search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை முயற்சி"

    • நரிக்குடி அருகே டாஸ்மாக் கடையில் மர்மநபர்கள் மதுபாட்டில்களை மூட்டை கட்டி திருட முயன்றனர்.
    • போலீசார் ரோந்து வந்ததால் போட்டுவிட்டு தப்பினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் -மானாசாைல ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பாலகிருஷ்ணன் , சூப்பர்வைசராக இருளாண்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்கள் நேற்று இரவு வசூல் பணம் ரூ.2லட்சத்தை எடுத்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றனர். அதன்பிறகு நள்ளிரவு நேரத்தில் அந்த கடையில் கொள்ளையடிப்பதற்காக சில மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள் முதலில் கடையின் முன்பு இருந்த சி.சி.டி.வி. காமிராவை உடைத்து சேதப்படுத்தினர். பின்பு அவர்கள் டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பணம் கொள்ளையடிக்கலாம் என்று பணப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லை.

    இதனால் விரக்தியடைந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச்செல்லலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி ஒரு சாக்கில் ஏராளமான மதுபாட்டில்களை வைத்து மூட்டை கட்டினர். மேலும் தங்களிடம் இருந்த ஜவுளிக்கடை கட்டை பையிலும் மதுபாட்டில்களை அடுக்கினர்.

    பின்பு அவற்றை கடைக்கு வெளியே எடுத்து வந்தனர். அப்போது அந்த வழியாக வீரசோழன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த மர்மநபர்கள், மூட்டை மற்றும் பையில் கட்டிவைத்திருந்த மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    மதுக்கடையில் இருந்து மர்மநபர்கள் தப்பி ஓடுவதை பார்த்த போலீசார், அவர்களை பிடிப்பதற்காக துரத்திக்கொண்டு ஓடினர். ஆனால் அந்த மர்மநபர்கள், வேகமாக ஓடி போலீசாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்டனர்.

    மதுக்கடையில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றது மற்றும் காமிராவை உடைத்த சம்பவம் தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார். டாஸ்மாக் ஊழியர்கள் வசூல் பணத்தை கடையில் வைத்துவிட்டு செல்லாமல் கொண்டு சென்றதால், கொள்ளையர்களிடம் பணம் சிக்கவில்லை.

    மேலும் போலீசார் ரோந்து வந்ததால் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களும் தப்பின. கடையில் வைக்கப்பட்டிருந்த காமிரா மட்டும், கொள்ளையர்கள் உடைத்ததால் சேதமாகிவிட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    மதுக்கடையில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பீரோ உடை க்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரிய வந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நசியனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவரின் உறவினர் வீடு அந்த பகுதியில் உள்ளது.

    கணேசனின் உறவினர் வீட்டை பூட்டி விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று விட்டார். வீடு கடந்த 2 மாதங்களாகவே பூட்டிய நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கணேசன் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடை க்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கணேசன் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • கொள்ளையர்களின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.
    • ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பஜார் பகுதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இன்று அதிகாலை வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதற்குள் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளைகும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளையர்களின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

    கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

    ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெள்ளகுளம் அடுத்த பி.என். கண்டிகை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் தாய் சரோஜம்மாவுடன்(68) கடையை திறக்க சென்றார்.

    வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதில் நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டு பீரோவை உடைத்து அவர்கள் நகை, பணம் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி ச்சென்றனர்.
    • தாங்கள் மறைத்து வைத்திருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலி கொள்ளையர் கண்ணுக்கு படாததால் அது தப்பியது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள போடுவார்பட்டி தோட்டத்துவீட்டில் வசித்து வருபவர் ராசு என்ற கருப்புசாமி(54). விவசாயி. இவரது மனைவி செல்வி(45). நேற்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வீட்டுமுன்பு கட்டப்பட்டிருந்த நாய்க்கு பிஸ்கட்டுகளை வாங்கி போட்டுவிட்டு உள்ளே சென்றனர். வீட்டு பீரோவை உடைத்து அவர்கள் நகை, பணம் எதுவும் உள்ளதா என சோதனையிட்டனர். ஆனால் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி ச்சென்றனர்.

    அதன்பிறகு கருப்புசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருந்தபோதும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலி கொள்ளையர் கண்ணுக்கு படாததால் அது தப்பியது.

    வீட்டில் இருந்த செல்போ னை மட்டும் அவர்கள் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசில் கருப்புசாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் முக்கிய தடயங்களை பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.
    • மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் - இருகூர் ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை அருகே உள்ள இருப்பு அறையில் வைத்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் இருப்பு அறையை திறந்து மதுபாட்டில்களை எடுப்பதற்காக சென்றார். அப்போது அறை கதவின் பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை இருப்பு அறையில் மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    கடந்த மாதம் திருவண்ணாமலையில் ஏடிஎம் எந்திரங்கள் தொடர்ச்சியாக உடைக்கப்பட்டு ரூ.73 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கியது.

    இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தினம்தோறும் இரவு வேலைகளில் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் இருந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் பக்கத்திலேயே வங்கிகள் உள்ளன.

    அதில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள ஏடிஎம் மையத்தை இன்று அதிகாலை மர்மநபர் உள்ளே புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து தன் கையில் இருந்த சுத்தியலால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அந்த வழியாக சென்றனர். அப்போது ஏடிஎம் எந்திரம் உள்ள இடத்தில் உள்ளே ஒருவர் இருப்பதை கண்டதும் சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பார்த்தபோது கையில் சுத்தியலுடன் வாலிபர் ஒருவர் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்தார்.

    சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் லட்சுமி அவனை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏடிஎம் ஏந்திரத்தை உடைக்க முயற்சி செய்தவர் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் பின்புறம் உள்ள நரசிம்மர் கோவில் தெருவை சேர்ந்த முரளி மகன் கார்த்தி (வயது 24) என்றும் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து அவரிடமிருந்து சுத்தியல் கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு ஏடிஎம் கொள்ளை முயற்சியை தடுத்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • நெசப்பாக்கம் காணுநகர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அசோக் தினசரி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் நேற்று நள்ளிரவு மதுபோதையில் கற்களுடன் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தார். ஆனால் நீண்ட நேரம் போராடியும் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் காட்சிகளை ஐதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணித்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக நெசப்பாக்கம் காணுநகர் பகுதியை சேர்ந்த அசோக் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அசோக் தினசரி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

    சம்பவத்தன்று மது போதையில் இருந்த அசோக்கிற்கு மேலும் மது குடிக்க பணம் தேவைப்பட்டது. அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை எளிதாக உடைத்து பணத்தை எடுத்து சென்றுவிடலாம் என்று எண்ணிய அவர் கற்களுடன் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அது தோல்வியில் முடிந்ததால் விரக்தியடைந்த அசோக் அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    • கூட்டாளிகளுடன் வந்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் கே.கே நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    சென்னை, கே.கே.நகர், முனுசாமி சாலையில் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நள்ளிரவு 1.30மணி அளவில் வந்த மர்ம நபர் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை கற்களால் உடைக்க முயன்றார்.

    இந்த காட்சி ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் ஐதரபாத்தில் உள்ள வங்கியின் தலைமை கட்டுபபாட்டு அறைக்கு சென்றது. இதனை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி வங்கி அதிகாரிகள் கே.கே நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைக்க முடியாததால் மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    தகவல் அறிந்ததும் வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், அசோக் நகர் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

    மர்ம வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய பெரிய கல் அங்கு கிடந்தது. மேலும் ஏ.டி.எம். எந்திரம் முழுவதும் சேதம் அடைந்து இருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் மர்ம வாலிபர் சைக்கிளில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது பதிவாகி உள்ளது.

    மேலும் அவர் கூட்டாளிகளுடன் வந்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் கே.கே நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன.
    • கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.

    காகாபாளையம்:

    சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையான காக்காபாளையம் பகுதியில் மளிகை கடை, பேன்சி ஸ்டோர், டீக்கடை மற்றும் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன. இந்த கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.

    இது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் தொடர் திருட்டு மர்மமாகவே நடைபெற்று வருகிறது .இதனால் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் இரண்டு முறை திருட முயற்சி நடந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடு, கடைகளில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். அதுவும் போலீஸ் நிலையம் மிக அருகாமையில் இருந்தும் திருடர்களின் துணிச்சலால் பொதுமக்கள் பயந்து போய் உள்ளனர். இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து திருட்டு மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • தன்னை வீடியோ எடுத்த வாலிபரிடம் நன்றாக வீடியோ எடுத்துக் கொள் என போஸ் கொடுத்து விட்டு வாலிபர் அங்கிருந்து சாவகாசமாக சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாப்பூர், பஜார் வீதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதை வெளியில் இருந்து ஒருவர் வீடியோ எடுப்பதை அறியாத வாலிபர் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க சில வினாடிகள் உள்ள நிலையில் வெளியில் இருந்து ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்தார்.

    இதனைக் கண்டு அச்சப்படாத வாலிபர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் தன்னை வீடியோ எடுத்த வாலிபரிடம் நன்றாக வீடியோ எடுத்துக் கொள் என போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து சாவகாசமாக சென்றார்.

    வீடியோ எடுத்த நபர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் ஏ.டி.எம்.மை உடைத்தது அதே பகுதியை சேர்ந்த சேஜ்பர் பாஸ்கர் என்பது தெரியவந்தது.

    போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து பொதுமக்கள் சிலர் வெளியே வந்தனர்.
    • 3 கொள்ளையர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் நெல்லை-தென்காசி நான்குவழிச்சாலை ஓரத்தில் இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

    கொள்ளை முயற்சி

    அப்போது உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் சிலர் வெளியே வந்தனர். அப்போது கோவிலில் உண்டியல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றவர்களை பார்த்து அவர்கள் சத்தமிட்டனர்.

    உடனே கொள்ளையர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×