search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என் மண் என் மக்கள்"

    • கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.
    • மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசனை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பாஜக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக இணைந்துள்ளது.

    கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.

    மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    பாரம்பரியம் மிக்க கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் விலங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாளை பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்.
    • பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாலை உடனான சந்திப்பிறகு பிறகு அவர் கூறியிருப்பதாவது:-



    பாஜக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்கிறது.

    நாளை பிரதமர் மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
    • விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதற்காக கேரளாவில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்திற்கு செல்கிறார். இதற்காக அங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சூலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

    • சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கும் லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
    • மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதால் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் ஆதரவை பெருக்குவதில் பா.ஜனதா அதிரடி வியூகங்களை வகுத்து செயல்படுகிறது.

    கடந்த 2019 தேர்தலில் தமிழகத்தில் உருவான மோடி எதிர்ப்பு அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

    பிரதமர் மோடி தமிழ், தமிழர் கலாச்சாரம் பற்றி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெருமையுடன் அடிக்கடி கூறி வருகிறார்.

    காசி தமிழ் சங்கமம், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் பாரம்பரிய செங்கோல் நிறுவியது போன்றவற்றால் எதிர்ப்பு மறைந்து தமிழர்கள் மத்தியிலும் மோடி ஆதரவு வளர தொடங்கியது.

    இந்த நிலையில் வட மாநிலங்களில் இமாலய வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் எம்.பி.க்கள் வெற்றி பெறாதது டெல்லி தலைவர்கள் மத்தியில் பெரும் மனக்குறையாகவே இருந்து வருகிறது.

    எனவே இந்த தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்புடன் செயல்படுகிறது. ஏற்கனவே ரகசிய சர்வே நடத்தி 10 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறு வேட்பாளர் தேர்வு பிரசார திட்டங்களையும் வகுத்துள்ளார்கள்.

    தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய பிரதமர் மோடியும் தமிழகம் முழுவதும் ரவுண்டு கட்டும் வகையில் பல கட்ட பயண திட்டத்தை வகுத்துள்ளார்.




     வருகிற 27-ந்தேதி பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்ட பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் மாலை மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அன்று மதுரையில் தங்கும் மோடி சில முக்கிய தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    மறுநாள் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று மாலையில் திருநெல்வேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்த முதற்கட்ட பயணத்தில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். முதற்கட்ட பயணத்தை முடித்த பிறகு மீண்டும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடுத்தடுத்து வருவார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

    இந்த நிலையில் மீண்டும் அடுத்த மாதம் மோடி தமிழகம் வருவது உறுதியாகி இருக்கிறது.

    4-ந் தேதி (திங்கள்) அவர் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    சென்னையில் நடைபெறும் பிரசார கூட்டத்தையும் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். பொதுக் கூட்டத்துக்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.

    ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடல், பல்லாவரம் ஆகிய இடங்களை பார்த்துள்ளார்கள். பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் இடத்தை பார்த்து உறுதி செய்த பிறகு, இடம் முடிவாகும் என்றார்கள்.

    சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கும் லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    அடுத்த மாதம் தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில் மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதால் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்தடுத்து தமிழகத்தை குறி வைத்து பா.ஜனதா காய் நகர்த்துவதால் தேர்தல் களம் இப்போதே பரபரப்படைந்துள்ளது.

    • முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.
    • இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்.

    என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை ஆட்டோ ஓட்டுநரில் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.

    அயோத்திக்கு 5 கோடி பேர் செல்வார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. 5 கோடி பேர் வருகையால் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

    உ.பி அரசுக்கு மட்டும் 25 ஆயிரம் கோடி வரியாக கிடைக்கும். ராமர் கோவில் நமக்கு வழிகாட்டுகிறது.

    இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    முழுமையாக சென்னை மாநகரை மாற்ற வேண்டிய நேரம் இது. பள்ளி, சாலை, மருத்துவமனை உள்பட அனைத்தையும் சரிசெய்ய வேண்டிய நேரம் இந்த தேர்தல்.

    மத்தியில் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 198 தொகுதிகளில் அண்ணாமலை யாத்திரையை நிறைவு செய்துள்ளார்.
    • சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இந்த நடைபயண யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.

    ஒவ்வொரு சட்டசபை தொகுதியாக அண்ணாமலையின் யாத்திரை நடந்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இந்த யாத்திரைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

    அண்ணாமலை செல்லும் ஊர்களில் எல்லாம் கூட்டம் திரள்கிறது. அவருக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து செல்பி எடுக்கிறார்கள். இதன் காரணமாக தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இன்றுவரை 198 தொகுதிகளில் அண்ணாமலை யாத்திரையை நிறைவு செய்துள்ளார். நேற்று அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டார்.

    இன்று (சனிக்கிழமை) உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி தொகுதிகளில் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு பேச இருக்கிறார். பூந்தமல்லி நசரத்பேட்டையில் இன்று இரவு 8 மணிக்கு அவரது இன்றைய யாத்திரை நிறைவு பெறுகிறது.

    இன்று இரவு பூந்தமல்லியில் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் இன்று மதியம் வரை அனுமதி வழங்கவில்லை.


    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவரது நடைபயணம் சென்னையில் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் நாளை யாத்திரை செல்ல அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். இந்த யாத்திரையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் சென்னை நடை பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வடமாநிலங்களில் பா.ஜ.க. நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு நடைபயணத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

    என்றாலும் நடைபயணத்தை திட்டமிட்டபடி நடத்த பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மீண்டும் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை சென்னை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சென்னை உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "அண்ணாமலையின் நடைபயண திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் நாளை காலை சென்னையில் நடைபயணம் செல்ல அனுமதிப்பது குறித்து கமிஷனர் இறுதி முடிவு எடுப்பார்" என்று கூறினார்.

    போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைக்காத பட்சத்தில் தடையை மீற பா.ஜ.க. வினர் திட்டமிட்டுள்ளதால் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே அமைந்த கரை புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நாளை மாலை பா.ஜ.க. பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அந்த இடம் மாற்றப்பட்டு உள்ளது.

    அமைந்தகரைக்கு பதில் சென்னை சென்ட்ரல் அருகே மின்ட் தங்க சாலையில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கசாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நட்டா பங்கேற்று உரையாற்றுகிறார் இந்த கூட்டத்துக்கு சென்னை போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர்.
    • ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார்.

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அவர் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை நடைபயணம் செல்லும் இடங்களில் பாரதிய ஜனதா தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட இடத்தில் நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை அங்கு திரளும் மக்கள் மத்தியில் பேசி வருகிறார். அப்போது பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை விளக்கி பேசும் அவர் தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அண்ணாமலையின் நடைபயணம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார களமாகவும் மாறி இருக்கிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்து விட்டு அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தனது பயணத்தை தொடங்கினார்.

    திருத்தணியில் காலையில் நடைபயணத்தை மேற் கொண்ட அவர் மாலையில் திருவள்ளூரிலும் இரவில் ஸ்ரீபெரும்புதூரிலும் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக அவரது நடைபயணம் நடைபெற்றது. இன்று காலையில் அண்ணாமலை கும்மிடிப்பூண்டியில் நடைபயணம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி ரெட்டைமேடு சந்திப்பில் இருந்து தொடங்கிய நடைபயணம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் இன்று பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர். மாவட்ட நிர்வாகிகளும், பாரதிய ஜனதா கட்சியினரும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கும்மிடிப்பூண்டி நடைபயணத்தை முடித்து விட்டு அண்ணாமலை அங்கேயே ஓட்டலில் தங்கினார்.

    பின்னர் மாலையில் ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார். பொன்னேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் பச்சையம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் இருந்து மாலை 5 மணி அளவில் தொடங்கும் நடைபயணம் மீஞ்சூர் முப்பாத்தம்மன் கோவில் பகுதியில் நிறைவடைகிறது.

    இதன் பின்னர் இரவு 7 மணி அளவில் ஆவடி சட்ட மன்ற தொகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். ஆவடி காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கும் நடைபயணம் அங்குள்ள 'டிரெண்ட்ஸ்' ஷோரூம் பகுதி வரை சென்று முடிவடைகிறது.

    இதன் பின்னர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொள்கிறார் இதன் முடிவில் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி திடலில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இந்த பொதுக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.

    • பிப்ரவரி 11-ந்தேதி "என் மண் என் மக்கள்" யாத்திரை 200-வது தொகுதியாக சென்னை வர இருக்கிறது.
    • தற்போது வரை 183 தொகுதிகளை கடந்திருக்கிறோம். பல்லடத்தில் யாத்திரை நிறைவு பெறுகிறது.

    தமிழக பா.ஜனதாவின் தலைமை தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் அமைக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள், மற்றும் பல்வேறு துறைகளுக்கான அறைகள் இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகியோர் முன்னிலையில் இந்த அலுவலகத்தை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-

    கடந்த 2019 தேர்தலை வைத்து பார்க்கும்போது வருகிற ஏப்ரல் 2 அல்லது 3-வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

    பா.ஜனதாவுக்காக காலம் காலமாக உழைத்தவர்களின் ஏக்கமும், கனவும் நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது. இன்னும் 75 நாட்கள் இருக்கிறது. இதுவரை கட்சிக்காக உழைத்து கொண்டிருப்பவர்கள் தங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்.

    என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக இதுவரை 183 சட்டமன்ற தொகுதிகளை சந்தித்துள்ளோம். 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந்தேதி யாத்திரை செல்கிறோம். இதில் ஜே.பி. நட்டா கலந்து கொள்வார். 234-வது தொகுதியாக திருப்பூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது.

    எல்லா தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த 100 பேரை தேடி கண்டுபிடித்து அவர்களில் 10 பேரை மேடையில் ஏற்றி பேச வைத்தோம்.

    ரோட்டில் நடந்து சென்ற யாத்திரையை தாண்டி பல தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறோம். அரசியல் களம் எப்படி மாறி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். இந்த ஆண்டு மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்படும்.

    பிரதமர் மோடி ராமர் சிலை பிரதிஷ்டைக்காக சங்கல்பம் மேற்கொண்டு 11 நாள் விரதம் இருந்தார். அதேபோல் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வருகிற 75 நாட்களும் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மண் என் மக்கள் யாத்திரை வருகிற 25-ந்தேதி பல்லடத்தில் நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி கோவை பகுதிக்கு செல்லவில்லை. எனவே இந்த கூட்டத்தை பல்லடத்தில் நடத்துகிறோம்.

    இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களும் மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பு கிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்.

    கூட்டணியை பொறுத்த வரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்று. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது.

    தி.மு.க. 31 மாதங்களில் செய்துள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவோம். பா.ஜனதா அரசு செய்துள்ள சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்து சொல் வோம். அவர்கள் முடிவு செய்வார்கள்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போவதில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தமிழக பா.ஜனதா தேர்தல் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக சக்கரவர்த்தியும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக நாராயணன் திருப்பதி, நரேந்திரன், நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    • தமிழகத்தை ஒப்பிட பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திற்கும் தகுதி இல்லை என்று கூறினார்.
    • இந்தியா கூட்டணியில் அனைவரும் ஊழல்வாதிகள்.

    வேலூர்:

    கன்னியாகுமாரி மாவட்டத்தில் சாலை பணிகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    அப்போது பீகாரை விட தமிழகத்தின் ராமேஸ்வரம் உட்பட பல மாவட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

    அண்ணாமலைக்கு தைரியம் உள்ளதா?. அவருக்கு தைரியம் இருந்தால் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு அறிக்கையை வைத்து, தமிழகத்தின் ஒரு குக் கிரமாமோ அல்லது மலை வாழ் பகுதி கூட உதாரணமாக வைத்து என்னோடு பொது மேடையில் விவாதிக்கட்டும். அதற்கு அண்ணாமலைக்கு தைரியம் உள்ளதா?, யோக்கியம் உள்ளதா?. நான் தயாராக உள்ளேன்.

    மேலும் மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் தமிழகத்தை ஒப்பிட பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திற்கும் தகுதி இல்லை என்று கூறினார்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை, யோக்கியம் இருக்கிறதா? என்று ஒருமையில் மனோ தங்கராஜ் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தலுக்கு நேரமும் காலமும் உள்ளது.

    அமைச்சர் மனோ தங்கராஜ் விவாதிக்க வருகிறார் என்றால், நான் எங்களின் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரை அனுப்பி வைக்கிறேன். விவாதிப்பதற்கான இடத்தையும் ,நேரத்தையும் மனோ தங்கராஜ் முடிவு செய்யட்டும். மனோ தங்கராஜ் வருவதாக இருந்தால் எங்களின் செய்தி தொடர்பாளர்தான் வருவார். எங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் எப்போது வேண்டுமானாலும் பேசுவார்.

    அவர்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் வருவதாக இருந்தால் பாஜக தலைவரான நான் வருகிறேன். அதற்கு நான் தயாராக உள்ளேன்.

    இதுவரை எந்த தலைவரும் வெளிநாட்டிற்கு 10 நாள் சுற்றுலா போய் பார்த்ததில்லை. ஸ்டாலின் 10 நாட்கள் ஸ்பெயின் சென்றிருந்தார். நம்மை முட்டாள்கள் என தி.மு.க. நினைத்துக் கொண்டிருக்கிறது.

    தற்போது உருவாகியுள்ள இந்தியா கூட்டணியில் அனைவரும் ஊழல்வாதிகள்.


    இதில் முக்கிய ஊழல்வாதிகள் உள்ள இந்த கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியே வருகின்றனர். சிலர் கைதாகிறார்கள்.

    இதற்கு தமிழகத்தில் அமர்ந்து கொண்டு ஸ்டாலின் ஏன் பதறுகிறார் என்று தெரியவில்லை.

    தி.மு.க.வின் டெல்லி ஆசை நிராசையாக தான் இருக்கும். 2024-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை பாருங்கள். இந்த முறை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் தனி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சியை 400 எம்.பி.க்களுக்கு தாண்டி அமர வைப்பார்கள்.

    இத்தனை நாட்களாக தி.மு.க., எம்.பி. க்கள் டெல்லியில் இருந்தார்கள். அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும் பாராளுமன்றத்தில் எத்தனை கேள்வி கேட்டார்கள்?, அவர்கள் தமிழக பிரச்சினை குறித்து என்ன பேசினார்கள்?, அவர்கள் மூலம் தமிழகத்திற்கு என்ன ஆதாயம் கிடைத்தது? என்ற வெள்ளை அறிக்கையை தி.மு.க. கொடுக்கட்டும்.

    விரைவில் ஊழல் பட்டியல்களை வெளியிடுவோம். அண்ணாமலை லிமிட்டை தாண்டிவிட்டார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

    நான் லிமிடுக்குள்ளே தான் உள்ளேன். ரோட்டில் கோடு போட்டு உள்ளார்களா?. இந்த கோட்டை தாண்டி நீ வரக்கூடாது, நானும் வரமாட்டேன் என்று கேட்பதற்கு.

    பங்காளி கட்சிகள்தான் லிமிட்டை கிராஸ் செய்கிறார்கள். 2 பங்காளிகளும் சமரசமாக வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த 5 ஆண்டுகளுக்கு நாங்கள், அடுத்த 5 ஆண்டு உனக்கு என்று. இப்போது பங்காளி கட்சிகளுக்கு கோபம். உண்மையை பேசினால் லிமிட்டை கிராஸ் செய்கிறார் என்பதா?

    2011-ம் ஆண்டு தி.மு.க கொடுத்த 511 வாக்குறுதிகளில், இதுவரை 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?


    இந்த முறை தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்

    பா.ஜ.க. கட்சி எங்களுக்கு பொருட்டு இல்லை என உதயநிதி ஸ்டாலின் கூறினார். அவர் சொல்லட்டும் நல்லது தானே. அவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும். இளைஞரணி மாநாட்டில் காவலா காவலா என்ற பாட்டை போட்டு நடனம் ஆடட்டும். நாங்கள் மக்களோடு நின்று கொண்டிருக்கிறோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் தெரியும் காவலா காவலா ஜெயிக்கிறதா?, இல்லை என் மண் என் மக்கள் ஜெயிக்கிறதா என்று பார்க்கலாம்.

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது யாரையும் வர வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. விருப்பம் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

    11-ந் தேதி தமிழகத்திற்கு ஜே.பி நட்டா வருகிறார். சத்தியமூர்த்தி பவனில் தற்போது யார் சட்டை, வேட்டியை கிழிப்பது? என்று போட்டி நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சி பாரதிய ஜனதாவின் 'பி' டீம் என்று கூறப்படுகிறது. இருக்கட்டும், நாங்கள் மக்களோட 'ஏ' டீம், இந்திய மக்களுடைய 'ஏ' டீம், பாரதிய ஜனதா கட்சி தமிழக மக்களுடைய 'ஏ டீம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாத்திரைக்கு மக்களிடத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
    • தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இந்த யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டம் இருக்கும்,

    திருப்பூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்,என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். இது குறித்து பா.ஜ.க., மாநில பொது செயலாளர் முருகானந்தம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவின் 2-வது இரும்பு மனிதராக உள்ள அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை இதுவரை 180 தொகுதிகளில் முடிந்துள்ளது. மீதமுள்ள 54 தொகுதிகளையும், பல்லடத்தில் நடக்கும் நிறைவு விழாவுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். யாத்திரைக்கு மக்களிடத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    நிறைவு விழா பிரமாண்டமாக வருகிற 25-ந்தேதி பல்லடத்தில் நடக்கிறது. கட்சியினர் 10 லட்சம் பேர், பொதுமக்கள் 3 லட்சம் பேர் என 13 லட்சம் பேர் கலந்துகொள்ள இலக்கு வைக்கப்பட்டுள்ளது.


    இந்த பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். 400 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடைபெற உள்ளது. வாகனங்களை நிறுத்த 600 ஏக்கர் மற்றும் மக்கள் வந்து செல்வதற்காக 300 ஏக்கர் என ஆயிரத்து 300 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இந்த யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டம் இருக்கும் என நினைக்கிறோம். 25-ந்தேதி பிற்பகலுக்கு மேல் நடைபெறும் பொது க்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.தேசிய தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

    பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக திருப்பூரில் வருகிற 24-ந் தேதி யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். திருப்பூர் மாநகராட்சியில் இருந்து தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை யாத்திரை நடைபெறும். பிரதமர் மோடியை பொறுத்தவரை நெருக்கமான மாநிலம், மிகவும் பிடித்த மாநிலம் தமிழகம். நேரடியாக ஆளும்கட்சியை கேள்வி கேட்கும் முதன்மை கட்சியாக பா.ஜ.க., உள்ளது. புள்ளி விபரத்துடன் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

    தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருப்பதில், 100 சதவீதம் பொய் தான். குளறுபடிகளின் ஒட்டுமொத்த அம்சமாக தி.மு.க., உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சேவை செய்யக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது. எங்களின் சித்தாந்தாம் வேறு. இது ஒரு இயக்கம். இங்கு யாரும் நிரந்தர தலைவர் கிடையாது. லட்சியமே பிரதானம். அரசியல் நகர்வு அண்ணாமலையை நோக்கி தான் செல்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலை நடை பயணத்தையொட்டி பா.ஜ.க.வினர் அவரை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.
    • காதர் பேட்டை சாலையோரம் இருந்த வரவேற்பு பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர்.

    ஆலங்காயம்:

    என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் கேட் அருகே உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு இன்று காலை அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்கினார்.

    அவருக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

    இந்த நிலையில் அண்ணாமலை வாணியம்பாடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா, தனது ஆதரவாளர்களுடன் அண்ணாமலை மீது முட்டைகள் வீசபோவதாக கூறி கைகளில் முட்டைகளுடன் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது நான் கண்டிப்பாக முட்டை வீசுவென். அதை தடுக்க கூடாதென்று அஸ்லம்பாஷா ஆக்ரோசமாக வீட்டில் நிறுத்தியிருந்த தன் கார் கண்ணாடி மீது முட்டைகளை தூக்கி வீசினார். அப்போது முட்டைகள் அங்கிருந்த காரின் கண்ணாடி மீது விழுந்தது. இதனையடுத்து போலீசார் அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அஸ்லாம்பாஷா தனது ஆதரவாளர்களுடன் வீட்டின் வாசற்படியில் அமர்ந்து கொண்டார். அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    வாணியம்பாடியில் அண்ணாமலை நடை பயணத்தையொட்டி பா.ஜ.க.வினர் அவரை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.

    வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள காதர் பேட்டை சாலையோரம் இருந்த வரவேற்பு பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர்.

    இதனைக்கண்ட பா.ஜ.க. வினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தகவலறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். பேனரைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர்.

    • அரசியல் பயணமாக இல்லாமல் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றார்.
    • தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான பணிகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    அதன்படி பா.ஜனதா அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.


    இதன் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக முக்கிய இடங்களில் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வரும் அவர், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசி வருகிறார்.

    3 கட்டங்களாக நடைபெறும் நடைபயணத்தில் முதல் கட்ட நடை பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    அதன்பிறகு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். இதில் 2 கட்ட நடைபயணம் முடிந்துள்ள நிலையில் 3-ம் கட்டமாக பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.


    தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 நாட்கள் என திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட இந்த நடைபயணம் வருகிற 18-ந்தேதி நிறைவடைய உள்ளது.

    இந்த மாத இறுதியில் சென்னையில் பாத யாத்திரையை நிறைவு செய்ய இருந்ததுடன், அங்கு நிறைவு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கேற்ப நடைபயண நிகழ்ச்சிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி திருப்பூரில் நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த போதிய இடம் இல்லாததால் திருப்பூரில் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்த நடைபயணத்தை ஒத்தி வைத்த அண்ணாமலை, அதற்கு பதிலாக திருப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழாவை பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததுடன், அதில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க செய்யவும் ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியான நிலையில் தேதி முடிவு செய்யப்படாமல் உள்ளது. வருகிற 25-ந்தேதி நடத்த வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    பொதுக்கூட்டம் நடத்துவதற்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் எதிரில் 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முட்செடிகள் , புதர்களை அகற்றி மண் சமநிலைப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணி நிறைவடையும்.


    பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா மற்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள்(எஸ்.பி.ஜி.) விரைவில் திருப்பூர் வருகை தர உள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ள இடத்தை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேரை பங்கேற்க செய்ய பா.ஜ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து பா.ஜ.க. வினர் கூறுகையில், மாதப்பூரில் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் எப்போது தேதி கொடுத்தாலும் அன்றைய தினம் பொதுக்கூட்டத்தை நடத்தும் வகையில் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

    கடந்த மாதம் ஜனவரி 2-ந்தேதி திருச்சி வந்த பிரதமர் மோடி திருச்சியில் புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு ஆன்மீக பயணமாக கடந்த மாதம் 19-ந்தேதி மீண்டும் தமிழகம் வந்த பிரதமர் மோடி அன்று மாலை சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்ததுடன், மறுநாள் 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், அங்கு கடலில் புனித நீராடியதுடன், ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். பின்னர் இரவு ராமேஸ்வரத்திலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கிய மோடி மறுநாள் 21-ந்தேதி தனுஷ்கோடி அரிச்சல் முனையில் புனித நீராடியதுடன், கோதண்ட ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புனித நீரை சேகரித்து சென்றார்.

    இவ்வாறு 3 நாட்கள் அரசியல் பயணமாக இல்லாமல் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றார். தற்போது அரசியல் பயணமாக மீண்டும் அவர் தமிழகம் வர உள்ளதால் பா.ஜ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது. அ.தி.மு.க. சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு இந்த மாநாடு நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணி 2-ம் மாநாடு சேலத்தில் கடந்த மாதம் 21-ந்தேதி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த 2 மாநாடுகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் முத்திரைபதித்தது.

    அதேப்போல் பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட மாநாடு போல் திருப்பூரில் நடத்தி காட்ட அண்ணாமலை மற்றும் தமிழக பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். அதேப்போல் தமிழக பா.ஜ.க.வினரும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளது தமிழக பாராளுமன்ற தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.

    இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் போது, ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ×