search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பளம்"

    • மாநிலத்தில் உள்ள 5.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் மொத்தம் ரூ3,330 கோடி வழங்கப்படுகிறது.
    • நேற்று 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஒவ்வொரு மாதமும் முதல் 2 தினங்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள 5.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் மொத்தம் ரூ3,330 கோடி வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் பிப்ரவரி மாத சம்பளம் மாத தொடக்கத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தலைமை செயலக ஊழியர்கள் அறிவித்தனர்.

    இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி வரலாற்றில் முதல் முறையாக தவணை முறையில் சம்பளம் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் உள்ளவர்களுக்கு முழுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் கூடுதல் சம்பளம் பெறுபவர்களுக்கு முதல் கட்டமாக அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் மீதமுள்ள தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை. நேற்று 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு முதல் தவணை சம்பளம் வழங்கப்பட்டது. 3 அல்லது 4 நாட்களில் சம்பளப் பகிர்வு முடிக்கப்படும் என்று தெரிவித்த மாநில நிதி மந்திரி பாலகோபால், ஓய்வூதியம் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது என்றார்.

    இதற்கிடையில் கரூவூலத்தில் உள்ள வைப்புத் தொகையை திரும்ப பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    • வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.

    சென்னை:

    மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளார்கள். இந்த வேலை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என்றும் அதன் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

    வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதிகட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு மேல் கால அவகாச நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாளாவது வேலை பார்த்து இருந்தாலே அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாகவே கருதப்படுவார்கள். தற்போது கொண்டு வரப் பட்ட இந்த திட்டத்தின்படி பதிவு செய்து இருந்த 25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.

    மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் தகுதியான காரணங்களால் பதிவு செய்ய இயலாமல் போனவர்கள் மீண்டும் சேர்க்கலாம் என்று அறிவித்துள்ளது.

    கடந்த 21 மாதத்தில் 7.6 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வேலைக்கான அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்துவிட்டால் அது வங்கி கணக்குடன் இணைந்து இருக்கும். அத்துடன் நிதி வழங்கும் துறையுடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

    இதன் மூலம் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பள பட்டுவாடா செய்ய முடியும். வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.

    இன்று முதல் ஆதார் அட்டையை பணியாளர் அட்டையுடன் இணைத்திருப்பதன் அடிப்படையிலேயே சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.

    • இலவச வீடு கட்டும் நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாய தொழிலாளர் சங்க பேராவூரணி ஒன்றிய செயலாளர் மு.சித்திரவேலு தலைமை வகித்தார்.

    சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் துரை. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    விதொச மாநில குழு உறுப்பினர் வ.ராஜமாணிக்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 3 மாத கால சம்பள பாக்கியை தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும். பேராவூரணி பகுதியில் குடிமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்க ளுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும்.

    பெருமகளூர் ஆர்கே நகரில் வசித்து வரும் ஏழை, எளிய குடிசை வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி ரூபாய் 600 தின சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும்.

    இலவச வீடு கட்டும் நிதியை ரூபாய் 5 லட்சமாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேராவூரணி நகர் பகுதிக்கு விரிவுபடுத்த வேண்டும்.

    விவசாய தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் திருமண உதவி தொகை, இயற்கை மரணம் உதவி தொகை மூன்றாண்டு காலமாக வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராஜ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் பேராவூரணி, சேதுபாவா சத்திரம் விதொச நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு உடனுக்குடன் சம்பளம் வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் சம்பளத்தை உடனே வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம், கரிகாலன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்யும் பயனாளிகளுக்கு உடனுக்குடன் சம்பளம் வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்.

    வறுமையில் வாடும் பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்பு கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி செல்லப்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு மாத சம்பளத்தை கல்விக்காக தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 82- வது மாத ஊதியத்திலிருந்து (ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்) வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் தனது 82- வது மாத ஊதியத்திலிருந்து (ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்) சேத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்த வித்யா, முத்துச்செல்வி, மஞ்சுளா, ராஜபாளை யத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, சரண்யா மற்றும் சொக்க நாதன்புத்தூர் ஊராட்சியைச்சேர்ந்த திவ்யா ஆகிய 6 மாணவிகளுக்கு மருத்துவம், வழக்கறிஞர், ஆசிரியர் படிப்பு போன்ற மேற் படிப்பை தொடர ஏதுவாக கல்வி உதவித்தொகையாக வழங்க முடிவு செய்தார்.

    அதன்படி கல்வி உதவித் தொகையை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் மாணவ, மாணவி களுக்கு வழங்கினர். அப்போது அவர்கள் கல்வியை சிறப்பாக பயின்று எதிர்காலத்தில் ஏழை-எளிய பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டனர். மேலும் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மாணவிகள் இரு வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், தேவதானம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.
    • அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர்கள் (கல்லூரி ஆய்வக உதவியாளர்கள்) மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது உறுதியளித்தார். அந்த சம்பளம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. ஊதியக் குழு அறிவிக்கும் சம்பளத்தையும் மாநில அரசு அறிவிப்பதில்லை.

    ஆனால் அமைச்சுப் பணியாளர்களுக்கு 1992 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை விட கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும், ஆய்வக உதவியாளர்களையும் அரசு அலட்சியப்படுத்துகிறது.

    தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு, அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை.

    மும்பை:

    மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சமீபத்தில் நடைபெற்றது.

    வழக்கமாக ஐ.ஐ.டி. பாம்பே கல்லூரியில் கேம்பஸ் வேலைவாய்ப்பில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அதிகபடியான மாணவர்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு தேர்வாவார்கள்.

    அதே போல இந்த ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூவில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டன.

    பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த முகாமில் சர்வதேச நிறுவனங்களில் சுமார் 300 வேலை வாய்ப்புகள் இருந்தது. இந்த இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் 194 இடங்கள் மாணவர்களால் நிரப்பப்பட்டது.

    இதில் ஐ.ஐ.டி.-பம்பாய் இன்ஸ்டிடியூட் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்த பட்டதாரி சர்வதேச வேலைவாய்ப்பில் இதுவரை இல்லாத அளவில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதே போல உள்நாட்டு வேலைவாய்ப்பில் அதிக வருவாயாக ரூ.1.7 கோடி சம்பளத்தில் ஒரு மாணவருக்கு வேலை கிடைத்துள்ளது.

    கடந்த ஆண்டு ஐ.ஐ.டி. பாம்பே கல்லூரியில் மிக உயர்ந்த சர்வதேச வேலைக்கான வருடாந்திர சம்பளம் ரூ.2.1 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது அதை விட அதிகமாகவும் இதுவரை இல்லாத அளவிலும் ஆண்டு சம்பளம் ரூ.3.7 கோடி கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.

    அதே நேரம் கடந்த ஆண்டு உள்நாட்டு சம்பளத்தில் அதிகபட்சம் ரூ.1.8 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது ரூ.1.7 கோடியாக குறைந்துள்ளது. வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது தவிர ஆண்டு சம்பளம் ரூ.1 கோடிக்கு மேல் 16 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை.

    கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூ முகாம்களில் மொத்தம் 2,174 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,845 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 1,516 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

    • தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி.சுதீர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சிக்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் சரியாக ஊதியம் வழங்க வில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியா ளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி.சுதீர் சாலை மறிய லில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இன்று காலை நடந்த இந்த திடீர் சாலை மறியலால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது.

    • தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததால் சிரமமடைந்துள்ளனர்.
    • அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் பணிபுரியும் ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் திண்டாடி வருவதாக கூறப் படுகிறது.

    இது குறித்து ஊராட்சி தலைவர் பவுசியா பானு கூறியதாவது:-

    பனைக்குளம் ஊராட்சி துணைத் தலைவர் திடீரென இறந்து விட்டதால், அவ ருக்கு பதிலாக புதிய ஊராட்சி தலைவரை ஊராட்சி மன்ற கூட்டத்தில் தேர்வு செய்து அதற்கான தீர்மானத்தை மாவட்ட நிர் வாகத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.

    இந்த நிலையில் அதற் கான அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தால் ஊராட்சி நிதியில் இருந்து வங்கி கணக்கில் பணம் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் பல்வேறு பொதுச் செலவுகளுக்கும் பணம் எடுக்க முடியாமல் சொந்த பணத்தை செலவழித்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண் டும் என்று பனைக்குளம் சமூக ஆர்வலர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:- துணைத் தலைவர் வங்கியில் கையெ ழுத்திடும் அங்கீகாரத்திற் கான தபால் மாவட்ட கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கபடுகிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

    • தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
    • கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் தண்டனை கைதிகளாக இருப்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியில் வருவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தமிழக அரசு செய்து வருகிறது.

    கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் பலர் வழக்கு விசாரணை முடிந்து சிறையில் தண்டனை காலத்தை கழித்து வருகிறார்கள்.

    இதுபோன்று தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

    சிறைகளில் உள்ள தோட்டங்களில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணை வித்துக்களை பயிரிட்டு அறுவடை செய்வது, இந்த நிலக்கடலையை சிறையிலேயே செக்கு எண்ணையாக தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகள் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

    இந்த பொருட்கள் சந்தை படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி மேற் பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மதுரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தினமும் ரூ.1 லட்சம் அளவுக்கு பொருட்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

    இப்படி சிறைச்சாலை அருகில் உள்ள சந்தைகள் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வர வேற்பை பெற்றுள்ளதால் சிறைகளில் உற்பத்தி அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தாங்கள் செய்யும் வேலையை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய சிறை கைதிகள் மாதம் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பாதிக்கிறார்கள்.

    கைதிகள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுவதால் ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என சம்பாதிக்கப்பவர்களும் உண்டு. சிறையில் தரமான சாப்பாடு உள்ளிட்டவைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் இந்த சம்பளம் கைதிகளுக்கு மிச்சமாகி விடுகிறது.

    கைதிகள் சம்பாதிக்கும் இந்த பணம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படுவது இல்லை. இதுபோன்ற சம்பள பணத்தை கையாள்வதற்கே கணக்கர் ஒருவர் சிறைச்சாலைகளில் உள்ளார். அவர் கைதிகள் சம்பள பணத்தை பத்திரமாக வைத்திருந்து குடும்பத்தினர் பார்க்க வரும்போது அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.

    இதன்மூலம் சிறையில் இருந்தாலும் கைதிகள் தங்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து கொடுக்கும் நிலையில் இருந்து வேலைகளை செய்து வருவது அவர்களை மனதளவில் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு உந்து சக்தியாகவே இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியாளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஒ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி ஊழியர்களுக்கு 2022 அக்டோபர் முதல் 2023 ஏப்ரல் வரை 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    மேலும் பொங்கல் பண்டிகை தொகையான ரூ.1000-மும் வழங்காமல் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியா ளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊழியர்கள் திடீரென்று முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். கலெக்டர் மற்றும் யூனியன் அலுவலக உயரதிகாரிகள் திருச்சுழி ஊராட்சி நிர்வா கத்தில் தலையிட்டு ஊராட்சி நிர்வா கத்தில் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கி இனிவரும் காலங்க ளில் ஊராட்சி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊராட்சி ஊழியர்கள் அடங்கிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், செல்வராஜ், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பெருமாள், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா?
    • 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர்துறை ஆணையருமான அதுல்ஆனந்த் உத்தரவுப்படி திருச்சி கூடுதல் தொழிலாளர்துறை ஆணையர் ஜெயபால், இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் அறிவுரைப்படியும்

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான கடந்த 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, அவர்கள் சம்மதத்துடன் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களில் 32 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 28 முரண்பாடுகளும் என மொத்தம் 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×