என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்- 10 லட்சம் பேரை திரட்ட பா.ஜ.க.,வினர் திட்டம்
- அரசியல் பயணமாக இல்லாமல் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றார்.
- தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான பணிகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன்படி பா.ஜனதா அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக முக்கிய இடங்களில் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வரும் அவர், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசி வருகிறார்.
3 கட்டங்களாக நடைபெறும் நடைபயணத்தில் முதல் கட்ட நடை பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். இதில் 2 கட்ட நடைபயணம் முடிந்துள்ள நிலையில் 3-ம் கட்டமாக பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 நாட்கள் என திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட இந்த நடைபயணம் வருகிற 18-ந்தேதி நிறைவடைய உள்ளது.
இந்த மாத இறுதியில் சென்னையில் பாத யாத்திரையை நிறைவு செய்ய இருந்ததுடன், அங்கு நிறைவு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கேற்ப நடைபயண நிகழ்ச்சிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி திருப்பூரில் நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த போதிய இடம் இல்லாததால் திருப்பூரில் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்த நடைபயணத்தை ஒத்தி வைத்த அண்ணாமலை, அதற்கு பதிலாக திருப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழாவை பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததுடன், அதில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க செய்யவும் ஏற்பாடுகளை செய்து வந்தார்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியான நிலையில் தேதி முடிவு செய்யப்படாமல் உள்ளது. வருகிற 25-ந்தேதி நடத்த வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பொதுக்கூட்டம் நடத்துவதற்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் எதிரில் 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முட்செடிகள் , புதர்களை அகற்றி மண் சமநிலைப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணி நிறைவடையும்.
பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா மற்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள்(எஸ்.பி.ஜி.) விரைவில் திருப்பூர் வருகை தர உள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ள இடத்தை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேரை பங்கேற்க செய்ய பா.ஜ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து பா.ஜ.க. வினர் கூறுகையில், மாதப்பூரில் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் எப்போது தேதி கொடுத்தாலும் அன்றைய தினம் பொதுக்கூட்டத்தை நடத்தும் வகையில் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
கடந்த மாதம் ஜனவரி 2-ந்தேதி திருச்சி வந்த பிரதமர் மோடி திருச்சியில் புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு ஆன்மீக பயணமாக கடந்த மாதம் 19-ந்தேதி மீண்டும் தமிழகம் வந்த பிரதமர் மோடி அன்று மாலை சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்ததுடன், மறுநாள் 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், அங்கு கடலில் புனித நீராடியதுடன், ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். பின்னர் இரவு ராமேஸ்வரத்திலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கிய மோடி மறுநாள் 21-ந்தேதி தனுஷ்கோடி அரிச்சல் முனையில் புனித நீராடியதுடன், கோதண்ட ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புனித நீரை சேகரித்து சென்றார்.
இவ்வாறு 3 நாட்கள் அரசியல் பயணமாக இல்லாமல் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றார். தற்போது அரசியல் பயணமாக மீண்டும் அவர் தமிழகம் வர உள்ளதால் பா.ஜ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது. அ.தி.மு.க. சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு இந்த மாநாடு நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணி 2-ம் மாநாடு சேலத்தில் கடந்த மாதம் 21-ந்தேதி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த 2 மாநாடுகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் முத்திரைபதித்தது.
அதேப்போல் பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட மாநாடு போல் திருப்பூரில் நடத்தி காட்ட அண்ணாமலை மற்றும் தமிழக பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். அதேப்போல் தமிழக பா.ஜ.க.வினரும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளது தமிழக பாராளுமன்ற தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் போது, ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.






