search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்கழி திருவிழா"

    • மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதம்.
    • பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம்.

    மார்கழி மாதம் என்பது வழிபாடுகளுக்கும் பூஜைகளுக்கும் உரிய மாதம். வேறு எந்த நிகழ்வுகளிலும் கவனம் செலுத்தாமல், உரிய முறையில் காலையும் மாலையும் பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவது மிக உன்னதப் பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    மார்கழி மாதம் முழுவதுமே, பனியும் குளிரும் பரவிக்கிடக்கிற பிரம்ம முகூர்த்தத்தில், ஆண்டாளின் திருப்பாவை பாடி அனந்தனை, அரங்கனை, மாலோனை, மகாவிஷ்ணுவை வழிபடுவார்கள் பக்தர்கள். 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என கீதையில், கிருஷ்ணவதாரத்தில் தெரிவித்துள்ளார் பகவான். மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதம்.

    ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசி திதியில், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம். அதேசமயம், ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

    ஏகாதசி நன்னாளில், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதும் பெருமாளுக்கு உகந்த புளியோதரை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வதும் எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும்.

    இன்று விரதம் இருந்து மாலையில் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள். பாவங்களையெல்லாம் விலக்கித் தந்து, புண்ணியங்களையெல்லாம் போக்கி அருளுவார். மங்கல காரியங்களை நடத்தித் தந்தருளுவார். மங்காத செல்வம் தந்தருளுவார்.

    • பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.
    • பக்தர்கள் திருப்பாவை, பக்தி சொற்பொழிவு நடத்தினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் தற்போது திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி அய்யப்ப பக்தர்களும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.

    ஆரணி நகரில் சார்பனார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை திருப்பாவை உற்சவத்துடன் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் அமர்ந்து திருப்பாவை, பக்தி சொற்பொழிவு நடத்தினர்.

    இதேபோல் தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும், கொசப்பாளையம் பகுதியில் உள்ள கில்லா சீனிவாச பெருமாள் கோவிலிலும், அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும், ஆரணி - ஆற்காடு சாலை இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் மார்கழி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட சீனிவாச பெருமாள் கோவில், சிவன் கோவில், காந்திதெரு வாசவி மகாலில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரசக்தி விநாயகர் கோவில், சக்தி விநாயகர் கோவில், வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் முத்தாலம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில், அய்யப்பசேவா சங்கம், மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    • ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது.
    • சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    காலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதர்த்தினிஅம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

    கோவிலில் இருந்து எழுந்தருளிய சுவாமி-அம்பாள் தெற்கு ரத வீதி, மேற்குரத வீதி, நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக ராமதீர்த்தம், லட்சுமணதீர்த்தம் வரை ஊர்வலமாக வந்து அங்கிருந்து வர்த்தகன் தெரு, மார்க்கெட் தெரு, நகரின் பல முக்கிய பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு சுவாமி-அம்பாள் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு சாமி-அம்பாள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே பக்தர்களுக்கு நேரில் வந்து படி அளப்பதாக கூறப்படுகின்றது. அதுபோல் நேற்று சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து எழுந்தருளிய நிகழ்ச்சியை தொடர்ந்து 7 மணி முதல் 12.30 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 
    • தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். 

    மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழிவழியாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

    மார்கழி மாதத்தில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். மேலும் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

    மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமந்நாராயணனின் கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பனிரெண்டு நாமங்களும், பனிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் ஸ்ரீமந்நாராயணனின் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது. 

    மார்கழி மாதத்தில், பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். இது பாவை நோன்பு என்றும் அழைக்கப்பெறுகின்றது. பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்ந்து விரதத்தை கடைபிடிப்பார்கள்.

    திருவெம்பாவை நோன்பு: திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு தொடங்கி கடைபிடிக்கப்படும் நோன்பாகும். இந்த நோன்பு பாவை நோன்பு, கார்த்யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் போற்றப்படுகிறது.

    மார்கழி மாதத்தில் வைகுண்ட பதவி பெறும் வைகுண்ட ஏகாதசி வருகின்றது. இது வருடத்தில் முக்கிய ஏகாதசி என்பதால் வைகுண்ட ஏகாதசி வழிபட மறவாதீர்கள். மார்கழியில் வருகின்ற பாவை நோன்பு பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது.

    திருமொழி, திருப்பாவை, ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ வேண்டும். திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய திருவாதிரை நோன்பு சிவ விரதமாக போற்றப்படுகின்றன. திருவாதிரை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, பௌர்ணமி அன்று கடைபிடிக்கப்படும்.

    இன்றைய தினம் திருவாதிரை களி செய்து சிவபெருமானுக்கு படைத்து வழிபடுவார்கள். மாங்கல்ய பலம் பெற நோன்பு இருக்கும் பெண்கள் அன்றைய தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாராயணம் செய்வர். திருவாதிரை நட்சத்திரம் அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வார்கள்.

    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    மார்கழி மாதம் பிறந்தாலே வீடுகளில் பெண்கள் அதிகாலை நேரத்தில் எழுந்து அரிசியால் கோலமிடுவது வழக்கம். எறும்புகள் உள்ளிட்ட சிறு ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. மேலும் மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    நேற்று மார்கழி மாதம் பிறப்பையொட்டி ஏராளமான வீடுகளில் அதிகாலையில் பெண்கள் வண்ண கோலமிட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பாடப்பெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மடப்புரம், தாயமங்கலம், கொல்லங்குடி, பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காரைக்குடி நகர சிவன் கோவிலில் நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டியும், அஷ்டமி தினத்தையொட்டி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மீனாட்சிசுந்தரேசுவரர், மீனாட்சி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து செஞ்சை, மேலமடம், கொப்புடையம்மன் கோவில் உள்ளிட்ட பகுதியில் வீதி உலா வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்கு படியளந்த அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    காரைக்குடி டி.டி.நகர் கற்பகவிநாயகர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் வெள்ளி அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செட்டிகுறிச்சி செல்வ விநாயகர் கோவில், புழுதிபட்டி சத்திரம் பால தண்டாயுதபாணி கோவில், புழுதிபட்டி வில்லி விநாயகர், கரிசல்பட்டி கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவில், இரணிபட்டியில் உள்ள பழனி தண்டாயுதபாணி கோவில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோவில், ஞானியார் மடம் தண்டாயுதபாணி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மார்கழி பிறப்பு இன்று தொடங்கி ஜனவரி 14-ந்தேதி முடிகிறது.
    • ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    தமிழ் மாதமான மார்கழி பிறப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். ஆனால் மார்கழி மாத்தில் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

    இன்று மார்கழி பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.

    பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாரா தனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும். இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆரூத்திரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15-ந் தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.

    • இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும்.
    • மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.

    இறையருள் பெறுவதில் சிறந்ததாக மார்கழி மாதம் இருக்கிறது. 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ணர் கூறுவதில் இருந்தே அதன் சிறப்பை நாம் உணரலாம்.

    சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால், ஜோதிட சாஸ்திரம் இந்த மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது.

    இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் சகல சைவ, வைணவ ஆலயங்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே வழிபாடுகள் நடத்தப்படும். மேள,தாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாராயணம் செய்யப்படும். பக்தர்கள் பலரும் அதிகாலையில் எழுந்து நீராடி, வாசல்களில் அழகிய வண்ணக் கோலங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    ஒரு நாளுக்கு 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களுக்கான இந்த கணக்கின்படி, ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி மாதம் வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகல் நேரம் ஆகும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் இரவு நேரம் ஆகும். இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது மார்கழி மாதம் என்று சொல்லப்படுகிறது.

    நமக்கு மார்கழி மாதம் என்பது, தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிப்பதாகும். சூரிய உதயத்துக்கு முன்பு வரும் இது 'பிரம்ம முகூர்த்தம்' என்று அழைக்கப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில் தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் வெளிப்பட்ட விஷத்தை, சிவன் உண்டு உலக ஜீவராசிகளை காப்பாற்றியதும் ஒரு மார்கழி மாதத்தில்தான் என்கிறது, புராணங்கள்.

    இந்திரனால் பெருமழை வெள்ளமாக உருவாக்கப்பட்டு, கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் மார்கழி மாதமே. எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருப்பாவையால் திருமாலின் திருவடியைத் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான்.

    தேவர்களின் அதிகாலைப் பொழுதான இந்த நேரத்தில்தான், சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் செய்கிறார். சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக, மிக விசேஷமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறி இருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    நோன்புக்கு புலனடக்கம் அவசியம். நமது நாட்டில் மழை, குளிர் காலங்களில் தான் பெரும்பாலும் விரத நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவர்களின் பகல் காலமான தை முதல் ஆனி மாதம் வரை சுப காரியங்கள், அதாவது விவாகப் பேச்சுகள், திருமணங்கள் நடத்துகிறோம்.

    தேவர்களின் இரவு காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் விரதம், தியானம் முதலியவற்றைச் செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டு நிகழ்வுகள் இந்த கால கட்டத்தில் நடைபெறுகின்றன.

    • நாளை தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை.
    • நாளை அதிகாலை 3.30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாத அஷ்டமியன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமி நேரடியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நாளை(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறுகிறது. காலை 4.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்று தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    காலை 7 மணிக்கு ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பக்தர்களுக்கு படி அளப்பதற்காக எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கோவிலில் இருந்து எழுந்தருளும் சுவாமி-அம்பாள் வர்த்தகன் தெரு, நடுத்தெரு, ராமதீர்த்தம், லட்சுமணத்தீர்த்தம் உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மீண்டும் பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.

    சுவாமிஅம்பாள் அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த நடைமுறை மார்கழி மாதம் 30 நாளும் பொருந்தும்.
    • நாளை முதல் ஜனவரி 14-ந்தேதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மார்கழி மாதப்பிறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் கோவிலின் உப கோவில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த நடைமுறை மார்கழி மாதம் 30 நாளும் பொருந்தும். அதாவது நாளை முதல் அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

    • ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    தமிழ் மாதமான மார்கழி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிறந்து, அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கின்றது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    வருகிற ஜனவரி 1-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15-ந் தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 17-ந்தேதியில் இருந்து ஜனவரி 14-ந்தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஜனவரி 2-ம்தேதி வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 17-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் தொடங்குகிறது. அன்று மாலை முதலே கோவிலில் மார்கழி மாத கைங்கர்யம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து தினமும் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6 மணி வரை பக்தர்களுக்கு மார்கழி மாத தரிசனம் வழங்கப்படுகிறது. காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை நித்ய கல்யாண உற்சவம் நடக்கிறது. மார்கழி மாத வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை மார்கழி மாத கைங்கர்யம், மூலவர்களுக்கு அபிஷேகம், காலை 9.15 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி மாதம் 2-ம்தேதி அதிகாலையில் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக இலவச தரிசன பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜனவரி 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் 10 நாட்கள் நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28 -ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜனவரி) 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, மெல்லிசை கச்சேரி, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் 5-ந் தேதி தேரோட்டமும், அன்று நள்ளிரவு சப்தா வர்ண நிகழ்ச்சியும், 6-ந் தேதி மார்கழி திருவாதிரையையொட்டி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.

    இந்த திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நேற்று காலை 8 மணிக்கு தாணுமாலய சாமி சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே நடந்தது. நிகழ்ச்சியில் மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு பந்தல் கால் நாட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண்மடம் நித்திய காரிய யோகஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    ×