search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுதி அரேபியா"

    • குறும்பனையில் உள்ள அவரது உறவினர்கள் சோகம்
    • பலியான குமரி மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே குறும் பனை பகுதியை சேர்ந்தவர் சகாயரோஜஸ் (வயது 44). இவர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று மாலை சகாயரோஜன் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாரானார். அப்போது திடீரென சகாயரோஜஸ் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சகாயரோஜஸ் இறந்த தகவல் குறும்பனையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலி யான சகாயரோஜஸுக்கு சகாயமெல்பா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் சகாயரோஜஸின் தாயார் இறந்தார். இதையடுத்து அவர் ஊருக்கு வந்தி ருந்தார். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இங்கிருந்து சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

    இந்த நிலையில் அவர் பலியாகி இருப்பது அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலி யான சகாயரோஜஸின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது.
    • வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.

    ரியாத்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த அளவிலேயே ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் தவுபிக் அல் ரபியா கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

    வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    கொரோனா காலங்களில் ஹஜ் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் சவுதி அரேபியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • பாகிஸ்தானில் உள்ள சவுதி மக்கள், அதிகாரிகள் வெளியே செல்வதை தவிர்க்க வலியுறுத்தல்.
    • ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்.

    பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய குடிமக்கள், அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவையை தவிர வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.


    இதேபோல் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக விழிப்புடன் செயல்படவும், ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
    • அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு  10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

    எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

    • சவுதி அரேபியா செல்ல விசா பெற இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
    • போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு

    ரியாத்:

    சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

    இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக சவுதி விசாவிற்கு போலீஸ் அனுமதி ஆவணம் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டுறவைக் கருத்தில் கொண்டு, போலீஸ் அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
    • பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.

    ரியாத் :

    உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார்.

    அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

    குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி பாலின சமுத்துவத்தை ஏற்படுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சவுதி அரேபியாவின் பிரதமராக மன்னர் சல்மான் நியமித்துள்ளார். அதோடு நாட்டின் மந்திரிசபையையும் மன்னர் மாற்றியமைத்துள்ளார்.

    அதன்படி முகமது பின் சல்மானின் இளைய சகோதரரும், இளவரசருமான காலித் பின் சல்மான், ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் துணை ராணுவ மந்திரியாக இருந்து வந்தார்.

    இதனிடையே பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தாலும், மந்திரிசபை கூட்டங்களுக்கு மன்னர் சல்மான்தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சவுதி அரேபியாவில் முதன் முறையாக செய்தி வாசிப்பாளர் பணிக்கு பெண் நியமிக்கப்பட்டதற்கு, பெண்கள் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #SaudiArabia
    ஜெட்டா:

    சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி எறியப்பட்டன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சினிமா தியேட்டர் என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் வரவேற்ப்பை பெற்றன. 

    இந்நிலையில், அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மாலை நேரத்தில் மட்டும் இவர் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.

    அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் விஷன் 2030 என்ற பெயரில் இளவரசர் மேலும் பல புரட்சிக்கரமான திட்டங்களுக்கு அனுமதியளிப்பார் என்றும் சவுதி பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி கனடா தூதர் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. #SaudiArabia #Canada
    ஜெட்டா:

    சவுதி அரேபியாவில் சமீபத்தில் சில பெண் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற மனித உரிமை ஆர்வலர் சமர் பதாவி உள்ளிட்டோர் கைதுக்கு எதிராக கனடா அரசு குரல் எழுப்பியது.

    மேலும், கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களை சவுதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என கனடா கேட்டுக்கொண்டது. கனடாவின் கோரிக்கையால் ஆத்திரமடைந்த சவுதி, ‘தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்’ என கனடாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. 

    வார்த்தைகளுடன் நிறுத்தாமல், சவுதிக்கான கனடா தூதர 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கனடாவில் இருக்கும் தனது நாட்டு தூதரையும் சவுதி திரும்ப பெற்றுக்கொண்டது.

    இதனால், இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. 
    சவுதி அரேபியாவில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் பெண் மாடல்கள் உடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வர தடை என்பதால், ஆடைகள் காற்றில் பறந்து வந்துள்ளன.
    ஜெட்டா:

    சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. தற்போது, பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், கார் ஓட்டுவது மற்றும் மைதானத்திற்கு சென்று விளையாட்டுக்களை பார்ப்பது போன்றவற்றுக்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், அரசு பொறுப்பிலும் பல்வேறு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பாதுகாப்பு படையிலும் பெண்கள் இணைக்கப்பட உள்ளனர். இந்நிலையில், சவுதியில் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்று நடந்துள்ளது. ஆண் மாடல்கள் புதியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

    சவுதியில் பெண்கள் மாடலிங் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. இதனால், புதிதாக வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கான ஆடைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்த பேஷன் ஷோ ஏற்பாட்டாளர்கள் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தனர்.

    அதாவது, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ட்ரோன்களில் பெண்களுக்கான ஆடைகளை மாட்டிவிட்டு நிகழ்ச்சி நடந்த அரங்கில் பறக்க விட்டுள்ளனர். இதனை குர்திஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

    தற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கிண்டலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை பார்க்க..

    நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் பழங்களுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #NipahVirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் இந்த காய்ச்சல் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் காய்ச்சலுக்கு வவ்வால்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.

    எனவே வவ்வால் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டனர். மேலும் வவ்வாலின் ரத்தம், எச்சம் மாதிரிகள் ஆய்வுக்காக புனேவில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் பிராய்லர் கோழிகள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதாகவும், எனவே கோழி இறைச்சியை யாரும் சாப்பிட வேண்டாம் என்றும் கேரளாவில் சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும் இது போன்ற வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கேரள அரசு எச்சரித்தது.

    இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் பழங்களுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஐக்கிய அரபு அமீரகமும், கேரள பழங்களுக்கு தடை விதித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் இருந்து அனுப்பப்பட்ட 100 டன் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் திருப்பி அனுப்பி உள்ளன. #NipahVirus
    ×