search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல்லம் தேடி கல்வி"

    • இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் மாணவர்கள் அருகில் உள்ள குகை கோயிலுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். திருமலாபுரம் பகுதியில் இரு மையங்கள் செயல்படுகிறது.

    மையத்திற்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பாடத்தில் கற்றுள்ள குகை கோவில் குறித்து நேரடி அனுபவத்தை ஏற்படுத்தும் வகையிலும், திருவண்ணாமலை அருகே உள்ள சிவன் குகை கோவிலுக்கு இல்லம் தேடி கல்வி மைய மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குகைக் கோவில் குறித்து விளக்கப்பட்டது.

    இந்த பகுதியில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ள பகுதிகளையும் மாணவர்கள் பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.

    • அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.

    ராமேசுவரம்

    தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.

    ராமேசுவரம் வந்த அமைச்சரை தி.மு.க. சார்பில் நகர் மன்ற முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் வரவேற்றார். இன்று அதிகாலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனுஷ்கோடி கடல் பகுதியில் சிறப்பு பூஜை செய்தார்.

    அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் அமைத்துள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீராடி, பின்னர் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

    கோவிலுக்கு வந்த அமைச்சரை ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் நாசர்கான் வரவேற்றார். அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கல்வித்திறன் மற்றும் பள்ளி கட்டிடம் குறித்து ஆய்வு செய்தார்.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம், மண்டம் ஊராட்சி ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள மெய்யம்புளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி மையத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் குறித்து ஆய்வு செய்தார்.

    • மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.
    • பள்ளி முடிந்ததும் 2 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

    குடிமங்கலம் :

    கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8-ம்வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. தன்னார்வலர்கள் மூலம், தினமும் பள்ளி முடிந்ததும் மாலை நேரத்தில், 2 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 255 மையங்கள் செயல்படுகின்றன.

    ஒவ்வொரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர் கற்பித்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் குடியிருப்பு பகுதிக்கே நேரில் சென்று வகுப்பு எடுக்கப்படுவதால் மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு அடைகின்றனர்.தன்னார்வலர்களுக்கு அந்தந்த குறுவள மையங்களில் பயிற்சி துவங்கியுள்ளது. வருகிற 26-ந்தேதி வரை நடக்கும் பயிற்சியில் 1 முதல் 5 வகுப்புகளை கையாள்பவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் பயிற்சி வழங்கப்படுவதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் கரோலின் தெரிவித்தார்.

    • எந்தவித இடர்பாடும் இன்றி 7மாதங்களாக நடைபெறுகிறது.
    • மையங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் 100 சதவீதம் மாணவர் வருகைபுரிந்து வருகின்றனர்.

    சீர்காழி:

    "கொள்ளிடம் ஒன்றியம் காடுவெட்டி, காவல்மான்யம், சேத்திருப்பு, அய்யம்பேட்டை அளக்குடி தெரு ஆகிய இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் 100 சதவீதம் மாணவர் வருகைபுரிந்து வருகின்றனர். எந்தவித இடர்பாடும் இன்றி 7மாதங்களாக நடைபெறுகிறது.இதனிடையே கொள்ளி டம் பகுதிக்கு வருகை தந்த அரசு கொறடா கோவி.செழியன் இதனை அறிந்து நேரில் அழைத்து பாராட்டினார்.

    மேலும் தன்னார்வலர்கள் ஷர்மிலி, கீர்த்திகா, வர்ஷா, விசாலினி ஆகியோரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடனிருந்தார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி மையங்கள் திறக்கப்பட்டது.
    • பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளது.

    கூடுதல் மையங்கள் திறப்பு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார். தன்னார்வலர் சித்ரா வரவேற்றார்.

    கூடுதல் மையங்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை ஈடுசெய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்னரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் நலன் கருதி தேவையின் அடிப்படையில் கூடுதல் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி முயற்சி எடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கூ்டுதலாக 296 மையங்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், எமிஸ் ஒருங்கிணைப்பாளர் முருகுதிருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் நன்றி கூறினார்.

    • வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும்.
    • தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர்.

    திருப்பூர் :

    ஊரடங்கில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்ப இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்தது. திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 142 மையங்கள் திறக்க அரசு நிர்ணயித்தது. தற்போது வரை 7 ஆயிரத்து 255 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன. இதன்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, பள்ளிகளின் நேரம் போக மாலை 5மணி முதல் 7மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர், வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் போன்ற கட்டுபாடுகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதங்களாக இவர்களில் பலர் பணியில் இருந்து விலகிவருகின்றனர். சுமார் 170க்கும் மேற்பட்ட மையங்களில் தன்னார்வலர்கள் இல்லை.

    இது குறித்து தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், இத்திட்டம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக உள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், வறுமையில் உள்ளோருக்கு கூடுதல் வருவாய் அளிக்கிறது.அறிவுறுத்தியபடி தவறாமல் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறோம். இதற்கான சம்பளம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகிறது. கடந்த மார்ச் மாத சம்பளமே மே மாதம்தான் கிடைத்தது.இதன்காரணமாகவும் தன்னார்வலர் சிலர் விலகிவிட்டனர். கோடை விடுமுறையில் பயிற்சி நடக்கவில்லை. அதற்கு சம்பளம் வருமா என்பதும் தெரியவில்லை. வழங்குவது ஆயிரம் ரூபாய் என்றாலும் அதை காலம் தாழ்த்தாமல் வழங்கினால் நல்லது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    இந்த மையங்களில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த, ரீடிங் மராத்தான் போட்டி ஜூன் 1-ந்தேதி துவங்கி 12-ந் தேதி வரை நடந்தது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செல்போன் செயலி மூலம் மாணவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளை வாசிக்க வைக்க வேண்டும்.அதிக வார்த்தைகள் வாசித்ததன் அடிப்படையில் மாவட்டம், ஒன்றியம் வாரியாக ரேங்க் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் 6 கோடியே 82 லட்சம் சொற்களை சரியாக வாசித்து முதலிடம் பிடித்தது.திருப்பூரில்ஊத்துக்குளி வட்டாரம் 413 வட்டாரங்களில் மாநில அளவில் 92வது இடத்தில் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 974 செல்போன்களில் இருந்து 1.52 லட்சம் நிமிடங்களில் 76 லட்சம் சொற்கள் சரியாக வாசிக்கப்பட்டுள்ளன.ரீடிங் மராத்தானில் திருப்பூர் பின்தங்க தன்னார்வலர்கள் பற்றாக்குறையால் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகள் குறைந்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர். தன்னார்வலர் சிலரின் தகவல்கள் முறையாக கல்வித்துறைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அவர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க தாமதிக்கிறது. தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் சரிசெய்யப்பட்டு விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×