search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுத பூஜை"

    • ஆவின் நிறுவனம் இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
    • புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இப்பாலைப் பதப்படுத்தி ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக்கெட்டுகளில் அடைத்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜு பிஸ்தா ரோல், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்சர் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.

    இதன் மூலமாக ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதே போல இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு பண்டிகை நெருங்கும் நிலையில் இனிப்பு, கார வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றன.

    புதிய வகை இனிப்பு வகைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், ஏற்கனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலியானார்.
    • டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டுக்கூடலுார் பழைய காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், (வயது21) . டிரைவர். இவர், காட்டுக்கூடலுாரில் கார்த்திக் என்பவரது டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார். பின்னர் ஏரியில் கிருஷ்ண குமார் குளித்தபோது ஆழமான பகுதியில் சென்று சிக்கிய கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் கிருஷ்ணகுமார்உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று உள்ளனர்.
    • இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகை என அடுத்தடுத்து அரசு விடுமுறை நாட்கள் ஆகும்.

    இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி இருந்தவர்களை தங்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதன்மூலம் சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று உள்ளனர்.

    இந்த நிலையில் நாளை வேலை நாள் என்பதால் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவார்கள் என்பதால் அவர்களது வசதிக்காக இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் இன்றும் நாளையும் என 2 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக 1,150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் போக்குவரத்து கழகம் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பஸ்களில் பயணம் செய்ய விரும்புபவர்கள் www.tnstc.in என்கிற இணைய சேவையை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது .
    • விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச்சென்றனர் இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஆயுத பூஜை , விஜயதசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பின்னலாடை நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை சுத்தம் செய்து வாழை மரக்கன்றுகள் வாங்கி வீடுகளின் வாயில் மற்றும் நிறுவனங்களின் நுழைவாயில் கட்டி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம் . இதற்காக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது . விற்பனை நிறைவடைந்ததை அடுத்த கொண்டு வந்திருந்த வாழை மரங்கள் விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச் சென்றனர் . இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    இதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர் . இந்த துப்புரவு பணியினை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டத்துடன் மார்க்கெட் களை கட்டியது

    திருப்பூர் :

    ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று பூ மற்றும் அலங்கார பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது.

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுத பூஜைக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் செவ்வந்தி பூ அதிக அளவில் உள்ளன. நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்காக நேற்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வந்தனர். இதனால் மார்க்கெட் மக்கள் கூட்டத்துடன் களை கட்டியது. பூக்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் நேற்று கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், முல்லை ரூ.600, ஜாதிமல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.300 முதல் ரூ.400 வரைக்கும், சம்பங்கி ரூ.300, செண்டுமல்லி ரூ.160, பட்டு பூ ரூ.100, அரளி ரூ.400 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பூக்களின் விலையும் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ஏற்ற இறக்கமாக இருந்தது.

    பழங்கள் விற்பனை

    இதேபோல் பூஜைக்கு தேவையான பழங்களின் விற்பனையும் அதிகமாக இருந்தது. ஒரு கிலோ ஆப்பிள் பழம் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ரூ.100 முதல் ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஆரஞ்சு ரூ.100, மாதுளை ரூ.200 முதல் ரூ.300 வரைக்கும், சாத்துக்குடி ரூ.80, திராட்சை ரூ.120, அண்ணாச்சி பழம் ரூ.80, வாழைப்பழம் அதிகபட்சமாக ரூ.60 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். இதேபோல் பூஜைக்கு பயன்படுத்தப்படும் அலங்கார தோரணங்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் புத்தம் புது வடிவில் வைக்கப்பட்டுள்ள பல அலங்கார ெபாருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும், வெண் பூசணி, எலுமிச்சம்பழம், தேங்காய் மற்றும் அவல், பொரி, கடலை உள்ளிட்ட பூஜை பொருட்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

    • நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பக்தி உணர்வோடு கொண்டாடப்படுகிறது.
    • அழிவு இல்லாத சிறந்த கல்வி செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும், மனத்திட்பத்தோடு துணிவையும் தரும் மலை மகளையும்; செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

    சென்னை:

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி கவர்னர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி:-

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும்.

    தெலுங்கானா கவர்னரும், புதுவை துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பக்தி உணர்வோடு கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும், அறிவாகவும் இருந்து செயல்படும் இறையருள் அனைவரின் வாழ்விலும் வெற்றியைத் தர வேண்டும். அனைவரும் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ எனது மனமார்ந்த ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    நவராத்திரி எனப்படும் 9 நாட்களின் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    அழிவு இல்லாத சிறந்த கல்வி செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும், மனத்திட்பத்தோடு துணிவையும் தரும் மலை மகளையும்; செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

    தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களுடைய வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள்புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை போற்றி வணங்குகிறேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    ஆயுத பூஜை என்பது இந்துக்கள் கொண்டாடும் திருவிழா. காலங்காலமாக இது பாரம்பரியமாக இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. இது நவராத்திரி விழாவின் ஒரு பகுதி.

    நவராத்திரி மட்டுமில்லாமல், ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்டவையும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. அன்றைய தினம் நம் வாழ்வாதாரத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடிய தொழில் செய்வதற்கான பொருட்களை, உபகரணங்களைப் பூஜிப்பது வழக்கம். ஆயுத பூஜை கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    நிச்சயம் ஒரு நாள் வெற்றி வந்து சேரும் என்ற தன்னம்பிக்கையுடன் ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து தரப்பு மக்களின் உழைப்பும் மேன்மையுடன் போற்றத்தக்கது.

    தீயசக்தியை அழித்து நல்ல சக்தியின் வெற்றியை குறிக்கும் தினத்தில் மக்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறவும், தொழில் முன்னேற்றம் காணவும், நிறைவான செல்வமும், மகிழ்ச்சியும், மனநிறைவும், ஆரோக்கியமான நல்வாழ்வும் வாழ்ந்திட இறைவன் அருளட்டும் என பிரார்த்தித்து இனிய ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன்:-

    ஆயுதபூஜை என்பது அரக்க ராஜாவை அஷ்டமி, நவமி சந்திப்பில் தேவிதுர்கா அழித்த வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது.

    பண்டைய காலங்களில் போர்க்கருவிகள் வணங்கும் நாளாகவே ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் வாகனங்கள், அதாவது மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், சைக்கிள் போன்ற வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தி, மஞ்சள் குங்குமத்தோடு திலகமிட்டு, சாமந்தி மாலையிட்டு, வாழை தோரணங்களோடு அலங்கரித்து அவல், பொரி, கடலை, பழ வகைகளோடு படையில் செய்து பூஜை செய்து வருகின்றனர்.

    வியாபாரிகள் அன்றைய தினமே சிறந்த நாளாக கருதி புதிய ஆண்டிற்கான புதிய கணக்கை தொடங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். நாடு முழுவதும் ஆயுதபூஜையை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.
    • தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து வருகிற 9-ம் தேதி வரையும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் தேதி வரையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

    மேலும் நாளை (4-ந்தேதி) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, நாளை மறுநாள் 5-ந்தேதி விஜயதசமி, பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. ஆகவே நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.

    இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ஏற்காட்டுக்கு கார், சுற்றுலா வாகனங்கள், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இன்று காலை கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். லேசான சாரல் மழையும், பனியும், குளுமையான சீதோஷ்ண நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையை கண்டு ரசித்தனர்.

    ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் சூழல் ஏற்பட்டது.

    • நாளை ஆயூத பூஜை விழா என்பதால் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க இன்று ஏராளமானோர் திரண்டனர்.
    • ஆயத பூஜையை முன்னிட்டு மதுரை மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் ரூ.20 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளன.

    மதுரை:

    ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி ஆயுத பூஜை விழா கொண்டாடப்படும். அப்போது அனைத்து தொழில் செய்பவர்களும் ஆயுத பூஜைக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்.

    ஆயுத பூஜையின்போது தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் சுவாமி படங்களுக்கும் மற்றும் எந்திரங்களுக்கும் மாலைகள் மற்றும் பூக்களை அணிவித்து பூஜை செய்வது வழக்கம். இதனால் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். இதையொட்டி பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்று பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.

    நாளை ஆயூத பூஜை விழா என்பதால் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க இன்று ஏராளமானோர் திரண்டனர். மல்லிகை, பிச்சி உள்ளிட்ட வண்ண வண்ண மலர்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் ஆர்வத்துடன் மலர்களை வாங்கி சென்றனர்.

    கடந்த வாரம் விற்கப்பட்ட விலையை விட இன்று இருமடங்கு விலை உயர்ந்து பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மல்லிகை பூ கடந்த வாரம் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டது. இன்று மல்லிகை கிலோ ரூ.1,000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பிச்சி ரூ.800-க்கும், முல்லை ரூ.900-க்கும், அரளி ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், செண்டு பூ, மரிக்கொழுந்து ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மற்ற மலர்களும் இரு மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தற்போது பூக்கள் வரத்து அதிகமாக உள்ளதால் பூக்களின் விலை ஓரளவு கட்டுக்குள் உள்ளது.

    கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று மல்லிகை பூக்கள் கிலோ ரூ.3 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போது மல்லிகை பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் விலை கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தனர்.

    இதே போல் ஆயத பூஜையை முன்னிட்டு மதுரை மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் ரூ.20 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளன.

    இதே போல் வாழைக்கு இலை, வாழைக்கன்று, தேங்காய், அவல், பொரி உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் களைகட்டி உள்ளது.

    • மல்லி ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது
    • வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

    கோவை

    கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன.

    கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இந்தப் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம். இதன் காரணமாக மாதத்தின் தொடக்கத்திலேயே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ மட்டும் கிலோ 4,000 ரூபாய் வரை விற்பனையானது.

    இந்த நிலையில் தற்போது நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

    இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்து இருந்தது. மேலும் நாளை மறுநாள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

    அதன்படி மல்லி ஒரு கிலோ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.320, அரளி ரூ.300, தாமரை ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ரூ. ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.30, செண்டுமல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.160- ஆக அதிகரித்து இருந்தது.

    அதேபோன்று வெள்ளை பூசனி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.15 முதல் 30 வரையும், சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.220, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் பூந்தமல்லி பெங்களூர் -தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பணிமனை அருகே தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தற்காலிக வெளியூர் சிறப்பு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

    பூந்தமல்லி:

    ஆயுத பூஜை பண்டிகை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இதற்கான பயண முன்பதிவும் கடந்த வாரமே தொடங்கியது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், செய்யாறு, தர்மபுரி, காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி, பெங்களூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் பூந்தமல்லி பெங்களூர் -தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பணிமனை அருகே தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தற்காலிக வெளியூர் சிறப்பு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஏற்கனவே பூந்தமல்லியில் மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக அனைத்து வாகனங்களும் பூந்தமல்லி பைபாஸ் சாலை மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் வழக்கமாக கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சரியான அறிவிப்பு, முறையான தகவல்கள், வழிகாட்டுதல்கள் இல்லாததால் பயணிகள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

    இந்த தற்காலிக சிறப்பு பேருந்து நிலையத்தில் போதிய நிழற்குடைகள், இருக்கைகள், கழிவறை வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் திறந்த வெளியிலும் வெயில் மற்றும் மழையில் நின்று பேருந்துக்காக காத்திருந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து பயணிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது விட்டு விட்டு பெய்யும் மழையால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிழற்குடை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர போக்குவரத்து துறை மற்றும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோயம்பேடு மார்கெட்டில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடங்கி உள்ளது.
    • மதுரை, திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100 லாரிகளில் அவல், பொரி, கடலை, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வந்து குவிந்து உள்ளன.

    போரூர்:

    ஆயுத பூஜை பண்டிகை வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் ஆகிய முக்கிய பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை மூலம் பொருட்கள் விற்பனை செய்வது வழக்கம்.

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாக குழு சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ளதால் ஏற்கனவே கோயம்பேட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு சந்தை நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது ஆயுத பூஜை பண்டிகைக்கும் சிறப்பு சந்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

    இதற்காக அங்காடி நிர்வாக குழு சார்பில் நேற்று முன்தினம் ஏலம் நடத்தி ஒதுக்கீடுக்கான அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடங்கி உள்ளது. இதையொட்டி மதுரை, திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100 லாரிகளில் அவல், பொரி, கடலை, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வந்து குவிந்து உள்ளன. வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனைக்கு தயாராகி வருகின்றனர். நாளை (1-ந் தேதி) இரவு முதல் வாழை கன்றுகள், தோரணங்கள், பூசணிக்காய், வாழைத்தார், பழங்கள் அதிகஅளவில் லாரிகளில் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னரே ஆயுத பூஜை விற்பனை களை கட்டும்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை வருகிற 9-ந் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதை பயன்படுத்தி சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களையும் எளிதாக வாங்கி செல்ல முடியும். இதனால் இந்த ஆண்டு சிறப்பு சந்தையில் கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆயுத பூஜை சிறப்பு சந்தையில் உள்ள கடைகளுக்கு அளவை பொறுத்து நாள் ஒன்றுக்கு ரூ.65 முதல் ரூ.360 வரையும், அதேபோல் மினி வேனுக்கு ரூ.650, லாரிக்கு ரூ.1300 என நாள் வாடகையாக அங்காடி நிர்வாக குழு சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடியாக ஏலதாரரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    சிறப்பு சந்தையை தவிர்த்து மார்க்கெட் வளாகத்தில் உள்ள வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்து விற்பனை செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. அதேபோல் மார்க்கெட் வளாகத்தில் வாகனங்களில் வைத்து பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களிடம் ரூ.10ஆயிரம் வரை அபராதம் வசூல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொரி வியாபாரி ரமேஷ் கூறும்போது, இதுவரை கட்டணம் விபரம் பற்றி எங்களிடம் எதுவும் கூறவில்லை. மேலும் மழை அச்சுறுத்தல் காரணமாக விற்பனை பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே கடைகள் மற்றும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 2,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் அடுத்த (அக்டோபர்) மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

    இதற்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பெரும்பாலான அரசு ஊழியர்கள், மாணவர்கள்,உள்ளிட்டோர், இடையில் இருக்கும் திங்கள்கிழமை (அக்.3) ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, இன்று முதலே பயணிக்கத் தொடங்கி விடுவார்கள்.

    இதனால் நெரிசலின்றி பொதுமக்கள் பயணிக்கும் வகையில் இன்றும், நாளையும் (செப்.30, அக்.1) சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 2,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பண்டிகையைக் கொண்டாட அரசு பஸ்களில் ஊர்களுக்குச் செல்ல செப்.30, அக்.1,2 ஆகிய நாள்களில் 48 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதே நேரம் வழக்கமாக விழாக்காலங்களில் இயக்கப்படுவது போல் சென்னை, கோயம்பேட்டில் இருந்து செல்லும் சில ஊர்களுக்கான பஸ்கள், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் ஆகியன தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பைபாசில் (மாநகர போக்குவரத்துக் கழக பூந்தமல்லி பைபாஸ் அருகில்) இருந்து இயக்கப்படும்.

    இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த இடங்களுக்குச் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் மாநகர பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இதர ஊர்களுக்கு வழக்கம்போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    பொதுமக்களின் தேவைக்கேற்ப தொடர்ச்சியாக பஸ்களை இயக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள், tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×