என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சருடன் விவாதிக்க தயார்: அமைச்சருக்கு அண்ணாமலை பதில்
    X

    முதலமைச்சருடன் விவாதிக்க தயார்: அமைச்சருக்கு அண்ணாமலை பதில்

    • தமிழகத்தை ஒப்பிட பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திற்கும் தகுதி இல்லை என்று கூறினார்.
    • இந்தியா கூட்டணியில் அனைவரும் ஊழல்வாதிகள்.

    வேலூர்:

    கன்னியாகுமாரி மாவட்டத்தில் சாலை பணிகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    அப்போது பீகாரை விட தமிழகத்தின் ராமேஸ்வரம் உட்பட பல மாவட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

    அண்ணாமலைக்கு தைரியம் உள்ளதா?. அவருக்கு தைரியம் இருந்தால் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு அறிக்கையை வைத்து, தமிழகத்தின் ஒரு குக் கிரமாமோ அல்லது மலை வாழ் பகுதி கூட உதாரணமாக வைத்து என்னோடு பொது மேடையில் விவாதிக்கட்டும். அதற்கு அண்ணாமலைக்கு தைரியம் உள்ளதா?, யோக்கியம் உள்ளதா?. நான் தயாராக உள்ளேன்.

    மேலும் மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் தமிழகத்தை ஒப்பிட பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திற்கும் தகுதி இல்லை என்று கூறினார்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை, யோக்கியம் இருக்கிறதா? என்று ஒருமையில் மனோ தங்கராஜ் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தலுக்கு நேரமும் காலமும் உள்ளது.

    அமைச்சர் மனோ தங்கராஜ் விவாதிக்க வருகிறார் என்றால், நான் எங்களின் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரை அனுப்பி வைக்கிறேன். விவாதிப்பதற்கான இடத்தையும் ,நேரத்தையும் மனோ தங்கராஜ் முடிவு செய்யட்டும். மனோ தங்கராஜ் வருவதாக இருந்தால் எங்களின் செய்தி தொடர்பாளர்தான் வருவார். எங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் எப்போது வேண்டுமானாலும் பேசுவார்.

    அவர்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் வருவதாக இருந்தால் பாஜக தலைவரான நான் வருகிறேன். அதற்கு நான் தயாராக உள்ளேன்.

    இதுவரை எந்த தலைவரும் வெளிநாட்டிற்கு 10 நாள் சுற்றுலா போய் பார்த்ததில்லை. ஸ்டாலின் 10 நாட்கள் ஸ்பெயின் சென்றிருந்தார். நம்மை முட்டாள்கள் என தி.மு.க. நினைத்துக் கொண்டிருக்கிறது.

    தற்போது உருவாகியுள்ள இந்தியா கூட்டணியில் அனைவரும் ஊழல்வாதிகள்.


    இதில் முக்கிய ஊழல்வாதிகள் உள்ள இந்த கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியே வருகின்றனர். சிலர் கைதாகிறார்கள்.

    இதற்கு தமிழகத்தில் அமர்ந்து கொண்டு ஸ்டாலின் ஏன் பதறுகிறார் என்று தெரியவில்லை.

    தி.மு.க.வின் டெல்லி ஆசை நிராசையாக தான் இருக்கும். 2024-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை பாருங்கள். இந்த முறை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் தனி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சியை 400 எம்.பி.க்களுக்கு தாண்டி அமர வைப்பார்கள்.

    இத்தனை நாட்களாக தி.மு.க., எம்.பி. க்கள் டெல்லியில் இருந்தார்கள். அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும் பாராளுமன்றத்தில் எத்தனை கேள்வி கேட்டார்கள்?, அவர்கள் தமிழக பிரச்சினை குறித்து என்ன பேசினார்கள்?, அவர்கள் மூலம் தமிழகத்திற்கு என்ன ஆதாயம் கிடைத்தது? என்ற வெள்ளை அறிக்கையை தி.மு.க. கொடுக்கட்டும்.

    விரைவில் ஊழல் பட்டியல்களை வெளியிடுவோம். அண்ணாமலை லிமிட்டை தாண்டிவிட்டார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

    நான் லிமிடுக்குள்ளே தான் உள்ளேன். ரோட்டில் கோடு போட்டு உள்ளார்களா?. இந்த கோட்டை தாண்டி நீ வரக்கூடாது, நானும் வரமாட்டேன் என்று கேட்பதற்கு.

    பங்காளி கட்சிகள்தான் லிமிட்டை கிராஸ் செய்கிறார்கள். 2 பங்காளிகளும் சமரசமாக வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த 5 ஆண்டுகளுக்கு நாங்கள், அடுத்த 5 ஆண்டு உனக்கு என்று. இப்போது பங்காளி கட்சிகளுக்கு கோபம். உண்மையை பேசினால் லிமிட்டை கிராஸ் செய்கிறார் என்பதா?

    2011-ம் ஆண்டு தி.மு.க கொடுத்த 511 வாக்குறுதிகளில், இதுவரை 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?


    இந்த முறை தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்

    பா.ஜ.க. கட்சி எங்களுக்கு பொருட்டு இல்லை என உதயநிதி ஸ்டாலின் கூறினார். அவர் சொல்லட்டும் நல்லது தானே. அவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும். இளைஞரணி மாநாட்டில் காவலா காவலா என்ற பாட்டை போட்டு நடனம் ஆடட்டும். நாங்கள் மக்களோடு நின்று கொண்டிருக்கிறோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் தெரியும் காவலா காவலா ஜெயிக்கிறதா?, இல்லை என் மண் என் மக்கள் ஜெயிக்கிறதா என்று பார்க்கலாம்.

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது யாரையும் வர வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. விருப்பம் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

    11-ந் தேதி தமிழகத்திற்கு ஜே.பி நட்டா வருகிறார். சத்தியமூர்த்தி பவனில் தற்போது யார் சட்டை, வேட்டியை கிழிப்பது? என்று போட்டி நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சி பாரதிய ஜனதாவின் 'பி' டீம் என்று கூறப்படுகிறது. இருக்கட்டும், நாங்கள் மக்களோட 'ஏ' டீம், இந்திய மக்களுடைய 'ஏ' டீம், பாரதிய ஜனதா கட்சி தமிழக மக்களுடைய 'ஏ டீம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×