search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் திருமணம்"

    • பாகிஸ்தானின் கராச்சி நகரில் திருமண விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
    • மணமகன் அர்பாஸ் குடும்பத்தினருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் முகமது அர்பாஸ். இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரும் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த இளம்பெண் அமீனாவும் சமூக வலைதளம் மூலமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நடத்த அவர்கள் திட்டமிட்டனர்.

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் திருமண விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே மணமகன் அர்பாஸ் குடும்பத்தினருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டது.

    பாகிஸ்தான் சென்று திருமணம் செய்தால் அது இந்தியாவில் செல்லாது என்பதால் இந்தியாவில் இருந்தபடியே அமீனாவை மணமுடிக்க அர்பாஸ் திட்டமிட்டார்.

    அதன்படி காணொலி வாயிலாக முஸ்லிம் முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றன. ராஜஸ்தானின் ஜோத்பூரில் மணமகன் அர்பாசும் பாகிஸ்தானின் கராச்சி நகரில் மணமகள் அமீனாவும் அமர்ந்திருக்க இரு வீட்டாரின் ஆசியோடு திருமணம் நடத்தப்பட்டது.

    மணமகன் அர்பாசின் தந்தை முகமது அப்சல் கூறும்போது, "எங்களது உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். அந்த உறவு இன்றளவும் நீடிக்கிறது. மணமகள் விசாவிற்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அது தாமதமானது. எனவே, ஆன்லைன் முறையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். அண்டை நாடுகளுக்கு இடையே இதுபோன்ற திருமணங்கள் புதிதல்ல.

    கடந்த காலங்களில் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் திருமணங்கள் நடைபெற்று உள்ளன. கொரோனா தொற்றுநோய் பாதிப்பு காலத்திலும், 2 நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமாக இருந்தபோதிலும் இதுபோன்ற திருமணங்கள் நடந்தன. நாங்கள் முறைப்படி விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்று எங்கள் மருமகளை இந்தியாவுக்கு அழைத்து வருவோம்" என்றார்.

    மணமகன் அர்பாஸ் கூறுகையில், "பாகிஸ்தானில் திருமணம் செய்தால் இந்தியாவில் செல்லாது. இப்போது இந்தியாவில் இருந்தபடியே ஆன்லைனில் திருமணம் செய்திருப்பதால் எங்களது திருமணம் செல்லும்" என்றார். ஆன்லைனில் சட்டப்பூர்வமாக திருமணம் நடைபெற்றிருப்பதால் இந்திய, பாகிஸ்தான் தரப்பில் எளிதில் விசா கிடைக்கும் என்று அர்பாஸ்-அமீனாவின் உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜோத்பூரைச் சேர்ந்த முசம்மில் கான், பாகிஸ்தானைச் சேர்ந்த உருஜ் பாத்திமாவை ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் சீமா ஹைதர் , ரபுபுரா பகுதியில் வசிக்கும் தனது இந்திய காதலன் சச்சின் மீனாவுடன் வசிக்க கடந்த மே 13-ந் தேதி நேபாளம் வழியாக தனது 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தார். இதையடுத்து சீமா கைது செய்யப்பட்டார். சச்சின் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர்கள் இருவரும் ஜூலை 7-ந் தேதி உள்ளூர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று ரபுபுராவில் வசித்து வருகின்றனர். சமீபத்தில், பாகிஸ்தானின் பழங்குடியினரான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லா (24) என்பவரை 34 வயதான திருமணமான இந்தியப் பெண்ணான அஞ்சு, பாகிஸ்தானுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இந்த திருமணங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 2 நாடுகளைச் சேர்ந்த மற்றொரு ஜோடி எந்தவித சலசலப்பும் இன்றி இருவரது குடும்பத்தினரின் ஆசியோடு ஆன்லைனில் திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
    • வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே செங்கோடி நெடுமானூர் விளை பகுதியை சேர்ந்தவர் ஐசக் ராஜ்குமார். தனியார் ஆம்னி பஸ்சில் நடத்துநராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர், செட்டிச்சார்விளை பகுதியை சேர்ந்த ஏசுஅடிமை என்பவரின் மகள் ஜினிமலர் (வயது 37) என்பவரை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ஜினிமலர் அந்த பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவில் பலர் கடன் பெறுவதற்காக ஜாமீன் கையெழுத்து போட் டுள்ளார். இதை அறிந்த ஐசக் ராஜ்குமார் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்க ளுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று ஐசக் ராஜ்குமார் வீட்டிற்கு வெளியே நின்ற போது, சமையலறையில் இருந்த ஜினிமலர், தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஐசக்ராஜ்குமார் ஓடி வந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார். படுகாயத்துடன் உயிருக் குப்போராடிய ஜினிமலரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் ஜினிமலர் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ஐசக்ராஜ்குமார், திருவட்டார் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். 

    • பாலகிருஷ்ணன்-மோகனாபிரியா தம்பதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
    • கிராமத்துடன் சேர்த்துவைக்கும்படி கண்ணீர் மல்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(31). இவரது மனைவி மோகனாபிரியா. இருவரும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் சுண்ணாம்பு குளம் கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் பாலகிருஷ்ணன்-மோகனாபிரியா தம்பதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

    மேலும் கிராமத்தில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் காதல் தம்பதியினை பங்கேற்க விடுவதில்லை.

    மேலும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்குத் தொகையை அவர்கள் வழங்கினால் கூட அதனை ஏற்க மறுத்து கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைத்து இருப்பதாக தெரிகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த காதல் தம்பதி தங்களுக்கு நேரும் கொடுமை குறித்தும் அதனை சரிசெய்து கிராமத்துடன் சேர்த்துவைக்கும்படி கண்ணீர் மல்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் மனு அளித்தனர். இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்து தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • அனுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பொதட்டூர்பேட்டை:

    பள்ளிப்பட்டு தாலுகா ராம சமுத்திரம் ஊராட்சியில் உள்ள வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியை சேர்ந்தவர் முத்து (வயது 25). இவர் பொக்லைன் எந்திரம் ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த அனு (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிந்தது. முத்துவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனு குடிப்பழக்கத்தை விடும்படி முத்துவிடம் கூறினார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்து வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அனு கணவரிடம் தட்டிக்கேட்டு தகராறு செய்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அனு படுக்கை அறைக்கு சென்ற நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டார் அனுவை கீழே இறக்கி உடனடியாக சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அனுவின் தந்தை ராஜேந்திரன் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து சில நாட்களே ஆவதால் இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 13 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்ணின் வீட்டிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
    • மகள் தன்னை தவிக்க விட்டு சென்றதால், மனவேதனையுடன் அழுதபடி அவரது தாயாரும் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவரது மகள் ஆறுமுக கனி (வயது 19). இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    நாங்குநேரி அருகே திருமலைபுரத்தை சேர்ந்த நயினார் என்பவரது மகன் பாலசுப்பிரமணியன்(வயது 21). இவரும் பேட்டையில் ஆறுமுக கனி படித்த அதே கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் பழக்கமாகி காதல் ஏற்பட்டது. இது பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆறுமுக கனியை மேற்கொண்டு படிக்க மறுத்து வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 30-ந்தேதி வீட்டில் இருந்த ஆறுமுக கனி திடீரென மாயமானார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் சீவலப்பேரி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் தான் காதலித்த பால சுப்பிரமணியனை திருமணம் செய்து கொண்டு பாளை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

    இதுகுறித்து பெண்ணின் வீட்டிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு ஆவேசத்துடன் வந்த ஆறுமுக கனியின் தாயார் நெஞ்சில் அடித்து அழுது புலம்பினார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில், உனது தந்தை இறந்து ஒரு வருடத்தில் இப்படி செய்து விட்டாயே என்று கூறி அடிக்க பாய்ந்தார். உடனே அங்கு நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் அவரை பிடித்து இழுத்து சென்றனர்.

    தொடர்ந்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் கேட்டபோது, நான் எனது கணவருடன் செல்கிறேன் என தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு திருமண ஜோடியை அனுப்பி வைத்தனர்.

    மகள் தன்னை தவிக்க விட்டு சென்றதால், மனவேதனையுடன் அழுதபடி அவரது தாயாரும் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

    • தனம் அரியலூரைச் சேர்ந்த மணிகண்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • மணிகண்டன், மது அருந்திவிட்டு, தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டு, ஆபாசமாக திட்டி, தனத்தை மரக்கட்டையால் தாக்கினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் போலகம் பகுதி யைச்சேர்ந்தவர் தனம் (வயது32). இவர் அரியலூரைச்சேர்ந்த மணிகண்டன் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிவாஸ் (8), ஸ்ரீநிதி (3) என்ற 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும், தனம் தாய் வீட்டில் வசித்து வந்தனர். மணிகண்டன் கடந்த சில மாதமாக மனைவி தனம் மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது.

    சமபவத்தன்று வழக்கம் போல் மணிகண்டன், மது அருந்திவிட்டு, தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டு, ஆபாசமாக திட்டி, தனத்தை மரக்கட்டையால் தாக்கினார். இதில் காயம் அடைந்த தனம் சப்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் விலக்கிவிட்டனர். தொடர்ந்து, மணிகண்டன், உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலைமிரட்டல் விடுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    காயம் அடைந்த தனம், திரு.பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணி கண்டனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் தேடுவதை அறிந்த திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    அருண் சக்ரவர்த்திக்கு வடக்கிப்பாளையம் அருகே உள்ள கொங்கநாட்டன்புதூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.

    காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 பேரும் கடந்த 1-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஆச்சிப்பட்டியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். திடீரென மாயமானதால் அவர்களின் பெற்றோர் மாயமானவர்களை கண்டுபிடித்து தரும்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணை அவரது உறவினர்கள் சிலர் சந்தித்தனர். அப்போது வீணாக வாழ்க்கையை தொலைத்து விடாதே, எங்களுடன் வந்து விடு என ஆலோசனை வழங்கினர். அவர்களின் பேச்சை கேட்ட இளம்பெண் அருண் சக்ரவர்த்தி கட்டிய தாலியை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    திருமணம் செய்த காதலி தாலியை கழற்றி கொடுத்து விட்டு சென்றதால் மனவேதனை அடைந்த அருண் சக்ரவர்த்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக அருண் சக்ரவர்த்தியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடல் நலம் சரியில்லை என்று கூறி சிறிதுநேரம் தூங்கிவிட்டு வருவதாக படுக்கை அறைக்கு சென்றார்.
    • சிவப்பிரியா கதவு வழியாக பார்த்தபோது சிவபாலன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் அருகே புத்தளம் ஒசரவிளையை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 24), கொத்தனார். தெற்கு புளியன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவப்பிரியா (20) இருவரும் காதலித்து வந்தனர்.

    கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது பறக்கை சி.டி.எம்.புரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிவபாலன் வழக்கம்போல் காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார். மனைவியிடம் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி சிறிதுநேரம் தூங்கிவிட்டு வருவதாக படுக்கை அறைக்கு சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து சிவப்பிரியா கதவு வழியாக பார்த்தபோது சிவபாலன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய சிவபாலனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவபாலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 9 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காதலன் அனீஷ் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
    • ராதிகாவின் பெற்றோர் தன்னுடைய மகளை அனீஷ் கடத்திச் சென்று விட்டதாக மார்த்தாண்டம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா (வயது 21). பக்கத்து ஊரான கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (24). வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கும் இடையே பள்ளிக்கூடத்தில் படித்தபோது காதல் மலர்ந்தது.

    பள்ளி படிப்பை முடித்த பிறகும் இந்த காதல் தொடர்ந்தது. ராதிகா கருங்கல் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே சமயத்தில் காதலன் அனீஷ் 10-ம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டார்.

    பின்னர் வெளிநாட்டுக்கு சென்று எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தார். எனினும் அவர் செல்போன் மூலம் ராதிகாவிடம் காதலை வளர்த்தார்.

    இந்தநிலையில் காதல் விவகாரம் இருவருடைய பெற்றோருக்கும் தெரிய வந்தது. இந்த காதலுக்கு ராதிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை மணமுடிக்கக்கூடாது என மகளிடம் கெடுபிடி காட்டினர். ஒரு கட்டத்தில் நீ படித்து கிழித்தது போதும் என கூறி ராதிகாவை மேற்கொண்டு படிக்க அனுமதிக்காமல் வீட்டிலேயே சிறை வைத்தனர்.

    அதே சமயத்தில் அவருக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இனியும் தாமதித்தால் தன்னை காதலனிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என கருதிய ராதிகா, காதலன் அனீஷை தொடர்பு கொண்டு பேசினார். இங்குள்ள விவரத்தை கூறிய அவர் வெளிநாட்டில் இருந்து உடனடியாக புறப்பட்டு வந்து தன்னை திருமணம் செய்யும்படி வலியுறுத்தினார்.

    அதன்படி காதலன் அனீஷ் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பிறகு வீட்டில் சிறை வைத்த காதலியை மீட்டு எங்கு வைத்து திருமணம் செய்வது என நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார். மேலும் காதலியிடமும் செல்போனில் பேசிய அவர் வீட்டை விட்டு எப்படியாவது வெளியே வந்து விடு, பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் என நம்பிக்கையை ஊட்டினார்.

    இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வது போல் பாசாங்கு செய்த ராதிகா, வீட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்தார். பிறகு அங்கு தயாராக மோட்டார் சைக்கிளில் நின்ற காதலன் அனீசுடன் தப்பி சென்று விட்டார்.

    தொடர்ந்து நண்பர்களுடன் சென்ற காதல் ஜோடி கரவிளாகம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே ராதிகாவின் பெற்றோர் தன்னுடைய மகளை அனீஷ் கடத்திச் சென்று விட்டதாக மார்த்தாண்டம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.

    இதனை அறிந்த காதல் ஜோடி நேற்று மாலையும், கழுத்துமாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது எங்களுடைய காதலில் உறுதியாக இருக்கிறோம், சேர்ந்து வாழப் போகிறோம் என போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் சேர்ந்து வாழ போலீசார் அனுமதித்தனர். இதனால் பெற்றோர் சோகத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.

    • ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இதில் எட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த சமுதாய மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேற்று சமூகப் பெண்களை காதல் திருமணம் செய்து கொண்ட 8 வாலிபர்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 2 பேர் ஊருக்குள் குடியிருந்து வருகின்றனர். மற்றவர்கள் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் திரும்பினர். ஆனால் ஊர் கட்டுப்பாடு காரணமாக கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட காதல் திருமண ஜோடிகள் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து முசிறி தாசில்தார் அலுவலகத்தில் முத்தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் அந்த வாலிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற பூஜைகளிலும், வழிபாடுகளிலும் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் முசிறி போலீஸ் நிலையத்தை நாடினர்.

    அப்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக யாரையும் ஒதுக்கி வைக்க சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து நடைபெற இருந்த பூஜை வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை அதிகாரி கூறும் போது,

    காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் வழிபட எதிர்ப்பு இல்லை. மற்றவர்களைப் போன்று அவர்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்துக் கொள்ளலாம்.

    ஆனால் அவர்களிடமிருந்து கோவில் நிர்வாகம் வரி வசூல் செய்யவில்லை. இதுதான் அங்குள்ள பிரச்சனையாக இருக்கிறது. இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் முப்பூஜைக்கு காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களிடம் வரி வசூல் செய்து ஊர் வழக்கப்படி சில சடங்குகளை செய்து அதன் பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார். ஆனால் இதற்கும் ஒரு தரப்பினர் முட்டுக்கட்டையாக உள்ளனர்.

    காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சரண்யா, மோகன் உடல் இன்று காலை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது
    • கைது செய்யப்பட்ட சக்திவேல், ரஞ்சித் இன்று காலை திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே துலுக்கவெளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் சரண்யா (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இவரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரை சேர்ந்த மோகனும் (32) காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு சரண்யா வீட்டில் அவரது அண்ணன் சக்திவேல் (31) எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சரண்யாவை தனது மைத்துனர் ரஞ்சித்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

    இதனை அறிந்த சரண்யா கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னையில் மோகனை திருமணம் செய்து கொண்டார்.

    அதிர்ச்சியடைந்த சக்திவேல் புதுமண தம்பதிக்கு விருந்து வைக்க வேண்டும் என கூறி அவர்களை சென்னையில் இருந்து வரவழைத்தார். பின்னர் இருவரையும் சக்திவேல், ரஞ்சித் ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சரக டி.ஐ.ஜி.கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மற்றும் சோழபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரண்யா, மோகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேல், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இந்நிலையில் சரண்யா, மோகன் உடல் இன்று காலை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சரண்யாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மோகன் உடலை வாங்க உறவினர்கள் வரவில்லை. அதாவது அவருக்கு நெருங்கிய சொந்தம் என கூறி யாரும் வரவில்லை. அவரது தாயும் மனநல சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு என்ன நடந்தது என கூட தெரியாது.

    இதையடுத்து போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையாக மோகனின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரில் உள்ள கிராம நாட்டாண்மைகள், முக்கியஸ்தர்களிடம் போன் செய்து தகவல் தெரிவித்தனர். அதற்கு கிராம நாட்டாண்மைகள் மிகுந்த சோகத்துடனே போலீசாரிடம் பேசி உள்ளனர்.

    மோகன் நல்ல பையன். அனைவரிடமும் அன்பாக பேசுவான். ஊர் மக்களிடம் அவனுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. நேற்று அவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து கவலை அடைந்தோம். கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    அவரது உடலை வாங்க நெருங்கிய சொந்தம் என்று யாரும் கிடையாது. ஊர் மக்களாகிய நாங்கள் தான் அவருக்கு எல்லாம். அவரது உடலை வாங்க நாங்கள் வருகிறோம். அனைத்து காரியங்களும் செய்து அடக்கம் செய்வோம் என கூறினர்.

    இதனை தொடர்ந்து ஊரில் இருந்து கிராம நாட்டாண்மைகள் புறப்பட்டு கும்பகோணத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்த உடன் மோகன் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட சக்திவேல், ரஞ்சித் இன்று காலை திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    முன்னதாக ரஞ்சித் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நான் சரண்யாவின் உறவினர். இருவரும் பேசி பழகி வந்தோம். இதனால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். இதுகுறித்து அவரது அண்ணன் சக்திவேலிடம் கூறியபோது அவரும் சம்மதம் தெரிவித்தார். இதனால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என சந்தோஷத்தில் திளைத்தேன். ஆனால் இடையில் மோகன் புகுந்து சரண்யாவை காதலித்தார். இதனால் சரண்யாவை திருமணம் செய்துகொள்ளும் எனது எண்ணம் நடக்காமல் போய் விடுமோ என அஞ்சினேன்.

    ஆனால் அதற்குள் சரண்யா, மோகனை திருமணம் செய்து கொண்டார். எனக்கு ஆத்திரம் மேலும் அதிகரித்தது. இதனால் சக்திவேலிடம் பேசி இருவரும் சேர்ந்து தம்பதியை தீர்த்து கட்டுவோம் என கூறி சக்திவேல் மனதை மாற்றினேன். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து தம்பதியை தீர்த்து கட்டினோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சரண்யா தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலனை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.
    • தங்கள் மகள் காதல் திருமணம் செய்துகொண்ட தகவலை அறிந்து சரண்யாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 24). இவர், நர்சிங் படித்துவிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது தாயார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தனர். அங்கு தாயாருக்கு உதவியாக சரண்யா உடன் இருந்து கவனித்து வந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொன்னூரை சேர்ந்தவர் மோகன்(31). இவரது தாயாரும் மனநலம் பாதிக்கப்பட்டு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தாயாருக்கு உதவியாக மோகன் உடன் இருந்து கவனித்து வந்தார்.

    சரண்யாவின் தாயாரும், மோகனின் தாயாரும் ஒரே இடத்தில் அருகருகே உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்ததால் மோகனும், சரண்யாவும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர்.

    இதனால் இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சரண்யாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதனை அறிந்ததும் சரண்யாவின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலை சரண்யாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர்.

    இதனையடுத்து சரண்யாவை தங்கள் உறவினர் வகையில் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க சரண்யாவின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனால் சரண்யாவுக்கு தங்கள் உறவு வகையில் ஒரு மாப்பிள்ளையை தேடினர். இதனையடுத்து சோழபுரம் அருகே உள்ள தேவனாஞ்சேரியை சேர்ந்த ரஞ்சித் என்பவரை சரண்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    தனது பெற்றோர் தனது காதலை ஏற்றுக்கொள்ளாமல் வேறு இடத்தில் தனக்கு மாப்பிள்ளை பார்த்ததை அறிந்து சரண்யா மிகுந்த வேதனை அடைந்தார். இந்த தகவலை தனது காதலன் மோகனிடம் சரண்யா தெரிவித்தார்.

    தனது பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடக்காது என்று முடிவு செய்த சரண்யா தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலனை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார். இந்த விவரத்தை சரண்யா தனது காதலனிடம் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

    தங்கள் மகள் காதல் திருமணம் செய்துகொண்ட தகவலை அறிந்து சரண்யாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இருவரையும் தீர்த்துக்கட்டுவது என்று முடிவு செய்தனர். இது தொடர்பாக சரண்யாவின் குடும்பத்தினர் தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர்.

    இதனைத்தொடர்ந்து சரண்யாவின் அண்ணன் சக்திவேல் சரண்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எங்களுக்கு தெரியாமல் நீ திருமணம் செய்து கொண்டு விட்டாய். நடந்தது, நடந்ததாக இருக்கட்டும். உங்களுக்கு நாங்கள் விருந்து வைக்க வேண்டும். எனவே நீங்கள் இருவரும் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார்.

    இதை உண்மை என்று நம்பி இருவரும் நேற்று சென்னையில் இருந்து சோழபுரம் துலுக்கவேலிக்கு வந்தனர். நேற்று மாலை புதுமண தம்பதி இருவரும் சரண்யாவின் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல்(31) மற்றும் சக்திவேலின் உறவினரும், சரண்யாவுக்கு நிச்சயம் செய்து இருந்த மாப்பிள்ளையுமான தேவனாஞ்சேரியை சேர்ந்த ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டு வாசலில் வைத்து புதுமணத்தம்பதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அதே இடத்தில் இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்ட இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களது உடல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கொலை சம்பவம் குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை வலைவீசி தேடி வந்தனர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×