search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏக்நாத் ஷிண்டே"

    • தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெயரும் உள்ளது.
    • 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஷிண்டே அரசு கவிழும் அபாயத்தை சந்திக்கும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு காலம் சுழற்றி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் முதல்-மந்திரி பதவியை சிவசேனாவுக்கு 2½ ஆண்டு காலம் விட்டுக்கொடுக்க பா.ஜனதா மறுத்து விட்டது.

    இதனால் நீண்ட கால நட்பு கட்சிகளாக விளங்கிய பா.ஜனதா- சிவசேனா கூட்டணி எதிர்பாராத வகையில் உடைந்தது. சிவசேனா கட்சி தனது இந்துத்வா கொள்கைக்கு முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அதிரடியாக ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    இந்த தடாலடி அரசியல் திருப்பத்தை எதிர்பார்க்காத பா.ஜனதா, உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க திரைமறைவில் காய்நகர்த்தி வந்தது. அந்த வலையில் சிவசேனாவின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே விழுந்தார். ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலருடன் திடீரென மாயமானார். அவர்கள் குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அசாம் தலைநகர் கவுகாத்தியில் முகாமிட்டனர்.

    சிவனோவின் 57 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் ஷிண்டே பக்கம் சாய்ந்ததால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கி பா.ஜனதா மற்றொரு அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி சிவசேனா அதிருப்தி அணி- பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது.

    இந்த தருணங்களில் நடந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதில் முக்கியமாக ஷிண்டே தரப்பை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அரசு எடுத்த நடவடிக்கை, கட்சி தாவல் விவகாரம், கவர்னர் மற்றும் சபாநாயகரின் அதிகாரத்தில் எழும் கேள்விகள் போன்ற விஷயங்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. கடந்த மார்ச் 16-ந் தேதி விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது.

    தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெயரும் உள்ளது. இதனால் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஷிண்டே அரசு கவிழும் அபாயத்தை சந்திக்கும்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகும் இன்றைய தீர்ப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை எகிற செய்துள்ளது.

    இதற்கிடையே சிவசேனாவின் சின்னம் மற்றும் கட்சி பெயரை முதல்-மந்திரி ஷிண்டே வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
    • ஏக்நாத் ஷிண்டே அங்கு சரயு நதியில் பூஜை செய்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

    இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்த ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக பதவியேற்றதும் விரைவில் அயோத்தி சென்று ராமரை வழிபடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கட்சியின் மூத்த எம்.பி,க்கள், எல்.எல்.ஏ.க்கள் அயோத்தி சென்றனர்.

    அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குச் சென்று அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது ஏக்நாத் ஷிண்டே, அங்கு சரயு நதியில் பூஜை செய்தார். பின்னர் அயோத்தியில ராமர் கோவில் கட்டும் பணி நடைபெறும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்

    • வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்கிறேன்.
    • பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள்.

    மும்பை :

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தரப்பினர் அவருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். இந்தநிலையில் இதுதொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது:-

    மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அவமதித்து உள்ளார். வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்கிறேன். பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள்.

    சாவர்க்கரை அவமதித்த ராகுல் காந்தியை உத்தவ் தாக்கரே தரப்பினர் ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது. அவர்களுக்கு இந்துத்வா பற்றி பேச அருகதையில்லை.

    ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 'காவலாளியே திருடன் ' என கூறினார். அப்போது மக்கள் அவருக்கு தேர்தல் தோல்வி மூலம் பாடம் கற்றுகொடுத்தனர். அவர் வெளிநாட்டில், நாட்டின் பிரதமர் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பேசினார். பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தி பாரதத்தை துண்டாடுதல் குறித்து பேசியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவா் கூறியுள்ளார்.

    • நான் பாலாசாகேப்பின் சித்தாந்தம் மற்றும் மரபின் வாரிசு.
    • எங்களை துரோகிகள் என்று சொல்ல உத்தவ் தாக்கரேவுக்கு உரிமை இல்லை.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேத் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார்.

    இந்தநிலையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் அதே இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார்.

    இதில் முதல்-மந்திரி ஷிண்டே உத்தவ் தாக்கரேவை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தனது சொந்த கட்சியினரின் அரசியல் வாழ்க்கையை அழிக்க மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து சதி செய்த ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. நான் துரோகி இல்லை, சுயமரியாதை உள்ளவன். எங்களை துரோகிகள் என்று சொல்ல உத்தவ் தாக்கரேவுக்கு உரிமை இல்லை. கஜானன் கீர்த்திகர், ராம்தாஸ் கதம் போன்ற மூத்த தலைவர்கள் சிவசேனாவை வலுப்படுத்த பாலாசாகேப்புடன் தோளோடு, தோள் நின்று உழைத்தனர். ஆனால் நீங்கள் அவர்களை துரோகிகள் என்று கூறுகிறீர்கள். நாங்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

    நான் வீட்டில் உட்கார்ந்துகொண்டு உத்தரவு போடும் முதல்-மந்திரி அல்ல. நெருக்கடியான நேரத்தில் களத்தில் இறங்குவேன். 2 முறை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளேன். நான் எப்போதும் களத்தில் உழைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை துரோகி என்று அழைக்கிறீர்கள்.

    உத்தவ் தாக்கரே பாலாசாகேப் தாக்கரேவின் சொத்துகளுக்கு வாரிசாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிடம் அடகு வைத்த சித்தாந்தத்திற்கு அவர் வாரிசு இல்லை.

    நான் பாலாசாகேப்பின் சித்தாந்தம் மற்றும் மரபின் வாரிசு. பாலாசாகேப் பால் தாக்கரே தனது தந்தையாக இருப்பதை விட மிகவும் பெயரிவர் என்பதை உத்தவ் தாக்கரே அறிந்துகொள்ள வேண்டும்.

    எனக்கு உங்கள் சொத்துக்கள் வேண்டாம். பாலாசாகேப் உங்கள் தந்தையாக இருக்கலாம். ஆனால் அனுதாபத்தை பெறுவதற்காக அதைப்பற்றி கூறிக்கொண்டே இருக்காதீர்கள்.

    மாநில தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத, தனது கட்சிக்கு கூட பொறுப்பேற்க முடியாத ராகுல் காந்தி அல்லது தேசபக்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி இதில் யார் வேண்டும் என்பதை சிவசேனா தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

    • கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.
    • கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது.

    மும்பை :

    மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    மாநில அரசு சாமானிய மக்களின் துயரை தீர்க்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, தங்களின் சிரித்த முகத்தை வெளியில் காட்டிக்கொள்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.

    கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது. ஆனால் இதுவரை அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ நிவாரண தொகை சென்று சேரவில்லை. மராட்டியம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நான் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இதை நான் கவனித்தேன்.

    பணவீக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. இருப்பினும் விவசாய விளை பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கவில்லை.

    எனவே கூட்டத்தொடரை முன்னிட்டு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு நடத்தும் வழக்கமான தேனீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

    இதற்கு பதிலாக புதிய கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்து எங்கள் கவலைகளை அவருடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தவ் பாலாசாகேப் சிவசேனாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே, "அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகரங்களின் பெயரை சத்ரபதி சாம்பாஜிநகர் மற்றும் தாராஷிவ் என மாநில அரசு மாற்றி உள்ளது.

    இந்த 2 மாவட்டங்களின் பெயர்களையும் மாற்றலாம் என்று மத்திய அரசு, மாநில அரசுக்கு அனுப்பிய தகவலில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இதை செயல்படுத்த அரசு தவறிவிட்டது" என்றார்.

    • கோர்ட்டு வழக்குகள், முக்கியமான விஷயங்களை ஏக்நாத் ஷிண்டே பார்த்து கொள்வார்
    • மக்களை பொறுத்தவரை சிவசேனாவும், தாக்கரேவும் ஒன்று தான்.

    மும்பை :

    சிவசேனா கட்சி கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 ஆக உடைந்தது. யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது.

    ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்த போதும், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரே வகித்து வரும் கட்சி தலைவர் (சிவசேனா பக்சா பிரமுக்) பதவியை ஏற்பதை தவிர்த்து உள்ளார்.

    கட்சி உடைந்த போது ஏக்நாத் ஷிண்டே அவருக்கு முதன்மை தலைவர் (முக்கிய நேத்தா) என்ற பதவியை உருவாக்கி கொண்டார். தொடர்ந்து அவர் அந்த பதவியில் நீடிக்க உள்ளார். உத்தவ் தாக்கரே வகித்து வரும் பதவியை தற்போது எடுத்துகொண்டால், அது தாக்கரே மீது மக்கள் இடையே அனுதாபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா பக்சா பிரமுக் பதவியை ஏற்கவில்லை எனக்கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் கட்சியில் அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஏக்நாத் ஷிண்டே வசம் தான் இருக்கும் என அவர் தரப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

    இதுதொடர்பாக ஷிண்டே தரப்பு செய்தி தொடர்பாளர் சீத்தல் மாத்ரே கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே தான் எங்கள் முதன்மை தலைவர். தொடர்ந்து அவர் அந்த பதவியில் இருப்பார். எங்கள் செயற்குழுவிடம் எல்லா உரிமைகளும் உள்ளன. கோர்ட்டு வழக்குகள், முக்கியமான விஷயங்களை ஏக்நாத் ஷிண்டே பார்த்து கொள்வார்" என்றார்.

    ஷிண்டே தரப்பை சேர்ந்த மூத்த தலைவர் கூறுகையில், "உத்தவ் தாக்கரேயை அவரது பதவியில் இருந்து நீக்கி எந்த அறிவிப்பையும் வெளியிட நாங்கள் விரும்பவில்லை. மக்களை பொறுத்தவரை சிவசேனாவும், தாக்கரேவும் ஒன்று தான். ஏக்நாத் ஷிண்டேவை தலைவராக நியமித்தால் அது தவறாக போய்விடும். தாக்கரே தரப்புக்கு அனுதாப அலையால் ஆதாயம் ஏற்பட கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். இந்த அடிப்படையில் சிவசேனா பவன், சாக்கா அலுவலகங்களை உரிமைகோர மாட்டோம் என ஏக்நாத் ஷிண்டே கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார்" என்றாா்.

    சிவசேனா தலைவர் பதவி விவகாரத்தில் ஷிண்டே சிவசேனாவினர் பாதுகாப்பாக காய்நகர்த்தி இருப்பதாக உத்தவ் தாக்கரே அணி செய்தி தொடர்பாளர் மனிஷா காயன்டே கூறியுள்ளார்.

    • சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.
    • சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்.

    மும்பை :

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக விமர்சித்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டேயை அவதூறாக பேசியதாக தானேயில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. தன்னை கொலை செய்ய சதி செய்வதாக சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக சஞ்சய் ராவத், மும்பை போலீஸ் கமிஷனருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் எனது பாதுகாப்பு திரும்பபெறப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குண்டர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து இருந்தேன். இந்தநிலையில் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. என்னை கொலை செய்ய தானே ரவுடி ராஜா தாக்குரை ஏவி உள்ளதாக எனக்கு இன்று தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலை நான் உறுதி செய்து உள்ளேன். என் மீது தாக்குதல் நடத்த ரவுடி ராஜா தாக்குர் தயராகி வருகிறார். பொறுப்பு உள்ள குடிமகனாக இந்த தகவலை நான் உங்களுக்கு கூறுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஷிண்டே தரப்பு மறுத்து உள்ளது. இது தொடர்பாக அவரது ஆதரவு எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் கூறுகையில், "சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். அவர் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் சஞ்சய் ராவத் இதேபோல பல குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். அதில் எந்த ஆதாரமும் இருக்காது. அவர் கூறுவது போல ஸ்ரீகாந்த் ஷிண்டே ஒருபோதும் செய்ய மாட்டார் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்படும்" என்றார்.

    சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கூறுகையில், "இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக இந்த துரோக எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அடங்குவதில்லை. மாகிமில் ஒரு எம்.எல்.ஏ. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.

    • சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
    • ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியது.

    மும்பை:

    சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே மேல் முறையீடு செய்துள்ளார்.

    இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, ஷிண்டே அணியினருக்கு சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைவர் ராகுல் ஷெவாலே எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த மக்களவை செயலகம், பாராளுமன்றக் கட்டிடத்தில் சிவசேனா அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட அறை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

    • பா.ஜனதா சிவசேனாவை அழிக்க திட்டம் போடுகிறது.
    • கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருட முடியும்.

    உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    பா.ஜனதா சிவசேனாவை அழிக்க திட்டம் போடுகிறது.

    எங்களின் கட்சி பெயர், சின்னத்தை திருடியது மிகப்பெரிய சதித்திட்டம். கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருட முடியும். தாக்கரே என்ற பெயரை யாரும் எங்களிடம் இருந்து திருட முடியாது.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி என்னை தொடர்பு கொண்டு ஆதரவாக பேசினர். பீகார் நிதிஷ் குமாரும் தொடர்பு கொண்டார். அவரின் அழைப்பை எடுக்க முடியாமல் போய்விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் சிவசேனாவின் கட்சி நிதி குறித்த கேள்விக்கு உத்தவ் தாக்கரே அளித்த பதிலில், "கட்சி நிதி பரிமாற்றம் குறித்து பேச தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை, அது ஒரு சுல்தான் போல செயல்பட முடியாது. நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கும், அரசியல் கட்சிக்குள் உள் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் மட்டுமே அதன் பங்கு உள்ளது.

    கட்சி நிதி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டால், கிரிமினல் வழக்கு தொடரப்படும்" என்றார்.

    சிவசேனாவின் பல்வேறு சொத்துக்களை ஷிண்டே பிரிவினர் கையகப்படுத்துவது குறித்த கேள்விக்கு, "எனது தந்தையின் (மறைந்த பால் தாக்கரே) பெயரையும், அவரது புகைப்படத்தையும் பயன்படுத்துவதை நிறுத்த அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?. அவர் (ஷிண்டே) அவரது தந்தையின் புகைப்படத்தை வைத்து வாக்கு கேட்கட்டும்" என்றார்.

    • சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.
    • ஷிண்டே அணிக்கு சிவசேனா சின்னம் வழங்கியது ஜனநாயக படுகொலை என உத்தவ் தாக்கரே கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.

    அதன்பின், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே மாநில முதல் மந்திரி ஆனார்.

    இதையடுத்து, சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

    ஆனால் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.

    இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.

    உத்தவ் தாக்கரே அணி சிவசேனா உத்தவ் பாலாசாகிப் தாக்கரே அணி என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். சிவசேனா சின்னத்தைத் திருடி விட்டனர். நாங்கள் போராடுவோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். தனது திருட்டால் இப்போதைக்கு ஷிண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒருமுறை துரோகி என்றால், எப்போதுமே துரோகி தான். ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியும், சின்னமும் வழங்கப்பட்டது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.

    • பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினார்.
    • ஷிண்டே அணியினர் தாங்களாகவே விலகிச் சென்தால் உரிமை கோர முடியாது என்று உத்தவ் குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    அதன்பின்னர் சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் வில், அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தனது பக்கம் இருப்பதால், சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.

    இதேபோல் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். 'ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சியின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது,' என்று உத்தவ் குறிப்பிட்டார்.

    இரு தரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இன்று உத்தரவு பிறப்பித்தது. உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா தான் சட்டப்பூர்வமான சிவ சேனா என்று கூறியது. அத்துடன், சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் வில், அம்பு சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிட உத்தவ் தரப்பு முடிவு செய்துள்ளது.

    • சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது.
    • ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.

    தானே :

    தானேயில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மண்ணின் மைந்தர்களின் உரிமைக்காக போராட்டங்களை நடத்தி வந்த சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மண்ணின் மைந்தர்களின் குறிப்பாக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்துகிறோம். இளைஞர்கள் இதன் ஒரு பகுதியாக மாறி உள்ளனர். இதனால் புதிய மற்றும் வலுவான சிவசேனா தற்போது உருவாகி வருகிறது.

    பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாகேப் பஞ்சி சிவசேனாவின் கூட்டணி அரசு மக்களை பிளவுபடுத்துவதை தவிர மராட்டியத்திற்கு வேறு எதுவும் செய்யவில்லை.

    இந்த துரோகிகளின் அரசாங்கம் அடுத்த 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும். நம்மை விட்டு பிரிந்தவர்கள் துரோகிகள், எங்களுடன் கைகோர்த்து நிற்பவர்கள் உண்மையான சிவசேனா தொண்டர்கள்.

    வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் திட்டங்களை பற்றி சிந்திக்காமல், எப்படி அரசியல் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே ஆளும்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இதுவரை ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த ராஜன் விச்சாரே, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    ×