search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறைமுகம்"

    • ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.
    • கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் மூலம் ஏராளமான உணவு பொருட்களும் மற்றும் பல்வேறு பொருட்களும் கொண்டு வரப்படுகிறது. அவைகளை நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் தினசரி குடோன்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது.

    இதில் கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும், இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவியாக இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

    இந்நிலையில் ரஷியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் டன் பொட்டாஷ் உரத்தை பல்வேறு குடோன்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.

    இதனை முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் பறிமுதல் செய்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் -இன்ஸ்பெக்டர் சுந்தர் மகாராஜன், தனிப்பிரிவு காவலர்கள் ஜான்சன், செல்வின் ராஜா, மற்றும் அருணாச்சலம் உள்ளிட்ட போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மாதவன், மதியழகன் ஆகிய 2 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி டி.எஸ்.பி. சத்யராஜ் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றார். இதற்கிடையே கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும்.
    • 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயலானது நாளை மே 11 ம் தேதி காலை கடுமையான சூறாவாளி புயலாக மாறும் எனவும் இது பங்களாதேஷ் மியான்மர் இடையை மே 14 ம் தேதி கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து தூரத்தில் புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் நாகை, காரைக்கால், சென்னை, கடலூர், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது.
    • மார்ச் மாதத்தில் துறைமுகம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தரங்கம்பாடியில் மீனவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 192 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மீனவா்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க 1070 மீட்டா் தொலைவு, 15 அடி உயரம், 6 மீட்டா் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் தானே புயல், மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் உள்வாங்கி சேதமடைந்தது.

    கருங்கற்களால் ஆன தடுப்புச் சுவா் மற்றும் கான்கிரீட் பாதையில் கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது.

    இதில், அந்த தூண்டில் வளைவு தடுப்புச் சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றார்.

    மேலும் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வும், துறைமுகத்தில் கண்கா ணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டு மென்றும்,கட்டுமானப் பணிகளை தரமாக செய்யவேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

    மார்ச் மாதத்தில் துறைமுகம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என நிருபர்களிடம் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, தலைமை பொறியாளர் ராஜூவ், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி, செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல்
    • வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் மீட்டனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த வர் லூக்காஸ் (வயது 44). இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவர் வழக்கம்போல் கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். படகை லூக்காஸ் ஓட்டினார்.

    அவருடன் தூத்துக் குடியை சேர்ந்த 2 பேர், கொல்லம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த தலா ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 5 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 3 பேருமாக 13 மீன் பிடித்தொழிலாளர்கள் சென்றனர். இவர்களது விசைப்படகு நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதி 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது.

    அப்போது எதிர்ப்பாரா மல் திடீரென கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் படகு உடைந்து உள்ளே கடல் நீர் புகுந்தது. செய்வதறியாது தவித்த மீனவர்கள் படகில் புகுந்த நீரை இறைத்து வெளியேற்றினர். அப்போதும் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் மீனவர் லூக்காஸ் படகை அருகில் கரை சேர்க்க இயக்கினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் படகு எதிர் திசையில் அடித்து சென்றது. படகை கட்டுப்படுத்த முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.பின்னர் 8 நாட்டிக்கல் தூரம் அடித்து சென்றபின் படகு கட்டுக்குள் வந்தது. அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகை லூக்காஸ் உதவிக்கு அழைத்தார். உதவிக்கு வந்த பைபர் படகில் மீனவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்தனர்.

    நேற்று காலை லூக்காஸ் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்தார். ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். உடனே வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லூக்காஸ் படகு நோக்கி விரைந்து சென்றனர். பல மணிநேரம் சென்ற மேற்படி வள்ளங்கள், விசைப்படகு லூக்காஸ் படகை அடைந்தது. பின்னர் அவர்கள் பைபர் படகில் இருந்த 12 மீனவர்கள், உடைந்த லூக்காஸ் விசைப்படகையும் மீட்டு கரை நோக்கி விரைந்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் மீனவர்கள் அனைவரும் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பத்திரமாக கரை சேர்ந்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கரையின் இருபுறமும் தூண்டில் வளைவுடன் கூடிய கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தரவேண்டும்.
    • ஏரியில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியில் ஒரு தரப்பு மீனவர்கள் அங்குள்ள உப்பங்கழி ஏரியிலும், மற்றொரு தரப்பினர் கடலிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    சுனாமிக்கு பின்னர் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் மாற்றம் காரணமாக ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்டு வரும் மணல் திட்டு குன்றுகளால் அவ்வழியாக படகுகள் கடலுக்குச் செல்லும் பொழுது தரை தட்டி பழுது ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

    இதையடுத்து முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கரையின் இருபுறமும் தூண்டில் வளைவுடன் கூடிய கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தரவேண்டும், கடலுக்கு எளிதாக செல்லவும் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏற்ப மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்றும் மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை தமிழக அரசு கோரி இருந்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்பட உள்ள மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய கடல் வளம், கடல் சார் பொறியியல் நிறுவன இயக்குனர் வெங்கட் பிரசாத் தலைமையிலான, தமிழக மீன்வளத்துறை தலைமை பொறியாளர் ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட திட்ட மதிப்பீட்டு குழுவினர் பழவேற்காடுக்கு ஆய்வு செய்யவந்தனர்.

    அவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஏரியில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, மீன்பிடி துறைமுகத்தை அமைத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் மண்ணால் ஏரி அடைப்படும் என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் கலெக்டர் தலைமையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடங்களை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது கடலில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் மேம்பட மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என மத்திய குழுவினரிடம் வலியுறுத்தினர்.

    இது குறித்து மத்திய குழு அதிகாரிகள் கூறும்போது, மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக முதற்கட்ட திட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச் சூழலுக்கும் மீனவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    • மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    • மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதனால் 16 கிராம மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ரூ.148 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக அமைக்கப்படாததால் துறைமுகத்தின் உள்ளே படகு தளத்தில் படகுகளை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    அருகில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது.

    கடல் சீற்றம் மேலும் அதிகரித்தால் படகுகள் பாதிக்கும் நிலை ஏற்படும்.இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே பூம்புகார் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென பூம்புகார் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வானிலை எச்சரிக்கை காரணமாக கடலுக்குச் செல்லவில்லை
    • குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 300 விசை படகுகள், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசை ப்படகுகள் ஆழ் கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

    இந்த நிலையில் மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதி யில் 40 கி.மீ.முதல் 50 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், இது அதிகரித்து 60 கி.மீ.வரை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை.

    அவை குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.மேற்கு கடற்கரை பகுதியில் காற்று எச்சரிக்கை விடுக்கப்படா ததால் சில படகுகள் குமரி மேற்கு கடற்கரை பகுதிக்கு சென்று தொழில் செய்து வருகின்றன.

    இது தவிர காற்று எச்சரிக்கை காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாது காப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.

    இதனால் குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.

    • தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது.
    • மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் ஏற்பட்டு ள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண மாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்ட லம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலை விலும் காரை க்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இதன் காரணமாக நாகப்பட்டினம், காரை க்கால், சென்னை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடல் சீற்றமாக காணப்படு வதால் மீன்வளத் துறையில் எச்சரிக்கை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
    • மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

    கடலூர்:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் மீன் வரத்து மிக மிக குறைந்த காரணத்தினால் மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலையில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு பொது மக்கள் இல்லாததால் வெறி ச்சோடி காணப்பட்டது. மேலும் குறைந்த அளவு இருந்த மீன்களும் சரியான முறையில் விற்பனையாகாததால் மீன் வியாபாரிகள் சோக த்துடன் காணப்பட்டனர். மேலும் மீன்வரத்து குறைவானதால் தற்போது இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது.

    • காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
    • மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத்தில் இருந்து சுமார் 300 விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் 45 கி.மீ.முதல் 55 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், 11 மற்றும் 12-ந் தேதிகளில் 65 கி.மீ. அளவிற்கு வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த தகவல் குமரி மாவட்ட அனைத்து கட லோர மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்றும் பெரும்பாலான விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன. இவற்றுள் குறை வான மீன்களே கிடைத்தன.குளச்சலில் நேற்று மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • அவரவர் கிராமங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங்களில் இருந்தும் பாதுகாப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தொடர்ந்து கடல் அலை சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் துறைமுக முகத்துவாரத்தினை கடந்து செல்லும் படகுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 3 மாதங்களில் மீன்பிடித்துறைமுக முகத்து வாரத்தில் கடல் அலை சீற்றத்தால் படகுகளுக்கும் மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஆய்வு செய்ததில் எந்திரம் பொருத்திய வள்ளங்களும், எத்திரம் பொருத்தாத கட்டுமரங்களும் பாதிப்பு அடைந்து வருவது தெரி கிறது. இதனை கருத்தில் கொண்டு தற்பொ ழுது மீன்பிடிப்பு மற் றும் மீன்விற்பனை தொடர் பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூல மாக அறிவிப்பு வழங்கப்பட் டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தேங்காப்பட்டணம் முகத்துவாரத்தில் கடல் அலை சீற்றத்தின் பாதிப்பு உள்ளதாலும், பராமரிப்பு பணிகள் முடியும் வரை துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை.

    எனவே எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் அவரவர் கிரா மங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங் களில் இருந்தும் பாது காப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

    ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் விசைப்படகுகள், வானிலை எச்சரிக்கை காலங்கள் தவிர இதர நாட்களில் உரிய மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடி தொழில் மேற் கொள்ளலாம். மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் படகு களின் பாதுகாப்பை கருத் தில் கொண்டு அறிவிக் கப்பட்டுள்ள வழிமுறைகளை அனைத்து படகு உரிமையாளர்களும், துறைமுக பயனீட்டாளர்களும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • 29 உயிரிழப்புகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து உள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
    • ரூ.245 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியா வது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு இதுவரையிலும் 29 உயிரிழப்புகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து உள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    எனவே மீன்பிடித்துறை முகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.245 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    பணிகள் தொடங்கும் முன்பு பலி எண்ணிக்கை அதிகரித்ததால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரி களிடம் மீன்பிடி த்துறைமுக கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்ப ட்டது. அதன்படி கடந்த 1-ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதற்கிடையில் வெளியூரில் மீன்பிடிக்க சென்ற விசைப்ப டகுகள் மீன்களை இறக்க முடியாமல் துறைமுக முகத்து வாரத்தில் நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

    குறிப் பாக 9 விசை படகுகளில் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த விசைப்படகுளில் இருந்த மீன்கள் துறைமுகத்தில் இறக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் மறு அறிவிப்பு வரும் வரையிலும் துறை முகம் மூடுவதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அங்கு விளம்பர பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டது.

    ஆனாலும் சிறு வள்ளங்களில் மீன் பிடிக்க அப்பகுதி மீனவர்கள் சென்று வந்தனர். இதற்கிடை யில் நேற்று ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சுமார் 40 -க்கும் அதிகமான படகுகள் தேங்காப்பட்டணம் துறை முகம் வந்தன. அதில் சில படகுகள் நேற்று அரசு உத்தரவையும் மீறி துறைமுகத்தை திறந்து உள்ளே மீன் இறக்கி விற்பனை செய்துள்ளனர்.

    இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி மீன் இறக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிலை தொடர்ந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், தொடர் போரா ட்டத்தின் விளைவாகத்தான் மறு சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை மீன்பிடி துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதற்கிடை யில் கேரளா வுக்கு மீன்பிடிக்க சென்ற விசை படகுகளில் மீன்களை கொண்டு வந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் இறக்கியுள்ளனர். இதனை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

    அதே நேரம் கரமடி வள்ளத்தில் மீன்பிடிக்கும் சாதாரண மீனவர்களின் மீன்களை துறைமுகத்தில் அனுமதிக்காத நிலை உள்ளது.

    குறிப்பாக இனயம் மண்டலம் மீனவர்கள் சென்ற போது மீன் விற்க விடாமல் விரட்டியுள்ளனர். இது தொடர்பாக மீன்வள த்துறை நடவடிக்கை எடுக்குமா?துறைமுகம் முகத்துவாரத்தில் நாளை எதாவது விபத்தோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் பொறுப்பே ற்பார்களா?

    குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மீன் விற்க அனுமதிக்கப்படுவது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    ×