களால் பார்த்த நிலவை தொலைநோக்கி வழியாக அருகில் பார்த்து ரசிக்கலாம்.

    நிலவை பார்க்க வருபவர்களுக்கு வழக்கப்படி நிலாசோறாக எலுமிச்சை சாதம், புளியோதரை ஏதாவது வழங்கப்படும். கலந்துகொள்பவர்கள் அவர்களாகவும் எடுத்து வரலாம். இது ஒரு மக்கள் அறிவியல் திருவிழா.

    சென்னை முழுவதும் 200 இடங்களில் நடத்தப்படுகிறது. நிறைவு நாளான 28-ந்தேதி கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தின் மேல் தளத்தில் திறந்தவெளியில் நிகழ்ச்சி நடக்கிறது. எங்கெங்கு நடைபெறுகிறது என்ற விபரங்களை அறிய 9444453588 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    • பிரமாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
    • கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் விசாலமான பாலம் கட்டப்படுகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்தார்.

    அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.

    இந்த பிரமாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நேற்று நடைபெற்றது.

    இந்த பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அவரது சிந்தனைகள் எழுத்தோவியங்கள், இலக்கியம், கதை வசனம், அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நவீன ஒளி படங்களும் அருங்காட்சியகமாக அந்த நினைவிடத்தில் அமைய உள்ளது.

    2 ஆயிரம் சதுர மீட்டர் பரபரப்பளவில் சுரங்க அறையுடன் உருவாகும் இந்த கண்காட்சி ரூ.80 லட்சம் செலவில் கட்ட பரிந்துரைக்கப்பட்டடு உள்ளது.

    ஆரம்பத்தில் 40 சென்ட் நிலத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இப்போது அதை 160 சென்ட் நிலத்தில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

    நினைவிடத்தின் ஒரு பகுதியில் நூலகங்கள், டிஜிட்டல் முறையிலான காட்சியங்கள், ஒலி-ஒளி அமைப்புகள், வண்ண ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற உள்ளன.

    கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் விசாலமான பாலம் கட்டப்படுகிறது.

    இதற்காக கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்து உள்ளனர்.

    பாலத்தின் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டர், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படுகிறது. கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பினாலான இந்த கண்ணாடி பாலம் அமைய உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    தமிழ் மொழியையும் தமிழகத்தையும் போற்றும் வாசகங்கள் பிரதிபலிக்கும் வகையில் லேசர் விளக்குகளை பொருத்தவும் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நினைவிடங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு கருணாநிதியின் நினைவிட பகுதிகள் மிகவும் அழகுடனும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
    • கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெரினா கடலில் கருணாநிதி நினைவாக ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    42 மீட்டர் உயரத்தில் இந்த நினைவு சின்னம் அமைகிறது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து பாலம் வரை 6 மீட்டர் உயரத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது. நிலப்பரப்புக்கு மேல் 290 மீட்டரும், கடல் பரப்புக்கு மேல் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இந்த பாலம் அமைகிறது.

    இந்த பாலத்தின் அகலம் 9 மீட்டர் ஆகும். இதில் 2 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலமும் உள்ளது.

    மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் முதலாவதாக திருவல்லிக்கேணியை சேர்ந்த கல்யாணராமன் பேசினார். அவர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பது எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும். கருணாநிதி சமூக மாற்றங்களை கொண்டு வந்தார்.

    கார்கில் நினைவு சின்னம், போர் நினைவு சின்னம் போல வருங்கால தலைமுறையினர் கருணாநிதி பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுகிறது. இதை வரவேற்கிறேன்" என்றார்.

    சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த அருள் முருகன் பேசுகையில், "கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். எனவே இதை வேறு இடத்தில் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

    இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். கலெக்டரும், போலீசாரும் அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது முன் இருக்கையில் இருந்த சிலர் கருத்து தெரிவிப்பது அவரவர் உரிமை என்று வாக்குவாதம் செய்தனர். வாக்கு வாதம் காரணமாக கூட்டம் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

    பின்னர் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது கலெக்டர் அமிர்தஜோதி, "சுற்றுச் சூழல் தொடர்பாக மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். அரசியல் பேசகூடாது. கூட்டத்துக்கு ஒத்துழைப்பு தாருங்கள்" என்றார்.

    பின்னர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சங்கர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி விதிமுறைகளை பின்பற்றி நடக்கவில்லை" என்றார். இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பதை நான் வரவேற்கிறேன். இதை கண்டிப்பாக அமைக்க வேண்டும். மெரினா கடற்கரைக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்" என்றார்.

    அதற்கு கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர், "இங்கு அரசியல் பேசக்கூடாது. சுற்றுச்சூழல் பற்றி மட்டும்தான் பேச வேண்டும்" என்றனர்.

    நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பெருமாள் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்க கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

    நீலாங்கரையை சேர்ந்த பா.ஜனதா மீனவர் அணி தலைவர் முனுசாமி கூறுகையில், "மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்" என்று கூறி சில வார்த்தைகளை தெரிவித்தார்.

    இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை விலக்கிவிட்டனர். அப்போது கலெக்டர் அமிர்தஜோதி அவரிடம், "உங்களின் கோரிக்கைகளை எழுதி கொடுங்கள்" என்று கூறினார். பின்னர் போலீசார் பாதுகாப்புடன், முனுசாமியை கூட்டத்துக்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர்.

    அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர் பேசுகையில், மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைக்ககூடாது. பேனா நினைவு சின்னம் வைக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேண்டுமானால் அண்ணா அறிவாலயத்தில் பேனா நினைவு சின்னம் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். இதற்கும் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து கூட்டம் நடை பெற்றது.

    ×