search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழவேற்காடு ஏரி"

    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
    • திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி பொருட்களால் அப்பகுதியில் மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரியாகும். ஏரியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

    கோட்டைக்குப்பம் பகுதி மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கன்னியம்மன் திட்டில் மீன்பிடி உபகரணங்கள், வலைகள், பிளாஸ்டிக்

    தடுப்பு, கம்பு, இறால் வலை ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் மீன்பிடி வலைகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து அருகில் உள்ளவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு விரைந்தனர். அவர்கள் ஏரி தண்ணீர் மற்றும் மணலை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் எரிந்து கருகி நாசமான பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் யாராவது தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர். திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி பொருட்களால் அப்பகுதியில் மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலய பகுதியில் பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, கடல் பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் பறவைகள் என 126 வகையான பறவை இனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழவேற்காடு பகுதியில் உள்ள அண்ணாமலைச்சேரியில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் ஏரியின் மையப்பகுதியில், உல்லான் பறவைகள், ஊசி வால் வாத்து, நாரை உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக இறந்தன. பறவைகளின் உடல்கள் அழுகிய நிலையில் சிதறி கிடந்தன.

    இதையடுத்து பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு, இறந்து கிடந்த பறவைகளை சேகரித்தனர். பின்னர் இறந்த பறவைகளை கால்நடை மருத்துவ குழுவினர் நாமக்கல்லில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோ தனைக்கு அனுப்பினர்.

    இறந்து போன பறவைகளுக்கு லோ பெத்தொஜெனிக் ஏவியன் இன்புளூயன்சா எனப்படும் பறவை காய்ச்சல், ராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் மற்றும் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஆகியவை இருக்கலாமா என்று பரிசோதிக்கப்பட்டது. ஆனால் சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் இறந்த பறவைகளின் உடலில் எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் இ-கோலி பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் வாழ்கிறது. இந்த பாக்டீரியாக்கள் மலம் மூலம் வெளியேற்றப்படுகிறது. பழவேற்காடு ஏரியில் கழிவுகள் கலப்பதால் இந்த பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து பறவைகளை தாக்கி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.

    இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவு கள் இந்த வார இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே பழவேற்காடு ஏரியில் பறவைகள் இறந்ததற்கான காரணங்கள் தெரியவரும்.

    • ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.
    • பழவேற்காடு தீவு பகுதி மக்களுக்கு இதுவே சோதனையாக மாறி விடுகிறது.

    பழவேற்காடு ஏரி சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திர பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது.

    வடக்கே ஸ்வரணமுகி ஆறும், வட மேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.

    பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சார்ந்த பறவைகளுக்கான ஆதரவு பணிகளைப் பார்த்து வருகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது.

    இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது. ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது.

    பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இந்த ஏரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் வகையில் உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ ஆகவும் வேறுபடும்.

    வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.

    இந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது.

    கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. இந்த ஏரிநீரில் கடல்நீரின் தன்மை ஆண்டின் சில பருவங்களில் மிக குறைவாக இருக்கும், சில பருவங்களில் அதிகரித்தும் இருக்கும்.

    இந்த மாறி கொண்டிருக்கும் தன்மையே இங்கு இருக்கும் நீர்வாழ் உயிரினங்களின் தன்மையையும் உருவாக்குகிறது. ஆனால் பழவேற்காடு தீவு பகுதி மக்களுக்கு இதுவே சோதனையாக மாறி விடுகிறது.

    மழை இல்லாத காலங்களில் பழவேற்காடு தீவு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வடகிழக்கு பருவ மழையின் போது அதிகளவு மழை பெய்யும் என்பதால் அவர்கள் தீவில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

    பழவேற்காடு தீவில் மொத்தம் 5 கிராமங்கள் உள்ளன. சாத்தான்குப்பம், எடமணி, எடமணி காலனி, ரகமத் நகர், பசியாவரம் ஆகிய 5 கிராமங்கள் கொண்ட அந்த தீவில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். 2 தொடக்கப் பள்ளிக்கூடங்கள் அங்கு உள்ளன.

    வழிபாட்டு தலங்கள், சாலைகள் எல்லாம் இருந்த போதிலும் அத்தியாவசிய தேவையான மருத்துவமனை அங்கு கிடையாது. இதனால் பழவேற்காடு தீவில் உள்ள 5 கிராம மக்களும் அத்தியாவசிய மருத்துவ சேவை மற்றும் பொருட்களுக்காக வெளியில்தான் வரவேண்டும்.

    பொதுவாக நவம்பர் மாதம் தீவை சுற்றி தண்ணீர் அதிகரிக்கும். அப்போது ஏரியில் இருந்து வெளியில் வருவது மிகவும் சிரமம். இதை கருத்தில் கொண்டு பழவேற்காடு ஏரியில் பிரமாண்டமான பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. சென்னை சாலையை இணைக்கும் வகையில் அந்த பாலத்தை கட்ட வரையறுக்கப்பட்டது.

    ஆனால் சுற்றுச்சூழல் காரணமாக பாலம் கட்டுவது நீண்ட நாட்களாக தடைபட்டு வந்தது. கடலோர ஒழுங்குப்படுத்தும் கழகத்தின் உத்தரவு கடந்த 2018-ம் ஆண்டு கிடைத்த பிறகு பாலம் கட்டுவதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால் 2022-ம் ஆண்டுதான் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.

    சுனாமி மறுவாழ்வு திட்டத்தின்கீழ் அங்கு பாலம் கட்ட தமிழக அரசு ரூ.15 கோடி வழங்கி உள்ளது. ஆனால் நாளடைவில் திட்ட செலவு அதிகரித்தது. 432 மீட்டர் நீளத்துக்கும் சுமார் 9 மீட்டர் அகலம் கொண்ட அந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணிகள் மிகவும் மெல்ல நடக்கின்றன. இதன் காரணமாக பழவேற்காடு ஏரி தீவு மக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகிறார்கள்.

    வருகிற நாட்களில் அதிக மழை பெய்து தண்ணீர் பெருகி விட்டால் தீவு பகுதியில் உள்ள 5 கிராம மக்களும் வெளியில் வர முடியாமல் தவிக்க நேரிடும். ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது 5 கிராம மக்களும் சுமார் 2 வாரங்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்க நேரிட்டது.

    பாலம் கட்டும் பணி காரணமாக ஏற்கனவே மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 மாதங்களாக அந்த பாலம் கட்டும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.

    எனவே பழவேற்காடு பகுதி தீவு மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் அந்த பாலத்தை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.
    • பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.

    இங்கு 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள்,இறால்,நண்டுகள், பிடிபட்டு வருகிறது. பழவேற்காடு மீனுக்கு என்று தனி மவுசு உண்டு. பெரும்பாலும் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக விற்பனைக்கு கரைக்குகொண்டு வரப்படுவதால் ஐஸ்கட்டிகளில் பதப்படுத்தாமல் உடனடியாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் பழவேற்காடு மீன்களை வாங்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால் பழவேற்காட்டில் மீன்விற்பனை களைகட்டி காணப்படுகிறது.

    மேலும் பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு. இதனால் இங்குள்ள நண்டு, இறால்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஏரியில் பிடிக்கப்படும் நண்டுகள் சணல் மூலம் உயிருடன் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டு நண்டு மிகவும் பெயர் போனவை. ஒரு நண்டு 50 கிராம் முதல் 11/2 கிலோவிற்கு மேல் இருக்கும்.

    பழவேற்காடு நண்டுக்கு தற்போது மவுசு மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பழவேற்காடு பகுதிக்கு வந்து தங்களுக்கு பிடித்தமான பெரிய நண்டுகளை வாங்கி செல்கிறார்கள். ஒரு கிேலா நண்டு ரூ.400 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.

    ஒரு கிலோவுக்கு மேல் உள்ள நண்டு ரூ.2 ஆயிரத்து 200 வரை விலை போகிறது.

    இதுகுறித்து நண்டு வியாபாரி ராஜா, சங்கீதா ஆகியோர் கூறும்போது, பழவேற்காடு நண்டுக்கு என தனி சுவை உண்டு. இதனால் இங்கு பிடிபடும் நண்டுகளை அதிகம் பேர் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இப்போது பழவேற்காடு நண்டுகளை வாங்க அதிகாமானோர் வந்து செல்கிறார்கள். நண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் நாள்பட்ட சளி குறையும்.ஒரு நண்டு ஒரு கிலோவிற்கு மேல் இருந்தால் கிலோ 2200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. பெரியவகை நண்டுகளின் கொடுக்குகளை அதன் உடம்புடன் சனலை வைத்து கட்டி விற்பனை செய்யப்படுகின்றன. இவை மிகவும் ஆபத்தானது. விரலை கடித்தால் துண்டாகி விடும் ஆபத்து உள்ளது. பழக்கம் உள்ளவர்கள் இதனை எளிதில் கையாள முடியும் என்றனர்.

    • படகு சவாரி முடித்து கரைக்கு திரும்பியவுடன் அவர்களுக்கு சுவையான உணவு வழங்குகிறார்கள்.
    • ஏரியை ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாராவிட்டால் ஏரி முற்றிலும் அழிந்து விடும் என்று மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பழவேற்காட்டில் புலிகாட் ஏரி உள்ளது. இந்த ஏரி 15367 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. அதில் 300 ஹெக்டேர் தமிழ்நாட்டிலும், மீதமுள்ள பகுதிகள் ஆந்திராவிலும் உள்ளது.

    இந்த ஏரியை சுற்றியுள்ள 13 கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். நகர்ப்புற பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் இந்த ஏரியின் பரப்பளவு பாதியாக குறைந்து விட்டது.இதனால் இந்த ஏரியில் தற்போது மீன் பிடிப்பதும் குறைந்துவிட்டது. இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் அதிக அளவில் மீன்கள் சிக்குவதில்லை.

    எனவே இங்குள்ள மீனவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும், குடும்பத்தை நடத்துவதற்காகவும் இந்த ஏரியை சுற்றுலா பகுதியாக மாற்றி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக படகு சவாரி அழைத்து செல்கிறார்கள். 2 மணி நேர படகு சவாரிக்கு ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    படகு சவாரி முடித்து கரைக்கு திரும்பியவுடன் அவர்களுக்கு சுவையான உணவு வழங்குகிறார்கள். சுற்றுலா பயணிகள் இரவில் கடற்கரை பகுதியில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக தார்ப்பாய் மூலம் கூடாரம் அமைத்து கொடுக்கிறார்கள்.

    மேலும் இங்கு குளிர் காய நெருப்பு மூட்டியும் கொடுக்கிறார்கள். இதற்கு குறிப்பிட்ட கட்டணம் என்பதில்லை. பேரம் பேசி பணம் கொடுக்கலாம். சுற்றுலா பயணிகளும் இதை அற்புதமான அனுபவமாக உணருகிறார்கள்.

    மேலும் இந்த ஏரியின் அழகை படம்பிடிக்க விரும்பும் புகைப்பட கலைஞர்களும் இங்கு படகில் சென்று ஏரியின் அழகை படம் பிடிக்கிறார்கள்.

    இந்த ஏரியின் முகத்துவாரத்தை தூர்வார தமிழக அரசு சிறிதளவு நிதி ஒதுக்கி உள்ள நிலையில், ஆந்திர அரசு ரூ.128 கோடி செலவில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஏரியை தூர்வார திட்டமிட்டு உள்ளது. இங்கு தமிழகம் தரப்பில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த ரூ.3.5 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏரியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மீன் பிடித்தபோது மீனவர்கள் ரூ.1 லட்சம் வரை சம்பாதித்தார்கள். இப்போது ரூ.10 ஆயிரம் கிடைத்தாலே பெரிய விஷயம் என்கிறார்கள். இதனாலேயே மீனவர்கள் சுற்றுலா பயணிகள் மூலம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர்.

    இந்த ஏரியை ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாராவிட்டால் ஏரி முற்றிலும் அழிந்து விடும் என்று மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கரையின் இருபுறமும் தூண்டில் வளைவுடன் கூடிய கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தரவேண்டும்.
    • ஏரியில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியில் ஒரு தரப்பு மீனவர்கள் அங்குள்ள உப்பங்கழி ஏரியிலும், மற்றொரு தரப்பினர் கடலிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    சுனாமிக்கு பின்னர் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் மாற்றம் காரணமாக ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்டு வரும் மணல் திட்டு குன்றுகளால் அவ்வழியாக படகுகள் கடலுக்குச் செல்லும் பொழுது தரை தட்டி பழுது ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

    இதையடுத்து முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கரையின் இருபுறமும் தூண்டில் வளைவுடன் கூடிய கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தரவேண்டும், கடலுக்கு எளிதாக செல்லவும் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏற்ப மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்றும் மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை தமிழக அரசு கோரி இருந்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்பட உள்ள மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய கடல் வளம், கடல் சார் பொறியியல் நிறுவன இயக்குனர் வெங்கட் பிரசாத் தலைமையிலான, தமிழக மீன்வளத்துறை தலைமை பொறியாளர் ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட திட்ட மதிப்பீட்டு குழுவினர் பழவேற்காடுக்கு ஆய்வு செய்யவந்தனர்.

    அவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஏரியில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, மீன்பிடி துறைமுகத்தை அமைத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் மண்ணால் ஏரி அடைப்படும் என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் கலெக்டர் தலைமையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடங்களை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது கடலில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் மேம்பட மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என மத்திய குழுவினரிடம் வலியுறுத்தினர்.

    இது குறித்து மத்திய குழு அதிகாரிகள் கூறும்போது, மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக முதற்கட்ட திட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச் சூழலுக்கும் மீனவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    • பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணக்கோரி கூனங்குப்பம் கிராமமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.
    • இன்று கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து விட்டு குடும்பத்துடன் நடைபயணமாக திருவள்ளூர் நோக்கி புறப்பட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன், நண்டு பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மீனவர்கள் பகுதியான ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர்மாதா குப்பம் கிராம மக்களும் இதே ஏரியில் இறால் மட்டும் பிடித்து வருகின்றனர்.

    இதனால் இவர்களுக்கும் கூனங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே மீன், நண்டு பிடிப்பதில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    கூனங்குப்பத்தை சேர்ந்தவர்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிக்கக்கூடாது என்று தடை விதித்து மற்ற 3 மீனவ கிராம மக்களும் வலைகளை பறித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கூனங்குப்பம் கிராமமக்கள் போலீஸ் நிலையம், ஆர்.டி.ஓ. அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர்மாதா குப்பம் மற்றும் கூனங்குப்பம் கிராமமக்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதனால் கூனங்குப்பம் கிராமமக்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அதிகாரிகளிடம் மீண்டும் தெரிவித்தும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணக்கோரி கூனங்குப்பம் கிராமமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.

    அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து விட்டு குடும்பத்துடன் நடைபயணமாக திருவள்ளூர் நோக்கி புறப்பட்டனர்.

    இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்தபடி புத்தக பையுடன் நடந்து வந்தனர். மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்குவதற்காக ஆதார்அட்டை, ரேசன் கார்டு மற்றும் மீன்பிடி வலையுடன் வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆண்டார் மடம் அருகே கூனங்குப்பம் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரிடம் கிராமமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராமமக்கள் தொடர்ந்து தங்களது நடைபயணத்தை தொடர்ந்தனர்.

    இதற்கிடையே சுமார் 7 கி.மீட்டர் தூரம் வரை நடந்து வந்த மீனவ கிராம மக்களிடம் வஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வக்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் ஆகியோர் அழைத்தனர்.

    இதனை ஏற்று காலை 10 மணியளவில் மீனவ கிராம மக்கள் அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் மற்ற கிராமமக்கள் எங்க ளுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி உடனடியாக உத்தரவிடவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வஞ்சிவாக்கம் பகுதியில் நடைபயணம் செய்த மீனவர்கள் திடீரென பழவேற்காடு-செங்குன்றம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 2 அரசு பஸ்களையும் சிறைபிடித்தனர். போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களே மறியலை கைவிட்டு போக்குவரத்தை அனுமதித்தனர்.

    பேச்சுவார்த்தை நடந்து வரும் வஞ்சிவாக்கம் பகுதியில் கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் திரண்டு இருந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    டி.எஸ்.பி.கிரியாசக்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்கள் அசம்பாவிதத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    நாங்கள் காலம்காலமாக பழவேற்காடு ஏரியில் மீன், நண்டு பிடித்து தொழில் செய்து வருகிறோம். தற்போது ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதா குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் நாங்கள் தொழில் செய்வதை தடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் சில மீனவ கிராமமக்கள் உள்ளனர். எங்களது வலைகளையும் அவர்கள் எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் நாங்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு, மீன் பிடித்து தொழில் செய்யமுடியாத சூழல் நிலவுகிறது.

    இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் கடந்த 8 மாதங்களாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

    எங்களுக்கு பழவேற்காடு ஏரியில் மீன், நண்டு பிடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காணவேண்டும். அதுவரை நாங்கள் போக மாட்டோம். எங்களுக்கு முடிவு தெரியவேண்டும்.

    இவ்வாறு ஆவேசமாக அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே சுமார் 2 மணிநேரம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் நோக்கிய தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூனங்குப்பம் கிராமமக்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் மதியம் 12 மணிக்கு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

    பொன்னேரி ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் வைத்து பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருதரப்பு மீனவ கிராம மக்களுடன் நாளை தனித்தனியாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தால் பழவேற்காடு பகுதி இன்று காலை பெரும்பரபரப்பாக காணப்பட்டது.

    • பழவேற்காடு கடலில் மூழ்கி என்ஜினீயர்கள் 2 பேர் பலியான சம்பவம் உடன் வந்த நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகு சவாரி அழைத்துச் சென்ற மீனவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    சென்னை திரிசூலத்தைச் சேர்ந்தவர் மதன் குமார். என்ஜினீயரான இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி உடன் பணிபுரியும் நண்பர்கள் என்ஜினீயரான அருண், எபினேசர் உள்ளிட்ட 10 பேருடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.

    பின்னர் அவர்கள் பழவேற்காடு கடலில் படகு சவாரி சென்றனர். அப்போது மதன் குமார், அருண், எபினேசர் ஆகிய 3 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர்.

    ஆழமான பகுதிக்கு சென்ற அவர்களை அலை இழுத்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்ற முயன்றபோது எபினேசரை மட்டும் பத்திரமாக மீட்டனர். மதன் குமாரும், அருணும் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தேடிவந்தனர்.

    இதற்கிடையே சிறிது நேரத்தில் அதே பகுதியில் மதன்குமார் உடல் பிணமாக மிதந்தது. தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கிய அருணை தொடர்ந்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலை கம்பில் அருணின் உடல் சிக்கியது. அவரது உடலை போலீசார் மீட்டனர். பழவேற்காடு கடலில் மூழ்கி என்ஜினீயர்கள் 2 பேர் பலியான சம்பவம் உடன் வந்த நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகு சவாரி அழைத்துச் சென்ற மீனவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×