search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    மகிழ்ச்சி தரும் மார்கழி மாதமும்.. விரதமும்...
    X

    மகிழ்ச்சி தரும் மார்கழி மாதமும்.. விரதமும்...

    • இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும்.
    • மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.

    இறையருள் பெறுவதில் சிறந்ததாக மார்கழி மாதம் இருக்கிறது. 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ணர் கூறுவதில் இருந்தே அதன் சிறப்பை நாம் உணரலாம்.

    சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால், ஜோதிட சாஸ்திரம் இந்த மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது.

    இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் சகல சைவ, வைணவ ஆலயங்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே வழிபாடுகள் நடத்தப்படும். மேள,தாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாராயணம் செய்யப்படும். பக்தர்கள் பலரும் அதிகாலையில் எழுந்து நீராடி, வாசல்களில் அழகிய வண்ணக் கோலங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    ஒரு நாளுக்கு 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களுக்கான இந்த கணக்கின்படி, ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி மாதம் வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகல் நேரம் ஆகும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் இரவு நேரம் ஆகும். இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது மார்கழி மாதம் என்று சொல்லப்படுகிறது.

    நமக்கு மார்கழி மாதம் என்பது, தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிப்பதாகும். சூரிய உதயத்துக்கு முன்பு வரும் இது 'பிரம்ம முகூர்த்தம்' என்று அழைக்கப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில் தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் வெளிப்பட்ட விஷத்தை, சிவன் உண்டு உலக ஜீவராசிகளை காப்பாற்றியதும் ஒரு மார்கழி மாதத்தில்தான் என்கிறது, புராணங்கள்.

    இந்திரனால் பெருமழை வெள்ளமாக உருவாக்கப்பட்டு, கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் மார்கழி மாதமே. எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருப்பாவையால் திருமாலின் திருவடியைத் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான்.

    தேவர்களின் அதிகாலைப் பொழுதான இந்த நேரத்தில்தான், சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் செய்கிறார். சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக, மிக விசேஷமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறி இருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    நோன்புக்கு புலனடக்கம் அவசியம். நமது நாட்டில் மழை, குளிர் காலங்களில் தான் பெரும்பாலும் விரத நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவர்களின் பகல் காலமான தை முதல் ஆனி மாதம் வரை சுப காரியங்கள், அதாவது விவாகப் பேச்சுகள், திருமணங்கள் நடத்துகிறோம்.

    தேவர்களின் இரவு காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் விரதம், தியானம் முதலியவற்றைச் செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டு நிகழ்வுகள் இந்த கால கட்டத்தில் நடைபெறுகின்றன.

    Next Story
    ×