search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீர்"

    • கடந்த சில மாதங்களாக இது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    • நோய் தொற்று பரவும் அபாயம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி 20-வது வார்டில் மெரிலஸ் அப்பர் பஜார் என்ற பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கான அங்கு ஒரு சாலையிலும் உள்ளது.

    அந்த சாலையை பயன்படுத்தி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கழிவு நீர் செல்ல முடியாமல் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. கடந்த சில மாதங்களாக இது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    சாலையில் கழிவு நீர் வழிந்தோடுவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைகின்றனர். சாலையில் நடந்து செல்ல முடியாமலும் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் அந்த வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலையே காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்து ள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, குடியிருப்பு நிறைந்த பகுதியில் சாலையில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதுமட்டுமின்றி துர்நாற்றம் வீசுவதுடன், நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கயைாக உள்ளது.

    • சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
    • கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இரண்டு நாட்கள் லேசான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சட்டநாதபுரம் கொள்ளிடம் திருமுல்லைவாசல் திருவெண்காடு பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழையும் கொள்ளிடத்தில் 2.46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதி சாலைகளில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாகவே இயக்கி வருகின்றனர்.

    மேலும் வைத்தீஸ்வரன் கோவில் நகர் பகுதிகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் தேங்கிக் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் எனவும் முறையான கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மானாமதுரையில் கழிவுநீர் கால்வாய் தூய்மை பணி தொடக்கப்பட்டது.
    • மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. 27-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாரியப்பன்கென்னடி கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் மழை நேரங்களில் கால்வாய் வழியாக மழைநீர் செல்ல முடியாத நிலை இருந்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றிய பின்னர் கால்வாய்கள் வழியாக மழை தண்ணீர், கழிவு நீர் தடையின்றி செல்வது கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக 1300 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் சொந்த வீடில்லாதவர்கள் விண்ணப்பித்து வீடுகளை பெற்றுள்ளனர்.

    கடந்த ஓராண்டாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமானம் சரியில்லை எனவும் கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்படாமல் உள்ளதால் டிரைனேஜ் கழிவுநீர் பொதுமக்கள் செல்லும் பாதையிலேயே வழிந்து ஓடுவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் வீடுகளில் நீர்க்கசிவு அதிக அளவில் இருப்பதால் சுவர்கள் சேதம் அடைவதாகவும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருவதால் வாடகை வீட்டில் இருந்தபோது ஏற்பட்ட பாதுகாப்பான உணர்வு கூட தற்போது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மேயர் மகேஷ் எச்சரிக்கை
    • தூய்மை பணி தொடக்கம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே வடக்கு கோணத்தில் அனந்தன் குளம் உள்ளது. இந்த குளத்தில் ஏற்கனவே படகு சவாரி விடப்பட்டு இருந்தது. போதுமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வராததால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த குளத்தில் தற்போது ஏராளமான குப்பைகள் கொட்டப்படுவதாகவும் குடிமகன்கள் தொந்தரவு செய்வதாகவும் மேயர் மகேஷுக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த வாரம் மேயர் மகேஷ் குளத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

    அதன்படி இன்று அனந்தன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மாநகராட்சி மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் குளத்தின் கரையில் கிடந்த முட்புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அனந்தன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனில் பொதுமக்கள் யாரும் இந்த குளத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது. வீடுகளில் இருந்து கழிவுகள் விடப்படுவதாகவும் புகார்கள் வந்தது. வீடுகளில் இருந்து கழிவுகளை குளத்தில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் உறிஞ்சிக்குழாய்கள் அமைக்க வேண்டும். பொதுமக்கள் இந்த பகுதியில் மது அருந்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். குளத்தின் கரையில் இருந்து பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதைத்தொடர்ந்து மீண்டும் குளத்தில் படகு சவாரி விட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேயர் மகேஷிடம் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் உறுதி அளித்தார். ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம்குமார் பங்குதந்தை சூசை ஆண்டனி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, கவுன்சிலர் சிஜி பிரவீன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.

    புதுடெல்லி:

    கழிவுநீரை மனிதர்கள் அகற்றுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடந்தது. இன்று வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து தீர்ப்பு வழங்கினர்.

    சாக்கடைகளில் கழிவுநீரை அகற்றும் போது தொழிலாளி உயிரிழந்தால் அவரது குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் நிவாரணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்க வேண்டும்.

    கழிவுநீர் அகற்றும் போது தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்து நிரந்தரமாக உடல் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடாக குறைந்தது ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். தொழி லாளிக்கு மற்ற குறைபாடுகள் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை வழங்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு அமைப்புகள் ஒருங்கிணைக்க வேண்டும். கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
    • மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    சென்னை:

    சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் சமீபத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டது. பெரும்பாலான தெருக்களில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்ட நிலையில் சில இடங்களில் இன்னமும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.

    இந்த பணிகள் காரணமாக சில தெருக்களில் கழிவுநீர் தேங்கும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக முகப்பேர் கிழக்கில் உள்ள நக்கீரன் சாலை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த தெருவில் சுமார் 3 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளன. அந்த தெரு மக்கள் கழிவுநீர் மீதுதான் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் தொடங்கப்பட்ட போது பல தெருக்களில் இதே பிரச்சினை ஏற்பட்டது. கழிவுநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.

    என்றாலும் நக்கீரன் சாலையில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்தது இன்னமும் சரி செய்யப்படவில்லை. மேலும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மழைநீர் கால்வாயில் விடப்படுவதால் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து முகப்பேர் கிழக்கு பகுதியில் பல தெருக்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கும் நிலை நீடிக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    புகார்கள் தெரிவிக்கப்படும் தெருக்களுக்கு அதிகாரிகள் வராமலேயே புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக ஆன்லைனில் தெரிவிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

    குடிநீர் வாரிய அதிகாரிகள் பெரும்பாலான தெருக்களில் தேங்கி உள்ள நீரை அகற்றுகிறார்கள். என்றாலும் அவர்களால் முழுமையாக பணி செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    முகப்பேர் கிழக்கில் 92, 93-வது வார்டுகளில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது. பழுதடைந்த கழிவுநீர் குழாய்கள் இன்னும் 3 நாள் முதல் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.
    • குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.

    இந்த குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணை செயலாளர் பொன். ரமேஷ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. அதேபோல் தனியார் மற்றும் பொது கழிப்பறையில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரும் வாய்க்கால்களில் கலக்கிறது. சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதை தடை செய்ய வேண்டும். வாய்க்கால்களில் அதிக அளவு செடி, கொடிகள் முளைத்துள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமல் பணப்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல் நச்சுத்தன்மை உள்ள சாக்கடை கழிவு நீர் கலந்து செல்வதால் மகசூல் பாதிக்கிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதில் நஞ்சை இடையாறு மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரதாப், நஞ்சை இடையாறு சுமதி விசுவநாதன், உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர், பொன்மலர்பாளையம் பா.ம.க., மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நஞ்சை குமார், வினோத், கபிலன், கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தாசில்தார் மதிவாணன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் ஒன்றியத் திற்குட்பட்ட ஆங்காடு, சோழவரம், நல்லூர், பகுதி களில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழைக்காலங்களில் வழிந்தோடும் மழைநீர் கால்வாய் அடைப்புகளால் வெளியே செல்ல முடியாமல் சோழவரம் செங்காளம்மன் கோவில் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர்கள் ஆகியோருடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சோழவரம் பகுதியில் வீடுகளில் எடுக்கப்படும் கழிவு நீரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், லாரிகளில் வருவதால் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் மழை நீரில் கழிவுநீர் கலந்து ஊருக்குள் செல்வதாகவும் சோழவரம் ஊராட்சி தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து தேசிய நெஞ்சாலையில் கழிவு நீரை கொட்டும் லாரி, டிராக்டர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தாசில்தார் மதிவாணன் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம் நடந்தது.
    • முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றுவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் கழிவுநீர் சேகரிப்பு, தொட்டிகளிலிருந்து கழிவுநீரை எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகள் பற்றி கழிவுநீர்ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடக்கிவைத்தார். துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல்அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். இந்த முகாமில் நவீன முறையில் பாதுகாப்பாக கழிவுநீர்களை சுத்தம் செய்யும் முறை பற்றி தூய்மை இந்தியா திட்ட முதன்மை பயிற்றுநர் ராம்குமார், சுகாதாரபணிஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் பயிற்சியளித்தனர். மதுரை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரூராட்சி செயல்அலுவலர்கள், 18 சுகாதார பணி மேற்பார்வையாளர்கள், கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.

    • மண்டல உதவி ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார்.
    • குடிநீர் பிரச்சினையை போக்க கவுன்சிலர்கள் மனு அளித்தால் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எம்.ஆர்.எப்., சாலை 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்துதல் உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மண்டல குழு தலைவர் தனியரசு பேசுகையில், குடிநீர் பிரச்சினையை போக்க கவுன்சிலர்கள் மனு அளித்தால் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடலோரப் பகுதிகளில் 3000 தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாயில் முறைகேடாக இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை கண்டறிய குழு அமைக்கப்படும் அவ்வாறு கண்டறியப்பட்டு மழை நீர் கால்வாயில் கழிவு நீரை விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    • நூலகத்தின் முதல் தளத்தில் உள்ள கழிவறையில் கசிவு காரணமாக கழிவு நீர் வெளியேறி வருகிறது.
    • கடந்த மூன்று மாதங்களாக குளியலறையில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது.

    சென்னை:

    சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம் 56 ஆண்டுகள் பழமையானது. இங்கு லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.

    இந்தநிலையில் நூலகத்தின் முதல் தளத்தில் உள்ள கழிவறையில் கசிவு காரணமாக கழிவு நீர் வெளியேறி வருகிறது. சுவர்களில் ஈரம் படர்ந்து காணப்படுகிறது.

    அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் தரையில் செல்கிறது. மேற்கூரையில் இருந்து கழிவுநீர் கசிந்து தரையில் விழுகிறது. கடந்த மூன்று மாதங்களாக குளியலறையில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது.

    இதனால் தரையில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி இருக்கிறது. மேலிருந்து விழும் தண்ணீரை பிடிக்க வாளிகளை வைத்துள்ளார்கள். கழிவு நீர் காரணமாக பல புத்தகங்கள் தண்ணீரில் நனைந்துள்ளன. இதனால் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் சேதமடையும் அபாயம் உள்ளது.

    இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பில் கூறும் போது, "சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்த நிலத்தடி கட்டுமானப் பணியின் போது முதல் மற்றும் 2-வது மாடியில் உள்ள குளியலறைகள் மூடப்பட்டன.

    தற்போது குளியலறைகளில் இருந்து கழிவு நீர் கசிவதில் புத்தகங்கள் சேத மடைவதோடு மட்டு மல்லாமல், கட்டிடத்தின் கட்டமைப்பையும் பாதிக்கலாம். நூலகத்தை சீரமைக்க ரூ.37 லட்சத்துக்கு அரசிடம் கருத்துரு சமர்பிக்கப்பட்டுள்ளது. பணியை தொடங்குவதற்கு அனுமதிக்க காத்திருக்கிறோம்" என்றனர்.

    மெட்ரோ பணி முடிந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என நூலக ஊழியர்கள் தெரிவித்து வந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    பொது நூலக இயக்குனரக அதிகாரிகள் கூறும் போது, நூலகத்தை புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.

    ×