என் மலர்
உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் தேங்கி கிடப்பதையும், புகார் தெரிவித்த குடியிருப்புவாசிகளையும் படத்தில் காணலாம்.
திருப்பூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு
- கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக 1300 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் சொந்த வீடில்லாதவர்கள் விண்ணப்பித்து வீடுகளை பெற்றுள்ளனர்.
கடந்த ஓராண்டாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமானம் சரியில்லை எனவும் கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்படாமல் உள்ளதால் டிரைனேஜ் கழிவுநீர் பொதுமக்கள் செல்லும் பாதையிலேயே வழிந்து ஓடுவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வீடுகளில் நீர்க்கசிவு அதிக அளவில் இருப்பதால் சுவர்கள் சேதம் அடைவதாகவும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருவதால் வாடகை வீட்டில் இருந்தபோது ஏற்பட்ட பாதுகாப்பான உணர்வு கூட தற்போது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






