search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யபிரதா சாகு"

    • ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.
    • தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஜூன் 4-ந்தேதி வரை அமலில் இருக்கும். ஏப்ரல் 19-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாகன சோதனை தொடரும். எனவே உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் 4-ந்தேதி வரை தொடரும்.

    தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.208 கோடி பணம், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டவை ஆகும்.

    இவற்றில் தமிழகம் முழுவதும் ரொக்கப் பணம் மட்டும் ரூ.88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.

    அதன் பிறகு இதில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இந்த பணம் யாருடையது யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்கிற விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படுகிறது.
    • ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், உள்துறைச் செயலாளர்கள் மற்றும் முக்கிய அலுவலர்களுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பக்கத்து மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை செய்வது பற்றியும், தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றியும் ஆலோசனை வழங்கினார்.

    வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு அனுமதிகளை 'சுவிதா செயலி' மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெற வேண்டும்.

    பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமருக்கு மட்டும் சில விதிவிலக்கு உள்ளது. அது தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்படுகிறது. ரோடு ஷோவுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பயன்படுத்தும் வீடியோ வகை வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் கமிஷன் வழங்கும். மற்ற வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம்தான் பெறவேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படுகிறது. இதுவரை 13.08 லட்சம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். இதில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதில் அதிகபட்சம் 50 ஓட்டுக்களை பதிவு செய்யலாம்.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு பாடல் அடங்கிய ஆடியோ கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டப்பட்டது. தற்போது அதே பாடல், வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

    கோவை பா.ஜனதா வேட்பாளர் அண்ணாமலை, ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக வந்த வீடியோ, கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த பழைய சம்பவம் என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து வந்த புகார் மீது விசாரணை நடைபெறுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக இதுவரை வேறு புகார்கள் இல்லை.

    தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டுள்ளது.

    அதிகபட்சமாக மதுரை தொகுதியில் 511 வாக்குச்சாவடிகளும், தென் சென்னையில் 456 வாக்குச்சாவடிகளும், தேனியில் 381 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. திருவள்ளூர் தொகுதியில் 170, வடசென்னையில் 254, மத்திய சென்னையில் 192, ஸ்ரீபெரும்புதூரில் 337, காஞ்சிபுரத்தில் 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளன.

    பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாகேவே துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படும். மேலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

    பதற்றம் குறைந்த ஓட்டு சாவடிகள் உள்ள தொகுதிகளாக பெரம்பலுார் (55 ஓட்டு சாவடிகள்), விழுப்புரம் (76 ஓட்டு சாவடிகள்), திருச்சி (84 ஓட்டு சாவடிகள்) அடையாளம் காணப்பட்டுள்ளன.

    கடந்த தேர்தலில் 90 சதவீதத்துக்கு மேல் ஓட்டுப் பதிவாகி, அதில் 75 சதவீத ஓட்டுகள் ஒரு வாக்காளருக்கு சென்றிருந்தால், அதுபோன்ற வாக்குச்சாவடிகள் மிகப்பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

    அதில் அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 39 வாக்குச்சாவடிகளும், வடசென்னையில் 18 வாக்குச்சாவடிகளும், அரக்கோணம் தொகுதியில் 15 வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    திருவள்ளூர் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் உள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 4 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேர் உள்ளனனர். அவர்கள் 12-டி படிவத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்திருந்தது.

    அதற்கு விருப்பம் தெரிவித்து 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 4.30 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகள் 3.66 லட்சம் பேரும் விண்ணப்பம் பெற்றனர். பூர்த்தி செய்த படிவங்களை 85 வயதுக்கு மேற்பட்ட 77 ஆயிரத்து 455 பேரும், மாற்றுத் திறனாளிகள் 50 ஆயிரத்து 676 பேரும் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்தே வாக்குப்பதிவு செய்யலாம்.

    அந்த வகையில் முதியவர்களிடம் வீடுகளுக்கு சென்று ஓட்டுகளை பெறும் நடவடிக்கை, திருச்சி, ஈரோடு, கோவை தொகுதிகளில் தொடங்கியுள்ளது. அவர்கள் வீடுகளுக்கு ஒரு போலீஸ் அதிகாரி, கட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் சென்று வாக்குகளை பெற்று வருகின்றனர்.

    அதற்காக அவர்கள் வீட்டிலேயே தற்காலிக வாக்குசாவடி உருவாக்கப்பட்டு, அதில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு வாக்கு செலுத்துகின்றனர்.

    அலுவலர்கள் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்பதால் ஒரே நாளில் தொகுதி முழுவதும் இப்படி வாக்கைப்பெற முடியாது. முதல் முறை வீட்டுக்கு அலுவலர்கள் செல்லும்போது, வாக்காளர் இல்லையென்றால் மேலும் ஒருமுறை ஓட்டுப்பதிவு அலுவலர்கள் செல்வார்கள். அதற்கு மேல் வாய்ப்பு கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்றவை செய்து தரப்பட வேண்டும்.
    • குழந்தைகளை அழைத்து வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு இருக்கை வசதி அவசியம் அளிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் 19-ந்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அனைத்து அரசுச் செயலாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உதவியாளர் மேஜை, குடிநீர், கழிவறை, சாய்தளம், மின்சார இணைப்பு வசதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்றவை செய்து தரப்பட வேண்டும்.

    15X15 அடி அளவில் துணிப்பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் செய்து தரப்படவேண்டும். குறிப்பாக, குழந்தைகளை அழைத்து வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கு இந்த வசதி அவசியம் அளிக்கப்பட வேண்டும்.

    கடந்த பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி தயார் செய்யும் பணிக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ரூ.1,300 வீதம் வழங்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தப் பணிகளை மேற்கொண்டனர். மக்கள் அதிகமாக கூடும் இடம் என்பதால் சுகாதாரத்தை பேணுவதற்காக தகுந்த உத்தரவுகளை அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

    வாக்குச்சாவடிகளுக்கு எண் அளித்தல், 200 மீட்டர் எல்லைக்கோடு வரைதல், வாக்குச்சாவடிக்குள் தடுப்புகளை அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்படுகிறது.
    • தேர்தலில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் எந்தெந்த பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும் என்ற பட்டியல் பாகம் வாரியாக தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நிழற் பந்தல்கள், நாற்காலிகள், குடிநீர் வசதி அமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்படுகிறது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு உள்ளன.

    இந்த பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஊழியர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி விளக்கம் பெற்றுள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல்நலம் சரியில்லாத பணியாளர்கள், மருத்துவ காரணங்கள் கூறி இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

    எனவே தேர்தல் பணிக்கு யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. பயிற்சி வகுப்புக்கு வராத ஊழியர்கள் அடுத்து நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு வந்து விடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எவ்வளவு பேர் வராமல் உள்ளனர் என்ற விவரம் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் பட்டியல் சேகரித்து அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் தேர்தல் நடத்தும் ஊழியர்கள் முழுவதும் பெண்களாக இருப்பார்கள். இதேபோல் ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் பணியை முற்றிலும் மாற்றுத் திறனாளிகள் கவனிப்பார்கள்.

    இளம் தலைமுறையாக உள்ள அரசு ஊழியர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் மாவட்டத்துக்கு ஒன்று அமைக்கப்படும்.

    தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 702 பறக்கும் படைகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் இப்போது கூடுதலாக 191 படைகள் உருவாக்கப்படடு 893 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் 702 நிலைக் குழுக்களின் எண்ணிக்கையும் இப்போது 906 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு கணக்கு வேண்டும். இந்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வணிக அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளன. இதேபோல வேறு சிலரும் மனு கொடுத்திருந்தனர்.

    இவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் அதற்கு அங்கிருந்து பதில் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பறக்கும் படையினரால் நடத்தப்படும் வாகன சோதனைகள் வியாபாரிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் நேரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் யாரும் பணம் கொண்டுபோனால் வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    பறக்கும் படையினரால் வாகன சோதனை நடத்தப்படும் நிகழ்வுகள் பொதுமக்களுக்கும் குறிப்பாக, வியாபாரிகளுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதில் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், ரூ.50,000 பணம் எடுத்துச்செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும். விரைவில் ரொக்கப் பணம் கொண்டுசெல்வது குறித்த புதிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிவித்தார்.

    • ஏப்ரல் 1-ந்தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    • தனியார் கட்டிடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைய உள்ள நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி ஆவர். 85 வயதிற்கு மேல் 6,13,991 வாக்காளர்கள் உள்ளனர். 4,61,730 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர்.

    * இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    * தேர்தல் பணியில் 4 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்.

    * 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    * தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம்.

    * ஏப்ரல் 1-ந்தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    * இதுவரை தமிழ்நாடு முழுவதும் ரூ.69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் மட்டும் ரூ.33.31 கோடி. வருமானவரித்துறை மூலம் ரூ.6.51 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

    * 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    * தனியார் கட்டிடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளோம்.
    • சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.

    * தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளோம்.

    * சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது.

    * தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * வாக்குப்பதிவு தினத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    • ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
    • வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை சி விஜில் செயலி மூலம் 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 32 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் சமர்ப்பித்துள்ளனர்.

    இதுவரை 453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களிடம் இருந்து 17,800 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் இருந்து வீடு வீடாக இதை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலை அமைதியான முறையிலும், நேர்மையாகவும், நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை, பா.ஜனதா சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.நவாஸ், சந்திரமோகன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ரவீந்திரநாத் பெரியசாமி, மார்க்சிஸ்டு சார்பில் பீமாராவ், ஆறுமுக நயினார், தே.மு.தி.க. சார்பில் வக்கீல் சந்தோஷ் குமார், மாறன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ், தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், கார்த்திக், லோக் தந்திரிக் ஜனதாதளம் சார்பில் கார்த்திகேயன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் கூறப்பட்டது.

    • தேர்தலையொட்டி காவல்துறை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
    • பிரதமர் ரோடு ஷோ சென்ற பகுதியில்தான் சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகம் முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெறும் நடவடிக்கை 20-ந்தேதி (நேற்று) தொடங்கியது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    தேர்தல் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்பதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டத்தை கூட்டும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவல் அந்தந்த கட்சிகளின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்யும் காலகட்டம் என்பதால் இந்த வார இறுதி நாளில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தும்படி கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். தேர்தலையொட்டி காவல்துறை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

    கோவையில் 18-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில், சீருடையில் பள்ளி மாணவிகள் பங்கேற்றது தொடர்பான முதல்கட்ட விசாரணையில், பிரதமர் ரோடு ஷோ சென்ற பகுதியில்தான் சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளது என்றும் பிரதமர் வரும்போது குழந்தைகள் ஆர்வத்துடன் அவர்களாகவே பள்ளிக்கு வெளியே வந்து பிரதமரை பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்ததும் அது தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
    • 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக 68,320 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். தபால் வாக்குகள் அளிப்பவர்கள் 2-வது பிரிவில் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.

    முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு தனி விருப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்ப படிவங்கள் வாக்குச் சாவடிகள் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை அவர்கள் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் இன்று (புதன் கிழமை) முதல் வழங்குகிறார்கள்.

    அந்த விருப்ப படிவத்தை முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஆனால் இது கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள முதியவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம்.


    விருப்ப படிவத்தை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் கொடுப்பதற்கு வருவாய், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணிபுரிவது தொடர்பாக கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று கட்டவாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வீட்டுக்கு சென்று வாக்களிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசினார். அவர் 3 இடங்களில் முதியோர்களை சந்தித்து உரையாடினார்.

    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    "முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று 20, 21-ந் தேதிகளில் விண்ணப்பங்கள் வழங்கி தகவல்கள் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில் எத்தனை பேர் தங்கள் வீட்டில் இருந்த படி தபால் வாக்கு அளிக்க உள்ளனர் என்பது தெளிவாக தெரியவரும்.

    வாக்குப்பதிவுக்கு முன்பு அவர்களது வீட்டுக்கு சென்று வாக்குப்பதிவு செய்யப்படும். அந்த வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டி குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

    வீட்டில் இருந்து வாக்கு அளிக்க சம்மதம் தெரிவித்து விருப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்த பிறகு அந்த முதியவர் அல்லது மாற்றுத்திறனாளி தபால் வாக்கு மட்டுமே அளிக்க முடியும். கடைசி நிமிடத்தில் வாக்குச்சாவடிக்கு செல்கிறேன் என்று சொல்ல இயலாது.

    இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

    • தமிழ்நாட்டில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
    • பாராளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை முதல் வாக்கு எந்திரங்கள் பிரிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று நடத்திய ஆலோசனைக்கு பிறகு 176 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. எனவே மொத்த வாக்குச்சாவடிகள் 68,320-ஆக உயர்ந்துள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்கள் விலை வித்தியாசப்படுவதால் தேர்தல் செலவினத்துக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ள விலை பட்டியலை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 52,938 தனியார் கட்டிடங்கள் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளது.

    20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் 12 டி வழங்கப்படும்.

    அதில் அவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம். சிவிஜில் செயலி மூலம் மொத்தம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை முதல் வாக்கு எந்திரங்கள் பிரிக்கப்படும். இந்த தேர்தலில் அதிகளவில் ஆசிரியர்களே பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சுமார் 4 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×