search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த கழிவுநீர்: தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்
    X

    3 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த கழிவுநீர்: தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்

    • தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
    • மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    சென்னை:

    சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் சமீபத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டது. பெரும்பாலான தெருக்களில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்ட நிலையில் சில இடங்களில் இன்னமும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.

    இந்த பணிகள் காரணமாக சில தெருக்களில் கழிவுநீர் தேங்கும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக முகப்பேர் கிழக்கில் உள்ள நக்கீரன் சாலை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த தெருவில் சுமார் 3 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளன. அந்த தெரு மக்கள் கழிவுநீர் மீதுதான் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் தொடங்கப்பட்ட போது பல தெருக்களில் இதே பிரச்சினை ஏற்பட்டது. கழிவுநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.

    என்றாலும் நக்கீரன் சாலையில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்தது இன்னமும் சரி செய்யப்படவில்லை. மேலும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மழைநீர் கால்வாயில் விடப்படுவதால் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து முகப்பேர் கிழக்கு பகுதியில் பல தெருக்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கும் நிலை நீடிக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    புகார்கள் தெரிவிக்கப்படும் தெருக்களுக்கு அதிகாரிகள் வராமலேயே புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக ஆன்லைனில் தெரிவிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

    குடிநீர் வாரிய அதிகாரிகள் பெரும்பாலான தெருக்களில் தேங்கி உள்ள நீரை அகற்றுகிறார்கள். என்றாலும் அவர்களால் முழுமையாக பணி செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    முகப்பேர் கிழக்கில் 92, 93-வது வார்டுகளில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது. பழுதடைந்த கழிவுநீர் குழாய்கள் இன்னும் 3 நாள் முதல் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×